மின்னல் – 11
தள்ளாட்டத்துடன் நிற்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவளை நான்கே எட்டில் அடைந்தவன்,
“இந்த நேரம் இங்க என்ன பண்ணிட்டிருக்க அஷ்மி? யார் கூட வந்த?…” சுற்றிலும் பார்த்தபடி கேட்க,
“டிரைவர் கூட வந்தேன். அவன் போய்ட்டான்…” கண்கள் சொருக மேலும் பாட்டிலில் இருந்ததை குடிக்க அதை பிடுங்கியவன்,
“என்னத்த குடிச்ச அஷ்மி, இப்டி நடு ராத்திரியில வீட்ல வந்து கலாட்டா பண்ணிட்டு இருக்க?. வீடு லாக்ல தான இருந்தது…” அதிரூபன் கேட்க,
“பெரிய அரண்மனை பாரு. என் பிங்கர் ப்ரிண்டும் தான இருக்கு. அதுதான் வந்துட்டேன்…” என்றவள்,
“லேடிஸ் டிரிங் தான்டா. மனசுல இருக்கறத சொல்லனும்டா அதான் குடிச்சேன். எனக்கு உன் மேல லவ் வந்துடுச்சுடா….” என சொல்ல அதிர்வாய் பார்த்தான் அவன்.
“தப்பு தப்பு தப்பு.. சரியா சொல்லனும். உன் லவ் மேல லவ் வந்துடுச்சு அதி…” என சொல்ல அவன் ஆடித்தான் போனான்.
“ஹா ஹா ஹா பயந்தியா? பயந்தியா?. அந்த பயம் இருக்கட்டும்…” என சிரித்தவள் பின் அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டு,
“அம்மாடியோ என்ன லவ்டா உனக்கு துவா மேல. குடுத்து வச்ச பொண்ணுடா. குடும்பமே கொல்லனும்னு துடிக்கிற ஒரு பொண்ணு கூட குடும்பம் நடத்த எத்தனை ப்ளான்? வாவ், வாவ்…” என்று கைதட்டி சொல்லி தடுமாறி கீழே விழ போக தாங்கி நிறுத்தியவன் சோபாவில் அமரவைத்தான்.
“ஏன்டா இப்படி பன்ற? இதை சொல்லவா குடிச்ச?…”
“அதி நீ ரொம்ப நல்லவன்டா…”
“இதை நீ குடிக்காமலே சொல்லியிருக்கலாம். என்ன பழக்கம் இது புதுசா?…”அதிபன் எரிச்சல்பட அதை கண்டுகொள்ளாதவள்,
“சத்தியமா சொல்றேன். உன்னை மாதிரி ஒருத்தனை பார்த்தா விடவே மாட்டேன். கண்டிப்பா கல்யாணம் தான். ஆனா இல்லையே. அதி வேற. லவ் வேற…”
“அஷ்மி, என்ன உளறல் இது?…” என்றவனின் வாயில் டப்பென்று அடித்தவள்,
“மூச், பேசாம கேளுடா…” என அதட்டியவள்,
“உனக்கு தெரியுமா? நீ துவாரகா மேல வச்சிருக்கிற லவ்வை நான் ஃபீல் பண்ணுவேன்டா. எனக்கு ஏன் இவ்வளவு பிடிக்குதுன்னு நிறைய நேரம் என்னையே நான் குழப்பிருக்கேன். உன்னை லவ் பன்றேனோன்னு. ஆனா உன் முகத்தை பார்க்கறப்போ எனக்கு லவ் ஃபீல் வராது. அதை தாண்டி ஒன்னு…” தாடையில் விரல் வைத்து யோசித்தவள்,
“ஹ்ம்ம், இந்த மூஞ்சில நட்பை தாண்டிய ஒரு அன்பை தான் என்னால உணர முடியுதுடா. லவ். ம்ஹூம். ஏன்டா?…” அவனிடமே கேட்க பதில் சொல்லாமல் பார்த்தான்.
அவளின் பேச்சில் தெறிக்கும் அவன் மீதான அன்பு எத்தனை அபரிமிதமானது என்பதை இன்று தான் உணர்ந்தான் அதிரூபன். இவள் அளவுக்கு தான் அன்பாய் உள்ளோமா என்றால் நிச்சயம் இல்லைதான்.
“நம்ம மேரேஜ் ப்ரபோசல் பத்தி டாடி என்கிட்ட சொன்னப்போ கூட எனக்கு எந்த பீலுமே இல்லையே? வாழ்க்கை துணைன்னு ஒருத்தர காட்டினா இயல்பா ஒரு பெண்ணுக்கு வரும் சின்ன சின்ன எதிர்பார்ப்பும், ஆசையும் எதுவும் வரலை. ஜஸ்ட் கற்பனைல கூட உன்னை வச்சு பார்க்க முடியலையே. ஏன்டா?…”
“நாம ஷேர் பண்ணிக்காத விஷயமே இல்ல. அது எல்லாத்தையும் தாண்டி துவாரகாவை பத்தி நீ என்கிட்ட பேசறதை கேட்கறப்போ எனக்கு அவ்வளோ பிடிக்கும்டா…”
“அப்பப்போ நினைப்பேன் நான் பாட்டுக்கு உன்னை லவ் பண்ணி உன் காதலுக்கு நான் வில்லியாகி அதனால உன்னை கஷ்டபடுத்தி வில்லத்தனம் செஞ்சு. நினைச்சா கூட எனக்கு சிரிப்புதான் வரும். என்னையே நான் சொல்லிக்குவேன் அட காமெடி பீசேன்னு…”
“உங்க வீட்ல பேசினாங்கன்னு என்கிட்ட அப்பா கேட்டப்ப எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை. எனக்குத்தான் துவா தெரியுமே. அதான் உன்கிட்ட கேட்டேன். நீயும் இப்படி ப்ளான் பண்ணின…”
“ஆனாலும் எனக்குள்ள ஒரு குழப்பம். பிக்ஸ் பண்ணின டேட்குள்ள துவாவை கண்டுபிடிக்க முடியலைனா என்ன பண்ண? அதுதான் நிறைய யோசிச்சேன். அப்பதானே சுட்சுவேஷன் ஹேண்டில் பண்ண முடியும்…”
‘தனக்காக அவளுக்குள்ளேயே அவள் எத்தனை போராடியிருக்கிறாள்’ அதிரூபன் மானசீகமாய் தன் தலையில் அடித்துக்கொண்டான்.
தன்னுடைய சுயநலத்திற்காக அஷ்மியின் மிகநுட்பமான உணர்வுகளோடு இப்படி விளையாடிவிட்டோமே என.
கண்கள் கசியும் போல இருந்தது. அவளின் நட்பிற்கு தான் நியாயம் செய்யவே இல்லை என்று தோன்றியது.
நீயெல்லாம் மனிதனா? ஒரு நண்பனா? என தன்னையே காறி உமிழ்ந்துகொண்டான் அதிரூபன்.
மனதிற்குள் அத்தனை முறை அவளிடம் மன்னிப்பை வேண்டினான்.
“இதையெல்லாம் நான் ஏன் நினைச்சேன்னு தெரியுமா? ஒருவேளை விதியோட சதியால நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை வந்தா அப்போ என்னோட மனநிலை என்னவா இருக்கும்னு தெரிஞ்சுக்க எனக்கு நானே ரியலைஸ் பண்ணி பார்த்தேன்…”
டீப்பாயின் மேல் அமர்ந்திருந்தவன் தன் தோழியை பார்த்திருக்க அவளோ கைகளை விரித்து,
“ம்ஹூம் ஒன்னுத்துக்கும் பிரயோஜனமில்ல. எத்தனை யோசிச்சும் உனக்கு வொய்பா சும்மா நினைக்க கூட முடியலை. அப்போ புரிஞ்சது. இந்த மூஞ்சி என்னைக்குமே இந்த அஷ்மியோட லவ்வர்பாய் ஆகவே முடியாதுன்னு. ஆமா தானே?…”
இப்படியும் அப்படியுமாய் தலையாட்டி அவனிடம் கேட்க அஷ்மியின் பாவனையில் அவனுக்கோ லேசாக இதழோரத்தில் சிரிப்பு பூத்திருக்க,
“ஆமாம்டா அஷ்மி. நான் உனக்கு ஏத்தவன் இல்லைடா. உனக்குன்னு பொறந்திருக்கிற அந்த அதிர்ஷ்டசாலி எங்க இருக்கானோ?…” சிறு புன்னகையோடு அவளின் கன்னம் தாங்கி சொல்ல,
“டேய், எங்கடா இருக்க?…” என்று கையை உயர்த்தி சத்தமிட அவளின் வாயை அடைத்தான்.
இரவு நேரம் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வந்துவிடும் அபாயம் தெரிய அதற்குள் சந்தோஷும், விஷாலும் வந்துவிட்டனர். சங்கடமாய் அவர்களை பார்த்த அதிபன்,
“அஷ்மி வா வீட்டுக்கு போகலாம்…” என அழைக்க கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை அஷ்மிதா. விட்டால் அங்கேயே உறங்கிவிடுவாள்.
“அங்க யார் இருக்கா எனக்கு? அப்பா பாரின் போயாச்சு. வர டூ டேய்ஸ் ஆகும்…” அசால்ட்டாய் சொல்லி சோபாவில் காலை நீட்டி ஒரு பக்கம் சாய்ந்தவள் விஷாலை பார்த்து,
“இங்க வா…” என கை மட்டும் நீட்ட அவள் முன்னே நின்றான். மெல்ல எழுந்து நின்றவள் யாரும் எதிர்பாராவண்ணம் பளாரென அறைந்தவள்,
“இன்னைக்கு எதுக்குடா அப்டி பார்த்த? எவ்வளவு தைரியம்டா உனக்கு?…”
“அஷ்மி…” என அதிரூபன் அவளை அதட்ட,
“என்னா? என்னா சவுண்டு? உன் பொண்டாட்டியை கடத்திவச்சு அடிச்சு காயப்படுத்தியிருக்கான். அதை கேட்க உனக்கு துணிச்சல் இல்லை. என்னை அரட்ட வந்துட்ட. இந்த அஷ்மி யாருக்கும் பயப்படமாட்டா…” என்றவள்,
“நீ கொஞ்ச நேரம்…” வாயின் மேல் கை வைத்து சைகை காண்பிக்க தலையில் அடித்தான் அதிபன். ஆனால் அடிவாங்கிய விஷாலோ தலைகுனிந்து நின்றான்.
காரணம் தன் அண்ணன். அவன் முன்னே அஷ்மிதாவை எதுவும் பேசமுடியாது. அவள் அவனுக்கு எத்தனை முக்கியம் என்று தெரியும்.
இன்னொன்று அவனுக்கே அவளிடம் என்னை கேட்க நீ யார் என கேட்டு இந்த குடும்பத்திலிருந்து தள்ளிவைக்க தோன்றவில்லை.
தன் அண்ணன் இதுபற்றி கேட்காமலும், தன்னிடம் இயல்பாக பேசாமலும் இருப்பதே உறுத்தலாக இருக்க அட்லீஸ்ட் இவளாவது அவன் முன்னே கேட்கிறாளே என்று தோன்றியது.
“சொல்லுடா, அண்ணனுக்கு இல்லைன்னு தம்பிக்கு கேட்டதும் ஸார்க்கு தைரியம் வந்துடுச்சோ. என்னை கட்டிக்கலாமான்னு பார்க்கற. தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை. நினைப்புல கூட இந்த அஷ்மி மேல பயம் இருக்கனும் உனக்கு…”
அவனை பிடித்து பின்னால் தள்ளியவள் மீண்டும் சோபாவில் அமர்ந்துகொள்ள சந்தோஷ் வந்து அவளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டுவந்தான்.
“அதி, இவனை என் கண்முன்னால வரவேண்டாம்னு சொல்லு. வந்தான் விஷாலுக்காவது அடி கிடைக்கும். இவனை நான் கொன்னே போட்ருவேன்…”
சந்தோஷை பார்க்க விருப்பமின்றி அதிபனிடம் கத்த சந்தோஷின் முகம் கறுத்துவிட்டது. எத்தனை உத்தமமான தோழி அஷ்மிதா. இனி அவளின் நட்பு தனக்கில்லை என்பதை உணர்ந்து ஒதுங்கி நின்றான் சந்தோஷ்.