பௌர்ணமி – 8
அழுது அழுது ஓய்ந்திருந்தார் சுகமதி. அவருக்கு ஆறுதல் சொல்லியே மற்றவர்களும் ஓய்ந்துவிட்டனர்.
“என்னாச்சு அத்யு? டிக்கெட் கன்பார்ம் ஆகிடுச்சா?…” என கதிர்வேலன் கேட்க,
“எஸ் ப்பா. புக் பண்ணியாச்சு. கிளம்பவேண்டியது தான்…” என்றான் இறுக்கத்துடன் அத்யுதாரன்.
மனதின் ஓலத்தினை வெளியில் காண்பிக்க கூட திராணியில்லை அவனுக்கு.
உள்ளமெல்லாம் அவனின் உயிரை தேடி அலைபாய்ந்தது. அதனை எண்ணுகையில் உடன் பிறந்தவனின் மீது சொல்லொண்ணா ஆத்திரம் அதற்குமேல் விரவியது.
ஒருபக்கம் கார்த்தியாயினி மூத்தமகனுக்கு பார்ப்பதா, இளையவனை பார்ப்பதா என்று அல்லாடிப்போனார்.
ஆனாலும் கார்த்திக்கை எந்த சூழ்நிலையிலும் மன்னிக்க அவர் தயாராக இல்லை.
“நமக்கு மகன் இனி ஒருத்தன் தான். அவனை தலை தலைமுழுகறேன்…” என்றிருந்தார் கதிர்வேலன்.
திருநாவுக்கரசு மொத்தமாய் உடைந்துபோயிருந்தார். அதிலும் விஷயம் அறிந்ததில் இருந்து ஜீவனற்று திரியும் தன் பேரனை காணுகையில் மனதினுள் பாரம் கூடியது.
“இப்படி பண்ணிட்டானே படுபாவிப்பய. ஒத்த வார்த்தை சொல்லியிருந்தா பொறுமையா பேசியிருக்க மாட்டோமா?…” என அரசு கண்ணீருடன் ஆற்றாமையாய் பேச,
“நான் சொன்னேனே, இந்த வீட்டுல யாரு கேட்டா? அவனை நம்பி அவளை அனுப்பாதீங்கன்னு சொன்னேனே, கேட்டீங்களா? இப்ப பாருங்க….” என்ற அன்னம் அதற்குமேல் கொந்தளித்தார்.
“இப்ப என் மகளுக்கும், மருமகனுக்கு என்ன பதில் சொல்லுவேன்? நம்மளை நம்பித்தான பொண்ணை அனுப்பி வச்சாங்க? இப்படி செஞ்சிட்டானே…” என்று நெஞ்சில் அடித்துக்கொண்டவர்,
“இங்க பாருடி, இனிமே சின்னவன் வந்தான்னு மகனேன்னு நீ அவனை தாங்கலாம்ன்னு நினைச்ச உனக்கு இங்க குடியிருப்பு கிடையாது. இந்த சூட்டுல பேசாம இருந்துட்டு அப்பறமா அவனை சேர்த்துக்குவோம்ன்னு கனவுல கூட நினைக்காத…” என்று கார்த்தியாயினியிடம் எகிறிய அன்னம்,
“கதிரு உனக்கும் தான் சொல்லிட்டேன். பெத்தவங்க வேண்டாம்ன்னு அவன் இஷ்டத்துக்கு முடிவெடுத்தான் இல்ல. அப்படி வந்தான், காலை வெட்டிப்போடுவேன்….” என்றார் மகனிடம்.
அவரின் பேச்சில் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கும் கண்ணீரும், கோபமும் ஒருசேர பெருக்கெடுத்தது.
“ஐயோ, எப்பேர்ப்பட்ட குடும்பம், இந்த குடும்பத்துல பிறந்து வளர்ந்துட்டு இப்படி ஒரு அசிங்கத்தை பண்ணிப்போட்டானே? இப்படி குடும்பத்தை சந்திசிரிக்க வச்சிட்டானே? படிக்க அனுப்பின பிள்ளை. ஐயோ…” என சொல்லி சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார்.
நான்கு வருட படிப்பையும் முடித்துக்கொண்டு இன்னும் இரண்டுநாளில் கிளம்பிவிடுவதாய் கூறிய பெண்.
“நான் இருக்கேன்ல. நான் கூட்டிட்டு வர்றேன்…” என்றிருந்தான் கார்த்திக்.
“ம்ஹூம், நானே வந்து அழைச்சிட்டு வர்றேன். லக்கேஜ் நிறைய இருக்கும். கார் எப்படியும் வேணும்…” என்று சொல்லி மறுநாள் கிளம்புவதாய் இருந்தான் அத்யுதாரன்.
ஆனால் அதற்கு முன்பே அவர்கள் புறப்படவேண்டிய அவசியத்தில் மொத்த குடும்பத்தையும் ஆட்டம் காண வைத்த செய்தியில் உயிர் வறண்டுபோய் கிளம்பிக்கொண்டிருந்தனர்.
கார்த்தியாயினி, அன்னம், சுகமதி மூவரையும் வரவேண்டாம் என்றிருக்க, திருநாவுக்கரசையும் இறுதியில் மறுத்துவிட்டான் அத்யுதாரன்.
“முதல்ல நாங்க போய் என்னன்னு பார்க்கறோம். நீங்க இருங்க தாத்தா. அலைச்சல் உடம்புக்கு ஆகாது…” என்றுவிட்டான் அத்யுதாரன்.
குபேரன் ஒருவரிடமும் பேசவில்லை. அதுவும் கார்த்திக்கின் மீது அளவில்லா ஆத்திரமும், துவேஷமும்.
இத்தனையிலும் அத்யுதாரனின் முகம் காண காண இன்னுமே அவர் துவண்டுவிட்டார்.
எத்தனை ஆசையுடன் இருந்தான் அவள் வரும் நாளுக்காக. அதனை நினைக்கையில் பொறுக்கவில்லை.
“என் பேச்சை யார் கேட்டா? என் பொண்ணை…” என்று மகளை நினைக்கையிலும் ஆத்திரமான ஆத்திரம்.
“இங்க காலேஜ் இல்லாத மாதிரி அங்க போனா இல்ல. பாரு இதுக்குத்தான் சொன்னேன்…” என மதியிடமும், மாதவ்விடமும் பேசியவர் தான்.
அதன்பின் கதிர்வேலன் குடும்பம் வந்தபின் எதுவும் பேசவில்லை. அவர்களிடம் துளியும் பேசவில்லை.
“எங்களை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை…” என வந்ததுமே கதிர்வேலன் கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்டுவிட்டதோடு,
“அந்த படுபாவிப்பய இந்தமாதிரி செய்வான்னு நாங்க யாருமே நினைக்கலையே…” என்றார் மனம் தாளாமல்.
இப்படியாக ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி அழுதுகொண்டிருக்க, யாருக்கு ஆறுதல் கூறுவதென்று தெரியாத நிலை. இதோ ஹைதராபாத் நோக்கி கிளம்பிவிட்டனர்.
அத்தனை முறை கார்த்திக் அழைத்துவிட்டான். வீட்டில் அவனிடம் பேச ஒருவருக்கும் விருப்பமில்லை.
மாதவ் மட்டுமே அவனிடம் பேசி என்னவென்று கேட்டு அவர்களிடம் கூறிக்கொண்டிருந்தான்.
“மாதவ் நான் இதெல்லாம் எதிர்பார்க்கலைடா. என்கிட்ட பேச சொல்லு. தெரியாம பண்ணிட்டேன்னு எல்லாம் சொல்லமாட்டேன். ஆனா இப்படி பேசாம இருந்தா நாங்க எங்க போக?…” என்று அவன் ஒருபக்கம் மன்றாடினான்.
“உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை மாமா. இப்போ கஷ்டம் எங்களுக்கு தானே? எங்க நிலா…” என்றவனுக்கு தொண்டை அடைத்தது.
“என்கிட்டயாவது ஒருவார்த்தை சொல்லியிருக்கலாமே?…” என்றவன்,
“எல்லாரும் கிளம்பிட்டாங்க. ஏர்போர்ட் போறாங்க. அத்தை, பாட்டி, தாத்தா எல்லாம் இங்க தான் அம்மாவோட இருக்காங்க. ப்ளீஸ் நீங்க பேசறது தெரிஞ்சா இன்னும் கோவப்படுவாங்க…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
ஆனாலும் கார்த்திக் அழைத்து பேசியதை எல்லாம் அத்யுதாரனுக்கு தெரிவிக்க,
“ஹ்ம்ம், நான் பார்த்துக்கறேன்…” என்று மட்டும் கூறியவன் குரலில் சுரத்தில்லை.
அது கார்த்திக் செய்துவைத்த செயலினால் என்று தான் மாதவ் புரிந்துகொண்டது.
அதற்குமேல் யோசிக்கவில்லை அவன். அத்யுதாரன் மனதிலிருப்பது பெரியவர்கள் தவிர்த்து பிள்ளைகளுக்கு தெரிந்திருக்கவில்லை இப்போது வரை.
கனத்த இதயத்துடன் விமானத்தில் பயணமாகிக்கொண்டிருந்தனர் மூவரும். மாதவ் வருகிறேன் என்றதற்கும் மறுத்துவிட்டார் கதிர்வேலன்.
“இங்க தாத்தாவால தனியா சமாளிக்க முடியாது மாதவ். இங்கயே இரு நீ…” என்று சொல்லிவிட்டார்.
செல்லும் முன் அத்தனை முறை அறிவுரை சொல்லிவிட்டே தான் சென்றனர்.
கூடுதலாக அன்னத்திற்கும் கூறியிருந்தனர். இல்லையென்றால் வாய்க்கு வந்தபடி பேசுவாரே.
முன்பே அத்தனைமுறை சொல்லிக்கொண்டிருக்க இப்போது அதனை மெய்ப்பிப்பதை போல் நடந்துவிட்ட நிகழ்வில் இன்னுமே அவர் ஆத்திரத்தின் உச்சத்திளிருந்தார்.
‘சொன்னேனே கேட்டியா?’ என மதியையும் தாக்கும், கார்த்தியாயினியையும் காயப்படுத்தும்.
அதற்காகவே பேசியிருந்தனர். ஆனாலும் அவர் நிற்கவில்லை. பேச்சும் குறையவில்லை.
இதோ விமானம் மேலெழும்ப அத்யுதாரனின் மனமெல்லாம் கடந்த நான்கு வருடங்களில் தான் மிதந்துகொண்டிருந்தது.
முடிந்தளவு ஏதேனும் ஒரு காரணம் சொல்லிக்கொண்டு ஹைதராபாத் செல்வதை வழக்கமாக்கி இருந்தான்.
நிலவர்ணித்தாவின் ஒவ்வொரு பிறந்தநாளும் அவனுடன் தான் என்பது வரை திட்டமிட்டிருந்தான்.
அதன்படியே சுகமதி, குபேரன் என யாராவது வந்து சென்றிருந்தனர் அவனுடன்.
அதுவும் அந்த வருடத்தில் அவளின் பிறந்தநாள் முடிந்து குபேரனுடன் ஊர் திரும்பிக்கொண்டிருந்தவனிடம் குபேரன் கேட்டதினை நினைக்கையில் நெஞ்சம் விம்மியது.
“நிலா படிப்பு முடிஞ்சு வரவும் உங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணிடலாமான்னு மாமா வந்து பேசிட்டு போயிருக்காங்க போல அத்யு…” என அவனின் முகம் பார்த்துக்கொண்டே கேட்ட குபேரனை கண்டு புன்னகைத்தவன்,
“ஏன் மாமா, வர்ணாவை எனக்கு தர்றதுல உங்களுக்கு எதுவும் தயக்கம் இருக்கா?…” என்றான் அவன்.
அதிலேயே அவனின் மனதும் வெகுவாய் புரிந்துபோனதுடன், இந்த நான்கு வருடங்களில் அவர் அவனை கவனித்துக்கொண்டிருந்ததையும் வைத்துதான் பேசியிருக்க மனமெல்லாம் அவ்வளவு நிறைவு.
அத்யுதாரனுக்கு குபேரனின் கேள்வியிலேயே அந்த முகபாவனையிலேயே அவரின் சம்மதத்தை, சந்தோஷத்தை கண்டுவிட்டவனுக்குள் பெரும் நிம்மதியும், கொண்டாட்டமும்.
“முன்னாடி சும்மா பொதுவா ஒரு விளையாட்டு பேச்சா இருந்தது. ஒருகட்டத்துல ரெண்டுபேருமே வளர்ந்ததும் அதை பத்தி பேசலையே தவிர எனக்கும் உன் அத்தைக்கும் அதுதான் ஆசை, விருப்பம் எல்லாம்….” என்ற குபேரன்,
“மாமா கேட்கலைன்னா நானே கேட்டிருப்பேன். நிலாவுக்கு சம்பந்தம் பேசறதா இருந்தா நிச்சயம் உன்னை தாண்டியா நாங்க யாரையும் பார்த்திட முடியும்?…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், அப்போ ஏன் இந்த கேள்வி?…” என்றவன்,
“நான் கேள்வியா கேட்கலையே. இப்படி பேசிருக்காங்கன்னு சொன்னேன்…” என்று கூற,
“ஹ்ம்ம், லாயராச்சே உங்ககிட்ட ஜெயிக்க முடியுமா?…” என்றவன்,
“படிப்பு முடியட்டும். வர்ணாவும் வரட்டும். மேபி மேடம் ஹையர் ஸ்டடிஸ் படிக்கிற ஐடியால இருந்தா?…” என்றதுமே,
“கல்யாணத்தை முடிச்சிட்டு இங்க உள்ள காலேஜ்ல படிக்கட்டும். இதுக்குமேல அவளை பிரிஞ்சு எல்லாம் இருக்கமுடியாது…” என்றுவிட்டார் குபேரன்.
“ஏன் மாமா?…” என அவன் சிரிக்க,
“நீ வேற அத்யு. ஒவ்வொரு நாளும் பனிஷ்மென்ட் மாதிரி தான் போச்சு. அதுவும் உன் அத்தை இப்ப வரைக்கும் அவ இங்க இருக்கிற மாதிரியே நினைச்சு பேசறதும் திட்டறதும், கூட மாதவ்க்கும் சேர்த்து விழும்….” என்றார்.