குளிர் பௌர்ணமி தூறலில் – 7 (2)

ஹைதராபாத்தில் பிரபலமான உணவகம் அது. அங்கே தான் அவளை அழைத்துக்கொண்டு வந்திருந்தான்.

“வாவ்வ், இங்கயா? கார்த்திக் மாமா சொல்லிருக்காங்க. இங்க பிரியாணி பேமஸ், அதுவும் இந்த கடையில இன்னும் நல்லா இருக்கும்ன்னு…” என்று துள்ளி குதிக்காத குறையாய் அவள் சந்தோஷமாய் வர,

“உள்ள வா…” என்று அங்கிருந்த டேபில் ஒன்றினை தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டான்.

“போய் ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வா…” என்று அவளை முதலில் அனுப்பியவன் கார்த்திக்கிற்கு அழைத்தான்.

“எங்கடா இருக்க?…” என கேட்க,

“ஹோட்டல்ல தான். மாமா பேசிட்டிருக்காங்க…” என்று கூறவும்,

“ஹ்ம்ம், ஓகே…” என்றான் அத்யுதாரன்.

“யாரையோ பார்க்க போனீங்களே, பார்த்தாச்சா ண்ணா…” என கார்த்திக் கேட்க,

“ஹ்ம்ம், பார்த்தாச்சு. லன்ச்க்கு தான் வந்திருக்கோம்….” என்றவன்,

“அப்பறம் கார்த்திக், நீ அத்தை மாமாவை கூப்பிட்டு லன்ச் முடிச்சிடு. எனக்கு வெய்ட் பண்ண வேண்டாம். நான் வர இன்னும் லேட்டாகலாம். அதுவரை நான் அங்க வர்ற வரை நீ அவங்களோடவே இரு…” என கூறினான்.

“கண்டிப்பா ண்ணா…”

“அங்க பக்கத்துல எங்கையாவது ஷாப்பிங் போகனும்னா, சுத்தி பார்க்கனும்னா கூட்டிட்டு போ. ஆனா எங்க போனாலும் எனக்கு லொக்கேஷன் ஷேர் பண்ணிடு. ஓகே…” என்றவன்,

“நீ ட்ரைவ் பண்ணு. ட்ரைவரை தூங்க சொல்லிடு. நைட் அவர் ட்ரைவ் பண்ணனும்…” என்றும் கூற,

“சொல்லிடறேன் ண்ணா. நான் அத்தை, மாமாக்கிட்ட கேட்டு உங்களுக்கு இன்பார்ம் பன்றேன்…” என்றான் கார்த்திக்,

“ஹ்ம்ம், மறக்காம. விளையாட்டா இருக்காம…” என்று அறிவுறுத்த,

“மாமா நான் ஹேண்ட்வாஷ் பண்ணிட்டேன். நீங்களும் பண்ணுங்க…” என்ற நிலவர்ணித்தாவின் குரலில்,

“நிலாவா?…” என்று அங்கே கார்த்திக் திகைத்தான்.

“ஷ்ஷ் காட்…” என சத்தமின்றி கண்களை சுருக்கி நெற்றியை கீறிக்கொண்ட அத்யுதாரன்,

“ஹ்ம்ம், அவளை தான் பார்க்க வந்தேன். லன்ச்க்கு வெளில கூட்டிட்டு வந்திருக்கேன்…” என்றவன் நிலாவை அமர சொல்லிவிட்டு தான் எழுந்து சென்றான் பேசிக்கொண்டே.

“சொல்லிருந்தா எல்லாருமே வந்திருக்கலாமே ண்ணா…” என்றான் கார்த்திக்.

“அதான் சொல்லலை. கிளம்பற வரைக்கும் திட்டுவாங்க. இதுல மார்னிங் அவ ஹோட்டல்ல சாப்பிடும்போதே ஹாஸ்டல்ல இப்படியெல்லாம் சாப்பாடு கிடைக்காதுன்னு அப்பவே ஆரம்பிச்சது இப்ப வரைக்கும் வரும்…” என்று கூற, என்னவோ அந்த குரலில் அத்தனை கடுகடுப்பு.

“ஹ்ம்ம், கரெக்ட் அண்ணா. நல்லவேளை. இல்லைன்னா நானே உங்களை ஹோட்டல்ல ட்ராப் பண்ணிட்டு பேய்க்குட்டியை பார்க்க போயிருப்பேன். அவ முகமே மாறிடுச்சு எல்லாரும் கிளம்பவும்….” என்றான் கார்ர்த்திக்.

“கார்த்திக், அங்க வேலையை பாரு. அவங்கட்ட பேசிட்டு டெக்ஸ்ட் பண்ணு. ஓகே…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவன் கையை கழுவிவிட்டு கண்ணாடியை பார்த்து தலையை உலுக்கிக்கொண்டான்.

“இவங்களை எல்லாம் வச்சிக்கிட்டு, முடியலைடா…” என தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் வெளியே வர மெனுகார்டை புரட்டியபடி இருந்தாள் நிலா.

“ஆடர் பண்ணிட்டியா வர்ணா?…” என்றபடி அவன் இருக்கையில் அமர,

“ம்ஹூம், நீங்க வரட்டுமேன்னு தான்…” என்று சொல்லும்பொழுதே ஆடர் எடுப்பவர் வந்துவிட்டார்.

“நீயே ஆடர் பண்ணு…” என்று சொல்லிவிட்டு சாய்ந்தமர்ந்துகொண்டான்.

“உங்களுக்கு…” என நிலா கேட்க,

“இன்னைக்கு உன்னோட விருப்பம் தான். பண்ணு…” என்றவன் தோளைக்குலுக்கி அவளிடம் இலகுவாய் சொல்ல, இன்னும் அவளின் விழிகள் விரிந்தது.

“வாட்?…” என கேட்டவனின் இதழோரம் துளிர்த்த சிறுபுன்னகையும் கூட அவளுக்கு ஆச்சர்யமாய் தோன்ற தலையசைத்தாள்.

தனக்கு பிடித்ததையும், அதனோடு அத்யுதாரனுக்கு என்ன உணவு பிடிக்குமென்று அந்த உணவினையும் சேர்த்து கூற அப்புன்னகை அப்படியே அவனிதழ்களில் தேங்கி நின்றது.

“ஓகேவா. கரெக்ட்டா சொல்லிட்டேனா?…” என்று சொல்லியவள்,

“என்னால இப்பவும் நம்ப முடியலை மாமா. நீங்களா இதுன்னு…” என்று தோன்றியதை கூறவும் செய்ய,

“அதான் நீ சொன்னியே, பாவம் பார்த்துன்னு. அதனால கூட்டிட்டு வந்தேன்….” என்று சொல்ல,

“ம்ஹூம், நம்பமாட்டேன்…” என்றாள் சிரிப்போடு.

“ஏன்?…” அத்யுதாரன் கேட்க,

“இப்படி நான் அழுததுக்கு நீங்க திட்டாம பார்த்துக்கிட்டது பர்ஸ்ட் டைம். என்னை ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்தது பர்ஸ்ட் டைம். இதுக்கு முன்னாடியும் ஒருதடவை ஹாஸ்பிட்டல் போயிருக்கோம். அது வேற. ஆனா இது…” என்றவள்,

“எனக்கு நீங்க நிறையவே சப்போர்ட் பன்றீங்க மாமா. எவ்வளோ பயம் இருக்கும் தெரியுமா உங்ககிட்ட ஒருவிஷயம் பேசனும்ன்னா. ஆனா இன்னைக்கு, அச்சோ என்னால நம்பவே முடியலை. எவ்வளோ சிரிக்கறீங்க? எவ்வளோ அழகா என்னை பார்த்துக்கறீங்க. ரொம்ப அதட்டலை…”

இப்படி அவளுக்கு தோன்றியதை எல்லாம் சொல்லிக்கொண்டே அந்த பார்வைகள் மட்டும் அவ்வப்போது எங்கோ சென்று மீள்வது புரிய அத்யுதாரன் புருவங்கள் சுருங்கியது.

எதையோ கவனிக்கிறாள் அதிகத்திற்கும் என்று தோன்ற சட்டென பார்க்காமல் கொஞ்சம் விட்டுப்பிடித்து திரும்பி பார்க்க அங்கே இருந்த டேபிளில் மூன்று பெண்கள் அமர்ந்திருந்தனர்.

வேறு அதிகமாய் அந்தநேரம் கூட்டமும் இல்லை என்பதனால் அவர்களை ஏன் இத்தனை பார்க்கிறாள் என்று புரியவில்லை அவனுக்கு.

உணவும் வந்துவிட இருவருமாக பேசிக்கொண்டே உண்டனர். அறிவுரை போலில்லாது அனைத்தும் அவளுக்கு பதியும்படி தான் உரையாடினான் அத்யுதாரன்.

அப்போதும் அந்த பார்வை அங்கே சென்று திரும்ப நிலாவின் முகத்தில் புதிதாய் ஒரு குறுகுறுப்பு.

“வர்ணா…” என்றவன் பார்வையின் கண்டிப்பில்,

“அவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களா மாமா?…” என்றாள்.

அவள் வயதிற்கே உரிய அந்த ஆர்வம் அக்கண்ணில் குறும்புடன் நிரம்பி வழிந்தது.

மீண்டும் அந்த பெண்களை திரும்பி பார்த்தவன் கேள்வியாய் நிலாவையும் பார்த்து தலையசைத்தான்.

“ம்ஹூம் இல்லையே…” என்று சொல்ல,

“இல்ல அவங்கள்ல அந்த பிஸ்தா க்ரீன் ட்ரெஸ் பொண்ணு உங்களை பார்த்துட்டே இருக்காங்க. நாம வந்ததுல இருந்து நோட் பன்றாங்க…” என்றதும்,

“வர்ணா…” என்றான் அதட்டலுடன்.

“நீங்க ஹேண்ட்வாஷ் பண்ண போறப்போ தான் அவங்க உங்களை பார்த்தாங்க. கூடவே கூட இருக்கிறவங்களுக்கும் காமிச்சாங்க. இப்ப வரை உங்களைத்தான்…” என நிலாவும் அவனின் கோபத்தை கவனிக்காமல் பேசிக்கொண்டே செல்ல,

“ஸ்டாப் இட்…” என்று சட்டென அவன் கூறவும் திடுக்கிட்டு பார்த்தவள் முகம் சட்டென இருண்டுவிட்டது அவனின் கோபமுகம் கண்டு.

“இதென்ன பழக்கம் யாருன்னே தெரியாதவங்களை வாட்ச் பன்றது?…” என்றவனுக்கு அவளின் ஆர்வமான பேச்சிலும், தன்னை ஒருவர் பார்ப்பதை கண்டு ரசிப்பதிலும் பற்றிக்கொண்டு வந்தது.

“ஸாரி மாமா…” என அவளுக்கு முகமே வாடிவிட்டது.

இப்படி அழைத்துவந்துவிட்டு இதென்ன என்று அத்யுதாரனுக்கும் மனதே சரியில்லாது போனது.

“ப்ச், லீவ் இட்…” என அவனே சமாதானமானான்.

“ஐஸ்க்ரீம்?…” என்று கேட்க,

“ம்ஹூம். வேண்டாம்…” என கூறியவள் முகத்தில் அந்த பழைய துறுதுறுப்பு முற்றிலும் மறைந்துவிட்டது.

“அப்போ நேரா உன் அம்மாவை பார்க்க போகலாமா?…” என்று அவன் மிரட்டவும்,

“அய்யய்யோ அதெல்லாம் வேண்டாம்…” என்றதும்,

“அப்போ சாப்பிடு. இப்படி இல்லை. கொஞ்சம் சிரிச்சிட்டு…” என்றவன் அவளுக்கு தேவையானவற்றினை கூறிவிட்டு அவளை பார்த்தான்.

“நீங்களும் கொஞ்சம் சிரிச்சிட்டு சொல்லலாம்….” என்று சொல்ல, லேசாய் முறுவலித்தவன்,

“ஓஹ், நான் சிரிச்சா மட்டும் தான் வர்ணாவுக்கு என்னை பார்த்து பேச முடியுமோ? இல்லைன்னா பார்க்க வேண்டாமா? பிடிக்காதா?…” என்று கேட்க,

“அச்சோ அப்படி இல்லை மாமா. நீங்க எப்படி இருந்தாலும் புடிக்கும் தான். இவ்வளோ நேரம் நல்லா பேசிட்டு இருந்துட்டு சட்டுன்னு முகம் மாறவும் தான்…” என்றவளை கண்டு இன்னும் அழகாய் புன்னகைத்தான்.

“வாவ் இதுதான். இதுதான். இப்போ பயமில்லை…” என்றவளுக்கு முகம் மலர்ந்துவிட்டது.

“அப்போ பயம் இல்லை?…” கேள்வியாய் அவளிடம் கேட்க,

“அந்த பயம் கொஞ்சம் தள்ளி இருக்கு. ஆனா இப்போ பயம் இல்லை. ஹேப்பி…” என்று சொல்லியவள் முகத்தை விட்டு மனம் நழுவவில்லை.

மேலும் சிறிதுநேரம் இருந்துவிட்டு அருகிருக்கும் மாலுக்கு அழைத்துச்சென்றவன்,

“உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ…” என்றான்.

“அதான் நிறைய பர்ச்சேஸ் பண்ணிருக்கோமே மாமா?…” அவள் யோசிக்க,

“நான் எதுவும் உனக்கு வாங்கித்தரலையே. எடுத்துக்கோ…” என்றன் மென்மையுடன்.

“எனக்கு இங்க படிக்க பர்மிஷன் வாங்கித்தந்ததே பெருசு. அதுவே எவ்வளோ பெரிய கிப்ட்…” என்று சொல்லிக்கொண்டே சிலவற்றை எடுத்துக்கொண்டாள்.

அதே சந்தோஷத்துடன் அவளை கொண்டுவந்து விட்டுவிட்டு மனமே இன்றி கிளம்பினான் அத்யுதாரன்.

நீண்ட நெடிய நான்கு வருடங்கள். அந்த வருடங்களை எவ்வாறு கடக்க போகிறோமோ என நினைத்து நினைத்தே அதனை கடந்துகொண்டிருந்தான் அத்யுதாரன்.

சிலநேரங்களில் என்னவென்றே தெரியாத சஞ்சலம் அவனை ஆட்டிப்படைக்கும்.

எப்போதும் அவனெடுக்கும் முடிவுகளில் இத்தனை தூரம் மனம் பதறியதில்லை.

ஆனால் நிலவர்ணித்தாவின் விஷயத்தில் சின்னதாய் ஒரு உறுத்தல் அவனை பந்தாடிக்கொண்டே இருந்தது.

அதனை நிரூபிக்கும் விதமாக அவனுக்கும், கதிர்வேலனுக்கும் வந்த அழைப்பில் உயிர் வரை ஆட்டம் கண்டனர்.

“கார்த்திக்…” என பல்லைக்கடித்த அத்யுதாரனின் முகத்தில் அவனை கொன்று குவிக்கும் ஆவேசம்.

error: Content is protected !!