குளிர் பௌர்ணமி தூறலில் – 5 (1)

பௌர்ணமி – 5

          முதல்நாளே அத்யுதாரனுக்கு விஷயம் தெரியவந்துவிட்டது குபேரன் வீட்டில் பிரச்சனை என்று.

“என்னன்னு போய் பார்க்கனுமே…” என அன்னலட்சுமி அப்போதே ஆரம்பித்துவிட்டார்.

“இந்த கார்த்திக் பய தான் அவ மனசை கெடுத்திருப்பான். இல்லன்னா என் பேத்தியா இப்படி தூரதேசம் போவேன்னு நிப்பாளா?…” என அதற்குமேல் நடுவீட்டில் குதித்துக்கொண்டிருந்தார்.

கதிர்வேலனும், கார்த்தியாயினியும் என்ன செய்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்தனர்.

சுகமதி தான் மாலை நேரம் அழைத்து விஷயத்தை கூறியிருக்க கேட்டதிலிருந்து நிம்மதியில்லை அவருக்கு.

“பொம்பளைப்புள்ளையை அப்படி சட்டுன்னு அனுப்பிடறதா? கண்ணுக்கு முன்ன வச்சி பார்த்தாலே நுறு நொட்டை. ஐயோ எங்கருந்து இந்த நினைப்பு?…” என இங்குமங்குமாய் நடக்கவும், பேசவும் மீண்டும் வந்தமரவுமாக இருந்தார்.

இடையில் கார்த்திக் எண்ணிற்கு வேறு அழைப்புவிடுத்து அவனை பிடித்து வாங்கியிருக்க,

“இங்க பாரு ஆச்சி, இதுல எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. உன் பேத்தி முடிவு. அவக்கிட்ட பேசிக்கோ…” என்றுவிட்டான் அவன்.

“நீ சொல்லாமத்தான், நீ கூப்பிடாமத்தான் வர்றேன்னு சொல்லுவாளோ? அவ சூதுவாது தெரியாத பிள்ளை. எல்லாம் நீ சொல்லிக்குடுத்தது. உன்னால தான்…” என்றவர்,

“அதான் படிப்பு முடிச்சு அங்கயே வேலை கிடைச்சிடுச்சுன்னு இருக்கியே? போதாதா? அப்பறம் என்னடா உனக்கு? நீ எப்படியும் போ. இப்ப என் பேத்தி பாழா போய்ட்டா….” என்று பேச,

“ஆமா, உன் பேத்திக்குன்னு சுயபுத்தி இல்லைன்றியா? என்னவோ நான் சொல்லிக்குடுத்து தான் உன் பேத்தியும் பாழாகறா. பேசாம பிரிட்ஜ்ல தூக்கி வச்சிக்க. பேச்சைப்பாரு….” என்றான் கடுப்புடன்.

குபேரன் வேறு அவனுக்கு அழைத்து ‘என்ன இதெல்லாம் கார்த்திக்?’ என அவனிடம் கேட்டிருக்க அவ்வளவு கோபம்.

அவரிடம் மரியாதை நிமித்தம் எதுவும் பேசியிருக்கவில்லை கார்த்திக்.

“இது நிலாவோட விருப்பம் தான் மாமா, இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதோட அப்படி ஒன்னும் மோசமான டிசிஷன் இல்லையே நிலாவோடது…” என்று சொல்லிவிட்டான்.

அதை குபேரனும் எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட அவளின் முடிவிற்கு அவனும் ஆதரவளிப்பதை போல் தானே அவன் பேசியதும்.

“கார்த்திக்…” என்றவர்,

“கோபத்துல எதுக்கு மாமா யோசிக்கிறீங்க? பொறுமையா பேசுங்க. ஆனா நல்லா யோசிச்சு பாருங்க…” என்று வைத்துவிட்டான்.

சுகமதி மீண்டும் அழைத்து அவனை இணைப்பில் வைத்துக்கொண்டே நிலாவை அத்தனை பேச்சுக்கள்.

“இப்படியா உன்னை வளர்த்தோம்? அப்படி என்ன பிடிவாதம்?…” என கேட்டு கேட்டு வேறு பேச,

“வளர்த்தா செய்யிறதெல்லாம் சரின்னு ஆகிடுமா? இல்லை அவ விரும்பறது தப்புன்னு ஆகிடுமா? பார்த்து பேசுங்க த்தை…” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.

அவர்கள் முடிந்து இதோ அன்னமும் அழைத்து பேசியிருக்க ஏக கடுப்பில் கத்திவிட்டான்.

“நீ பேசுவடா பேசுவ. உன்னை உன் போக்குல விட்டோம்ல, உன் அப்பனை சொல்லனும். அதுக்கு ஒத்துப்பாடுன உன் தாத்தனை சொல்லனும். வருவ இல்ல இங்க. வா கண்ணுமுழில மிளகாயை வச்சி அரக்கிவிடறேன்…” என்று வைத்துவிட்டு தான் இத்தனை புலம்பல்களும்.

அவரின் பேச்சில் கதிர்வேலன் கார்த்தியாயினி இருவருக்கும் கூட தலைவலியே வந்துவிட்டது.

“ம்மா, விடுங்களேன்…” என கதிர்வேலன் கூற,

“அதெப்படிய்யா விட சொல்ற? உன் தங்கச்சி படாதபாடு பட்டு எவ்வளவு பேசியும் கேட்கமாட்டேன்றாளாம் உன் மருமக. என்ன புள்ளை வளர்த்திருக்கன்னு மாப்பிள்ளை ஒருவார்த்தை கேட்டுட்டா?…” என்று பேச,

“எங்கைக்கும் எங்கைக்கும் முடிச்சு போடறேன்ங்க த்தை. சும்மா எடுத்தோம், கவுத்தோம்ன்னு பேசினா ஆச்சா? அவ கேட்டா அதுக்குமேல அவங்க ரெண்டுபேரும் கோவப்பட்டா எப்படி?…” என அமைதிப்படுத்த முனைந்தார் கார்த்தியாயினி.

இதுவே இரவு வரை தொடர அத்யுதாரனும், அரசுவும் வந்த பின்னும் ஆரம்பித்துவிட்டார் அன்னம்.

“ப்ச், இப்ப என்னத்துக்கு நையி நையின்னு இருக்க? அதான் பேசறேன்னு சொல்லிருக்காங்க இல்ல. பொறுமைகிடையாதா? வாயை மூடிட்டு இரு முதல்ல…” என்று அரசு சத்தம் போட்டுவிட அப்போதும் அவரை முறைத்துக்கொண்டு பதிலுக்கு பதில் தான் பேசிக்கொண்டிருந்தார்.

“இப்போ என்ன ஆச்சி பிரச்சனை?…” என்று பேரன் கேட்கவும் கொஞ்சம் நிதானித்தவர்,

“அங்க என் மக அழுதுட்டு இருக்கா…” என்றார் லேசாய் விசும்பலுடன்.

ஒரு பெருமூச்சுடன் பார்த்தான் அவரை பார்த்தவன் முகத்தில் மென்னகை படர்ந்தது.

“சரி அழறாங்க. அதுக்கு?…” என கேட்க விழித்தார் அன்னம்.

“சொல்லுங்க…” என்றவனிடம்,

“அவ ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறா. சொன்ன பேச்சு கேட்கமாட்டேன்றா…” என்றதும்,

“அப்படியா? வர்ணா மட்டும் தான் பிடிவாதம் பன்றாளா?…” என கேட்டவன்,  

“அவ வயசுக்கு அவ பிடிவாதமா பேசறா. புரியவைக்க முடியலை. பொறுமையா இருக்க சொல்ல முடியலைன்னா உங்க மகளையும், மருமகனையும் என்ன சொல்ல? அவங்க வயசுக்கு மட்டும் பொறுமை இருக்கா?…” என்றான் அத்யுதாரன்.

கப்பென்று வாயை மூடிக்கொண்டார் அன்னம். கார்த்தியாயினுக்கு கவலையான கவலை.

அவன் பேசிவிட்டான் தான். ஆனால் அந்த முகத்தில் அத்தனை பரிதவிப்பு.

கார்த்தியாயினி மகனை தான் கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

“சும்மா எல்லாத்துக்கும் அவளையே குறை சொல்லாதீங்க. முதல்ல அவ சைட் என்ன சொல்றான்னும் கேட்கனும். கேட்டுட்டு பொறுமையா பேசனும். அதை விட்டுட்டு ஆளுக்கொன்னு பேசி உங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்து சொன்னா எப்படி?…” என்று சொல்லவும்,

“சரிப்பா…” என்றார் அவர்.

அதுவரை தாட்பூட் என்று குதித்துக்கொண்டிருந்தவர் பேரன் சொல்லவும் அமைதியாகிவிட,

“இதுக்கெல்லாம் சொல்றவங்க சொன்னா தான் கேட்கறது…” என்றும் அரசு நக்கல் பேச,

“ம்க்கும்…” என தோள்ப்பட்டையை வெட்டிக்கொண்டு கடந்துவிட்டார்.

“அத்யு…” என்று அரசு அழைக்க,

“நாளைக்கு நானே மாமாக்கிட்ட பேசறேன். எனக்குமே ஈவ்னிங் கால் பண்ணிருந்தாங்க…” என்றவன்,

“கார்த்திக்கிட்ட கூட கொஞ்சம் ஹார்ஷா பேசிருந்திருக்காங்க. அவனும் மெசேஜ் பண்ணிருக்கான்…” என்று உண்டுகொண்டே மெதுவாய் எல்லாம் கூற,

“என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு? ஏன் இவ்வளோ பிடிவாதம்?…” என்றார் கதிர்வேலன்.

“ஹ்ம்ம், பார்ப்போம்..” என்றவன் அதற்க்கு மேல் எதுவும் பேசவில்லை.

வேகமாய் உண்டுவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றால் போதும் என்பதை போலிருந்தது. சட்டென புரையேறிவிட,

“அத்யு கொஞ்சம் மெதுவா….” என கார்த்தியாயினி வந்து மகனின் தலையில் தட்டினான்.

“ம்மா, விடுங்க…” என்றவன் அதற்குமேல் உண்ண முடியாமல் எழுந்துவிட்டான்.

“என்னாச்சு அத்யு?…” என அனைவருமே கேட்க, தொண்டையை செருமிக்கொண்டவன்,

“எனக்கு தூக்கம் வந்திருச்சு…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட,

“கார்த்தியா…” என்றார் கதிர்வேலன்.

அவரின் அழைப்பில் திரும்பி பார்த்துவிட்டு தலையசைத்துக்கொண்டார் அவர்.

மாடிக்கு வந்தவனுக்கு மனம் நிலைகொள்ளவில்லை. ஒருவகையில் இதற்கு அவனுமே தயாராக தான் இருந்தான்.

எப்படியும் அவளின் உறுதியில் இருந்து பின்வாங்க மாட்டாள் என்பது அறிந்தது தான்.

ஆனால் அப்படி ஒருநாள் வந்ததும் அதனை சட்டென கடக்கவும், தாங்கிக்கொள்ளவும் தான் முடியவில்லை.

முயன்று ஆழ்ந்த மூச்செடுப்புடன் தலையை உலுக்கிக்கொண்டவன் உடைமாற்றி வர அவனின் கைப்பேசியில் அழைப்பு.

நிலவர்ணித்தா தான் அழைத்திருந்தாள். பார்த்ததுமே இருபுறமும் தலையசைத்துக்கொண்டான்.

“உடனே வந்திடுவா….” என பல்லை கடித்தவன், அழைப்பை ஏற்காமல் முழுதாய் முடியும் வரை காத்திருந்தவன் அப்படியே படுக்கையில் விழுந்தான்.

“ஊஃப், பேசாம அப்படியே விட்டுட்டு போயேன்…” என ஆயாசமாய் சொல்லிக்கொள்ள, மீண்டும் அழைப்பு.

ஒருபக்கமாய் சாய்ந்து படுத்துக்கொண்டே இடதுகையை தலையில் ஊன்றிக்கொண்ட கைப்பேசியை எடுத்து பார்த்தான்.

பார்த்தவனின் விழிகள் கோபத்துடன் அந்த அழைப்பில் ஊர்ந்துகொண்டிருந்தது.

வேண்டுமென்றே காக்கவைத்த அந்த சிறு செயலில், அழைப்பு அழைத்து அடித்து ஓய்ந்திருக்க அதிலொரு திருப்தி பரவியது அவனுள்.

மீண்டும் அழைப்பு வரும் என்று நினைத்தவன் போனை பார்த்துக்கொண்டே இருக்க இந்தமுறை அழைப்பு வரவில்லை.  

குரல்வழியாக குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருக்க இதனை எதிர்பாராதவன் சட்டென எழுந்தமர்ந்தான்.

தலையணையை கட்டிலின் முகப்பு பகுதியில் சாய்த்து வைத்து அதில் சாய்ந்துகொண்டவனின் இடதுகரம் தன் இதயப்பகுதியை வருடிக்கொண்டது.

error: Content is protected !!