பௌர்ணமி – 7
மனம் நிலைகொள்ளாது இங்குமங்குமாய் அலைந்தாட அத்யுதாரன் முகத்திலும் பெரும் சஞ்சலம்.
‘எப்படி இங்கே சமாளிக்க போகிறாள்?’ என்று. எதுவும் பேசாமல் சிலநொடிகள் மௌனமாய் பார்த்திருந்தவன் பார்வை தங்களை சுற்றிலும் பதிந்தது.
ஆங்காங்கே புதிதாய் சேர்த்திருக்கும் மாணவிகள் தென்பட்டனர் அவரவர் குடும்பத்துடன்.
அவற்றையும் பார்த்துவிட்டு திரும்ப இப்போது நிலவர்ணித்தாவின் அழுகை மட்டுப்பட்டிருந்தது.
“இப்படியே அழுதிட்டிருக்கறதுக்கு பேசாம கிளம்பி எங்களோடவே வந்திடு…” என்று சொல்லவும் பட்டென அழுகை நின்றது.
“இல்ல நான் அழலை…” என பாவம் போல் கூறினாள் நிலா.
ஆனால் முழுதாய் குறையவில்லை. கண்ணீர் வழிந்துகொண்டே விசும்பல் மட்டும் இருக்க,
“சரி, அழாத வர்ணா…” என்றான் மெதுவாய்.
“ஹ்ம்ம்…” என தலையசைக்க,
“கண்ணை துடைச்சுக்கோ. முதல் நாளே இப்படி அழுது உன்னை நீயே வீக்காக்கிக்காத. புரியுதா?…” என்று சொல்ல தலையசைத்தாள்.
மீண்டும் வழிந்த கண்ணீரை துடைத்தவளின் இடதுகரத்தினை பார்க்க அது கன்றி சிவந்திருந்தது.
“ஹேய் என்னாச்சு?…” என அவளின் கையை பற்றி பார்க்க,
“ரூம்க்கு அம்மா வரும்போது பாத்ரூம் டோர் லாக் பண்ணினாங்க. நானும் கவனிக்கலை. விரல் நச்சிருச்சு…” என்றாள் அதனை காண்பித்து.
புருவங்கள் உயர்ந்தது அத்யுதாரனுக்கு. இதுவே வீடென்றால் அத்தனை அழுது, அவ்வளவு சத்தம் போட்டிருக்க கூடும்.
“ஹ்ம்ம், பரவாயில்லையே…” என்று சொல்லியவன்,
“லேசாதானா? வலிக்குதா?…” என்றான் அதனை பிடித்து பார்த்து.
“ஆமா, ரொம்ப லைட்டா தான் மாமா…” என்றாலுமே அவன் பிடித்ததில் அவ்விடம் வலிக்க,
“ஸ்ஸ்ஸ்…” என்றாள் நிலவர்ணித்தா.
அதற்கே முறைத்து பார்த்தான் அத்யுதாரன். அவனின் பார்வையில் லேசாய் புன்னகைத்து தன் தலையில் தட்டிக்கொண்டவள் ஒரு காதை பிடித்துக்கொண்டு,
“ஸாரி மாமா. வலிக்குது தான். ஆனா மேனேஜ் பண்ணிப்பேன்…” என்று சொல்லவும் அசையாது பார்த்தவன் பின் இமைகளை தாழ்த்திக்கொண்டு பக்கவாட்டு திசைக்கு ஒரு பார்வையை கொடுத்துவிட்டு குரலை செருமிக்கொண்டான்.
“ஹ்ம்ம், திரும்ப எதையாவது மறக்கனும்னு நினைச்ச?…” என கூற,
“இல்லை அப்படி செய்யமாட்டேன்…” என உடனடியாக அவள் பணிந்து வந்தாள் அவன் முடிக்கும் முன்.
“ஓகே, இப்போ நீ பெட்டரா?…” என கேட்கவும் அவன் கிளம்ப போகிறானோ என்று புரிந்துகொண்டவளுக்கு மீண்டும் தொண்டை அடைத்தது.
கண்ணில் நீர் நிரம்பிவிட அது வழியும் முன் புறங்கையால் துடைத்துவிட்டவள்,
“ஹ்ம்ம் பெட்டர்…” என்றாள் புன்னகைத்து.
அக்கண்ணீர் புன்னகை அவனை மேலும் அசைத்துப்பார்த்தது. அவனை அங்கிருந்து அசையவிடாமல் செய்தது.
மேலும் ஐந்துநிமிடங்கள் எதுவும் பேசாமல் மௌனமாய் அமர்ந்திருக்க நிலா தன் விரலை பார்த்து லேசாய் காற்றை இழுத்து அதில் ஊதிவிட தானுமே அதில் பார்வையை பதித்தான்.
லேசாய் கன்றி இருந்ததில் இப்போது மிதமான வீக்கம் கண்டிருந்தது. இருவிரல்கள் தான்.
“சரியாகிடும் மாமா…” என்றாள் அவனின் பார்வையை கண்டு புன்னகையுடன்.
ஒன்றும் கூறாது தலையை மட்டும் அசைத்துக்கொண்டவன் இதழ்களை மடித்தபடி யோசனையுடன் தன் தொடையை தட்டிக்கொண்டான்.
“வெளில போகலாமா வர்ணா?…” என சட்டென கேட்டுவிட,
“ஹாங்…” என்று பார்த்தாள் அவள்.
“உன்னை தான். வெளில போகலாமான்னு கேட்டேன்…” என்றவன்,
“லன்ச் முடிச்சிட்டு வந்திடலாம்…” என்று கூற,
“ஆனா மாமா இங்க…” என்றவளுக்கு அனுமதி கிடைக்குமா என்றொரு சந்தேகம்.
“உன்னை மீட் பண்ண வர்ற கார்டியன்ல நானும் இருக்கேன்ல. அதோட கார்த்திக்கு தெரிஞ்சவங்க தான். நீ இரு நான் கேட்டுட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு எழ,
“மாமா மம்மி பார்த்தா தொலைஞ்சேன். அதுக்காக தான் இதை அவங்ககிட்ட காமிச்சிக்கவே இல்லை நான்…” என்றவள்,
“மம்மிக்கிட்டையாச்சும் கால்ல விழுந்து கதறி கூட சமாளிச்சிடுவேன். அப்பா. அய்யய்யோ, ஹப்பா வாய்ப்பே இல்லை…” என கலங்கியிருந்த விழிகளிலும் நீர் முற்றிலும் நின்றிருந்தது.
இதழ் மடித்து மௌனமாய் புன்னகைத்தவன் விழிகள் அதனை பிரதிபலிக்க,
“நிஜமா. ப்ளீஸ் வேண்டாமே…” என்றவளுக்கு பதில் சொல்லாமல் தன்னுடன் வரும்படி தலையசைத்து முன்னே சென்றான்.
“மாமா, மாமா என்ன சொன்னாலும் கேட்கறேன்…” என பின்னோட அவனோடு சேர்ந்தே அவள் வர,
“அப்படியா?…” அந்த கண்களில் இன்னும் கொள்ளையாய் குறும்பு புன்னகை.
“ஆமா, டெய்லி மார்னிங், அன்ட் நைட் நான் உங்களுக்கு ரிப்போர்ட் பன்றேன். குட் கேர்ளா இருப்பேன்…” என கூற,
“ஓஹ், இதுவேறையா?…” என ஹஸ்கி வாய்சில் அவன் கூறிக்கொண்டே விடுதியின் அலுவலக அறை நோக்கி நோக்கி சென்றான்.
“ஆமா, கண்டிப்பா. வேற வேற என்ன செய்யட்டும்?…” என்று வந்தவள் சட்டென அவனின் கரம் பற்றியவள், தான் பிடித்ததில் வலி உண்டாக,
“ஊஃப், இது வேற…” என கையை உதறிக்கொண்டு,
“ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சுதலாக.
“அப்போ இப்போ நான் சொல்றதையும் கேளு. இப்ப இருந்தே கேளு…” என்றான்.
“முன்னாடியுமே நீங்க சொல்றது தானே? இப்ப மட்டுமா?…” என அவள் முணுமுணுக்க,
“இனியும் அப்படின்னு வச்சுக்கோ…” என்றவன் அந்த அறைக்குள் அனுமதி பெற்று உள்ளே சென்றான்.
நிலாவையும் அழைத்து மீண்டும் தங்களை அறிமுகம் செய்துகொண்டு அவளுக்கு தேவையானவற்றினை வாங்கி வர அனுமதிக்க கேட்டிருக்க, அனுமதி கிடைத்தது.
நிலா எதுவும் பேசவில்லை. கூட்டி செல்கிறானே, அவனே சமாளிக்கட்டும் என்பதை போல் முறைப்பை மறைக்க முடியாமல் முறைத்து அவன் கவனித்ததும் பாவம் போல் பார்த்து வைக்க, வெளியே வந்ததுமே,
“ஹ்ம்ம், செம்ம நடிப்பு…” என்று வேறு கேலி பேசினான்.
“மம்மி என்னை விடாம இருந்தா?…” என அவனிடம் கேட்க,
“உன் மம்மி நம்மோட வர்றாங்கன்னு நான் சொல்லவே இல்லையே வர்ணா…” என்றவன் தன் போனை எடுத்து என்னவோ தேடிக்கொண்டிருந்தான்.
“இல்ல, புரியலை…” என நிலா பேந்தபேந்த விழிக்க,
“அப்படின்னா நாம மட்டும் தான் வெளில போறோம்ன்னு சொல்றேன். புரிஞ்சதா?…” என்று கேட்க, நிலாவின் விழிகள் பெரிதாய் விரிந்தது.
“மாமா…” என்றதுமே இதழ்விரியாமல் புன்னகைத்தவன் அருகிருக்கும் ஒரு ஆட்டோவை அழைத்து பக்கத்திலிருக்கும் மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினான்.
“ஹைய்யோ இதுக்கா? நான் என்னவோ நினைச்சேன். மாட்டவே மாட்டேன்…” என நிலா அலறுவதை போல் பதற,
“ப்ச், பேசாம வரனும்…” என்றான் அவளிடம் அழுத்தமான உத்தரவுக்குரலில்.
“நான் கூட ஒருநிமிஷம் நான் அழுததும் பாவம் பார்த்து எங்கையாவது சுத்தி காமிக்க, சாப்பிட கூட்டிட்டு போறீங்கன்னு நினைச்சேன்…” என முனங்க, அத்யுதாரன் பார்வையில் ஒரு அழுத்தம்.
“பாவம் பார்த்து?…”
“ஹ்ம்ம்…”
“உன்னை…”
“ஆமா…”
“வெரி குட்….” என்று மட்டும் சொல்லிக்கொண்டவன் ஆயாசமாய் தலையசைத்தான்.
மருத்துவமனை வந்துவிட நிலாவுடன் உள்ளே சென்றவன் அவளின் காயத்தை காண்பித்து அதற்கு மருந்திட்டு மீண்டும் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறினான்.
“ஹாஸ்டலுக்கா மாமா?…” என்று சொல்ல, அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மௌனமாய் முகம் திருப்பிக்கொண்டான்.
ஒருவேளை தன்னை தாய் தகப்பனை பார்க்க அழைத்து செல்கிறானோ என நினைத்தவள்,
“ஒரு எமோஷனல்ல அழுதுட்டேன். இதுவரைக்கும் இப்படி தனியா இருந்ததில்லையா. அதனால தான். இப்போ நானே ரியலைஸ் பண்ணிட்டேன் தெரியுமா?…” என்று கேட்க கைகளை கட்டியபடி அவளை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் வெளியே வேடிக்கை பார்த்தான்.
“ஆனா எனக்கே புரிஞ்சிடுச்சு. நான் தானே இதை செலெக்ட் பண்ணுனேன். அப்போ நான் தான் இதை கரெக்ட்டா பேஸ் பண்ணனும். அதெல்லாம் பார்த்துப்பேன் மாமா….” என்றாள் மீண்டும். அவனும் அதே பாவனை தான்.
‘அடேய் மாமா அநியாயம் பன்றானே’ என பொருமியவள் என்ன சொல்லி அவனை சமாளிக்க என்று பார்த்தவள்,
“இனிமே சத்தியமா அழவே மாட்டேன். நீங்க வேணும்னா இப்ப என்னை கொண்டுபோய் ஹாஸ்டல்ல விட்டுட்டு எங்கையாவது தனியா நின்னு பாருங்களேன். அழாம இருப்பேன்…” என்று சொல்ல, சத்தியமாய் அதற்குமேலும் மௌனம் தொடர முடியாதவன் அவள் புறம் திரும்பி குறுஞ்சிரிப்புடன் பார்த்தான்.
“உன் அம்மாப்பாவை பார்க்க ஹோட்டலுக்கு போகலை வர்ணா. ஏன் இவ்வளோ ஸ்ட்ரெய்ன் பன்ற?…” என்று கேட்க அவள் முகத்தில் அசடு வழிந்தது.
“அப்போ எங்க போறோம்?…” என்றவளின் ஆர்வத்தில் தலையசைத்தவன்,
“போனா தெரிஞ்சிரும்…” என்று சொல்லிவிட்டு கடக்கும் இடங்களை எல்லாம் கவனித்துக்கொண்டே வந்தான்.