“அதி உன்கிட்ட இன்னொன்னும் மறைச்சிட்டேன்டா. துவா வரவும் அவளோட உனக்கு மேரேஜ் ஆகிடும். ஆனா அப்பா எனக்கு ஒரு யோசனை சொன்னார். இந்த விஷால் நல்ல பையன் தானே. பேசாம இவனை நீ மேரேஜ் பண்ணிக்கோன்னு கேட்டார்…”
அஷ்மிதா சொல்லவுமே இது என்ன புதுசா? என்று தான் அதிர்ச்சியாக பார்த்தனர் மூவருமே.
அதில் சந்தோஷ்க்கும் விஷாலுக்கும் புரிந்த ஒன்று அதிபனின் திருமணம், மணப்பெண் மாற்றம் அனைத்தும் அஷ்மிதா, ராஜாங்கம் என அனைவருக்குமே தெரிந்த ஒன்று என. இது அவர்கள் நடத்திய நாடகம் என்பதை அறிந்துகொண்டனர்.
“அப்போ நீங்க இந்த மேரேஜை ப்ளான் பண்ணி தான் நிறுத்தினதா?…” பொறுக்கமாட்டாமல் விஷால் கேட்டுவிட,
“ஆமா, எங்க ப்ளான் தான். இப்ப என்னன்ற? பேசிட்டு இருக்கும் போது கூட கூட பேசறதை நிப்பாட்டு…” என்றவள்,
“எனக்கும் கூட ஓகே வா தான்டா இருந்துச்சு. இவன் மேல பெருசா எந்த அபிப்ராயமும் இல்லைனாலும் துவா விஷயத்தை தவிர மத்தபடி நீங்க எல்லாரும் நல்லவங்கன்னு நினைச்சேன்டா. அதிலும் உன் வீடு. நான் வேண்டாம்னா சொல்லுவேன்…”
“அதுதான் டாட்கிட்ட மேரேஜ் அன்னைக்கு பார்த்துக்கலாம்ப்பா. சப்போஸ் இந்த டாக் வந்தா ஓகே சொல்வோம். இல்லைனா இருக்கட்டும்னு சொல்லிட்டேன். அப்பாவுக்கு உங்க பேமிலியை ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா மயில்சாமி கேட்பாருன்னு சொன்னார். இது துவா நம்ம ஹாஸ்பிடலுக்கு வரதுக்கு முன்ன இருந்த வ்யூ…”
“ஆனா என்னைக்கு துவாவை இவனுங்க ஹராஸ் பண்ணினானுங்கன்னு தெரிஞ்சதோ இந்த ஜென்மத்துல மட்டும் இல்லை இனி எந்த ஜென்மத்துலையும் இவன் முகத்திலையே முழிக்க கூடாதுன்னு முடிவே பண்ணிட்டேன். ராஸ்கல்ஸ்…”
“உன் தம்பியை லவ் எல்லாம் பன்ற அளவுக்கு எனக்கு பிடிக்கலை அதி. ஆனா மேரேஜ் பண்ணிக்கலாம்னு ஒரு தாட். ஒரு மரியாதை, கொஞ்சம் பிடித்தம் இது எல்லாம் இருந்துச்சு. இப்ப க்ளீன் ஸ்லேட்…”
அஷ்மிதா சொல்ல சொல்ல பேச்சற்று போனான் அதிரூபன்.
விஷாலுக்குமே இது அதிர்ச்சிதான். தன் திருமணம் பற்றி தானறியாமல் ஒரு பேச்சு, அதிலும் ஒரு பெண் தன்னை கல்யாணம் செய்துக்கனும்னு நினைச்சிருக்கா என்கிற நினைப்பே உவகை கொடுப்பதற்கு பதிலாக வருத்தத்தையும் வேதனையையும் கொடுத்தது.
நினைக்க நினைக்க அத்தனை கீழிரக்கமாக தோன்றியது தன் நடத்தை. இதுவரை பெரியப்பாவிற்காக என பெருமையாய் நினைத்தவன் முதன் முதலாய் ஒரு பெண்ணை இப்படி செய்துவிட்டோமே, என்ன காரணமாக இருப்பினும் தான் செய்தது மகாபாவம் என்பதை எண்ணி வருந்தினான்.
அஷ்மியை எப்படியாவது வேறு யாரும் பார்க்கும் முன் இங்கிருந்து கிளப்ப வேண்டும் என நினைக்க அவளோ அவனை பேசவிடாமலும் அங்கிருந்து நகராமலும் நிறைய நிறைய பேசினாள்.
திருமண அலுப்பு, இன்று நடந்த நிகழ்வுகள் என வீட்டில் உள்ளவர்கள் ஆழ்ந்து உறங்க வேறு யாரும் வரவில்லையே என நினைத்து ஆசுவாசம் கொள்வதற்குள்,
“அதிபா. இங்க என்னப்பா பன்றீங்க?…” என லுங்கியும், பனியனும், தோளில் போட்ட துண்டுமாக வந்து நின்றார் ரத்தினசாமி.
“அப்பா…” என அதிரூபன் எழுந்து நிற்க கண்களை சுருக்கி அவரை பார்த்தாள் அஷ்மிதா.
“அதி உன் வீட்டு சமையல்காரனுக்கு ராத்திரில இங்க என்னடா வேலை?…” என கேட்டுவைக்க அப்போது தான் அஷ்மிதாவை கவனித்தவர் அவளை பார்த்ததும் கண்டுகொண்டார்.
“அதிபா, என்ன கருமம்டா இது? இவ எதுக்கு இந்நேரம் குடிச்சுட்டு இங்க வந்துருக்கா?…” கோபத்தில் கண்கள் சிவக்க அவளை அடிப்பதுபோல வேகமாய் அருகில் செல்ல அவரை பிடித்துக்கொண்டான் விஷால்.
“பெரியப்பா, இருங்க…” என நிறுத்த,
“அடடே மயில்சாமியா?…” என்றுவேறு அஷ்மிதா கேட்டுவைக்க,
“ஆத்தாடி சம்பவம் ஸ்டார்ட் ஆகிடுச்சு…” சந்தோஷிற்கு படபடப்பாக இருந்தது.
“என்ன என்ன சொன்ன?…” விஷாலிடமிருந்து திமிறிக்கொண்டு அவளை அடிக்க போக,
“அடிச்சுடுவியா? அஷ்மியை அடிச்சுடுவியா? யோவ் அடியா, அடிச்சு தான் பாருய்யா. உன்னால என்னை அடிக்க கூட முடியாதுன்றேன்…”
அஷ்மிதா வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு நிற்பதை போல தன் ஷர்ட்டின் கையை மடக்கி விட்டு எழுந்து நிற்க அவளின் தடுமாற்றத்தை பார்த்து,
“அஷ்மி, பேசாம இரு…” அவளை பிடித்து நிறுத்தியவன்,
“அப்பா நீங்க போங்க. அவ எதையோ தெரியாம குடிச்சுட்டு வந்திருக்கா. நாங்க பார்த்துக்கறோம்….”என்றவன்,
“கூட்டிட்டு போயேன்டா…” விஷாலை பார்த்து கடுகடுக்க,
“குடிச்சிருந்தா ஆள் வரைமுறை தெரியாம போய்டுமா? ஒரு மரியாதை வேணாம்?…”
“உனக்கெல்லாம் எதுக்குயா மரியாதை?. அப்படித்தான் கூப்பிடுவேன். மரியாதை நாங்களா தரனும். உன் நடத்தைய பார்த்து வரனும். வராது இந்த ஜென்மத்துல வரவே வராது…” அஷ்மி விடாமல் அலப்பறையை கூட்ட,
“அடி வாங்க போற அஷ்மி. பேசாம நீ என் ரூம்க்கு வா…” அதிபன் அரட்ட,
“நண்பன்டா. நீ நண்பன். அடிச்சுக்கோ. ஆனா இந்த மயில்சாமி கையை நீட்டட்டும் அதுக்கப்பறம் இந்த அஷ்மி யாருன்னு தெரியும்…”
மீண்டும் ரத்தினசாமியை பார்த்து கை நீட்டி எச்சரிக்க அதற்குமேல் முடியாமல் பொங்கிவிட்டார் ரத்தினசாமி.
“யார பார்த்து கை நீட்டி பேசற. பொம்பளைப்புள்ளையா போய்ட்ட இல்லை. முகரையை பேத்திருப்பேன்…” விஷால் மட்டும் பிடிக்காமல் இப்பொழுது சந்தோஷும் சேர்ந்து வந்து அவரை நிறுத்த அசால்ட்டாக பார்த்த அஷ்மிதா,
“என்னய்யா என்ன பண்ணுவ? இந்த ரெண்டு தறுதல புள்ளைங்கட்ட சொல்லி என்னையும் ஏதாவது ஒரு ரெசார்ட்ல வச்சு அடிச்சு கொடுமை படுத்துவியோ? இல்லை என் அப்பாவை கொன்னுடுவேன்னு மிரட்டுவியோ?…” என்றவள்,
“இல்லை என்னை யாருக்காச்சும் கடத்தி வித்துடுவியோ?…” இதை அதிபனை பார்த்துக்கொண்டே கேட்க கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டான் அவன்.
“ஆமா, நீ அரசியல் பன்றன்னு பார்த்தா மானங்கெட்ட வேலையெல்லாம் பார்த்துட்டு இருக்க. இதுக்கு உனக்கு கைக்கூலியா உன் படிச்ச புள்ளைங்க வேற…”
அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க கேட்க ரத்தினசாமி பதறித்தான் போனார். இப்படி அஷ்மிதா அத்தனையும் புட்டுபுட்டு வைப்பாள் என எதிர்பார்க்காத ரத்தினசாமியும் விஷாலும் கூனிக்குறுகி நின்றனர்.
இவர்களுக்கு இதுவும் தேவை, இதற்கு மேலும் தேவை என்பதை போல சந்தோஷ் நின்றான்.
அவனுக்குமே இன்னொரு பெண் தன் வீட்டு தவறுகளை பொட்டில் அடித்தார் போன்று சொல்லிகாண்பித்து கழுவி ஊற்ற, வாயை திறக்கமுடியாமல் அவமானப்பட்டு நின்றனர்.
“சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காம என்ன பாடு படுத்துனீங்க. அவளுக்கு ஒண்ணுனா உன் புள்ளை கேட்பானோ இல்லையோ இனி நான் கேட்பேன். ஜாக்கிரதை. நீங்க பண்ணின அத்தனைக்கும் ஆதாரம் என்ட்ட இருக்கு. வெளில விட்டேன் ஊர் உலகமே காறி துப்பிடும்…”
“அப்படி என்னைய்யா உனக்கு அவ மேல காண்டு. இரக்கமே இல்லாம இவ்வளவு கொடுமை பண்ணியிருக்கீங்க? பகைன்னு வந்துட்டா எதுவுமே தப்பில்லையோ?…”
அஷ்மிதா குடித்திருந்தாலும் கேட்க வேண்டிய அனைத்தையும் நன்றாய் அவர்களுக்கு உரைக்க உரைக்க கேட்கத்தான் செய்தாள்.
“ஓகே, எனக்கு கூட உங்க குடும்பத்துல ஒரு காண்டு. இந்த ஸ்வேதா இருக்கால அவளை எனக்கு சுத்தமா பிடிக்கலை…”
சந்தோஷை பார்த்துக்கொண்டே தான் அஷ்மிதா இதை கூறினாள். சந்தோஷிற்கு தெரிந்தது அடுத்து அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று.
“நானும் உன் வீட்டு பொண்ணை நீ துவாவை நடத்தின மாதிரி, பேசின மாதிரி பேசட்டுமா? ஏனா என்கிட்டயும் பணபலம் இருக்கு. அரசியல் பின்னணியும் இருக்கு. உங்களுக்கு மேல என்னால செய்ய முடியும். செய்யட்டுமா? நானும் அவளை கடத்தி…”
“அஷ்மி…” அவளை அதற்கு மேல் பேசவிடாமல் அதிபன் தடுக்க,
“என்னடா உனக்கு சுருக்குன்னு இருக்கா? நேத்து உன் பொண்டாட்டிக்கும் இதுதான்டா நடந்துச்சு. நான் வாய் வார்த்தையா சொல்லும் போதே உனக்கு இவ்வளவு வருது. அப்போ அந்த வீடியோவை பார்த்தப்ப ஏன் வரலை?…”
“உன்னை போய் நல்லபொண்ணுன்னு நினைச்சேன் பாரு…” என்றார் ரத்தினசாமி.