மின்னல் அதனின் மகனோ – 11 (3)

தன் குற்றங்களை ஒப்புவிக்கும் அவளை அவருக்கு இந்த நிமிடம் சுத்தமாய் பிடிக்காமல் போனது.

அதிலும் தன் மகன் தன்னை வெறுத்துவிடும் அபாயம் ஏற்கனவே இருக்க அதை உறுதியாக்கும் விதமாய் அத்தனை உண்மைகளையும் இவள் சொல்ல சொல்ல பயந்தேபோனார்.

“நீயெல்லாம் எனக்கு சர்டிபிகேட் குடுக்கறியா? யார் கேட்டா? யோவ் முதல்ல நாம நல்லவங்களா இருக்கனும். அதுக்கப்பறம் மத்தவங்களை மதிப்பிடலாம்…” என்றவள்,

“ஆமா, என்னமோ உன் வீட்டு மாப்பிள்ளை தப்பே பண்ணலையா? அவருக்கு என்ன தண்டனை குடுத்த? இன்னொரு பொண்ணை தாயாக்கி தவிக்க விட்டுட்டு வந்தவருக்கே தங்க தட்டுல தாங்கற. அந்த பொண்ணு என்னய்யா பண்ணுச்சு? உனக்கு கேட்கனும், தண்டிக்கனும்னா அந்தாளை போய் கேளேன். அது முடியாதுல…” பட்டென்று வைத்தியநாதனை இழுக்க,

“இந்த பாருமா, இதை பத்தி நீ பேசனும்னு அவசியமில்லைமா. இது என் குடும்ப விஷயம்…” மீண்டும் அவளின் வாயை கிளற,

“ஸ்யப்பா, யோவ் மயில்சாமி. இந்த டயலாக் எல்லாம் உன் பையன்கிட்ட வச்சுக்க. இந்தா நிக்கிறான் பாரு அவன் கேட்பான். நான் ஏன்யா கேட்கனும்? எனக்கு தப்புன்னு பட்டா கேட்கத்தான் செய்வேன். என்கிட்ட மட்டும் நீ நல்லவரா இருந்தா போதுமா?…”

சகட்டுமேனிக்கு ஏகவசனத்தில் ரத்தினசாமியை தாளித்துக்கொட்ட அதிபன் முகம் வேறு இறுக்கமாய் கல்போல இருக்க உள்ளுக்குள் மிரண்டு போனார்.

அவன் முன் அஷ்மிதாவின் வாயை அடைக்கமுடியாமலும், அவளை அடக்கமுடியாமலும் கையாலாகாதவராய் நின்றார்.

“தப்புன்னா அது என் அப்பாவே பண்ணினாலும் சட்டையை பிடிச்சு கேட்பேன். லெப்ட் அன்ட் ரைட் விடுவேன். உனக்கு இந்த மரியாதையே போதும்…”

அதற்கு மேலும் நிற்கமுடியாமல் துவண்டுபோனவள் சோபாவில் படுக்க அஷ்மிதாவையே பார்த்த ரத்தினசாமியின் ரத்த அழுத்தம் எகிறியது.

இதை வேறு யாரேனும் பார்த்துவிட்டார்களா? என்று வேறு சுற்றிலும் பார்வையை ஓட்ட யாருமில்லை என்கிற நிம்மதி வேறு அவரை ஆட்கொண்டு இனியும் அவளை பேச வைக்க வேண்டாம்.

இன்னும் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாளோ? என நினைத்து அங்கிருந்து மாடியேறிவிட்டார்.

“அரசியல் அரசியல் தான். எங்க இன்னும் நின்னா திரும்பவும் அஷ்மி ஆரம்பிச்சுடுவாங்களோன்னு ஓடறாரு பாரு உன் பெரியப்பா…” என சந்தோஷ் விஷாலின் காதை கடிக்க,

“அதிபா, இனி இந்த பொண்ணு ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க கூடாது…”

மாடியில் இருந்து மகனிடம் செய்தி அனுப்பியவர் வன்மமாய் அஷ்மிதாவை பார்க்க படக்கென நிமிர்ந்தவள்,

“யோவ் மயில்சாமி தைரியம் இருந்தா கீழே வந்து சொல்லுயா என்கிட்ட. யோவ், மயில்சாமி…” என கத்த அவளின் வாயை பொத்தினான் அதிபன்.

மீண்டும் அஷ்மிதா எழுந்து நின்று கத்த தொடங்கியதும் வேகமாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டார் ரத்தினசாமி. பார்த்து நின்ற சந்தோஷிற்கு சிரிப்பு பொங்கியது.

சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடக்கிக்கொண்டவனுக்கு ஏனோ அத்தனை ஆறுதலாக இருந்தது.

சொல்லபோனால் இதையெல்லாம் நிச்சயம் இந்த வீட்டில் இருப்பவர்கள் யாரும் கேட்கவே மாட்டார்கள்.

“என்னடா இப்படியெல்லாம் பேசிட்டாங்க. பெரியப்பாட்ட என்னவெல்லாம் கேட்கிறாங்க…” விஷால் கேட்க,

“இதுக்கு பேருதான் நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி கேட்கிறதுன்னு சொல்வாங்க. சும்மா பச்சமிளகாயை கடிச்சது மாதிரி இருந்துச்சா? இதுக்குத்தான் நான் முதல்லையே சொன்னேன்…” சந்தோஷ் அவனிடம் பேச,

“அதி, அந்த பாட்டிலை குடுடா. செம கிக்கா இருக்கு…” அஷ்மி வசனம் பேச,

“வாயை மூடு அஷ்மி. பண்ணின வரைக்கும் போதும். வா போய் தூங்கலாம்…”

அதிபன் அவளை கைத்தாங்கலாக எழுப்பி நிறுத்திவிட்டு கீழே வைத்திருந்த பாட்டிலை எடுத்து சந்தோஷிடம் நீட்டியவன்,

“இதை வெளியே எறிஞ்சிட்டு வா சந்தோஷ்…” என கொடுக்க,

“பச்சக்கிளிட்டையா குடுக்க. பார்த்துடா இதையும் குடிச்சுட்டு ரெசார்ட்கு போய்டாம. இப்ப எவனை நம்பறதுன்னே தெரியலை…” அஷ்மி அசராமல் சொல்ல சந்தோஷின் கண்கள் கலங்கிவிட்டன.

சந்தோஷை ஒரு பார்வை பார்த்தவன் பதில் ஏதும் பேசாமல் அஷ்மிதாவை அழைத்துக்கொண்டு மாடி ஏற,

“அண்ணா, வந்து ஒரு நிமிஷம்…” என விஷால் நிறுத்த திரும்பி பார்த்தவன் என்னவென்று பார்வையிலேயே கேட்க விஷால் சந்தோஷை பார்க்க புரிந்துகொண்டவன்,

“அஷ்மியை ஸ்வேதா ரூம்ல தூங்க சொல்லுங்க. இல்லைனா என் ரூம்க்கு பக்கத்து ரூம்ல தூங்கட்டும்…” அஷ்மிதாவை பார்க்காமலேயே சொல்ல,

“அது சரிவராது. தனியா விட்டா திரும்ப அப்பா ரூம்க்கு போய் பார்த்து பிரச்சனை பண்ணுவா. ஏதோ நல்லநேரம் வேற யாரும் வரலை. ஸ்வேதாவுக்கும் அஷ்மிக்கும் ஆகாது. பிரச்சனை ஆகிடும்…” என சொல்ல,

“இல்லனா, உங்க ரூம்ல எப்படி?…” மீண்டும் விஷாலே கேட்க,

“உங்க வேலையை மட்டும் பாருங்க. எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு…”

முகத்தில் அடித்தார் போல சொல்லிவிட்டு அஷ்மியுடன் மாடியேறிவிட சந்தோஷும் பாட்டிலை வெளியில் வீச போய்விட விஷால் அப்படியே அமர்ந்துவிட்டான்.

அதிரூபனின் அறைக்குள் நுழைந்ததும் அவளை அமரவிடாமல் பாத்ரூமினுள் தள்ளியவன்,

“மரியாதையா ப்ரெஷ் ஆகிட்டு வா. கொஞ்சமும் போதை இருக்கக்கூடாது சொல்லிட்டேன்…” என சொல்லி கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு,

“நானே வந்து திறந்துவிடறேன். கதவை தட்டி துவாவை எழுப்பிவிடாதே…” என்றும் சொல்லி சென்றான்.

சமையலறைக்கு சென்றவன் அஷ்மிதாவிற்கு லெமன் ஜூஸ் தயாரித்து எடுத்துவந்தவன் இன்னும் ஹாலில் அமர்ந்திருந்த விஷாலை கண்டும் காணாமல் சென்றுவிட விஷாலிற்கு கண்ணீர் வரும் போல இருந்தது.

“ஸாரி அண்ணா…” மானசீகமாய் அவனிடம் மன்னிப்பை யாசித்தான்.

தன் அறைக்கு வந்ததும் பாத்ரூம் கதவை திறந்துவிட்டவன் கொஞ்சம் தெளிவாய் வந்த அஷ்மியிடம் ஜூஸை நீட்ட வாங்கி குடித்துவிட்டு சோபாவில் படுத்துக்கொள்ள,

“மேடம் என்ன பண்ணுனேங்கன்னு ஞாபகம் இருக்கா?…” கடுப்பாய் கேட்க,

“ம்ம், எல்லாம் ஞாபகம் இருக்கு. என்ன பன்றோம்னு தெரியாத அளவுக்கு ஒன்னும் நான் குடிக்கலை. இப்படி பேசினாதான் மயில்சாமிட்ட. இல்லைனா நீ பேசவா விடுவ? ப்ளீஸ் அதி. எனக்கு தலை வலிக்குது. தூங்கறேன்…” என அஷ்மிதாவும் சொல்ல ஒரு பெருமூச்சுடன் அவளை பார்த்தவன்,

“ஓகே, தூங்கு. குட்நைட்…” என்று படுத்துவிட கண்ணை மூடிய நிமிடம் உறங்கியும் போனாள் அஷ்மிதா.

காலையில் எழுந்து பார்க்கும் பொழுது இன்னும் உறக்கத்தில் தான் இருந்தாள் துவாரகா. சப்தம் எழுப்பாமல் முகம் கழுவி கீழே வர அவளை பார்த்த அதிரூபன்,

“குட்மார்னிங் அஷ்மி…” என சொல்ல பதிலுக்கு அவளும் சொல்லியவள் அவனிடமிருந்த பேப்பரை வாங்கி அமர,

“ஹேய் அஷ்மி, எப்போடா வந்த…” அவளை பார்த்த பத்மினி மகிழ்வாக கேட்க,

“நைட்டே வந்துட்டேன் ஆன்ட்டி. துவாக்கு நைட் முடியலை. அதி கால் பண்ணான். அதான் வந்தேன்…” சரளமாக பொய்யை அடுக்க அதிபன் கண்டுகொள்ளவில்லை.

“ஓகேமா. காபி கொண்டுவரேன்….” என சொல்ல,

“இல்லை ஆன்ட்டி பசிக்குது. சாப்பிடறேன். நெக்ஸ்ட் காபி…”  என சிரிக்க,

“வாடாம்மா…” என அழைத்து சென்றார் பத்மினி.

பத்மினிக்கு எப்பொழுதுமே அஷ்மிதாவை பிடிக்கும். அதிலும் நேற்று மகனின் வாழ்க்கைக்காக அவள் விட்டுகொடுத்து துவாரகாவிடம் நட்பு பாராட்டிய விதம் இன்னுமே அவரை கவர்ந்தது.

டைனிங் டேபிளில் ஏற்கனவே ஸ்வேதாவும், ரத்தினசாமியும் சாப்பிட்டுக்கொண்டிருக்க,

“ஏங்க நம்ம அஷ்மி வந்திருக்கா பாருங்க…” என பத்மினி சொல்ல கோபமாய் எழுந்தவர் கையை உதறிக்கொண்டு அவளை முறைத்தவண்ணம் நகர அவளோ தோளை குலுக்கி அலட்சியமாய் அவரை கடந்தாள்.

அதில் இன்னும் வெகுண்டவர் வேகமாய் அங்கிருந்து கிளம்பிவிட்டார். வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய பின்புதான் தான் உடை கூட மாற்றாமல் வந்துவிட்டது புரிய மீண்டும் வீட்டிற்கே திரும்பினார்.

அப்போது தான் அவரை அழைக்கலாம் என மொபைலை எடுத்த அதிரூபன் மீண்டும் அவரே வந்துவிட,

“அப்பா, இன்னைக்கு முக்கியமான அப்பாயின்மென்ட் இருக்கா?…”

காலை அதிரூபன் எழுந்து வந்ததிலிருந்து அவரை ஏறிட்டும் பார்க்காமல் தவிர்த்து பேசவந்தவரிடம் இருந்து விலகி போனான்.

ஏதாவது அவனாகவேணும் பேசிவிடமாட்டான என அத்தனை முறை அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவருக்கு இப்போது அவனே வந்து பேசிவிட மகிழ்ந்துபோனார்.

“அதிபா, நீ சொல்லுப்பா. அப்பா வீட்லயே இருக்கேன்…” சிறுபிள்ளை போல அவனின் முன்னால் வந்து நிற்க அவரை சாப்பிட்டுக்கொண்டே இகழ்ச்சியாய் பார்த்தாள் அஷ்மிதா.

அதை எதையும் கண்டுகொள்ளாதவராய் மகன் என்ன பேசபோகிறானோ என உள்ளுக்குள் பயந்து வெளியில் ஆவலாக காத்திருக்க,

“அப்போ வீட்ல இருங்க. நான் போய் குளிச்சுட்டு துவாவை கூட்டிட்டு வரேன். வீட்ல எல்லார்ட்டையும் பேசனும்…” என்று சொல்லி  சென்றுவிட யோசனையாக அமர்ந்துவிட்டார் ரத்தினசாமி.

“நம்ம பையன் தெறிக்க விடப்போறான்னு நம்புவோமாக. அசத்துடா அதி…” அஷ்மிதா வேண்டுமென்றே சொல்லி சிரிக்க அவள் பேசியது ரத்தினசாமியின் காதுகளில் மட்டுமல்ல அவள் அருகே சாப்பிட்டுக்கொண்டிருந்த விஷாலின் காதுகளிலும் விழுந்தது.

error: Content is protected !!