“சரி சரி, நிலாக்குட்டி. இது ஓகேவா?…” என்று பேச,
“இப்படி கூப்பிடறது தானே பின்னால நான் அங்க வந்தப்பறமும் எல்லார் முன்னையும் வரும்…” என்றாள் சிணுங்கலுடன்.
“பார்ரா பிரஸ்டீஜ் பிரீமியத்தை. இன்னைக்கு தான் நான் கூப்பிடறது மாதிரி…” என கேலி பேசியவன்,
“அதுக்கு முதல்ல மேடம் இங்க வரனும். ஒரு முக்கியமான இன்பர்மேஷன் சொல்ல வந்த என்னை இன்சல்ட் பண்ணின காரணத்தால பத்துநாளைக்கு அதை ஒத்திவைக்கலாமேன்னு யோசிக்கிறேன்…” என்றான் கார்த்திக் மிதப்புடன்.
“இன்பர்மேஷனா?…” என நிலா சத்தமாய் சொல்ல,
“இன்பர்மேஷனா?…” என்று அதே போல மாதவ்வும் கேட்டு வேகமாய் நிலாவின் அருகில் வந்தமர்ந்தான்.
“சரியாக காஸிப் அல்பங்க. எப்படி வர்றடா நீயும்?…” என்றான் கார்த்திக்.
“துப்புனா துடைச்சுக்குவேன். என்ன விஷயம்ன்னு சொல்லுங்க மாம்ஸ்….” என்று மாதவ் கலாட்டாவாய் கூற,
“த்தூ…” என்று நிஜமாகவே துப்பிவைக்க,
“உங்க போன்ல தானே? எனக்கொண்ணும் இல்லை…” என அப்போதும் தோளைக்குலுக்க ஹைபை அடித்துக்கொண்டனர் அண்ணனும் தங்கையும்.
“அப்போ இன்பர்மேஷன் வேண்டாம்…” என்று இருவரையும் கார்த்திக் முறைக்க,
“வேணும் வேணும். என்ன விஷயம்? ஆமா உங்க ப்ரெண்டோட ப்ரப்போசல் சக்ஸஸ் ஆச்சா? இல்லை ஊத்திக்கிச்சா?…” என்றான் ஆர்வத்துடன் மாதவ்.
“நீயாடா நல்லவனே? பால்டப்பி மண்டையா. எம்புட்டு ஆர்வம்…” என்று சிரித்தவன்,
“உங்களை எல்லாம் க்ரைம் பாட்னர்ஸா வச்சிருக்கற எனக்கு தான் கெதக்குன்னு வருது. முதல்ல நான் சொல்றதை ரிவில் பண்ண மாட்டேன், பேச்சுல கூட காமிச்சுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க…” என்று கை நீட்ட, மாதவ்வும், நிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதோடு,
“கார்த்திக் மாமா மேல ப்ராமிஸ்…” என்றனர் ஒன்றுபோல் கை நீட்டி உறுதிமொழி எடுப்பதை போல.
“கொலைபண்ணிடுவேன் ரெண்டுபேரையும். என்கிட்டயேவா. குபேரனுக்கு போனை போட்டு பலவிஷயங்களை போட்டுக்குடுத்தா பரலோகம் தான் பேய்களா. நிஜமாவே பேய்க்குட்டி தான்…” என்றதும்,
“ஃபன் ஃபன்…” என்று மற்ற இருவரும் சொல்ல,
“போய் தொலைங்க…” என கூறியவன்,
“எல்லாம் நம்ம பேய்க்குட்டியோட ஹைதராபாத் விசிட் விஷயமா தான். அண்ணா கால் பண்ணி என்னன்னு கேட்டாங்க…” என்று சொல்ல நிலாவின் முகம் திகிலடித்தது.
“கார்த்திக் மாமா…” என்று அவள் முகத்தில் கலக்கம்.
அதுவரை கலாட்டாவாய் பேசிக்கொண்டிருந்தவள் முகபாவனையில் கார்த்திக் முகத்தில் மென்மையான புன்னகை.
“பதறாதடா டேய்…” என்று சொல்லியவன்,
“அண்ணா ரொம்ப பொறுமையா தான் கேட்டாங்க. நான் சும்மா அம்மாக்கிட்ட பேச்சுவாக்குல சொன்னேன். அண்ணாக்கிட்ட பேசியிருப்பாங்க போல. ஓகே இதுவும் நல்லதுக்கு தான்…” என்று கூறியவன்,
“இப்போதைக்கு எதுவும் யோசிக்காத. நல்ல மார்க்ஸ் எடு. நோ சொல்லாதபடிக்கு உன் பர்சென்டேஜ் இருந்தா அண்ணாவே சப்போர்ட் பண்ணுவாங்க. நீ இங்க வந்துடு. நாம ஃபன் பண்ணலாம். என்னடா பேய்க்குட்டி?…” என்று பேசி அவளின் முகவாட்டத்தை போக்க நிலாவின் முகத்தில் இன்னும் தெளிவில்லை.
“சரின்னு சொல்லலைன்னா?…”
“அதெப்படி சொல்லாம போவாங்க. பார்ப்போம்…” என்று தைரியமூட்டினான்.
“இங்க பாருடா நிலா, உனக்கு ஒன்னு வேணும்னா நீ தான் அதுல ஸ்ட்ராங்கா இருக்கனும். புரியுதா?…” என்றும் சொல்ல,
“ஹ்ம்ம், ஓகே…” என்றாள்.
“ஹ்ம்ம், என்னன்னாலும் உங்களுக்கு அவ தான ஸ்பெஷல். எனக்கு இப்படி பேசி காப்பாத்திவிட மனசு வந்துச்சா மாம்ஸ். கல்நெஞ்சம் பிடிச்ச மாம்ஸ்…” என்று மாதவ் முறுக்கிக்கொள்ள,
“அவ என் செல்லாக்குட்டிடா. நீ யாராம்?…” என்றவன்,
“ஓஹ் மச்சான் இல்ல? போனா போகுது. ஆனா நீ நிலா அளவுக்கு ஸ்ட்ராங் இல்லையே. உங்கப்பா வக்கீல் அப்ஜெக்ஷன் சொல்ல முன்னவே சரிங்க எசமான்னு கேட்டுக்கிட்ட…” என்று வாரியவன், அதன் பின் கல்லூரி கதைகளை பேச ஆரம்பித்தான்.
நிலாவுக்கு தான் அவன் கூறியது நெஞ்சை விட்டு அகலவே இல்லை.
மாலை அத்யுதாரன் வந்து அன்னலட்சுமியை அழைத்து செல்கையில் அவனை அத்தனை முறை பார்த்து வைத்தாள்.
கார்த்திக்கிடம் பேசியதை பற்றி எதுவும் கேட்பானா என்று அவள் விழிகள் நொடிக்கொருமுறை அவனிடம் சென்று சேர அத்யுதாரனுக்குமே புரிந்தது.
நிச்சயம் கார்த்திக் அவளிடம் கூறியிருப்பான் என்பதில் அத்தனை நிச்சயம். அதனைக்கொண்டே எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை அவன்.
“மாமா…” என்று அவளாகவே அவனிடம் பேச முயல,
“நாளைக்கு ஸ்கூல் இருக்கு தான வர்ணா?…” என்றதும் தலையசைத்தாள்.
“இனிமே லீவ் எடுக்கறதை அவாய்ட் பண்ணு. என்ன தான் உனக்கு படிப்புல கவனம் இருந்தாலும் இந்த லீவ் எல்லாம் அவாய்ட் பண்ணனும்…”
“இல்ல மாமா, அம்மா தான்…” என்று காரணம் கூற,
“நீ ஸ்ட்ராங்கா இருக்கன்னு தெரிஞ்சா தான் அவங்க அனுப்புவாங்க. நீ சுணங்கி படுத்துட்டு உன்னை கவனிச்சுக்காம இருந்தா அவங்களும் யோசிக்க தான் செய்வாங்க. அப்போ லீவ்க்கு யார் காரணம்?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், ஓகே மாமா…” என்றாள்.
“நல்லா படி. எல்லாம் தானா நடக்கும்…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான் அத்யுதாரன்.
நிலவர்ணித்தா இயல்பிலேயே படிப்பில் சிரத்தை. இப்போது கார்த்திக்கும், அத்யுதாரனும் கூறியதை போலவே இன்னுமே கவனமெடுத்து படிக்க பதினொன்றாம் வகுப்பை கடந்து பன்னிரெண்டாம் வகுப்பிலுமே நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருந்தாள்.
அந்த மதிப்பெண்ணிற்கு குபேரன் அந்த நகரத்தில் உள்ள சிறந்த கல்லூரியினை தேர்ந்தெடுக்க அங்கே வெடித்தது கலவரம்.
நேராக நிலவர்ணித்தா வந்து நின்றது அத்யுதாரனை தேடித்தான். கடைக்கே வந்துவிட்டாள் அவள்.
விசும்பிக்கொண்டே பேசியவளை மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு விழி அகலாது பார்த்தான் அத்யுதாரன்.
அதிலும் அவள் பேச பேச கோபம் தான் கனன்றது அவள் பேசிய விதத்தில்.
“நான்… நான் அங்க போய் தான் படிப்பேன். இல்லைன்னா அப்பறம்…” என்றவள் வார்த்தைகள் தடுமாற, ‘முழுதாய் முடிக்கட்டும்’ என்று மௌனமாய் பார்த்திருந்தான் அத்யுதாரன்.
“இல்லைன்னா நானே எதாச்சும் செஞ்சுக்கு…” என்று மிரட்ட முனைய,
“மூச், வாயை திறந்த, உரிச்சிடுவேன் ராஸ்கல்…” என்றவன் மிரட்டலில் கண்ணீர் முட்ட அவனின் எதிரில் நின்றவள் அசையவில்லை.
இந்த வார்த்தைகள் தானே அவனின் அடையாளம். ‘உரித்துவிடுவேன்’ என்றுவிட்டாலே அவனின் கோபத்தின் அளவு தெரிந்துவிடும்.
இப்போதும் அவள் அமைதியாய் நின்றிருக்க அந்த வார்த்தையின் கனம் அத்யுதாரனை பதம் பார்த்தது.