மின்னல் அதனின் மகனோ – 12 (2)

குத்தலாய் அவர் பேச பத்மினி அன்னபூரணியை பார்த்து அவர் தட்டில் மேலும் ஒரு தோசையை வைக்க போக தடுத்த ரத்தினசாமி,

“போதும் உங்க நாடகமெல்லாம். போய் பேசிட்டே இரு. என் தங்கச்சியை பார்த்துக்க எனக்கு தெரியும்…” என உதாசீனமாக பேச அன்னபூரணியும் அதற்கு மறுத்து பேசாமல் அமைதியாக இருக்க வேதனையாக பார்த்தார் பத்மினி.

“விடுங்க ஆன்ட்டி. இதை காரணமா வச்சு இன்னைக்கு பூரணி ஆன்ட்டிக்கு சாப்பாடு ஊட்டிட்டாங்க உங்க ஹஸ்பண்ட். பீல் ப்ரீ ஆன்ட்டி…” என சொல்லிய அஷ்மி,

“ஆனா ஆன்ட்டி பாசம்ன்றது எல்லாருக்கும் பொதுவானது. அங்கிள்க்கு அவங்க தங்கச்சி பாசம் மாதிரி ஒவ்வொருத்தவங்களுக்கும் அவங்களுக்கு வேண்டப்பட்டவங்க மேல பாசம் அன்பு எல்லாம் இருக்கத்தான் செய்யும். அதை யாரும் தடுக்க முடியாது…” என்றவள்,

“பாசம், அன்பு, காதல் எல்லாம் ஒருத்தர் சொல்லி இன்னொருத்தர் மேல வலுக்கட்டாயமா வரவழைக்க முடியாது. நமக்கு பிடிக்கலைன்னாலோ, நமக்கு பிடிச்சவங்களுக்கு பிடிக்கலைனாலோ உடனே உண்மையான அன்பை வெட்டிவிடறது பேர் பாசமே இல்லை…”

அன்னபூரணிக்கு புரிந்துவிட்டது. அஷ்மிதா எதையும் எதார்த்தமாக பேசவில்லை என்பது. கண்டிப்பாக இதில் உள்நோக்கம் எதுவோ இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார்.

பத்மினிக்கு அஷ்மிதா என்ன சொல்ல வருகிறாள் என்பது ஓரளவிற்கு புரிந்துவிட ரத்தினசாமியின் முகத்தை பதட்டத்தோடு பார்த்தவர் அவர் பயந்தது போலவே அத்தனை பயங்கரமாக மாறியிருக்க,

“அஷ்மி துவாவை பார்க்கனும்னு சொன்னியே. போய் போய் பார்த்துட்டு கிளம்பு. நான் கோவிலுக்கு போகும்போது கால் பன்றேன்…” என சொல்லி அனுப்பிவைத்தார்.

பத்மினியின் பதட்டம் அஷ்மிதாவிற்கு துளியும் இல்லை. ரத்தினசாமியை தீவிரமாக பார்த்து,

“நாம மட்டும் பாசம் காட்டலாம். அதுவே வேற யாரும் யார்மேலையும் காட்டிட்ட கூடாது. வெட்டுவேன் குத்துவேன்னு டாட்டா சுமோல கிளம்பிடறது…”

“அஷ்மி…” பத்மினி மீண்டும் அழுத்தமாய் சொல்ல,

“போறேன் ஆன்ட்டி. பொதுவா சொன்னேன்…” என்றவள்,

பாண்டி நாட்டுக் கொடியின் மேல தாண்டி குதிக்கும் மீனப்போல
சீண்டினாக்கா யாரும் ஹேய் நான் அலங்கா நல்லூர் காளை
ஹேய் வைகை மண்ணுச்சொல்லும் என் பேர
எம்பேரச்சொன்னா புழுதிப்பறக்கும் பாரு புழுதிப்பறக்கும் பாரு
ஏய் எட்டி எட்டி புடிப்பேன் புடிப்பேன்
உன் முட்டியத்தான் உடப்பேன் உடப்பேன்

என்ற பாட்டை பாடிக்கொண்டே அதற்கு ஏற்ப தோளை குலுக்கி லேசாக நடனமில்லா நடனத்தோடு நடந்து செல்ல பத்மினிக்கு பயத்தையும் மீறிய சிரிப்பு தொற்ற அதை மறைத்தபடி ரத்தினசாமியை பார்த்தார்.

அவரோ அத்தனை கோபமாக அஷ்மியை பார்த்துக்கொண்டே குளிர்ந்த நீரை சட்டை நனைய தொண்டையில் கவிழ்த்துகொண்டார். அத்தனை குளிர்ச்சியும் அவரின் நெஞ்சு தணலை கொஞ்சமும் அணைக்கவில்லை.

‘ஆனாலும் இந்த பொண்ணுக்கு ரொம்ப தைரியம் தான்’ ரசனையோடு அஷ்மியை பார்த்தவருக்கு விஷாலுக்கு எடுத்திருக்கலாம். ஒத்துக்கமாட்டேன்னுட்டாங்களே  என்ற கவலை பிறந்தது புதிதாய்.

மாடிக்கு அதியின் ரூமிற்கு வர எதிரில் விஷாலும் நடந்துவர அவனோடு வந்த அர்னவ் இவளை பார்த்து ஸ்நேகமாய் புன்னகைக்க அவனையும் முறைத்தவள்,

“என்னா லுக்கு? போடா…” என மிரட்டிவிட்டு அதிபனின் அறைக்குள் சென்றுவிட அர்னவிற்கு அத்தனை அவமானமாக போயிற்று.

“ஏன்டா ப்ரெண்ட்லியா தானேடா சிரிச்சேன். அதுக்கு ஏன்டா இப்படி இன்சல்ட் பண்ணிட்டு போறாங்க…” என கேட்க விஷால் வாயே திறக்கவில்லை.

“உன்கிட்ட போய் சொன்னேன் பாரு…” என கடுப்பாகி வேகமாய் அர்னவ் சென்றுவிட விஷால் அதை கவனிக்கும் நிலையில் கூட இல்லை. மனதளவில் மிகவும் துவண்டிருந்தான் அவன்.

“இவனுங்க கண்ணுமுன்னால வந்தே கடுப்பேத்தறானுங்க…” என திட்டிக்கொண்டே அதிபனின் அறைக்குள் நுழைய அங்கே தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் அவன்.

கட்டிலில் அவனையே முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் துவாரகா. உறங்கி எழுந்து கலைந்த ஓவியம் போல இருந்தது அவளின் தோற்றம்.

“என்னடா அதி? இவளை இன்னும் கிளப்பலையா நீ?…” என கேட்டுக்கொண்டே,

“குட்மார்னிங் துவா…” என்று அவளிடமும் சிரிக்க அவள் கொஞ்சமும் திரும்பவில்லை அஷ்மியிடம். பார்வை மொத்தமும் அதிபனிடம் மட்டுமே.

“இப்ப என்ன இங்க பஞ்சாயத்து? அஷ்மினாலே ஜட்ஜ்மென்ட்னு ஆகிப்போச்சு. சொல்லு சொல்லு முடிச்சுவிட்டு கிளம்பறேன்…” என சாவகாசமாக சோபாவில் அமர,

“டாக்டர்…” என துவா அழைத்தாள்.

“சொல்லுடா துவா. இந்த குடும்பத்துல டாக்டர்ன்னு என்னை ஒத்துக்கற ஒரே ஆளு நீ மட்டும் தான்…” என அவளின் முன்னே வந்து அமர்ந்துகொள்ள தலையில் அடித்தான் அதிபன்.

“அவனை ஏன் பார்க்கற? இவன் கிடக்கறான் சாம்பார். நீ சொல்லு….” என்று அதிபனை சீண்ட,

“அம்மாட்ட போகனும், கூட்டிட்டு போக சொல்லுங்க டாக்டர். எனக்கு இங்க இருக்க பிடிக்கலை. பயமா இருக்கு…”

துவாரகா கூறியதை கேட்டதுமே விளக்கெண்ணையை குடித்ததை போல பார்த்தவளின் மண்டைக்குள் ‘விடுகதையா இந்த வாழ்க்கை?’ என்னும் பாடல் கேட்க துவாவை முறைத்தவள்,

“நான் கிளம்பறேன். அங்க ஒரு மலையே என்னை பார்த்து மலைச்சு போய் வண்டி வண்டியா தண்ணிய மண்டுது. இவ என்னையே மண்டவச்சிடுவா போலவே…” என புலம்ப,

“அஷ்மி உட்கார்…” என்றவன் துவாரகா துள்ள துள்ள அவளை அள்ளிக்கொண்டுபோய் பாத்ரூமினுள் விட்டவன்,

“இன்னும் பத்துநிமிஷத்துல குளிச்சுட்டு வெளில வர. இல்ல நான் வந்து உன்னை குளிச்சுவிடுவேன்…” என்று சொல்லி அவள் திகைத்து நிற்கும் போதே வெளியில் பூட்டிவிட்டு வந்து அமர்ந்தான். அவனை பார்த்து சிரித்தவள்,

“உன் பாடு திண்டாட்டம் தான் போலவே அதி?…” என நக்கலடிக்க,

“இந்த கிண்டல் கேலி எல்லாம் இருக்கட்டும். நேத்து எதுக்காக அப்படி பண்ணின?…” என்றதற்கு,

“எல்லாம் ப்ளான் பண்ணிதான் பண்ணினேன். அதுக்கு என்னன்ற?…” அஷ்மிதாவும் சளைக்காமல் பதில் கொடுக்க,

“உன் மேல இங்க எவ்வளவு மதிப்பு தெரியுமா? அவரை பத்தி தான் உனக்கு தெரியுமே. அதுக்கப்பறமும் எதுக்காக இப்படி?…”

“மண்ணாங்கட்டி மரியாதை. எனக்கு தேவை இல்லை. உன்னை மாதிரி எல்லாத்தையும் கண்டும் காணாம இருக்க நான் ஒன்னும் கடவுள் இல்லை. அந்த கடவுளுக்குதான் கண் இருந்தும் இல்லாத மாதிரி எல்லாத்தையும் பார்த்தும் எந்த ஆக்ஷனும் எடுக்கமாட்டான்…”

“அஷ்மி, நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியலைடா…”

“எனக்கு எதுவும் புரியவேண்டாம். தெரிஞ்சு தான் பண்ணேன்னு சொல்றேன். திரும்ப திரும்ப அதையே சொல்ற. எனக்கு மயில்சாமி றெக்கையை பிச்சு எரியனும்ன்ற அளவுக்கு கோவம் இருந்துச்சு. ஆனாலும் நான் காட்டினது சாம்பிள் தான்…”

“அதுக்குன்னு விஷாலை அடிப்பியா?…”

“அடிப்பேன் அதுக்கு மேலையும் செய்வேன். இதெல்லாம் நீ பண்ணனும். உனக்குத்தான் அதுக்கு கட்ஸ் இல்லையே. இப்பவும் விட்டா இந்த வீட்ல துவாவுக்கு பாதுகாப்பில்லை. நீ கண்டும் காணாம இருந்தா என்னவேணும்னாலும் செய்வாங்க. அவங்களுக்கு ஒரு பயம் இருக்கனும். அதான் அப்படி பண்ணினேன்…”

“நான் துவாவ பார்த்துப்பேன் அஷ்மி…”

“அப்பப்பா பார்த்தேனே. நான் கிளம்பறேன்…” என எழுந்துகொள்ள,

“நான் இன்னும் பேசி முடிக்கலை அஷ்மி…” அவளை நேர் பார்வை பார்த்து கேட்க,

“இப்போ என்ன நான் உன்கிட்ட ஏன் அப்டி பேசினேன்னு தான? அப்போ உன்கிட்ட முதல்ல பேசினது எல்லாம், உண்மையில அந்நேரம் எனக்கு உன்கிட்ட சொல்லனும்னு இருந்துச்சு. சொல்லகூடாதுன்னு நினைச்சுட்டே தான் இருந்தேன். ஆனாலும் சொல்லிட்டேன்…”

“ஏனா உன் வீட்டு வாசலுக்கு வரவும் தான் அதை குடிச்சேன். குடிக்கவுமே நீ வரவும் எல்லாத்தையும் சொல்லிட்டேன். சொல்லும்போது சொல்லிடாத சொல்லிடாதன்னு எனக்குள்ள சொல்லிட்டே உன்கிட்ட கொட்டிட்டேன். போதையோட தாக்கம்…” என்றவள்,

“ஆனா உன் தம்பி வரவும் பாதி போதை அப்படியே இறங்கிடுச்சு. நீ ஹாஸ்பிட்டலுக்கு கைல கந்தல் கோலமா தூக்கிட்டு வந்த துவா தான் என் கண்ணுக்கு தெரிஞ்சா. அதுலயும் மயில்சாமி வரவும் மொத்த போதையும் இறங்கிடுச்சு. கிழிச்சு தொங்கப்போடனும்னு நினைச்சேன். ப்ச் மிஸ் ஆகிடுச்சு…”

கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டோமே என்கிற ஆற்றாமை அவளிடம் அப்பட்டமாய் தெரிய சிரிப்புத்தான் வந்தது அதிபனுக்கு.

“ஆனாலும் உனக்கு ரொம்ப துணிச்சல், என் முன்னாலையே என் அப்பாவை, தம்பிங்களை, தங்கச்சியை பேசற. நான் ஒன்னும் சொல்லமாட்டேன்ற தைரியம் தானே?…” என்று வாயை கொடுக்க,

“ஓஹ் ஸார்க்கு இப்படி வேற நினைப்பிருக்கோ? அதுசரி. ஏன் சொல்லித்தான் பாரேன். மயில்சாமி மண்டை உருளுதோ இல்லையே உன் தலை என் கைல. மவனே பந்தாடிருப்பேன். துவாவுக்கு ஒண்ணுனா உன்னை கூட சும்மா விடமாட்டேன். மைண்ட் இட்…”

அவனையும் எச்சரித்துவிட்டு கிளம்பிவிட இன்னும் புன்னகை பெரிதானது அதிரூபனுக்கு.

‘சரியான காரமிளகாய்’ என சொல்லிக்கொண்டவன் மனைவி வந்துவிட்டாளா என பார்க்க அவளும் வந்து நின்றாள் நல்லபிள்ளையாய்.

“வெரிகுட். இதுக்கு இத்தனை போரா? நமக்குள்ள இந்த வார் வேண்டாமே துவா. என் மேல இன்னுமா உனக்கு முழுசா நம்பிக்கை வரலை?…”

ஆமாம் இல்லை என்கிற எந்த பதிலுமே சொல்லாமல் கதவையே பார்த்துக்கொண்டிருந்தாள் துவாரகா. ஒரு பெருமூச்சோடு அவளை அழைத்துக்கொண்டு கீழே வந்தான்.

error: Content is protected !!