பௌர்ணமி – 6
குபேரனும் சுகமதியும் இறுக்கத்துடனே அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர்.
நிலவர்ணித்தாவை கல்லூரியில் சேர்த்துவிட்டு வர இன்னும் சற்றுநேரத்தில் புறப்படவேண்டும்.
அதற்கான ஏற்பாட்டில் தான் இருந்தார்கள் அவர்கள். சுகமதி தன் கையில் இருந்த நோட்டில் இருந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாய் படிக்க,
“ஹ்ம்ம், பெர்பெக்ட். லிஸ்ட்ல இருக்கற எல்லாமே பேக் பண்ணியாச்சு…” என்றார் கார்த்தியாயினி.
“வேற எதுவும் வேணும்னா அங்க தான் கார்த்திக் இருக்கானே. வாங்கி குடுத்திருவான்…” என்றார் கதிர்வேலன்.
இப்போதும் குபேரனுக்கு துளியும் விருப்பமில்லை. அதுவும் தாங்கள் ஒன்றை மறுத்து அதனை மகள் பிடிவாதமாக நிறைவேற்றிக்கொண்டதில் இன்னுமே அதிருப்தி தான்.
அத்யுதாரன் ஒருவனுக்காக, அவனின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து இதற்கு சம்மதித்தனர்.
“இவ இஷ்டத்துக்கு ஆடறா இல்ல. அங்க போய் கை வலி, தலைவலி கால் நோவுன்னு சொல்லட்டும். கைய்யோட இழுத்துட்டு வந்திடறேன்…” என மதி ஒருபக்கம் மிரட்டிக்கொண்டிருந்தார் மகளை.
“பார்த்துக்கோடா பேய்க்குட்டி. பெஸ்ட் ஆப்பர்சுனட்டி. மிஸ் பண்ணிடாத. எதாச்சும் சொல்லி சிக்கிடாத….” என்ற மாதவன்,
“டேய் நிலா, மேனேஜ் பண்ணிப்ப தான?…” என்றான் கொஞ்சம் கவலையுடன்.
“அதெல்லாம் பார்த்துப்பேன். இல்லைன்னாலும் பழகிப்பேன். சும்மா இங்கயே என்னை வச்சிக்கிட்டு இதை செய்யாதன்னு சொல்றது, அப்பறம் அவளுக்கு இதெல்லாம் தெரியலைன்னு இவங்களே சொல்றது. எனக்கும் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்ல…” என்றவள்,
“அத்யு மாமா சொல்லிருக்காங்க. கஷ்டமோ, முடியலையோ அது எதுவா இருந்தாலும் அவங்ககிட்ட சொல்லனும்ன்னு…” என்றதும்,
“என்கிட்டயும் சொல்லு. நீ மாமாக்கிட்ட சொல்ல முடியலைன்னா நான் இருக்கேன்…” என்று கூற,
“உன்னை தான் மிஸ் பண்ணுவேன். இந்த ரூம். உன்னோட சண்டை, இதெல்லாம்…” என்று அவள் லேசாய் கலங்கிக்கொண்டு கூற,
“நான்லாம் தொல்லை விட்டதுன்னு இது முழுக்க என் ரூமா மாத்திப்பேன். அதான் இந்த வீடே வேண்டாம்ன்னு போறியே. அப்பறம் என்ன?…” என்றவனுக்குமே மனம் கனத்தது.
“ஸாரிடா அண்ணா…” என்று அவனின் கையை பிடித்துக்கொண்டு தோளில் சாய்ந்துவிட்டாள்.
“முடிஞ்சது போ. கிளம்ப அழறன்னு அம்மா இங்கயே உன்னை லாக் பண்ணிருவாங்க. நானும் சமாளிக்கலாம்ன்னா என்னையும் கண்ணை கசக்க வைக்கிற. பேய்க்குட்டி அடக்கி வாசி. அங்க போ வேணா என்கிட்ட தனியா அழுதுக்கோ…” என்று தங்கையின் கண்ணீரை துடைத்துவிட்டவன்,
“ஓகே வா. வேற எதுவும் வேணுமா சொல்லு. நான் அனுப்பறேன்…” என்று தன்னிடமிருந்த பாக்கெட் மணியை அவளுக்கு தந்தவன்,
“வா சாமி கும்பிட்டு கிளம்பனும்…” என அவளுடன் வெளியே வந்தான்.
“என்ன ரகசியம் பேசி முடிச்சாச்சா?…” அன்னலட்சுமி முறைத்துக்கொண்டே இருவரிடமும் கேட்க,
“இப்ப எதுக்கு பொடுபொடுன்னு இருக்க நீ? அண்ணனும், தங்கச்சியும் பேசிக்கறாங்க. என்ன உனக்கு குறையுது?…” என்றார் திருநாவுக்கரசும்.
“ம்க்கும் வாயை திறந்துடக்கூடாது…” என்றவர் பூஜையறை நோக்கி செல்ல,
“சாமி கும்பிட வாடா…” என்றார் கார்த்தியாயினி.
நிச்சயம் முழுமனதாய் இல்லை. மனதினுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்விருவித சஞ்சலம் தான்.
சாமியை கும்பிட்டதும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள் நிலவர்ணித்தா.
“போனோமா, போன வேலையை பார்த்தோமா படிச்சு முடிச்சோமான்னு வரனும். எதாச்சும் வம்புதும்புக்கு போனான்னு தெரிஞ்சுச்சு…” என்று சொல்லிக்கொண்டே தான் அவளின் நெற்றியில் விபூதியை பூசினார் அன்னம்.
“கிழிஞ்சது…” என்ற அரசு,
“இந்தாத்தா பேசாம நீயும் பேத்தியோட அங்க போயிரு. உன் கண்ணுக்கெதுக்க வச்சிக்கோ. இங்க நானாச்சும் நிம்மதியா இருப்பேன்…” என அரசு கூற,
“ம்க்கும், விட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பீங்க…” என்று நொடித்துக்கொண்டார் அன்னம்.
முதலில் அன்னம் தான் இதனை கூறியதுமே கூட. வீட்டை பார்த்து தான் இருந்து கவனித்துக்கொள்கிறேன் என்று.
குபேரனும் அது சரி என்க, அத்யுதாரன் வேண்டாம் என்றுவிட்டான். அவர் பேச்சை துவங்கவுமே அதனை மறுத்துவிட்டான்.
“முதல்ல காலேஜ் ஹாஸ்டல்ல இருந்து பழகட்டும். அங்க உள்ளவங்களோட பழக்கவழக்கம், எல்லாம் பார்க்கட்டும். ஒத்துவரலைன்னா வேணா இதை யோசிப்போம். அதோட அங்க போய் தனியா ரெண்டுபேர் மட்டும் வீடெடுத்து தங்கறது சரிவராது…” என்றுவிட்டான்.
கார்த்திக் தங்கியிருப்பதும், அவன் வேலைபார்க்கும் இடமும் இன்னும் தூரம் என்பதனால் அவசரமென்றாலும் அவர்களுக்கு உடனடியாக உதவ முன்வர முடியாது.
அதையும்விட முதலில் இதுபோன்ற விடுதிகளில் தங்கி படிக்கும்பொழுது நிறையவே பழகிக்கொள்ளவும் வாய்ப்புள்ளதே என எடுத்து கூற சுகமதி அவனின் பேச்சிற்கு முதலில் சம்மதம் என்றார்.
“கூட வர்ற ரூம் மேட் எப்படி இருப்பாங்களோ? ரொம்பவே அட்ஜஸ்ட் பண்ணனும்…” என்று குபேரன் தயங்க,
“அவ்வளோ தூரம் போய் படிக்கிறதுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கே. இதையும் சமாளிப்பா…” என்று நிலாவை பார்த்துக்கொண்டே அத்யுதாரன் கூற,
“ஆமா, எனக்கு ஓகே…” என்றாள் அதற்கும் வேகமான தலையாட்டலுடன்.
இப்படியாக கல்லூரியின் விடுதி வரை முதலில் அத்யுதாரனும், குபேரனும் சென்று பார்த்துவிட்டு வந்து அவர்களுக்கு சரி என்ற பின்னர் தான் இதோ அவளை அங்கே கொண்டு சென்று விட தயாராகினார்கள்.
நிலாவுடன் குபேரனும் சுகமதியும் கிளம்ப, அத்யுதாரனையும் கதிர்வேலன் உடன் சென்றுவரும்படி கூறியிருந்தார்.
“அதான் அங்க கார்த்திக் இருக்கானே? அவன் பார்த்துப்பான்…” என அத்யுதாரன் மறுக்க, குபேரனுக்கு இன்னும் கார்த்திக் மீது வருத்தம்.
அவன் பேசி பேசி தான் தன் மகளும் அதை மனதில் ஏற்றிக்கொண்டு அவன் வழியை பின்பற்றி இப்படி கிளம்பிவிட்டாள் என்று.
“ஹ்ம்ம், அதுவும் சரி தான். நீயும் வா அத்யு. கார்த்திக்கை அவன் வேலை நேரத்துல தொந்தரவு செய்ய வேண்டாம் பாரு…” என்று குபேரனே அழைக்க, மறுக்க முடியவில்லை.
அதன்படி இதோ சாமி கும்பிட்டு கிளம்பி வெளியே வந்து காரில் ஏறிக்கொண்டனர்.
அங்கிருந்தே அவர்களின் காரிலேயே பயணம். மாலை விளக்கு வைப்பதற்கு முன் கிளம்பிவிட்டால் அங்கே விடிந்ததும் சென்று சேர சரியாக இருக்கும் என்ற கணக்குடன் புறப்பட்டனர்.
செல்லும் வழியில் அத்யுதாரனை கடையிலிருந்து அழைத்துக்கொள்வதாக பேசியிருந்தனர்.
“பேசாம மார்னிங் ப்ளைட்ல போயிருக்கலாம். என் பேச்சை யார் கேட்க? போற வழியெல்லாம் அட்வைஸ் பன்றேன்னு கொத்தா சிக்கிட்டா உங்க பேத்தி…” என்றான் மாதவ்.
“ம்க்கும், இம்புட்டு சொல்லலைன்னாலும் உன் தங்கச்சி கேட்டுடுவா. அடங்காத கொண்டி. என்ன ஆட்டு ஆட்டி வைக்கிறா? பொட்டக்கழுதை, அவளுக்கு என்ன அம்புட்டு அகம்பாதம். ஆம்பளைப்பையன் நீயே மருமகன் பேச்சை கேட்டு இங்க படிக்கும் போது…” என அவனையும் பிடித்து தாளிக்க,
“எனக்கு தேவை தான். என் நேரம். உன்கிட்ட எல்லாம் வாங்கிக்கட்ட வேண்டியதிருக்கு…” என்று முறைத்தான் மாதவ்.
“அடடா சண்டை போடாம இருங்க…” என்ற கார்த்தியாயினி,
“அத்தை மதி வர ரெண்டுநாளாகும். வர்ற வரை இப்படி மல்லுக்கு நின்னா நான் அங்க நிம்மதியா இருக்க முடியுமா?…” என கேட்க,
“அப்படி சொல்லுங்கத்தை…” என்றான் மாதவ்.