இது இன்னும் சோதனையாகிற்றே. அந்த கிசுகிசுப்பான குரலில் அவன் தான் கரைந்துபோவான். அவளின் அந்த செய்தியினை கேட்க கைப்பேசியை தீண்ட,
“மாமா…” என்ற குரல் விசும்பலுடன்.
“டேய் வர்ணா…” என அவளின் அழைப்பில் இவன் சரிய,
“மாமா நான் உங்களை பார்க்கனும். உங்ககிட்ட பேசனும். ப்ளீஸ். இங்க அப்பா அம்மா யாரும் கேட்கறதில்லை. பேசவும், சொல்லவும் விடமாட்றாங்க. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க மாமா….” என்றிருந்தவள்,
“நீங்க சொன்ன மாதிரி நானும் நல்ல மார்க்ஸ் ஸ்கோர் பண்ணிருக்கேன். நல்ல பர்சேன்டேஜ் எடுத்திருக்கேன்…” என்று முழுதாய் அனுப்பி வைத்திருந்தாள்.
முழுதாய் கேட்டு முடித்தவனுக்கு அதற்குமேல் மனமில்லை. ஒருபெருமூச்சுடன் தலையை உலுக்கிக்கொண்டவன் அவளுக்கு அழைத்தான்.
“மாமா…” என்று அழைப்பிலேயே அத்தனை அழுகை.
“வர்ணா…” என்னும் குரலில் அந்த அழுகை கொஞ்சம் மட்டுப்பட,
“ஷ்ஷ், அழாம பேசனும்ன்னா பேசலாம்…” என்றது சொல்ல,
“ஒரு ஒரு நிமிஷம் மாமா…” என்று சொல்லியவள் தன்னை நிதானப்படுத்துவது தெரிந்தது.
அங்கே அவள் தண்ணீரை குடிக்கும் சப்தம் மிக மெல்லியதாய் இவனுக்கு கேட்க, சட்டென்று ஒரு குளிர் பரவியது.
“ஊஃப்…” என்றவன் உள்ளம், ‘படுத்தறா’ என்று கூற,
“மாமா…” என்று அழைத்து அவனை தன்னுலகம் ஈர்த்தாள்.
“ஹ்ம்ம், சொல்லு வர்ணா…” என்றதும்,
“நான் உங்களை பார்க்கனுமே. பேசனும் மாமா…” என்று சொல்லியவள்,
“நாளைக்கு கடைக்கு வர்றேனே?….” என்று கூற,
“வர்ணா…” என்றவன் முழுதாய் பேசும் முன்,
“வீட்டுக்கு வந்தா அங்க பாட்டி பேசுவாங்க…” என்றாள் வேகமாய்.
சட்டென சிரிப்பு தான் வந்தது. மௌனமாய் புன்னகைத்தவன் தானே தலையசைத்ததுடன்,
“ஓகே, வா…” என்று கூறி,
“வேற எதுவும் சொல்லனுமா?…” என்றான்.
“ம்ஹூம்…” என்றதும்,
“டின்னர் சாப்பிட்டியா இல்லையா?…” என கேட்டான்.
“சாப்பிட்டேன். ஏனா நீங்க சாப்பிடாம பேசினேன்னு சொன்னா கோவப்படுவீங்க…”
“ஓஹ் என் கோவத்துக்கு வந்த வாழ்வா இது?…” என லேசாய் புன்னகைத்து கேட்க,
“ஹாங், என்ன மாமா? சரியா கேட்கலை…” என்றாள்.
“நாளைக்கு மார்னிங் நான் கால் பன்றேன். நீ அதுக்கப்பறம் வா…” என்று கூறியவனுக்கு அதற்குமேல் பேச முடியவில்லை.
அழைப்பை துண்டித்துவிட அங்கே நிலா அத்தனை நிம்மதியாய் உறங்க முயல, அத்யுதாரன் அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை கேட்க ஆரம்பித்தான்.
கடைக்கு வந்ததும் எங்கே மறுத்துவிடுவானோ இவனும் என்ற வேகத்தில் படபடவென்று பேசியவள் கடைசியாக தான் எதுவும் செய்துகொள்வேன் என்பதை போல் வேறு கூறிவைக்க அதுவரை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தவனின் கோபம் அதில் தான் அதிகரித்தது.
“நீ கேட்டது கிடைக்கலைன்னா இப்படித்தான் பேசறதா? இதுக்கே உன்னை அனுப்ப வேண்டாமேன்னு தோண வைக்கிற வர்ணா…” என்று கூறவுமே திகீர் என்றது நிலவர்ணித்தாவிற்கு.
“இன்னைக்கு நினைச்ச இடத்துல படிக்கனும்ன்றதுக்காக இப்படி மிரட்டுவ. நாளைக்கு படிக்க போன இடத்துல வேற எதாச்சும் தோணி அதுக்கு சம்மதிக்க சொல்லி மிரட்டினா?…” என்றதும் இதேதடா என்றானது நிலாவுக்கு.
“அப்படியெல்லாம் இல்லை. நான் அப்படி பேசுவேனா மாமா?…” என்றாள்.
“இதோ இப்ப பேசின தானே? அப்போ அப்பவும் பேசமாட்டியா என்ன?…” என கேட்க நிலாவுக்கு கண்ணில் நீர் நிரம்பிவிட்டது.
அவனுக்கு தான் அதனை கண்கொண்டு காண முடியவில்லை. இதில் அந்த வார்த்தை அத்தனை கனத்தது அவனுக்குள்.
“நீ அழறதுனா இங்கருந்து கிளம்பிடு. சும்மா எல்லாத்துக்கும் அழவும் மிரட்டவும் தான் தெரியுதுன்னா எங்கருந்து படிச்ச? என்ன பழக்கம் இது?…” என்றான் கோபத்துடன்.
“ஸாரி மாமா. இனிமே அப்படி பேசமாட்டேன். ப்ராமிஸ்…” என்றாள்.
“எப்படி நம்பறது?….” என அப்போதும் அவன் விடாப்பிடியாய் கேட்க,
“நம்பறதுன்னா?…” என்றவள் விழிகள் யோசனையில் அந்த அறையில் சுழன்றது.
என்ன கூறி தன்னை நம்பவைக்க முடியும் என்று ஒரு பதற்றம். கூடவே எப்படி இத்தனை தூரம் முட்டாள்த்தனமாக வார்த்தையை விட்டோம் என தன்னையே வேறு திட்டிக்கொள்ள,
“என்னை தான் திட்டிட்டு இருக்கியா?…” என்றான் அவளின் முகபாவனையை கவனித்தபடி இருந்தவன்.
“அச்சோ இல்லையே. ப்ராமிஸ்…” என்றாள் மீண்டும்.
“ஹ்ம்ம், எத்தனை ப்ராமிஸ்? அப்போ நிஜமா என்னை திட்டலை…” என்று தலை சாய்த்து கேட்க,
“நிஜமாவே. உங்களை ஏன் திட்ட போறேன் மாமா? இது நான் பேசினதுக்கு என்னை நானே திட்டிக்கிட்டேன். என் மேலையே கோவம்…” என்றாள் உணர்ந்து.
“அப்போ என் மேல கோவம் இல்லையா வர்ணா?…” என்றவன் கேள்வியில்,
“ம்ஹூம். அதெல்லாம் இல்லை…” என்றாள்.
“ஹ்ம்ம், சரி. இங்கயே வெய்ட் பண்ணு. ஜூஸ் சொல்லிருக்கேன். குடிச்சிட்டு இரு. ஒரு ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு வர்றேன்…” என்று சொல்ல,
“ஜூஸ் வேண்டாம். காபி…” என்றாள் வேகமாய்.
“ஹ்ம்ம். ஓகே…” என தலையசைத்துவிட்டு அவன் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான்.
“ஞானம் அண்ணே, வர்ணாவுக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி…” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.
மீண்டும் திரும்பி வருகையில் அரைமணிநேரம் கடந்திருந்தது. நிலாவால் அந்த அறைக்குள் அமரவே முடியவில்லை.
ஐந்து நிமிடத்தில் எல்லாம் போரடிக்க துவங்க, வேறு வழியின்றி தான் காத்திருந்தாள்.
அறையை விட்டு வெளியேறி பின் மீண்டும் அவன் அதற்கு கோவித்துக்கொண்டால்?
“எல்லாம் சரின்னு சொல்றவரை குட்கேர்ளா இருந்துக்கோ நிலா…” என தனக்கு தானே சொல்லிக்கொண்டு காத்திருக்க வந்துவிட்டான் அத்யுதாரன்.
“இங்க வா வர்ணா…” என்று தன்னெதிரில் அமரும்படி சொல்லிவிட்டு சுழல்நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.
“காபி குடிச்சிட்டியா?…” என கேட்க,
“ஹ்ம்ம்…” என்றாள்.
வாய் திறந்து பதில் சொல்லவும் இல்லை. எதுவும் கேட்கவும் இல்லை. ஆனால் அவ்விழிகளில் ஆயிரம் வானவில்கள் போல் அத்தனை ஆர்வம் நிரம்பி வழிந்தது.
அதில் சன்னமாய் புன்னகைத்த அத்யுதாரன் தன் மீசையை நீவியபடி தொண்டையை செருமினான்.
“ஓகே நீ படிக்க போய்ட்டு வா. நான் வீட்டுல பேசறேன்…” என்றதும் அவளின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
மலர்ந்துவிட்டாள். அதனை இமைக்காமல் பார்த்தவனின் மனதினுள் சஞ்சலமொன்று சத்தமின்றி புகுந்து படபடவென்று அடித்துக்கொண்டது.
“வர்ணா…” என்றதும்,
“தேங்க்ஸ் மாமா. சொல்லுங்க மாமா. எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணன்னே தெரியலை. ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கு…” என்றதும்,
“ஹ்ம்ம், அதுக்கு முன்ன கொஞ்சம் அமைதியா நான் சொல்றதை கேட்கனும்…” என்று கூற வேகமாய் தலையசைத்தாள்.
“அங்க போனதும் என்ன சந்தோஷமா இருந்தாலும் அம்மா அப்பாட்ட எல்லார்ட்டயும் ஷேர் பண்ணு…”
“ஹ்ம்ம்…”
“ஏதாவது உனக்கு கஷ்டமோ, இல்லை முடியலைன்னாலோ, பிரச்சனைன்னாலோ யோசிக்காம என்னை தான் கூப்பிடனும் நீ. புரிஞ்சதா?…” என்று கூற,
“ஹ்ம்ம்…” என்றாள் அதற்கும்.
“எங்க படிப்பை நிறுத்தி கூட்டிட்டு வந்திருவாங்களோ அப்படின்னு எதையும் யோசிக்க கூடாது. மறைக்க கூடாது. அப்படி நான் செய்யமாட்டேன்னு உனக்கே தெரியும். சின்னது தானேன்னு வீட்டுல மறைக்கிற விஷயம் நிச்சயம் பின்னாடி சால்வ் பண்ண முடியாத பெரிய பிரச்சனையை கொண்டுவந்திரும். அதனால தான் சொல்றேன்….”
“சரிங்க மாமா…” என்றாள் நிலா.
“சின்னதோ பெருசோ, ஒருவேளை நீயே சமாளிச்சு சால்வ் பண்ணினாலும் என்கிட்ட மறக்காம சொல்லனும். ஓகே?…” என்று அறிவுறுத்த,
“ஓகே மாமா..” என்றாள்.
“ஆனா ஏதாவது மறைச்சன்னு தெரிஞ்சா…” என்றவன் அதனை முடிக்கவில்லை,
“உரிச்சிடுவீங்க…” என்று அவள் எடுத்துக்கொண்டுக்க ‘இல்லை’ என்று தலையசைத்தவன்,
“கையோட அங்க நான் வந்து உன்னை இங்க கூட்டிட்டு வந்திருவேன்…” என்றான் கையசைத்து தன்னருகில் இடம் காண்பித்து.
அதன் சமிஞ்சை அவளுக்கு புரியவில்லை. ஆனால் ஊருக்கு அழைத்து வந்துவிடுவேன் என்னும் அர்த்தம் தர பகீர் என்றது நிலாவுக்கு.
“இல்ல இல்ல. அப்படி எல்லாம் செய்யமாட்டேன். எதையுமே மறைக்க மாட்டேன்…” என்றாள் நிலவர்ணித்தா உறுதியாய்.
மனங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் வெளிச்சம் கொண்டு ஒளிரும் நாள் வரும்வரை மறைவில் மொட்டவிழாது.