மின்னல் – 10
“இது உங்க வீடா?…” என கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என யோசித்ததெல்லாம் ஒருநொடி தான். சட்டென முகத்தை பீதியிலிருந்து மாற்றிகொண்டவன்,
“என்னடா எழுந்தாச்சா? செம்ம தூக்கம் போல துவாக்கு…”
விளையாட்டு போல கேட்டுகொண்டே ஜூஸை எடுத்து அவளிடம் நீட்ட வாங்காமல் அவனையே பார்த்தவளுக்கு வியர்த்துக்கொட்ட ஆரம்பித்தது.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க மாமா, என்னை உங்க வீட்டுக்கு தான கூட்டிட்டு வந்திருக்கீங்க?…”
“முதல்ல போய் பேஸ்வாஷ் பண்ணிட்டு ப்ரெஷ் ஆகிட்டு வா. இந்த ஜூஸை குடி. இல்லைனா சூடா காபி கொண்டு வர சொல்றேன். அது உனக்கு இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்…”
துவாரகாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேண்டுமென்றே பேச்சை திசைதிருப்பியதை கண்டுகொண்ட துவாரகாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“நான் தான் இங்க வரமாட்டேன்னு சொன்னேன்ல. என்னை எதுக்கு இப்படி தூங்க வச்சு தூக்கிட்டு வந்தீங்க? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?…”
“துவா, இப்ப எதுக்கு இந்த ஆர்க்யூமென்ட்? நீ மாட்டேன்னு சொன்னா அப்படியே விட்டுட்டு வந்திருவேனா?…”
“விட்டுட்டு வரவேண்டியது தானே? நான் கேட்டேனா? என்னை இங்க கூட்டிட்டு வாங்கன்னு…”
“நீ கேட்டா தான் கூட்டிட்டு வரனுமா? நீ இப்ப என்னோட மனைவி. இந்த வீட்டோட மருமகள். இங்க வராம எங்க போவியாம்? இந்த வீட்ல இருக்கிற எல்லா உரிமையும் உனக்கு இருக்கு…” என்றுதான் சொல்லி முடித்தான். அவனை தீப்பார்வை பார்த்தவள்,
“அப்பாவ பார்க்கனும்னு ஆசையா உங்க வீட்டு வாசல்ல வந்து நின்ன அன்னைக்கு என்னை நாயை விரட்டற மாதிரி விரட்டினாங்க. அன்னைக்கு எங்க போச்சு இந்த உரிமை?. உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு என் உரிமையை பத்தி அன்னைக்கே நீங்க பேசியிருக்க வேண்டியதானே?…”
இப்படி படபடவென அவள் பொரிந்து தள்ளுவாள் என எதிர்ப்பார்த்திடாத அதிரூபன் திகைத்து தெளிந்து சிறு சிரிப்போடு அவளருகே அமர்ந்தவன்,
“வாவ்.. துவாக்கு இவ்வளோ பேச தெரியுமா? உனக்கு இவ்வளோ கோவம் வருமா?…” என அவளின் கையை பிடித்துக்கொண்டு அவள் முகம் நோக்கி குனிந்து பார்த்து கேட்கவும் தான் துவாரகாவிற்கே தான் என்ன பேசியிருக்கிறோம் என புரிந்தது.
‘தானா இப்படி இவனிடம் கோபம் கொண்டது?’ என வியப்போடும், கோபப்பட்டு பேசியதற்கு எதுவும் திட்டிவிடுவானோ என்கிற பயத்தோடும் அவனை பார்த்தவள் விழிகள் கலங்க துவங்கின.
“ச்சோ, இதுக்கு போய் அழுவாங்களா? இப்பத்தான் நீ நல்லா பேசறன்னு சந்தோஷப்பட்டேன். நீ என்னனா அதுக்குள்ள அழ ஆரம்பிக்கிற…”
குழந்தைக்கு கூறுவதுபோல அவள் கண்களை துடைத்துக்கொண்டே கூற அவனை இன்னும் பயத்துடனே பார்த்தவள்,
“கோவமா இருக்கீங்களா?…” என கேட்க,
“எதுக்கு கோவப்படனும்?…”
“இல்ல நான் பேசினதுக்கு…”
“துவா பேச்சுன்றது மத்தவங்களுக்காக என்னைக்குமே இருக்கக்கூடாது. நமக்கு என்ன தோணுதோ அது நியாயமாக இருக்கும்பட்சத்தில் பேசறது தவறே இல்லை. அதுமாதிரி பேச வேண்டிய நேரத்தில் பேசாம இருக்கிறதும் தப்பு தான். இத்தனை நாள் நீ பேசாம இருந்தது ரொம்பவே தவறு…”
“அப்ப கோவமில்லையா?…”
“ஹைய்யோ உனக்கு எப்படி நான் புரியவைக்க?…” என புலம்பியவன்,
“நீ இப்படி பேசறது எனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு. உனக்கு மனசுல பட்டதை உன்னோட பிடித்தமின்மையை நீ சொன்ன. எப்பவும் இப்படி தான் நீ பேசனும்னு நான் எதிர்பார்க்கிறேன். நான் திட்டுவேனொன்னு எல்லாம் பயப்பட கூடாது. பேசிடனும். போதுமா?…”
“அப்ப நான் என்ன சொன்னலும் திட்டமாட்டீங்களா?…” என்றவள்,
“அப்படின்னா நான் கிளம்பறேன். அம்மாட்ட போறேன். இங்க இருக்கமாட்டேன்…”
“நீ பேசறது சந்தைக்கு போகனும், ஆத்தா வையும், காசு கொடு ஸீனோட இன்னொரு வெர்ஷன் மாதிரி இருக்கு…”
“நீங்க தான எனக்கு தோணினதை சொல்ல சொன்னீங்க?…” அவள் அவனுக்கே திருப்ப,
“இதை தவிர நீ என்ன வேணும்னாலும் பேசு. இந்த வீட்டை விட்டு போகனும்னு இனி எப்பவும் நீ நினைக்க கூடாது…” குரலில் கடினத்தை வரவழைத்து,
“என்னால இந்த ஜென்மம் இல்லைனா இன்னொரு ஜென்மம் எல்லாம் வசனம் பேசிட்டு இருக்க முடியாது. இந்த ஜென்மத்திலையே உன்னோட என் மொத்த வாழ்க்கையையும் காதலா வாழ்ந்து பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டேன். புரியுதா?…” கடுமையாக கூற அவனையே பார்த்தவள் முகத்தை திருப்பிக்கொள்ள,
“என்னை பிடிக்கும் தான துவா?…” இறங்கி வந்தான் அவளுக்காக.
“இங்க இருக்க எனக்கு பிடிக்காது. பிடிக்கலை…” அவன் ஒன்று கேட்க அவள் ஒன்று கூறினாள்.
“ஓஹ், இந்த வீட்ல இருக்கிற என்னையும் பிடிக்காதுன்னு சொல்லாம சொல்றியா துவா?…” அவன் கேட்ட ஷணம் பதறிப்போய் பார்த்தவள்,
“மாமா நான் எப்ப உங்களை பிடிக்காதுன்னு சொன்னேன்?…”முனகலான குரலில் சொல்ல அதை கண்டு புன்னகை புரிந்தவன்,
“நீ இன்னும் தெளிவா சொல்லலையே என் முயல்குட்டி…” அவளை தன் தோளில் சாய்த்து கூற கண்களை ஒளிர நிமிர்ந்து பார்த்தவளை மீண்டும் சாய்த்துக்கொண்டு,
“ஞாபகம் இருக்கா? முயல்குட்டி எனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கீங்க என்னை கல்யாணம் பண்ணி என்னோட இருக்கிறதா. ஞாபகம் இருக்கா?…”
அந்த நாளின் நினைவுகளில் கண்கள் கலங்கியவள் சுதாரித்துக்கொண்டு,
“ஆனா எனக்கு எதுவும்…”என கசப்பாய் சொல்லி,
“இப்பலாம் என்னை ரொம்ப பேச வைக்கிறீங்க. எனக்கு முடியலை. அம்மாட்ட நான் இவ்வளவு பேசினதில்லை. இப்ப இன்னைக்கு நான் எவ்வளவு பேசிட்டேன். அம்மா இருந்திருந்தா பேசவே விட்டிருக்க மாட்டாங்க. நானும் பேசினதில்லை. அம்மா சொன்னா சரின்னுடுவேன். அவ்வளோ தான். என் லைப்ல நான் இவ்வளோ பேசினது உங்க கூட மட்டும் தான். உங்களை பார்த்த பின்னாடி…”
துவாரகா சிணுங்கலாய் கூற பதில் கூறாமல் குறும்பாய் சிரித்தவனுக்கு அஷ்மிதா இருந்தால் என்ன கவுன்ட்டர் குடுத்திருப்பாள் என நினைத்து பார்த்தவனுக்கு அடக்கமாட்டாமல் சிரித்தான்.
“ஏன் இப்படி சிரிக்கிறீங்க? எனக்கு பயமா இருக்கு…”
“அடிப்பாவி சிரிச்சா கூடவா பயப்படுவ…” என கேட்டு,
“இந்த நேரம் நீ சொன்னதுக்கு அஷ்மியா இருந்தா செம்மையா கலாய்ச்சிருப்பா. அத நினைச்சு தான் சிரிப்பு வந்திருச்சு…”
“என்ன? என்ன சொல்லியிருப்பாங்க?…” துவாரகாவிற்கே ஆர்வமாக இருக்க,
“அதெல்லாம் நான் சொன்னா நல்லா இருக்காது. அவளே நாளைக்கு வருவா பாரு. வந்ததும் நீ சொன்னதை உன் முன்னாடியே சொல்றேன். நீயே லைவ்ல பார்த்து தெரிஞ்சுப்ப…”
“நாளைக்கா?. அதுவரைக்கும் இங்கயா?…” மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற,
“இங்கதான். திரும்பவும் தொடங்காத துவா…” கொஞ்சம் கடுப்பும் ஆகிவிட்டான் மீண்டும் அவள் ஆரம்பித்ததில்.
“நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். நான் போறேன்…” என சொல்லி வேகமாய் துவாரகா எழுந்துகொள்ள,
“அப்பறம் எதுக்குடி ஊரறிய என் கையால தாலி வாங்கின? நான் கேட்டப்பவே வேண்டாம்னு சொல்லியிருக்க வேண்டியது தானே?…”
“நான் வேண்டாம்னு தான் சொன்னேன். நீங்க தான் கேட்கலை. மாமான்னு கூப்பிடு, கல்யாணம் பண்ணிக்கோன்னு என்னை சொன்னீங்க…”
“மாமான்னு நான் உன்னை கூப்பிட சொன்னேனா? எங்கோ சும்மா இருந்தவனை பார்த்த முதல் தடவையே மாமான்னு வந்து கட்டிப்புடிச்சு எனக்குள்ள காதலை வரவழைச்சு உன் நினைப்பாவே சுத்தவச்சது நீ தான். அப்ப இருந்து உன் நினைப்பாவே இருக்கிற நான் எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடிட்டு போவேன்னா நினைச்ச?…”
அதிரூபனின் பேச்சில் பேரதிர்விற்கு ஆட்பட்டவள் பதில் பேசமுடியாத மௌனியாய் நின்றாள்.