“அப்படியெல்லாம் விட்டுட்டு யாருக்கோ விட்டுகொடுத்துட்டு போக என்னை என்னனு நினைச்ச?…”
“உங்கம்மா வேண்டாம்னு சொல்லியும் அப்பவே திரும்ப திரும்ப உன்னை வந்து பார்த்தவன் நான். உனக்கும் என்மேல விருப்பம்னு தெரிஞ்சும் விலக நான் என்ன முட்டாளா? பதில் சொல்லுடி….” அவள் வாயை திறப்பதற்கு முன்,
“அதுக்கும் மேல இவ்வளவு ரிஸ்க் எடுத்து இத்தனை பேரை தாண்டி உன்னை என் மனைவியா இந்த ஊர் உலகம் அறிய மதிப்பா கல்யாணம் செஞ்சிருக்கேன். அன்டர்க்ரவுன்ட்ல இவ்வளவு வேலை நான் பார்த்திட்டு இருக்க பட்டுன்னு விட்டு போறேனா விட்டுடுவேனா?…”
“அதிலும் உன்னை இங்க கூட்டிட்டு வர ஸாரி, ஸாரி, தூக்கிட்டு வர என்னவெல்லாம் பண்ண வேண்டியதானது. அதும் மீடியா யாரும் பார்த்திடகூடாதுன்னு. அஷ்மி என்னை சரியான கிரிமினல்னு சொல்லிட்டா…”
“காதலிச்ச பொண்ணை கல்யாணம் முடிச்சமா பொண்டாட்டியை கொஞ்சினோமான்னு இல்லாம உன்ட்ட கெஞ்சிட்டு இருக்கேன் பாரு என்னை சொல்லனும்…”
அவளிடம் பேசிக்கொண்டே தன்னுடைய ஷர்ட் பட்டனை கழட்டிவிட்டு வேஷ்டியை மடித்துக்கட்டி அவளருகே வந்து நெருங்கி நிற்க,
“கிட்ட வராதீங்க. நீங்க என்ன பேசினாலும் நான் இங்க இருக்க மாட்டேன். ஏன்னு ஏன் யோசிக்க மாட்டேன்றீங்க? நான் போகனும்…”
இவள் பேச பேச அவனின் வலிய கரங்கள் கொண்டு அவளை வளைத்துக்கொண்டான்.
அவனின் அருகாமையை என்ன முயன்றும் தவிர்க்க முடியாமல் அவன் மார்போடு மோதி நின்றாள்.
வெறும் பனியனோடு மடித்துக்கட்டிய வேஷ்டியில் அவனிருந்த கோலம் மனைவியாய் அவளின் மனதை மயக்கத்தான் செய்தது. ஆனாலும் அவனை விட்டு திமிறி விலக அவனும் விட்டுவிட்டான்.
அதையும் ஏமாற்றத்துடன் பார்த்தவள் இப்படியே நின்றால் இங்கிருந்து கிளம்ப முடியாது என நினைத்து முயன்று மனதை அடக்கியவள்,
“என்னைக்கோ நடந்ததை எல்லாம் சொல்லி ப்ளாக்மெயில் பன்றீங்க நீங்க. என்னை என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோங்க. எனக்கு இங்க இருக்க வேண்டாம்…”
“நான் கூடவா?…” கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவளை கூர்மையாக பார்த்தபடி அதிபன் கேட்க,
“உங்களுக்கு தெரியும் மாமா எல்லாமே. ஆனாலும் என்னை படுத்தறீங்க. தப்புதான். நீங்க யார்ன்னு தெரிஞ்ச பின்னாலையும் உங்க மேல ஆசைப்பட்டேன் பாருங்க. தப்புதான். ஆனா ஒன்னு இங்க இருந்தா உங்க அப்பா, இவங்களை நினைச்சே ஒருநாள் நான் செத்துடுவேன்…” என்றவள் முகத்தை மூடி கதறிக்கொண்டு அழ சலனமின்றி அவளை பார்த்தான்.
அத்தனை வேதனை அவன் முகத்தில். இந்த வார்த்தைக்கு பின்னும் அவளை இங்கே நிறுத்திவைக்க முடியுமா?
ஆனாலும் அவளே மனது வைத்து போகாமல் இருந்தாலே தவிர யாராலும் அவளை தடுக்க முடியாது என புரிந்துகொண்டான்.
“ஓகே துவா, நீ கிளம்பு…” அவளுக்கு முதுகை காட்டிக்கொண்டு திரும்பி நின்று சொல்ல இன்னும் அதிகமாய் அழுதாள்.
“இப்போ என்ன? அதான் கிளம்புன்னு சொல்லிட்டேனே? என் கூட இருந்தா செத்துருவேன்னு சொல்லி நீ தான் பிளாக்மெயில் பண்ணியிருக்க துவா. அதுக்கு மேலையும் செத்தாலும் என் கூடவே இருன்னு உன்னை இருக்க வைக்க என்னால முடியாது. உன்கூட எப்படியெல்லாம் வாழனும்னு கனவுகண்டிருந்தேன்…”
“மாமா…”
“நீ கூப்பிட வேண்டாம். திரும்பி பார்த்தேனா உன்னை அனுப்பவே முடியாது எனக்கு. ப்ளீஸ், கிளம்புமா…”
சிலநொடிகள் நின்று அவன் திரும்பி தன்னை பார்ப்பானா என பார்த்தவள் அவன் இப்போதைக்கு திரும்ப மாட்டான் என உணர்ந்துகொண்டு உயிரெல்லாம் வலிக்க வலிக்க அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
மாடிப்படியில் இறங்க ஆரம்பித்தவள் பாதியில் ரத்தினசாமியும் விஷாலும் மேலே ஏறி வருவதை பார்த்ததுமே உடல் மொத்தமும் நடுநடுங்க ஆரம்பித்தது.
கால்களை அசைக்க முயன்று தோற்றவள் அப்படியே நிற்க அவளை அப்போது தான் பார்த்த ரத்தினசாமி கோவத்தோடு அவளை முறைத்து பார்க்க விஷால் என்ன செய்வது என அப்படியே நின்றான்.
அவனுக்கு இப்போது ரத்தினசாமியை கீழே கூட்டி செல்வதா? இல்லை துவாரகாவை கடந்து மேலே செல்வதா என குழம்பினான்.
ஏனோ முன்பு போல் துவாரகாவை பார்த்ததும் எழும் வெறுப்புணர்வு இப்போது எழவே இல்லை.
அதிலும் தன் வீட்டில் தன் அண்ணனின் மனைவியாய் அவளை பார்த்த பின் சுத்தமாய் குன்றி போய் இருந்தான்.
இப்போதைக்கு தன் அண்ணன் தன்னிடம் பேசிவிட்டால் மட்டும் போதும் என்று தோன்றியது.
ரத்தினசாமியின் கோபம் அதிகரிப்பதை கண்கூடாய் கண்டவள் அவர் மேலே ஏற அடுத்த படியில் காலை எடுத்துவைக்கவும் அடித்துப்பிடித்துக்கொண்டு மீண்டும் அதிரூபனை நோக்கி ஓடிவந்தாள்.
அவனுக்கு தெரியும் கீழே ரத்தினசாமியை பார்த்தால் அங்கிருந்து கிளம்ப மாட்டாள் என.
அதற்காய் அவளுக்காக அறையில் வாசலிலேயே காத்திருக்க புயல் வேகத்தில் விரைந்து வருபவளை கண்டு சிரிப்பு பொங்கியது அவனுக்கு.
“கடவுளே, பொண்டாட்டி புயல் வேகத்துல வரா. என்கிட்ட வரதுக்குள்ள குறுக்க மணல் லாரி எதுவும் வராம இருந்தா சரி…” என வானத்தை பார்த்து வாய்விட்டே வேண்டினான்.
வந்த வேகத்தில் அவனை கட்டிக்கொண்டவள் கண்களை இறுக மூடிகொண்டாள்.
“மாமா, உள்ள போங்க. எனக்கு பயமா இருக்கு. ப்ளீஸ் உள்ள கூட்டிட்டு போங்க மாமா…” என கத்த அவனோ அசையாமல் ரத்தினசாமியை பார்க்க காத்திருந்தான்.
அவர் தலை தெரிந்து அவரும் தன்னை பார்த்த பின்பு அவரை கவனிக்காதவன் போல கள்ளச்சிரிப்போடு உள்ளே வந்து கதவடைத்துக்கொண்டான். அதேநேரம் விஷால் இந்தப்பக்கம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
அவனுக்கு தெரியும் துவாரகாவை இனி தன் அண்ணன் தனியாக விடமாட்டன் என்று.
அவளுக்கு பாதுகாவலனாக எப்பொழுதும் அவனின் பார்வை வட்டத்தில் தான் அவளை வைத்திருப்பான் என்று.
துவாரகா தனியாக வெளியில் வந்தால் அங்கே அவனும் இருப்பான் என்று உணர்ந்துகொண்டவன் குனிந்த தலை நிமிராமல் செல்ல ரத்தினசாமியோ மகனை பார்த்த நொடி கண்களை திருப்பிக்கொண்டார்.
அவன் இப்படி நிற்பான் என கனவா கண்டார்? துவாரகா மீது அத்தனை நிமிடம் இருந்த கோபம் பனியாய் கரைந்துவிட சங்கடத்துடன் சென்றுவிட்டார்.
மனைவியை உள்ளே அழைத்து வந்தவன் அவளை அங்கே அமர வைத்துவிட்டு குடிக்க தண்ணீர் எடுத்துவந்து கொடுக்க அவனின் இடையை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
“போதும் துவா. இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் பயந்து பயந்து அழுகையில உன்னை கரைப்ப? இப்படி தைரியமில்லாத, முதுகெலும்பில்லாத பொண்ணாவா உன்னை உங்கம்மா வளர்த்திருக்காங்க? ஷேம் ஆன் யூ…”
அதிரூபன் அவளுக்கு எப்படியாவது புரியவைத்துவிடவேண்டும் என்கிற நோக்கில் அவளுக்கு வலித்தாலும் பரவாயில்லை என கடுமையாக பேச ஆரம்பித்தான்.
“உன்னை ஓட ஓட விரட்டறாங்களே? இவங்க முன்னாடி வாழ்ந்து காமிக்கனும்னு ஏன் உனக்கு தோணலை?. நீயும் உன் அம்மாவும் பயந்து ஒதுங்கி போக போய்தான் இவ்வளவு ஆட்டம் போட்டாங்க எல்லாரும். உங்கம்மாவும் பயந்து உன்னையும் இப்படி பயம்காட்டி…”
“இவங்கட்ட எல்லாம் வாழ்ந்து காமிக்கனும்னு எனக்கு ஏன் தோணனும்? விலகி போனா விரட்டுவாங்களா?…” என்றவள்,
“எங்கம்மா ஒன்னும் பயந்து போகலை. துஷ்டரை கண்டால் தூர ஒதுங்கி போகனும்னு தான் சொல்வாங்க. அதான் நாங்க விலகி நின்னோம். என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க. இனி எங்கம்மாவை பத்தி பேசாதீங்க…”
“துவா…”
“ஆமா நான் பயந்தாங்கொள்ளி தான். ஆனா ஏன் இப்படி பயந்து சாகறேன்? எல்லாம் உங்க வீட்ல இருக்கிறவங்களால தானே…”
“நான் இல்லைன்னு சொல்லலையேடா. இனியும் எதுக்கு பயப்படனும்? அவங்க முன்னாடி நீ நல்லா வாழ்ந்து காமிக்கனும்னு தான் சொல்றேன்…”