குளிர் பௌர்ணமி தூறலில் – 6 (2)

“மாதவ், நீயும் அவங்களை டென்ஷன் பண்ணக்கூடாது…” என அவர் அவனையும் எச்சரிக்க,

“ம்க்கும், அதை உன் அத்தைட்ட சொல்லும்மா. இல்லேன்னா இவ வாயை தச்சி வச்சிட்டு வா. பேசாம இருக்கட்டும்…” என்றார் அரசு.

அன்னம் அதற்கடுத்து கணவரிடம் மல்லுக்கு நிற்க ஐயோ என்றானது அவர்களுக்கு.

அதற்குள் கடையிலிருந்து கிளம்பிவிட்டதாய் அத்யுதாரனிடமிருந்து அழைப்பு வந்துவிட,

“பார்த்து போய்ட்டு வா அத்யு. மார்னிங் கார்த்திக் அங்க வந்திருவான்…” என்றார்.

“நானும் பேசிடறேன். ஓகே. வர்றேன் ம்மா…” என்று கூறி வைத்துவிட்டான்.

ஓட்டுனர் தான் காரை ஓட்டிக்கொண்டிருந்தார். பின்னிருக்கையில் நிலாவும், மதியும் அமர்ந்திருக்க முன்னே அத்யுதாரனும், குபேரனும்.

பொதுவான விஷயங்கள் பற்றி இருவரும் பேசிக்கொண்டு வந்தனர். மதி மெல்லிய குரலில் மகளுக்கு அத்தனை அறிவுரை காது தீய தீய பேசிக்கொண்டு வந்தார்.

விட்டால் கதவை உடைத்துக்கொண்டு அவள் குதித்துவிடுவாள் என்பதை போல் முகத்தை வைத்திருந்தாள் நிலா.

“ஹைய்யோ போதும் மம்மி. எவ்வளோ சொல்லுவீங்க?…” என்று ஒருகட்டத்தில் சொல்லியேவிட்டாள் நிலா.

சட்டென குபேரனும், அத்யுதாரனும் ஒன்றுபோல் திரும்பி பார்க்க திருதிருவென்று விழித்தாள்.

“ஒண்ணுமில்லை…” என்று பாவம் போல் கூற,

“ஹ்ம்ம்…” என திரும்பிக்கொண்டனர்.

இரவு உணவிற்கு ஓரிடத்தில் நிற்க அத்யுதாரனின் தலையசைப்பில் அவனிடம் வந்து நின்றாள்.

“எதுக்கு அவ்வளோ சத்தம்? அதுவும் அத்தைட்ட…” என்று கண்டிப்புடன் கேட்க,

“இல்ல மாமா. சொன்னதையே சொல்றாங்க. நான் இருந்துப்பேன்னு சொன்னாலும்…” என்றவள் அவனின் பார்வையில் வார்த்தைகளை நிறுத்தினாள்.

“அவங்க உன் அம்மா. சொல்லத்தான் செய்வாங்க. நீ குட் கேர்ளா இருந்தாலுமே உனக்கு சொல்லுவாங்க தான். ஏன் என்ன கஷ்டம் உனக்கு? உன்னோட நல்லதுக்கு தானே?…” என்றவன்,

“உன்னோட பிடிவாதத்துக்காக சம்மதிச்சதா நினைக்கிறியா நீ?…” என்று கேட்க மௌனமாய் பார்த்தாள்.

“அதுக்கு பின்னாடி உன்னோட விருப்பத்துக்கும், சந்தோஷத்துக்கும் முக்கியத்துவம் குடுத்து சம்மதிச்சிருக்காங்க. என்ன ஒன்னு கொஞ்சம் கண்டிப்போட சொல்றாங்க. ஏன் அவங்க சொல்றதுல கேட்கிறதுக்கு என்ன உனக்கு?…” என்றான்.

“ஓகே மாமா…”

“எல்லாத்துக்கும் சரி, ஓகே அப்படின்னு தலையாட்டிட்டா முடிஞ்சிடாது. அதை கரெக்ட்டா பாலோ பண்ணனும். உன் பேரன்ட்ஸ்க்கு மட்டுமில்லை, என்னோட பெரிய நம்பிக்கை நீ. காப்பாத்துவன்னு நம்பறேன்…” என்றதும் சுருக்கென்றது நிலவர்ணித்தாவிற்கு.

“திரும்பவும் அம்மா பேசுவாங்க. இதுவரை கண் முன்னாடி கைக்குள்ள இருந்த உன்னை இவ்வளவு தூரம் அனுப்பறோமேன்னு அவங்களுக்கு எவ்வளவு பயம் இருக்கும்? அதையும்விட உன்னை பிரிஞ்சு இருக்க போறோமேன்ற வேதனை. இதெல்லாம் உனக்கு போரிங், இல்ல?…” என்றவன்,

“அவங்க பீலிங்க்ஸ ரெஸ்பெக்ட் பண்ண பழகு நிலா. அவங்களோடது பேரெண்ட்ஸ் திங்கிங். அப்படித்தான் இருப்பாங்க. ஏன் பிற்காலத்துல நீயும் நானும் கூட இப்படித்தான். இதெல்லாம் யூஸ்வல். இதுக்கு இவ்வளோ ரியாக்ட் பண்ண வேண்டியதில்லை…” என்று சொல்ல,

“ஓகே மாமா. புரிஞ்சது…” என்றவள், அவன் பார்த்த விதத்தில்,

“நிஜமாவே உணர்ந்து தான் ஓகே சொன்னேன். சும்மா இல்லை…” என்றாள் உடனே.

“ஓஹ் நான் சும்மா பார்த்தா கூட உனக்கு மீனிங் புரியுதா?…” என்றவனின் கேள்வியில் அந்த குரலில் ஒருநிமிடம் அலையடிக்கும் ஆர்ப்பரிப்பு.

“அதான் சொன்னீங்களே, சும்மா சும்மா ஓகே சரின்னு வெறுமனே தலையாட்ட கூடாதுன்னு. அதான் புரிஞ்சது மாமா…” என்று சொல்ல,

“சுத்தம்…” என்று முணுமுணுத்தவன்,

“ஓகே போய் கார்ல ஏறு….” என்று சொல்லிவிட்டு தானும் ஒரு டீயை குடித்துவிட்டு வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

“என்ன அத்யு?…” என குபேரன் கேட்க,

“தூக்கம் வரலை மாமா. அதான் கொஞ்சநேரம் ட்ரைவ் பண்ணலாமேன்னு…” என்று சொல்ல,

“ஓகே, இன்னும் சீக்கிரம் ரீச்சாகிடலாம்…” என்றவர் சிறிதுநேரம் பேசிக்கொண்டு வந்தார்.

அதன்பின் பின்னிருக்கையில் குபேரன், சுகமதி, நிலா மூவரும் உறங்கியிருக்க, மெல்லிய குரலில் ட்ரைவருடன் பேசிக்கொண்டே தான் காரை ஓட்டினான்.

குபேரன் சொல்லியதை போலவே திட்டமிட்ட நேரத்தை விட இரண்டுமணிநேரத்திற்கு முன்பே வந்து சேர்ந்திருந்தனர்.

நேராக அந்த ஹாஸ்டலில் அருகிலிருக்கும் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து கிளம்புவதற்கு வர, அவர்களுக்கு முன்பே கார்த்திக் வந்து சேர்ந்திருந்தான்.

“நான் ரூம் புக் பண்ணிட்டேன் ண்ணா. ரெண்டு பண்ணிருக்கேன்…” என்று சொல்லியவன் குபேரனை பார்த்து வரவேற்று புன்னகைக்க,

“ஹ்ம்ம் ஆளே மாறிட்ட கார்த்திக்…” என்றார் அவர் அளவான சிரிப்புடன்.

“பின்ன படிச்சு இங்கயே வேலை. பெரியமனுஷனாகிட்டான்ல…” என்று சுகமதியும் கூற,

“வளரவேண்டிய நேரம் வளர்ந்துடனும் மாமா…” என்றவன், சுகமதியை பார்த்து எப்படி என்று புருவம் உயர்த்த,

“வாயும் கூடிருச்சு உனக்கு…” என்றபடி ஒரு அறைக்குள் சென்றுவிட்டார்.

குபேரனும் அவரை பின்பற்றி நுழைந்துகொள்ள அப்போதைக்கு தேவையான உடமைகள் மட்டும் எடுத்துக்கொண்டனர்.

நிலாவினது எல்லாம் காரிலேயே தான் இருந்தது. அப்படியே ஹாஸ்டலுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று.

அவர்கள் இருவரும் உள்ளே செல்லவும் ட்ரைவரையும் இன்னொரு அறையில் சென்று ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு அத்யுதாரன் திரும்ப, நிலாவின் கையை பிடித்து இழுத்து நிறுத்திய கார்த்திக்,

“பேய்க்குட்டி சாதிச்சிட்ட…” என்று ஹைபை அடைத்துக்கொள்ள,

“ஸாரி மாம்ஸ், அப்பா பேசினதுக்கு…” என்றாள் நிலா.

“ஆமாமா, பெரிய லாயர். ஆனா ஒரு சர்காஸ்டிக் டாக் கூட பிராப்பரா பேச வரலை. என்னன்னு வாதாடி…” என்று சொல்லிக்கொண்டிருக்க முதுகில் ஒரு அடி வாங்கினான்.

அத்யுதாரனின் கை அவனை அடித்திருக்க திரும்பி பார்த்த கார்த்திக் அவனை கட்டிக்கொண்டான்.

“அண்ணா, மறந்துட்டேன்…” என்று அவனை அணைத்துக்கொண்டவன்,

“எல்லாம் இந்த பேய்க்குட்டியால தான்…” என்று கூறினான்.

“வாயை குறைடா. உன்னால தான் அவ இங்க படிக்க வந்திருக்கான்னு செம்ம டென்ஷன் மாமாவுக்கு…” என்றவனின் பேச்சிற்கு உடனடியாய் கட்டுப்பட்டவன்,

“காலேஜ்ல நம்ம பசங்க எல்லாம் இருக்காங்க ண்ணா. நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல. அதோட ஸ்டாப்ஸ் எல்லாம் எனக்கு பழக்கம் தான். நாலு வருஷம் நம்பி இவளை விடலாம்…” என்றதுடன்,

“அப்பறம் பேய்க்குட்டி படிப்பு முடிஞ்சதும் ஊரை பார்க்க போற ஐடியாவா, இல்லை மாமனை மாதிரி இங்கயே ஜாப் பார்த்து இங்கயே இருக்கறதாவா? ஆனா என்னையும் ஒருத்தி இன்ஸ்ப்ரேஷனா எடுத்திருக்கான்னு நினைக்கும் போது பெருமையா தான் இருக்கு…” என்றான் காலரை தூக்கிவிட்டபடி.

“முதுகுத்தோலு உரிஞ்சிரும் பார்த்துக்க….” என்ற சத்தத்தில் திடுக்கிட்டு திரும்ப அங்கே சுகமதி தான் கார்த்திக்கையும், நிலாவையும் பார்வையால் எரித்துக்கொண்டு நின்றார்.

“மம்மி…” என நிலா பயந்து பார்க்க,

“ஆகா இந்த நடிப்பை எல்லாம் என்கிட்ட காமிக்காத. வந்து கிளம்பு முதல்ல. போற முதல்நாளே உருப்படும்…” என்று அவளை இழுத்துக்கொண்டு செல்ல,

“அத்தை பார்த்து…” என்றான் கார்த்திக்.

“போடா நீ…” என அவனை பிடித்து தள்ளிவிட்டு மகளுடன் உள்ளே சென்று கதவை அடைத்துக்கொண்டார் சுகமதி.

error: Content is protected !!