மின்னல் – 12
ரத்தினசாமி முகம் முழுவதும் அத்தனை குழப்பம். என்ன பேசுவான் ஏது பேசுவான் என்று தவிப்புடன் இருக்க அவரருகில் வந்த பத்மினி,
“என்னங்க டென்ஷனா இருக்கீங்க? இன்னும் கிளம்பலையா? வெளில போனமாதிரி இருந்ததே?…” என கேட்க,
“அதிபன் ஏதோ பேசனும்னு இருக்க சொல்லியிருக்கான். நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்…” என்று எழுந்து உள்ளே சென்றுவிட அன்னபூரணி இன்னும் சாப்பிட வராமல் இருக்கவே அவரை தேடி சென்றார்.
கதவு திறந்திருந்தாலும் வெளியில் நின்று இரண்டுமுறை தட்டிவிட்டு,
“பூரணி இன்னும் சாப்பிட வரலையே?…” என வாசலில் நின்றே கேட்க,
“உள்ள வாங்க அண்ணி, இன்னைக்கு ரொம்ப நேரம் தூங்கிட்டார். இதோ இவருக்கு சாப்பிடறதுக்கு முன்னாடி குடுக்கிற டேப்லட் குடுத்துட்டு கூட்டிட்டு வரலாம்னு இருந்தேன்…”
“சரிம்மா, நீ சீக்கிரம் வா…” என சொல்லி செல்லவும் பூரணியின் முகத்தை நிமிர்ந்துகூட பாராமல் வைத்தியநாதன் எங்கோ வெறித்தபடி இருக்க அவரின் நிலை அன்னபூரணிக்கு அத்தனை வலித்தது.
“நீங்க கவலைப்படாதீங்க. நம்ம பொண்ணு தான் நம்ம கூடவே இருக்க போறாளே. இனியும் எதுக்கு இந்த கலக்கம்?…” அவரை சமாதானம் செய்ய,
“அகிலா…” என ஒரு வார்த்தை மட்டும் சொல்லியவர் நெஞ்சை நீவிவிட்டுக்கொள்ள,
“ஐயோ திரும்ப உணர்ச்சிவசப்படாதீங்க. நம்ம அதி அப்படி ஒன்னும் விட்டுடமாட்டான். முடிஞ்சா அகிலாக்காவையும் சமாதானம் செய்திடுவான்…”
அன்னபூரணி சொல்வதை கேட்க நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு அது நிச்சயம் சாத்தியமில்லை என்பது வைத்தியநாதனுக்கு நன்கு தெரியும்.
“நாளைக்கு நடக்கிறத நாளைக்கு பார்த்துக்கலாம். இப்போ போய் நாம சாப்பிடலாம்…” என அவரின் வீல்சேரை உருட்டிக்கொண்டு வெளியே வந்த அன்னபூரணிக்கு,
‘இனிதான் நிறைய சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும் உறுதியோடு தயாராக இருக்கவேண்டும்’ என நினைத்துக்கொண்டார்.
டைனிங்ஹாலில் அஷ்மிதாவை பார்த்ததும் ஆச்சர்யப்பட்ட அன்னபூரணி வைத்தியநாதனின் சேரை சரியா நிறுத்திவிட்டு,
“எப்ப வந்த அஷ்மி? எப்படி இருக்க?…” என ஸ்நேகமாக கேட்டுவைக்க,
“நைட்டே வந்துட்டேன் ஆன்ட்டி. நேத்து தானே பார்த்தோம். அதுக்குள்ள ஏதும் மாறிடுமா என்ன? அப்படியே தான் இருக்கேன்…” அஷ்மிதா சாதாரணமாக சொல்ல அன்னபூரணிக்கு அது அப்படி தெரியவில்லை.
“ஏன் மாறாது அஷ்மி? எதுவும் மாற ஒரு நாள் தான் வேணுமா என்ன? ஒரு நிமிஷம் கூட போதும். நேத்து வரைக்கும் நீ தான் இந்த வீட்டு மருமகள்ன்னு நாங்க எல்லாருமே எதிர்பார்த்திட்டு இருந்தோம். ஆனா இன்னைக்கு துவாரகா தான் மருமக. மாற்றம் எப்ப வேணும்னாலும் நடக்கலாம்…”
அன்னபூரணியும் சிரித்தபடி அஷ்மிதாவிற்கு பதில் சொல்ல அவளோ அவரையும் வைத்தியநாதனையும் ஆழமாக பார்த்தவள்,
“எஸ், ஆன்ட்டி கரெக்ட் தான். மாற்றம் எப்ப வேணும்னாலும் நடக்கலாம். இதுவரை யாரை ஆகவே ஆகாதுன்னு ஓடஓட விரட்டி அடிச்சீங்களோ, யாரை அண்டவே விடக்கூடாதுன்னு சட்டம் போட்டு வச்சிருந்தீங்களோ இந்த வீட்டோட சட்டத்தை உடைச்சு அதி துவாவை கல்யாணம் செஞ்சுட்டான். எவ்வளவு பெரிய மாற்றம்?…”
“அஷ்மி, நான் என்ன சொல்றேன், நீ எதைம்மா பேசற?…” அன்னபூரணி யோசனையாக கேட்க,
“மாற்றம் ஆன்ட்டி. அதைத்தான் பேசறேன். பலவருஷங்களுக்கு முன்ன நீங்க கூட அங்கிள் லைப்ல எவ்வளவு பெரிய மாற்றத்தை குடுத்திருக்கீங்க. இன்னைக்கு அதே மாற்றத்தை அதி குடுத்திருக்கான். எப்ப வேணும்னாலும் எதுவேணும்னாலும் மாறும்னு சொல்ல வரேன்…”
அஷ்மிதா பேச பேச வாயடைத்து அன்னபூரணி நிற்க வைத்தியநாதன் தலைநிமிரவே இல்லை.
‘இவள் எதற்கும் எதற்கும் முடிச்சிடுகிறாள்’ என திகைப்பாய் பார்த்தார்அன்னபூரணி.
“சாப்பிடுங்க ஆன்ட்டி. எவ்வளோ நேரம் நிற்பீங்க?…” என கேட்டு கைகழுவ எழுந்துகொள்ள,
“அதுக்குள்ள சாப்பிட்டியா அஷ்மி. உனக்கு குழிப்பணியாரம் ஊத்த சொல்லியிருந்தேன். புதினா சட்னியோட…” என பத்மினி வர,
“போதும் ஆன்ட்டி. நான் போய் துவாவை பார்த்துட்டு அப்படியே கிளம்பறேன். நேரமாகுதே…”
“அதுக்குள்ள ஏன் கிளம்பற? இரு. எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு போகனும். மறந்துட்டியா? பொண்ணு மாப்பிள்ளை பேர்ல பூஜைக்கு சொல்லியிருக்கேன். நீயும் கண்டிப்பா இருக்கனும்…”
அவளின் கன்னத்தை வருடி வாஞ்சையாக சொல்ல பத்மினியின் பாசத்தில் நெகிழ்ந்துதான் போனாள் அஷ்மி.
“வரனும்னு தான் நினைக்கிறேன் ஆன்ட்டி. ஆனா ட்ரெஸ் எதுவும் எடுத்திட்டு வரலை. அதுவும் கோவிலுக்கு. கொஞ்சம் ட்ரடீஷ்னல் லுக் இருக்கனுமே. நான் வீட்டுக்கு போய்ட்டு அங்க இருந்தே கிளம்பி கோவிலுக்கு வந்திடறேன். சரியா?…”
“ஓகேமா. உன் இஷ்டம். கோவில்…”
“எனக்கு தெரியாதா என்ன? வந்திடுவேன்…”
“அப்பாவையும் கூப்பிட்டதா சொல்லு…”
பத்மினிக்கு ராஜாங்கத்தை முன்பே அவ்வளவாய் பிடிக்காது தான். ஆனால் அதிபனின் திருமணத்தில் எந்த பிரச்சனையும் பண்ணாமல் ரத்தினசாமியையும் பண்ணவிடாமல் சமயோசிதமாக செயல்பட்டவர் மீது மிகுந்த மரியாதையும் நன்றியும் வந்திருந்தது. அதன் காரணமாக இந்த அழைப்பு.
“அப்பா நைட்டே பாரின் போயாச்சு ஆன்ட்டி. சடனா கிளம்பவேண்டியதா போச்சு. வர டூ த்ரீ டேய்ஸ் ஆகும்…”
“என்ன இப்படி சொல்ற? அப்போ நீ இங்கயே இரேன்மா. எதுக்கு அவ்வளவு பெரிய வீட்ல தனியா இருக்கனும்? இங்க நம்ம ஸ்வேதா ரூம்லயே தங்கிக்கோ. உனக்கும் டைம் பாஸ் ஆகும்…” அவர் சொல்லவும் ஸ்வேதாவை நினைத்து சிரிப்பு வந்துவிட,
“ஸ்வேதா ரூம்ல தானே எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை ஆன்ட்டி. அவகிட்ட கேளுங்க…” என்றவள்,
“நானும் பெங்களூர்ல தனி ப்ளாட்ல தனியா தான் தங்கியிருந்தேன்னு அப்பப்ப நீங்க மறந்திடறீங்க போங்க…” என சொல்லி சிரிக்க இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டே வைத்தியநாதனுக்கு பரிமாறிவிட்டு தனக்கும் வைத்துக்கொண்டு சாப்பிடாமலே அமர்ந்திருந்தார் அன்னபூரணி.
தனிமைப்பட்டுவிட்டதை போல ஏனோ அத்தனை பாரமாக இருந்தது மனது.
கணவர் சாப்பிடுகிறாரா இல்லையா என்பதை கவனித்துக்கொண்டே இருந்தாலும் ஒரு வாய்கூட தொண்டைக்குள் இறங்கவே இல்லை அவருக்கு.
பத்மினியும் அஷ்மியுடனான பேச்சு சுவாரஸியத்தில் இதை கவனிக்கவே இல்லை. ஆனால் ரத்தினசாமி கவனித்துவிட்டார்.
அஷ்மிதா அங்கே இருக்கிறாள் என்கிற ஒரே காரணத்தால் டைனிங் ஏரியாவிற்குள் வராமல் ஹாலிலிருந்தே அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.
ஆனால் அன்னபூரணியிடம் அஷ்மிதா பேசி முடித்த பின்புதான் அவருமே ஹாலிற்கு வந்தார் ரத்தினசாமி.
அஷ்மிதா அன்னபூரணியிடம் பேசியதை கேட்டிருந்தால் அங்கேயே ஆடியிருப்பார். அவர் ஆட ஆரம்பித்தால் அஷ்மி அதற்கு மேல் ருத்ரதாண்டவமே ஆடியிருப்பாள் என்பதும் வேறுவிஷயம்.
ஆனாலும் ரத்தினசாமியால் தன் தங்கை மனம் நோகுவதை பார்க்க முடியாதல்லவா?
“பத்மி…” கோவத்துடன் வந்தவரை புரியாமல் பார்த்த பத்மினி,
“என்னாச்சுங்க?…” என கேட்க வேகமாய் அவரை தள்ளி நிறுத்தியவர் அன்னபூரணியின் அருகில் அமர்ந்து தங்கைக்கு ஊட்ட ஆரம்பித்தார்.
“வேண்டாம் ண்ணே நானே சாப்பிடறேன்…” கலங்கிய கண்களை மறைத்தவாறே அவர் மறுக்க துடித்துவிட்டார் ரத்தினசாமி.
“அண்ணன் இருக்கேன்டா. நீ சாப்பிடு. மாப்பிள்ளை நீங்களும் சாப்பிடுங்க…” என அன்னபூரணி மறுக்க மறுக்க ஊட்டிவிட பத்மினிக்கு பதறியது.
“என்னாச்சுங்க? பூரணி என்னம்மா?…” என வந்து நிற்க அஷ்மிதா ஒருவித அலட்சியத்துடனும் அர்த்தத்துடனும் ரத்தினசாமியை பார்க்க அவரோ,
“என்ன நொன்னாச்சு? என் தங்கச்சி ஒரு வாய் கூட சாப்பிடலை. இதுதான் நீ அவளை கவனிக்கிற லட்சணமா? எல்லாருக்கும் துளிர்விட்டு போச்சுல. காமிக்கிறேன் இந்த ரத்தினசாமி யாருன்னு…”
கடுகடுத்தவாறே பேசிக்கொண்டே தங்கையை கவனித்து பார்த்து ஊட்ட பத்மினிக்கு கவலையாக போனது.
“பேச்சுல கவனிக்கலைங்க. மன்னிச்சுடுங்க…” என கெஞ்சும் குரலில் கேட்க,
“அதைத்தான நானும் சொல்றேன். என் தங்கச்சி குடும்பத்தை நீ என்ன கவனிச்ச? உனக்கு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா? உனக்கெப்படி இருக்கும்?…”