மின்னல் அதனின் மகனோ – 10 (3)

“அது எனக்கா தான் தோணனும். திடீர்ன்னு வந்து நீ இப்படி ஆகிடுன்னு சொன்னா? நீங்க ஈஸியா சொல்லிட்டு போய்டுவீங்க. ஆனா நான்?…”

“துவா…”

“இன்னைக்கு நீங்க என் கழுத்தில தாலி காட்டிட்டா மட்டும் இத்தனை வருஷம் நடந்தது இல்லைனா ஆகிடுமா? இல்ல இனி எல்லாமே மாறிடுமா? என்னோட அம்மா, அம்மாக்கு இது கண்டிப்பா பிடிக்காது…”

“புரியுதுடா…” சமாதானமாக அதிபன் பேச,

“சத்தியமா இது யாருக்கும் புரியாது. இப்ப மத்த எல்லாரையும் விட நான் ரொம்ப பயப்படறது அம்மாக்கு தான். உங்களை பார்த்து பேசினதுக்கே நடந்தது வேற. இப்ப இந்த வீட்டுக்குள்ள நான் இருக்கிறது தெரிஞ்சா என்ன பண்ணுவாங்களோ?…”

அகிலாவை நினைக்கும் பொழுதே பயத்தையும் மீறிய ஒரு பயங்கரம் அவள் கண்முன்னே தோன்றி அவளை கலவரப்படுத்தியது.

“எனக்கும் தெரியும் கல்யாணம்னா என்ன? கல்யாணம் ஆகிட்டா என்னவெல்லாம் அந்த குடும்பத்துல நடக்கும்னு. ஒரு குடும்பமா நாங்க வாழலையே தவிர எனக்கும் தெரியும் மாமா. ஆனா இத்தனையும் மீறி நான் உங்களை கல்யாணம் செய்திருக்கேன்னா அதுக்கு காரணம்…”

பேசிக்கொண்டே வந்தவள் அவனின் விழிகளில் வழிந்த காதலில் பேச்சின்றி போனாள். அவன் இவளை சுவாரசியமாக பார்த்தபடி,

“ஹ்ம்ம் காரணம்?…” என ஊக்குவிக்க கண்களை மூடிக்கொண்டு திரும்பிவிட்டாள். உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன்,

“இப்ப நீ சொன்னதை எதையுமே மறுக்க மாட்டேன். இதுவரை நீ மிஸ். துவாரகா அகிலவேணியா இருந்திருக்கலாம். இனி நீ மிஸஸ்.துவாரகா அதிரூபன். இப்படித்தான் இனி உன் வாழ்க்கை. அதுவும் உனக்கு பிடிச்ச மாதிரி மாறத்தான் போகுது…”

“அம்மா ஏத்துக்கமாட்டாங்க மாமா. பயமா இருக்கு…” முகம் திரும்பாமலே அப்படியே விசும்பலுடன் அவன் தோள் சாய அகிலாவின் பிடிவாதம் அறிந்தவன்,

“பார்த்துக்கலாம் விடு. நான்தான் இருக்கேன்ல…” என சமாதானம் செய்தவனுக்கும் அகிலாவை எப்படி சமாளிக்க போகிறோம் என்கிற கவலை உள்ளூர கரையானாய் அரிக்கத்தான் செய்தது.

ஒருவழியாக அழுகையை நிறுத்திவிட்டு சுற்றிலும் பார்வையை ஓட்ட அவளோடு அவனுமே தன்னறையை பார்த்தான்.

ஏதோ புதுவித உணர்வொன்று அவனின் மனதை ஆக்கிரமிக்க சுகமாய் அனுபவித்தான்.

“எதாச்சும் வேணுமா துவா?…” அவள் வாயை திறப்பேனா மௌனம் சாதிக்க என இருக்க அவனாகவே கேட்டான். அவனை பார்த்துவிட்டு திருதிருவென விழித்தாள்.

“ரெஸ்ட் ரூம் போகனுமா?…” அவனாகவே ஊகித்து கேட்க ஆமாம் என தலையாட்டியவள்,

“குளிக்கனும்…” ஒற்றை வார்த்தையாக சொல்ல,

“அதுதான் பாத்ரூம். போய் குளிச்சுட்டு வா. உனக்கு ட்ரெஸ் எல்லாம் கொஞ்சம் எடுத்திருக்கேன். இப்போதைக்கு போட்டுக்கோ. அப்பறமா நாம போய் ஷாப்பிங் பண்ணலாம்…” என சொல்லி அவளுக்கு தேவையானதை எடுத்துக்கொடுக்க வாங்கியவளின் முகம் சிவந்துபோனது.

இன்னும் அங்கேயே ஆணியடித்ததை போல நிற்க புரியாமல் எதற்கு என பார்த்தவன்,

“இன்னும் ஏதாவது வேணுமாடா?…”

“இல்ல நான் பாத்ரூம்ல ட்ரெஸ் சேஞ் பண்ணமாட்டேன். ஈரத்துல ட்ரெஸ் மாத்தறது பிடிக்காது…” அவனை நிமிர்ந்து பார்க்காமல் கையிலிருந்த உடைகளை பார்த்தபடி தயக்கமாய் பேச கண்கள் மின்ன பார்த்தவன்,

“அதுக்கு நான் என்ன பண்ணனும்?…” அதிபனின் குரலில் திடீரென உல்லாசம் குடிகொள்ள பதில் சொல்லமுடியாமல் திணறினாள்.

“ஓகே இப்ப என்ன பண்ணனும்? இந்த ரூமை விட்டு போய்டவா?…”  

அவன் கேட்ட நிமிடம் பயந்துபோனவள் அவனருகே வந்து நின்றுகொண்டு,

“என்னை தூக்கிட்டு வந்துட்டு தனியா விட்டுட்டு போறேனா என்ன அர்த்தம்?. இதுதான் நீங்க பார்த்துக்கறதா மாமா?…” என கோபப்பட,

“இது என்னடா வம்பா போச்சு. நீ தான சொன்ன. அங்க ட்ரஸ் மாத்த முடியாதுன்னு. அதான் உனக்கு கஷ்டமேன்னு ஹெல்ப் பண்ணலாமேன்னு வெளில போறதா சொன்னேன். வெளிலனா இங்க தான்…” இதற்கு என்னதான் சொல்வாள் என பார்க்க சொல்ல,

“எனக்கு கஷ்டம்னு நான் எப்ப சொன்னேன்? அதெல்லாம் வெளில போகவேண்டாம்…”

“அப்போ கஷ்டம் இல்லைன்றயா?…” மீண்டும் வம்பாய் கேட்க,

“நீங்க உட்காருங்க இங்க. நான் குளிச்சுட்டு வரேன்…” அவனை உக்கார்த்திவிட்டு அவன் எதிர்பாராத நேரம் அவனின் கண்களை கட்டிவிட்டு வேறு செல்ல,

“என்னால இதை கழட்ட முடியாதுன்னா நினைக்கிறீங்க மிஸஸ் அதிரூபன்…” குறும்பு கொப்பளிக்க கேட்டவனை பார்த்து இதழ் பிரியாமல் புன்னகைத்தவள்,

“கழட்ட மாட்டீங்கன்ற நம்பிக்கை தான்…”

“ரொம்ப நம்பாதேம்மா. இப்படியே இருக்கமாட்டேன்…” அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவள் குளிக்க சென்றுவிட முகம் கொள்ளா புன்னகையோடு அப்படியே அமர்ந்திருந்தான்.

துவாரகா குளித்து வந்து உடை மாற்றிய பின் அவளுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்து படுக்க வைத்தவன் இரவு உணவிற்கு கூட கீழே இறங்கி வரவில்லை.

ஏனோ அதன் பின் கூட மனம் இலகுவாகாமல் கனத்து நகர்ந்தது அந்த நிமிடங்கள்.

துவாரகாவிற்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. அதிபனிடம் மட்டுமே அவள் அவளாக இருக்கிறாள் என்பது.

அவனிடம் மட்டும் தான் நினைத்ததை பேசி தோன்றுவதை சொல்லி இருக்கிறாள்.

இதே அகிலாவிடம் கூட இத்தனை வெளிப்படையான பேச்சுக்கள் என்பது வெகு குறைவு.

அவர் சொல்வதை கேட்பாள். அவ்வளவே. இவனிடம் மட்டும் எப்படி என யோசித்துக்கொண்டே துயிலுலகம் அடைந்தாள்.

ஆனால் அதிரூபனுக்கு மருந்திற்கும் கூட உறக்கம் கண்களை அண்டவில்லை. நேற்றுவரை எப்படி இவளை தன் மனைவியாய் கொண்டுவருவது என்கிற சிந்தனை மட்டுமே.

ஆனால் இன்றோ இக்குடும்பத்தில் எப்படி இவளை ஒன்றவைப்பது என்கிற யோசனை.

அருகில் சலனமின்றி தூங்குபவளின் முகத்தில் தூக்கத்தில் கூட பயரேகைகள் விழித்துதான் கிடந்தன.

உறக்கத்தில் கூட அவ்வப்போது பதறி எழுந்துகொள்பவளை தட்டிகொடுத்து தூங்கவைத்தான்.

அவளின் உளறல்கள் மொத்தமும் விஷாலிடம் கெஞ்சியவையாகவே இருக்க கேட்டவனின் ரத்தம் கொதிக்கத்தான் செய்தது.

இன்று நேற்றல்ல ஹாஸ்பிட்டலில் சேர்த்ததில் இருந்து இப்படித்தான் பயந்து நடுங்கி அவனோடு ஒன்றுவாள். நிம்மதியான உறக்கம் என்பதே அவளுக்கு இல்லாமல் தான் போயிற்று.

சில நேரங்களில் கட்டுப்பாடில்லாமல் உறக்கத்தில் பதறி எழுந்து வாய்விட்டு அலறி துடிக்கும் பொழுதுகளில் தூக்க மருந்தை தான் கொடுக்கவேண்டியதாக இருக்கும்.

இப்பொழுது இங்கேயும் அதைப்போல எழுந்து தன்னை தேட தான் இல்லாவிட்டால் அவள் நிலை மிகவும் மோசம் என எண்ணி அங்கிருந்து நகராமல் அவளுடனேயே இருந்தான்.

கீழே குடும்பத்தினர் இவர்கள் வருவார்கள் என பார்த்து பார்த்து காத்திருந்துவிட்டு சந்தியாவை அனுப்பி வைத்தனர். அவள் வந்து கதவை தட்டியதும் எழுந்து ஷர்ட்டை அணிந்துகொண்டு சென்றவன்,

“சாப்பாடு வேண்டாம்டா. அண்ணி தூங்கறா. நீங்க எல்லாரும் சாப்ட்டுட்டு தூங்குங்க…” என அனுப்ப சந்தியாவின் பின்னே வந்த பத்மினி,

“நாங்க எல்லாரும் சாப்ட்டாச்சுப்பா அதி. நீ கீழ போய் வெய்ட் பண்ணு. நாங்க துவாவை…” அவரை பேசவிடாமல் இடைமறித்தவன்,

“அம்மா வேண்டாம். அவ தூங்கட்டும்…” என்று சொல்லியும் பத்மினி அங்கேயே யோசனையோடு நிற்க,

“புரியுதும்மா. இன்னைக்கு இங்க வச்சு எதுவும் வேண்டாம். நீங்க போய் தூங்குங்க. நாளைக்கு பேசலாம்…” பட்டென கூறிவிட அதற்கு மேல் பேசமுடியாமல் சென்றுவிட்டனர்.

மீண்டும் வந்து படுத்தவன் லேசாக களைப்பில் கண்ணயர்ந்துவிட்டான். நள்ளிரவை எட்டும் நேரம் மொபைல் ரீங்காரமிட எடுத்து பார்த்தால் அஷ்மி.

‘இந்த நேரத்தில் எதற்கு அழைக்கிறாளோ?’ என வேகமாய் அட்டன் செய்ய,

“அதி, கீழ வாடா…” குழறலாய் அஷ்மிதாவின் குரல்.

“அஷ்மி. என்னாச்சு உனக்கு? உன் வாய்ஸ் ஏன் இப்படி இருக்கு? எங்க வர?…” மீண்டும் கலையாத உறக்கத்தோடு கேள்விகளை அடுக்க,

“டேய், உன் வீட்டு ஹாலுக்கு வாடா என் டொமேட்டோ…” என்று கூறி போனை வைத்துவிட குரல் வேறு ஏதோவாக தெரிய அடித்துபிடித்து கீழே சென்றான் அதிரூபன்.

அங்கே அஷ்மி கையில் பாட்டிலுடன் நின்றுகொண்டிருக்க பார்த்தவனுக்கு மூச்சே நின்றுபோனது.

“வாடா புது மாப்பிள்ளை…” என அழைத்தவள்,

“எங்கிருந்தாலும் வாழ்க…” என பாட அதிரூபனின் விழிகளோ தெறித்துவிடும் அளவுக்கு அதிர்ச்சியில் விரிந்தது.

“அஷ்மி…”

error: Content is protected !!