“ஹ்ம்ம், இங்க இருந்தவரை அவளை அதட்டி உருட்டி வச்சிக்கறது. அங்க போகவும் தான் தெரியுது…” என்றான் கொள்ளையாய் புன்னகைத்து.
“அதென்னவோ வாஸ்தவம் தான். எதாச்சும் சேட்டை பண்ணிட்டேனாலும் கைக்குள்ள, காலுக்குள்ள சுத்திட்டு வருவா. மாதவ்வோட மல்லுக்கட்டி அதுக்கொரு ஆர்க்யூமென்ட்ன்னு வீடு எப்பவும் ஒரு கலகலப்போட தான் இருக்கும். ஆனா…” என்றவருக்கும் கண்கள் கலங்கி இருந்தது.
“இது லாஸ்ட் இயர். படிப்பு முடிய இன்னும் கொஞ்சநாள் தானே?…” என அவரை அவன் தேற்ற,
“இல்லைன்னு சொல்லலை. மூணுவருஷம் கூட வேகமா போயிருச்சு. ஆனா இந்த கடைசி வருஷம் ஆமை வேகத்துல நகருது…” என்று பெருமூச்சுடன் பேசிக்கொண்டே வந்திருந்தார்.
கூடவே திருமணம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பது வரை அவர் கனவு கண்டதை எல்லாம் அவனிடம் தெரிவிக்க, அந்நாளை எதிர்பார்த்திருந்தவன் மனதும் அதற்கு வெகுவாய் ஏங்க ஆரம்பித்திருந்தது.
ஆனால் அதனை தற்சமயம் நினைக்கையில் உள்ளமெல்லாம் வெந்து தேம்பிக்கொண்டிருக்க தன்னை மறந்து சிந்தனையில் இருந்தவனை தட்டி எழுப்பினார் குபேரன்.
“லேண்டாக போகுது அத்யு…” என்று சொல்லவும் தலையசைத்தவன், முகத்தை இருகரங்களாலும் அழுத்தமாய் துடைத்துக்கொண்டான்.
மாலை நான்கரைக்கு புறப்பட்டிருந்தவர்கள் இரவு ஏழரை மணிக்கு அங்கே சென்று சேர்ந்தனர்.
அவர்கள் அந்த ஊரில் தரையிறங்க இருள் சூழ்ந்திருந்தது அவர்களின் மனதில் கவிழ்ந்திருந்ததை போலவே.
“அத்யு…” என அவனின் கையை நடுக்கத்துடன் பிடித்துக்கொண்டார் குபேரன்.
“மாப்பிள்ளை, பார்த்துக்கலாம் வாங்க…” என்று சொல்ல விமான நிலையத்திற்கு வெளியே காருடன் காத்திருந்தான் கார்த்திக்கின் நண்பன் ஒருவன்.
“ஹாய் அண்ணா, நான் கார்த்திக் ப்ரெண்ட் ஜேக்கப்…” என ஒருவன் கைகுலுக்க,
“ஹ்ம்ம்…” என்றவன், எதுவும் பேசாமல் அந்த காரில் ஏறி அமர, குபேரனும், கதிர்வேலனும் அந்த தோழனை அப்படி ஒரு பார்வை பார்த்தனர்.
அவர்களின் பார்வையை கண்டவனுக்கு அத்தனை பயம். தான் என்ன செய்தோம் என்பதை போல் மௌனமாய் முன்னிருக்கையில் ஏறி அமர்ந்து காரை கிளப்பினான்.
“அத்யு வீட்டுக்கு சொல்லிடு…” என கதிர்வேலன் கூற,
“ரிங் போகுதுப்பா. கால் பண்ணிட்டேன்…” என்று அத்யுதாரன் கூறுகையிலேயே மறுபுறம் கார்த்தியாயினி எடுத்துவிட்டார்.
“ம்மா, இங்க ரீச்சாகிட்டோம்…” என அத்யுதாரன் கூற,
“சரிப்பா. இப்போ நேரா எங்க போறீங்க?…” என்று கேட்டவருக்கு கார்த்திக் என்ன செய்கிறானோ, ஒருவேளை அவன் தான் அழைக்க வந்ததோ என்று யோசனை.
ஆனால வாய்விட்டு கேட்க மனமில்லை. மனதே விண்டுபோயிருந்தது அவருக்கு.
அனைத்தையும்விட இப்போது அத்யுதாரன் இருக்கும் மனநிலையை எண்ணியவருக்கு கண்ணீர் மீண்டும் பொங்கியது.
“ஸ்டேஷன் தான் போறோம். போய்ட்டு பேசிட்டு சொல்றேன்…” என கூறியவன்,
“அத்தைட்ட சொல்லுங்க. பயப்பட வேண்டாம்ன்னு…” என்று கூற,
“யாரோடையும் பேசவே இல்லை. கூட நீங்க கூட்டிட்டு போகலைன்னு சொல்லி அழுதுட்டே பூஜை அறையை விட்டு வெளில வரலை…” என்றார் தேம்பலுடன்.
“ம்மா, நீங்களே அழுதா அவங்களுக்கு யார் ஆறுதல் சொல்லுவாங்க. முதல்ல அழுகையை நிறுத்துங்க…” என அதட்டினான்.
பின்னிருக்கையில் அமர்ந்திருந்த குபேரன், கதிர்வேலன் இருவருக்குமே கேட்டது.
“அழாம எப்படி இருக்க?…” என்ற கார்த்தியாயினி,
“சரிப்பா போய்ட்டு பார்த்துட்டு நல்லவிஷயமா சொல்லு. உயிரை கையில பிடிச்சிட்டு இருக்கோம்…” என்று கூற,
“ம்மா செகெண்ட் கால் வருது. வைங்க…” என்றதும் அவருமே வைத்துவிட்டார்.
ஒரு பெருமூச்சுடன் தலையசைத்துக்கொண்டவன் அடுத்து வந்திருந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
“ஹலோ ஸார்…” என பதற்றத்துடன் அவனின் உடல்மொழியே மாறிவிட்டது.
மறுபக்கம் என்ன சொல்லப்பட்டதென்று கவனமாய் கேட்டுக்கொண்டவனுக்கு விழிகள் சிவந்தது.
“ஓகே ஓகே தேங்க் யூ ஸார். நீங்க இவ்வளவு ஹெல்ப் பண்ணினதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்…” என்றவன்,
“நிச்சயம் இப்படி ஒரு பிரஷர் குடுக்க யாரா இருந்தாலும் யோசிப்பாங்க. தேங்க் யூ சோ மச்…” என்று மனதார நன்றி தெரிவித்தான்.
அவனின் பேச்சில் பின்னிருந்தவர்கள் இருவருக்குமே ஒரு நம்பிக்கை பிறந்தது.
அத்யுதாரன் போனில் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவர்கள் அவன் அழைப்பை துண்டித்ததும் பரபரப்பானார்கள்.
“யார் அத்யு? இப்ப பேசினது யாரு?…” என குபேரனும், கதிர்வேலனும் கேட்க, ஜேக்கப் வருத்தத்துடன் அவர்களை பார்த்தான்.
“சிட்டி கமிஷனர் தான். இங்க பேசி சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வைக்க எல்லா ஹெல்ப்பும் பண்ணிருக்காங்க…” என்றான் அத்யுதாரன்.
“புண்ணியமா போகும்….” என கதிர்வேலன் கையெடுத்து கும்பிட அந்த ஏரியா காவல்நிலையத்தின் அருகில் அந்த கார் நின்றது.
“வந்தாச்சு அண்ணா. கார்த்திக் அங்க வெய்ட் பன்றான்…” என்று ஜேக்கப் காண்பிக்கவும், அவனை பார்த்த மாத்திரத்தில் இறங்கி சென்ற அத்யுதாரன் பளாரென்று ஓங்கி அறைந்தான் கார்த்திக்கை.
அத்தனை பலம் கொண்டு அறைந்திருக்க கார்த்திக்கின் உதடு கிழிந்து ரத்தம் துளிர்த்துவிட்டது.
“ஸாரி அண்ணா…” என்றான் கண்ணீருடன்.
“மனுஷனாடா நீ? உன் விளையாட்டுத்தனத்துக்கு நீ எக்கேடோ கேட்டுப்போ. நிலா எங்கடா?…” என கேட்டவனின் விழிகளில் நீர் நிறைந்துவிட்டது.
“அண்ணா…” என்றவனுக்கு வார்த்தை வரவில்லை.
அதற்குள் கதிர்வேலன் வந்து மகனை மாறி மாறி அறைந்து தள்ளிவிட்டார். ஏற்கனவே குற்றவுணர்வில் இருந்தவனுக்கு அது வலிக்கவில்லை.
தீயாய் எரிந்த கன்னத்தின் வலியை விட தன்னை நம்பி, தான் வரும்படி அழைத்து வந்த பெண்ணை தொலைத்துவிட்டு நிற்கிறான்.
அதுவும் அவன் மட்டுமே செய்த ஒரு விஷயத்திற்காக. பிற்பகல் வேளையில் அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று அவனுமே நினைத்தும் பார்க்கவில்லை.
“அத்யு வேண்டாம், விடு. எனக்கு என் பொண்ணு கிடைச்சா போதும்…” என்று உணர்ச்சியன்ற குரலுடன் அவர் கூறவும் அவரின் காலில் விழுந்துவிட்டான் கார்த்திக்.
“சத்தியமா இப்படி யாரோ போல பேசாதீங்க மாமா. என்னை என்ன வேணா செய்ங்க. அடிங்க. இப்படி இருக்காதீங்க…” என்று சத்தமிட்டு அழ,
“அய்யய்யோ, நான் யாருப்பா உன்னை அடிக்க? எவ்வளோ பெரிய மனுஷன் நீங்க? பெத்தவங்களுக்கு கூட சொல்லாம ரகசியமா ஒரு கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட குடும்பம் நடத்தறதெல்லாம் சாமானியப்பட்டவங்க செய்யிற விஷயமா?…” என்றவன்,
“என் பொண்ணு, என் பொண்ணு தான். பைத்தியக்காரி நீ இருக்கன்னு நம்பி இங்க வந்தா. இப்ப உன்னாலையே என் பொண்ணை தொலைச்சிட்டு நான் நிக்கறேன்…” என்று முகத்தில் அறைந்துகொண்டு சிறுபிள்ளையாய் அழுதார் குபேரன்.
“ஐயோ…” என்று கார்த்திக் இன்னுமின்னும் குற்றவுணர்வில் தவித்து போனான்.
“நீ கல்யாணம் பண்ணினதுக்கு என் பொண்ணை தூக்கிருக்கானுங்களே படுபாவி பசங்க. என்ன கொடுமைப்படுத்தறானுங்களோ…” என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு அத்தனை அழுகை.
விஷயம் அறிந்ததிலிருந்து எதுவுமே பேசாதிருந்தவர் இப்போது கதறி அழ, பார்த்தவர்களுக்கும் கண்ணீர்.
“இல்ல மாமா, நிலாவை கண்டுபிடிச்சிடலாம். நிச்சயம் கண்டுபிடிச்சிடலாம்…” என்றவன்,
“என் தப்பு தான். என் தப்பு தான். பேக்கிங் பண்ணனும்ன்னு சொன்ன பொண்ணை கிளம்பி வா ஷாப்பிங் பண்ணுவோம்ன்னு கூட்டிட்டு வந்தேன். நான் நினைக்கவே இல்லையே…” என்று கார்த்திக் கண்ணீர் விட,
“எவ்வளவு ஈசியா சொல்ற கண்டுபிடிச்சிடலாம்ன்னு. இப்போருக்கற காலம் எப்படி இருக்கு? இதெல்லாம் பொண்ணை பெத்திருந்தா தெரியும்…” என்ற குபேரன்,
“நீயும் தான ஒரு குடும்பத்துல இருந்து அவங்க சம்மதம் இல்லாம அந்த பொன்னை கல்யாணம் பண்ணிருக்க. எனக்கு மாதிரி தான அவங்களுக்கும் துடிச்சிருக்கும். ஆனா நீ செஞ்சதுக்கு என் பொண்ணு என்னடா பாவம் பண்ணுனா?…” என கேட்க கார்த்திக்கால் பதில் சொல்ல முடியவில்லை.
“என்கிட்ட போன்ல என்ன பேசுனானுங்க தெரியுமா?…” என்றவருக்கு அதனை நினைக்க நினைக்க நெஞ்சில் நீர் வற்றிவிட்டது.
“அத்யு இவனை போக சொல்லு. போக சொல்லு…” என்று கார்த்திக்கை பார்க்க பிடிக்காமல் அழுதுகொண்டே முகம் திருப்ப,
“உள்ள போகனும் மாமா. வாங்க…” என்றவனின் குரலில் வெறுமை.
நேரம் செல்ல செல்ல அங்கே அவள் என்னவெல்லாம் துன்பம் அனுபவிப்பாளோ என இதயம் முழுதும் குருதி கசிந்தது அத்யுதாரனுக்கு.