குளிர் பௌர்ணமி தூறலில் – 6 (3)

“ஹப்பா, தனியா சிக்கினா முடிஞ்சேன்…” என்று சட்டை காலரை ஒன்றுபோல் எடுத்துவிட கைகளை கட்டியபடி அத்யுதாரன் முறைப்புடன் நின்றான்.

“ண்ணா…” என்று அந்த பார்வையில் உண்மையில் அடங்கி நிற்க,

“உள்ள வா…” என்று அடுத்த அறைக்குள் நுழைந்தவன் ட்ரைவர் கிளம்பி செல்லும் வரை கார்த்திக்கிடம் எதுவும் பேசவில்லை.

குளிப்பதற்கு தேவையான உடை எடுத்து வைக்க, வந்த அழைப்பை ஏற்று பேச என இருந்தாலும் கண்டனத்துடன் தம்பியிடம் பதிந்தது அத்யுதாரன் பார்வை.

அதற்கே கார்த்திக் உள்ளுக்குள் நடுக்கத்துடன் அமைதியாக அமர்ந்துவிட்டான்.

“நான் கார்ல இருக்கேன் தம்பி…” என்று ட்ரைவர் கீழே சென்றுவிட, அவர் சென்றதுமே கதவை அடைத்துவிட்டு கார்த்தி நேராக வந்து அண்ணனின் முன்னே நிற்க,

“குளிச்சிட்டு வர்றேன். காபி சொல்லு…” என்றுவிட்டு குளியலறைக்கு சென்றுவிட்டான்.

“போச்சு, பேசிட்டு போனா கூட திட்டு வாங்கிட்ட நிம்மதி இருக்கும். இப்ப எதுக்குன்னு திக்குன்னு நிக்க வச்சிட்டாரே…” என கூறியவன் தனக்குள் புலம்பியபடி அமர்ந்திருந்தான்.

அத்யுதாரன் வரவும் மீண்டும் தன்னைப்போல் அவன் எழுந்து நின்றுவிட்டான்.

“அண்ணா ப்ளீஸ்,…” என்று அழைக்கவும்,

“விளையாட்டு எல்லா நேரமும் சரி கிடையாது கார்த்திக். உன்னோட சின்ன சின்ன விளையாட்டு பேச்சும் வர்ணா மனசுல இப்படி ஒரு பிடிவாதத்தை கொண்டுவந்திருக்கு…” என்று சொல்ல,

“ஸாரி அண்ணா…” என்றான் அவனிடத்தில் கார்த்திக்.

“நீ தான அவக்கிட்ட சொன்னது, உன்னால முடிஞ்சா இங்க வந்து படிக்க முடியுமான்னு? இதென்ன சீண்டிவிடறது?…” என்றவன் குரலில் அத்தனை கோபம்.

“அண்ணா…”

“ஷ்ஷ்ஷ் வேண்டாம் கார்த்திக். அதுவும் அத்தைக்கும் மாமாவுக்கும் ரொம்ப மனவருத்தம். ஈகோவுக்கு செய்யிற விஷயம் இல்லை இது. சும்மா இருந்த பொண்ணுக்கிட்ட நீ பேசினது தான் இப்போ இங்க வரை…” என்றவன்,

“வெளியூர் வெளிமாநிலம் எல்லாம் படிக்க வர்றது தப்புன்னு சொல்லலை. ஆனா இப்படி ஒரு காரணத்தை வச்சு வர்றது தப்பு. என்னதான் பிடிச்சு, விசாரிச்சு இந்த காலேஜ் பெஸ்ட் அப்படின்னு அவ வந்தாலும் அதோட ஆரம்பம் உன் பேச்சு…” என்றான்.

கார்த்திக்கிற்கு நன்றாகவே புரிந்தது. அவளின் மனதில் ஆசையை விதைத்துவிட்டோம் என்று.

“இப்போ என்னடான்னா இப்படி அத்தையையும் வச்சிட்டு பேசற…”

“படிச்சிட்டு இங்கயே நல்ல வேலை கிடைச்சா நல்லது தானே ண்ணா. நான் அப்படி நினைச்சு தான்…” என்றவன் அத்யூதாரன் பார்த்த பார்வையில் பேச்சற்று மௌனமாக,

“அது வர்ணாவோட முடிவா இருக்கனும். இங்க தானே படிக்க போறா. உலகத்தை தெரிஞ்சுக்கட்டும். அதன் பின்னாடி என்ன நினைக்கிறான்னு பார்ப்போம்…” என்று சொல்லியவன்,

“இப்பவுமே அவளோட ஆசைக்காக அவளை இங்க நான் படிக்க அனுமதி வாங்கி தரலை. அத்தையும் மாமாவும் ரொம்ப அதிகமா பேப்ம்பர் பண்ணி அவளை சுயமா சிந்திக்கவிடாம பன்றாங்க. இங்க வந்தா அவளே யோசிப்பா. நல்லது, கெட்டதை அவளே யோசிச்சு தேர்ந்தெடுப்பா…” என்றான்.

“ஹ்ம்ம், ஓகே அண்ணா…” என கார்த்திக் தலையாட்டினான்.

“இந்த ஓகே எதுக்கு? அங்க அத்தையும், மாமாவும் செஞ்சதை நீ பண்ணாத. அதேநேரம் வர்ணா எப்படி இருக்கான்றது தெரிஞ்சுக்கனும். எனக்கு சொல்லிட்டே இருக்கனும். புரியுதா?…” என்று கூற,

“ஓகே அண்ணா…” என்றான் கார்த்திக்.

மழையடித்து ஓய்ந்ததை போலிருந்தது அவனுக்கு. இதற்கு தன் அத்தை மாமாவே பரவாயில்லை என நினைத்தான்.

சற்றுநேரத்தில் அனைவரும் கிளம்பி கீழே உள்ள உணவகத்தில் காலை உணவினை முடித்துவிட்டு கல்லூரி விடுதிக்கு கிளம்பினார்கள்.

அங்கே அவளின் அறையை பார்த்துவிட்டு ஒரு திருப்தியுடன் தான் சேர்த்தனர்.

கார்த்திக் தனக்கு தெரிந்தவர்களை நிலவர்ணித்தாவிற்கு அறிமுகம் செய்துவைத்திருந்தான்.

“முன்னாடியே சொல்லி வச்சிருந்தியோ?..” என சுகமதி கேட்க,

“ஆமா த்தை. வந்தன்னைக்கே அவ திணற கூடாதுல யாருமில்லைன்னு…” என்றதும்,

“ஹ்ம்ம், பார்த்துக்கோ…” என்று லோக்கல் கார்டியனாக அவனை காண்பித்துவிட்டனர்.

பொருட்கள் எல்லாம் அவளின் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு வெளியே வந்து சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு தான் கிளம்பினார்கள்.

கிளம்பும் முன் குபேரனும், சுகமதியும் மகளை பிரியமுடியாமல் கண்ணீர் விட்டு அழுது,

“இது தேவையா? நான் அழறேன். இவ எப்படி பார்த்துட்டு நிக்கிறா?…” என்றார் சுகமதி.

நிலாவின் முகத்தில் அழுகையும், கண்ணீரும் இல்லவே இல்லை. அதனை கண்டு தாயாய் அவருக்கு தாங்கவில்லை.

“விட்டா போதும்ன்னு இருக்கா. சரி அழாம சந்தோஷமா பத்திரமா இருந்தா போதும்…” என்று மகளின் கன்னம் வலித்து கொஞ்சிவிட்டு, கார்த்திக் அறிமுகப்படுத்தியவர்களின் எண்ணையும் வாங்கிக்கொண்டு புறப்பட்டனர்.

கார்த்திக் வாயே திறக்கவில்லை. அமைதியாய் வர அந்த வளாகத்திலிருந்து வெளியேறி இருநூறு மீட்டர் தொலைவு தான் இருக்கும்.

“அண்ணா காரை நிறுத்துங்க…” என்ற அத்யுதாரன்,

“ஒரு முக்கியமான ப்ரெண்டை மீட் பண்ண இருந்தேன். இந்த ஏரியா தான்…” என்று இறங்கியவன்,

“நீங்க ரூம்க்கு போங்க. ஈவ்னிங் தானே கிளம்பறோம். நான் வர்றேன்…” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டு தடதடக்கும் நெஞ்சத்துடன் வேகமாய் நடந்து வந்தான்.

விடுதிக்குள் மீண்டுமாய் நுழைய அங்கே நிலவர்ணித்தா அவ்விடத்தின் அருகிலிருந்த கல் பெஞ்சில் தான் மிரண்ட முகத்துடன் அமர்ந்திருந்தாள்.

“வர்ணா…” என்று மூச்சுவாங்க வந்து நின்றவனின் அண்மையில் திரும்பி பார்த்தவளுக்கு முகமெல்லாம் அத்தனை விகசிப்பு.

“மாமா…” என்று உதடுபிதுக்கியவள் அவன் இன்னும் அருகில் வந்ததும் அத்யுதாரனின் இடையோடு கட்டிக்கொண்டு வயிற்றில் முகம் புதைத்து அத்தனை அழுகை.

அவனுமே இதை எதிர்பார்க்கவில்லை. சுகமதி பேசுகையிலும் கூட புன்னகைத்தாளே தவிர அந்த விழிகள் காண்பித்த பாவனை.

முதன்முதலில் தனியே விட்டு செல்வதில் அவளின் மனநிலையை கண்டுகொண்டான் அவன்.

“வர்ணா, டேய் என்ன இது?…” என்றவன், அவளின் தலையை நிமிர்த்திவிட்டு சுற்றிலும் பார்வையிட்டான்.

இன்னும் தேம்பிக்கொண்டே கண்ணீர் வழிய அவள் அவனின் முகம் பார்த்திருக்க, ஒரு பெருமூச்சுடன் அவளருகில் அமர்ந்துகொண்டான் அத்யுதாரன்.

“இப்படி அழுதா என்னன்னு கிளம்ப?…” என்றதும்,

“கொஞ்சநேரம் இருங்க மாமா. போகாதீங்க…” என்று எங்கே கிளம்பிவிடுவானோ என அவனின் கையை பற்றிக்கொள்ள, அத்யுதாரனின் இதயம் தவியாய் தவித்தது.  

error: Content is protected !!