சந்தோஷ் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேச அர்னவ் அவனை கொலைவெறியோடு முறைக்க,
“போதும்டா, கிளம்புவோம். அதான் மண்ணை கவ்வியாச்சுல. இன்னும் இங்கயே நின்னு ஸீன் எதுக்கு? போறவன் வரவன்லாம் ஒருமாதிரியா பார்க்க போறானுங்க…”
“உனக்கு ரொம்ப சந்தோசம் போல?…” விஷாலின் நக்கலில்,
“நிச்சயம் இல்லைடா. அத்தான்கிட்ட உண்மையை சொல்லியிருந்தா ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பேன்…”
“ஏன் சொல்லியிருக்க வேண்டியது தானே?…”
அர்னவ் அப்படி கேட்டாலும் அவனுக்கு தெரியும். உயிரே போனாலும் சந்தோஷ் நடந்ததை சொல்லியிருக்கமாட்டான் என்பதில் அத்தனை நிச்சயம் நிறைந்திருக்க அந்த இறுமாப்பில் சந்தோஷை சீண்ட,
“ஏன்டா கேட்கமாட்ட. எல்லாம் என் நேரம். நான் சொல்லியிருந்தா இந்நேரம் நீங்க ரெண்டுபேரும் இங்கயா இருந்திருப்பீங்க? உங்கள விட்டுட்டு என்னால மட்டும் இருந்திடவா முடியும்?…”
கேலிபோல் கூறினாலும் அதுதான் உண்மை. ஒருவரை பிரிந்து மற்றவர்கள் இருக்கவே முடியாது.
அப்படி ஓர் பாசப்பிணைப்பு. அவர்களின் அன்பின் அளவை வார்த்தைகளில் வரையறுக்க இயலாது.
அந்த அன்புதான் இன்று இவ்விடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. தங்களின் ஒழுக்கம் தவறாத வளர்ப்பையும் மீறிய இப்படி ஒரு செயலை செய்யும் அளவிற்கு ஊக்கியது.
சந்தோஷின் குரலில் தென்பட்ட வேதனையில் மற்றவர்கள் கலங்கினாலும் முதலில் அர்னவ் தான் சுதாரித்தான்.
“நீ மட்டும் பொண்ணா பொறந்திருந்தா உன்னத்தான்டா கட்டியிருப்பேன். இப்படி ஏமாத்திட்டியே? உன்னை போல ஒருவன் எங்களுக்கு கிடைப்பானா?…” என சீண்ட,
“இப்போ மட்டும் என்ன? பொண்ணா வேணும்னா பொண்ணாவே மாத்திடுவோம்…” அர்னவின் தோளில் சாய்ந்துகொண்டு சந்தோஷை பார்த்து கண்ணடித்த விஷால்,
“உனக்கு ஓகேவா?…” என கேட்க,
“சனியனே, நீலாம் திருந்தவே மாட்ட…” என்று அவனை அடிக்க இருவரும் சேர்ந்து ஹேய்ய்ய்ய் என கத்திக்கொண்டே சந்தோஷை தூக்கி சுற்றினர்.
அந்த நிமிடம் அவர்கள் வந்தது, நடந்தது அனைத்தையும் மறந்து அடுத்து நடக்கவிருப்பதை பற்றி கவலைகொள்ளாமல் குதூகலித்தனர்.
ஆனால் அவர்களை போல அப்படியே விட்டுவிட்டு செல்ல அதிரூபன் சாதாரணப்பட்டவன் இல்லையே. அவனின் கண்ணிலிருந்து ஒன்று தப்புவதா? இல்லையே.
‘சம்திங் ராங்’ அவனின் உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது. காரில் சென்றுகொண்டே பிரனேஷிற்கு அழைத்தவன் தனக்கு தேவையானதை சொல்லிவிட்டு இரவிற்குள் முடித்துவிடுமாறு சொல்லி போனை வைத்தான்.
ரிசார்ட்டில் வைத்து எந்த ஆராய்ச்சியும், விசாரணையும் வேண்டாம் என்று தான் அவர்களிடம் அதிகம் துருவாமல் அங்கிருந்து கிளம்பினான். ஆனால் அப்படியே விட்டுவிட அவன் தயாரில்லை.
“என் தம்பிகள் மேல் ஒருவன் கை வைப்பதா?…” கோபம் குமிழிட சென்றுகொண்டிருந்தான் அதிரூபன்.
ஆம், அதிரூபனை பொறுத்தவரை அது கைகலப்பு என்றே நினைத்திருக்க அவர்கள் செய்துவைத்திருக்கும் விபரீதம் மட்டும் தெரிந்தால் அந்தநொடி அவனின் மறு பக்கத்தை கண்டிருப்பனர் தம்பிகள்.
அண்ணனிடமிருந்து தப்பித்த நிம்மதியில் சென்னை வந்தடைந்தனர் மூவரும். ஆனால் சந்தோஷின் உள்ளம் மட்டும் குற்றவுணர்ச்சியில் குன்றிக்கொண்டு இருந்தது.
இது மட்டும் தன் தாய் அன்னபூரணிக்கு தெரியவந்தால்? நினைவே நெஞ்சை அறுத்தது.
தலை நிமிர்ந்தும் பார்க்கமுடியுமா அவரை? இந்த உணர்விலிருந்து மீட்சியே இல்லையா என முகத்தை அழுந்த துடைத்தவன் கார் வீட்டின் அருகே செல்வதை கண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.
அருகில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து உறங்கிக்கொண்டிருக்க அவர்களை அடித்து எழுப்பியவன்,
“வீட்டுக்கு வந்துட்டோம். எழுந்திரிங்கடா…” என மொத்த,
“அதுக்குள்ளையுமா? நோ. ட்ரைவர் இன்னொரு ரவுன்ட் சென்னையை சுத்துங்க. கொஞ்சம் தூங்கிக்கறேன்…” என்றபடி அர்னவ் சந்தோஷின் மடியில் படுக்க,
“மரியாதையா எழுந்திரு. நானே உங்க ரெண்டுபேர் மூஞ்சியையும் பார்த்து யார்லாம் என்னலாம் கேட்பாங்களோன்னு பயத்துல இருக்கேன். உங்களுக்கு எப்படிடா தூக்கம் வருது?…” என்றவன்,
“அண்ணா அந்த பெரிய கேட் வீடு. அதுதான். வாசல்ல செக்யூரிட்டி காட்ஸ் நிக்கிறாங்க பாருங்க…” என்ற அடையாளம் காண்பித்தான்.
மத்திய அமைச்சர் ரத்தினசாமி இல்லம் அவர்களை மிக பிரமாண்டமாய் வரவேற்றது.
சந்தோஷிற்கு தான் பரபரப்பு தாங்கவில்லை. தங்களுடன் வந்த ட்ரைவருக்கு விஷால் பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வர,
“ஹேய்ய் அர்னு வந்துட்டான்…” என கத்திக்கொண்டே வந்தாள் சந்தோஷின் தங்கை ஸ்வேதா. மாடியிலிருந்து வேகமாய் இறங்கி வர,
“ஏய் பாப்பு மெதுவா வா…” என்று அவளை நோக்கி ஓடிய அர்னவ் அவளை பிடித்து நிறுத்த,
“ஆரம்பிச்சிடுச்சுங்க பாச மலருங்க…” என சோபாவில் சாய்ந்தமர்ந்த விஷால் சொல்ல,
“எல்லாரும் என்னை விட்டுட்டு கோவா கிளம்பினேங்கள. எப்டி திரும்பி வந்தீங்க பாருங்க…” என சுடிதார் காலரை தூக்கிவிட்டு கெத்தாய் சொல்ல,
“விஷால்…” என்றபடி அவனின் தாய் பத்மினி வர அவரை கண்டதும் எழுந்தவன்,
“ம்மா, குளிச்சிட்டு வந்திடறோம்…” என சொல்லியவன் மற்ற இருவரையும் இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்துகொண்டான்.
“இப்ப எதுக்குடா அத்தைட்ட பேசக்கூட விடாம தரதரன்னு இழுத்துட்டு வந்த?. அம்மாவையும் பார்க்கலை…” சந்தோஷ் கோபப்பட,
“முதல்ல குளிச்சுட்டு முகத்துக்கு கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்க்கனும்ல அதுக்கா இருக்கும். இல்லையாடா?…” அர்னவ் சொல்ல,
“தெரியுதுல. போய் குளிங்கடா…” என சொல்லி குளிக்க சென்றுவிட இங்கே பத்மினி அவர்களின் வருகைக்காக காத்திருந்தார்.
பத்மினி ரத்தினசாமியின் மனைவி. அக்குடும்பத்தின் தலைவி. அவரின் அருமை புதல்வன் அதிரூபன். ஒரே மகன்.
ரத்தினசாமியின் தம்பி சங்கரன் மனைவியை இழந்தவர். அவரின் பிள்ளைகள் சந்தியா, விஷால், அர்னவ்.
ரத்தினசாமி தங்கை அன்னபூரணி, அவரின் கணவர் வைத்தியநாதன். பிள்ளைகள் சந்தோஷ், ஸ்வேதா.
ரத்தினசாமியின் குடும்பம் கூட்டு குடும்பம். தம்பி குடும்பம், தங்கை குடும்பம் அவர்களின் பிள்ளைகள் என அனைவரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாய் வாழ்ந்து வருகின்றனர்.
அதுதான் அவரின் விருப்பமும் ஆசையும். அனைவரும் ஒன்றாய் இருப்பது. யாரையும் அடக்கிவைக்கவோ, அதட்டிவைக்கவோ மாட்டார்.
அனைவருக்கும் சுதந்திரம் தான். ஆனாலும் அனைத்தும் அவரின் கைக்குள்ளே தான் இருக்கும்.
அவரை மீறி எதுவும் நடக்காது. யாரின் ஆசைக்கும் விருப்பத்திற்கும் தடை நிற்கவும் மாட்டார். ஆனால் அப்படி ஒரு சூழ்நிலையில் அவரை யாரும் நிறுத்தவும் இல்லை.
இதுவரை அவ்வீட்டில் ரத்தினசாமி வைத்தது தான் சட்டம். ஆனால் இனியும் அப்படி நடக்க சாத்தியமில்லை என்பதுதான் அவர் அறியாதது.
——————————————————–
அதிரூபன் மீட்டிங் நடக்கும் ஹோட்டலுக்கு காரை விரைவாய் செலுத்த ப்ரனேஷிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்றதும்,
“சொல்லுடா…”
“அதி, நீ கேட்டதை அனுப்பிட்டேன்டா. மெயில் செக் பண்ணிக்கோ…”
“ஓகே டா…” என்றவன்,
“ப்ரனேஷ் எனக்கு செகென்ட் கால் வருது. உன்னை திரும்ப கூப்பிடறேன்…” என்று சொல்லி ப்ரனேஷ் கூற வருவது என்னவென கேட்காமல் அழைப்பை துண்டித்துவிட்டு இன்னொரு அழைப்பில் பேசிக்கொண்டே சாலையில் லேசாய் கவனம் சிதற நொடியில் சுதாரித்து காரை ஓரம்கட்டி நிறுத்தினான்.
ஒரு ஐந்து நிமிடங்கள் நிதானித்த பின் காரை கிளப்ப ஈனஸ்வரத்தில் ஏதோ ஒரு குரல் செவிகளை தீண்ட,
“ப்ளீஸ், ஹெல்ப் பண்ணுங்க. ப்ளீஸ்…” தனக்கு பின்னால் இருந்து அந்த குரல் மீண்டும் கொஞ்சம் சப்தமாகவே கேட்க திடுக்கிட்டவன் காரின் விளக்கை ஒளிரவிட்டான்.
பின் சீட்டின் அடியில் ஒரு பெண் நலுங்கிய உடையில் தலையில் காயத்தோடு தீனமான குரலில் முனங்கிக்கொண்டிருக்க அதிர்ச்சியில் உறைந்தே போனான் அதிரூபன்.