குளிர் பௌர்ணமி தூறலில் – 4 (2)

கதிர்வேலன் மகனிடம் வாழ்த்தினை தெரிவித்துவிட்டு தாய் தந்தை வர காத்திருந்தார்.

காலை உணவை முடித்துக்கொண்டு தங்கை வீடு செல்லவேண்டும். அதற்கு தயாராய் இருக்க, அன்னலட்சுமி வந்துவிட்டார்.

பேரனுக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்ததும் அவர்களின் காலில் விழுந்து எழுந்தவன், மீண்டும் தாய் தந்தையின் பாதம் பணிந்தான்.

“எத்தனைதடவை தான்?…” என்று சிரித்துக்கொண்டார் கார்த்தியாயினி.

“சரி முதல்ல சாப்பிட உட்காருங்க…” என்று அவனை அமர வைத்து பரிமாற கார்த்திக்கிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது.

“அண்ணா ஹேப்பி பார்த்டே…” என்று ஆராவாரமாய் வாழ்த்தியவனின் விழிகளில் புன்னகையும், குறும்பும் கொட்டிக்கிடந்தது.

“தேங்க் யூ கார்த்திக். சண்டே அதுவுமா சீக்கிரமே எழுந்துட்டியா?…” என நேரத்தையும் பார்த்து கேட்க,

“ஹ்ம்ம் ஆமா ண்ணா. கடையை திறந்துட்டா பிஸி டைம்ல வீடியோ கால் வரமாட்டீங்க. அதான் இப்பவே பார்த்துடலாமேன்னு கூப்பிட்டுட்டேன்…” என்றவன்,

“என்ன ஸ்பெஷல்…” என்று கேட்டு தெரிந்துகொண்டவன்,

“ஹ்ம்ம், அசத்துங்க…” என்றான்.

“ம்க்கும், அங்க மூஞ்சி ஒருநிமிஷத்துல இம்புட்டா போச்சு. இதுல பெருசா ஒன்னும் நினைக்காத மாதிரி சிரிக்கிறானாம்…” என்று மேவாயில் இடித்துக்கொண்டார் அன்னம்.

“நானாவது தூரத்துல இருக்கேன். சாப்பிட முடியலை. சரி ஒத்துக்கறேன், நான் சோகம். அங்க உங்களால சாப்பிட முடியுமா? எங்க ஒருவாய் சாப்பிட்டு தான் காமிக்கிறது?…” என்று ஆரம்பித்துவிட,

“நான் வைரம் பாய்ஞ்ச கட்டைடா. இதெல்லாம் சாப்பிட்டா என்ன வந்திரும்? நான் எல்லாத்தையும் சாப்பிட்டு புளிச்சு போயி தான் பெருசா விரும்பிக்காம விட்டுட்டு இருக்கேன்…” என விடாப்பிடியாக அன்னம் பேச,

“வழியுது வாயோரம்…” என கேலி பேசினான் கார்த்திக்.

இருவருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். அதிலும் வெளிமாநிலம் சென்று படிப்பேன் என்று அவன் நிற்க அன்னம் அதற்குமேல் குதித்தார்.

அந்த கோபம் இப்போது வரை இருந்தது. அவ்வப்போது பேசுகையில் அதனை காண்பித்துவிடுவதுண்டு.

இன்றும் இருவரும் மல்லுக்கு நிற்க, திருநாவுக்கரசு முகத்தில் அத்தனை சந்தோஷம்.

தன்னிடம் வார்த்தைக்கு வார்த்தை பேசுபவரால் கார்த்திக்கிடம் ஈடுகொடுக்க முடியாது.

“உன் வாய்க்கு தான் அடங்கறாடா சின்னவனே…” என்று சில்லாகித்துக்கொள்வார்.

இப்போதும் அப்படி வகையாக மாட்டிக்கொண்ட மனைவியை திரும்பி பார்த்தவர்,

“உனக்கு நல்லா வேணும்…” என்றார்.

“சரி போதும்…” என்ற அத்யுதாரன்,

“ஒருமணிநேரம் கழிச்சு எனக்கு கால் பண்ணு கார்த்திக். பேசனும்…” என்றவன்,

“ஹ்ம்ம், இல்லை. நானே கடையை திறந்துட்டு கொஞ்சநேரத்துல உனக்கு கூப்பிடறேன். ஓகே?…” என்றதும்,

“ஓகே ண்ணா. திரும்பவும் பர்த்டே விஷஸ். நீங்க நினைக்கிறது, ஆசைப்படறது, ஆசைப்பட்டதுன்னு எல்லாமே உங்களுக்கு கிடைக்கனும்…” என்று கூற, அத்யுதாரன் முகத்தில் இளமுறுவல்.

“தேங்க் யூ…” என்று கூறிவிட்டு தாயிடம் போனை கொடுக்க,

“நீ சாப்பிடுப்பா…” என பார்த்து பார்த்து கவனித்தார்.

கார்த்திக் பேசி முடிக்க குபேரன் அழைத்துவிட்டார் அத்யுதாரனுக்கு வாழ்த்து தெரிவிக்க. அவனும் சுகமதிக்கு வாழ்த்தினான்.

அவர்களிடம் பேசி முடித்து என்று அதிலேயே நேரம் சென்றது. குபேரன் எதுவும் கேட்பார் என்று அத்யுதாரன் பார்க்க அப்படி எதுவும் கேட்கவில்லை.

“மாமா ஷர்ட் சூப்பர்…” என்று மாதவ் வாழ்த்த,

“ஹ்ம்ம்…” என்றான் தாயை பார்த்துவிட்டு புன்னகையுடன்.

சற்றுநேரத்தில் கடைக்கு கிளம்பிவிட கதிர்வேலன் தாய் தந்தையுடன் சுகமதியை காண கிளம்பிவிட்டார்.

அவர்கள் வரும்முன் எதிர்வீட்டின் திருமண வைபவத்திற்கு சென்று வந்துவிட்டார் சுகமதி.

அவர் உடுத்தி சென்றது தன் பிள்ளைகள் எடுத்துக்கொடுத்த புடவையை தான். அதில் அத்தனை பெருமிதம்.

போன இடத்தில் சொல்லி சொல்லி அளவில்லா பெருமிதத்தில் மாய்ந்து போனார்.

கடைக்கு வந்த அத்யுதாரன் வியாபாரம் துவங்கிய சிறிதுநேரத்திலேயே கார்த்திக் எண்ணிற்கு அழைத்தான்.

“சொல்லுங்க ண்ணா…” என்றான் கார்த்திக்.

“வர்ணா அவ ஸ்டடிஸ் பத்தி உன்கிட்ட ஷேர் பண்ணியிருந்தா இல்லையா? அதை பத்தி பேசறதுக்கு தான் கூப்பிட்டேன்…” என்று சொல்லவுமே,

“ஆமா ண்ணா, நான் கூட விளையாட்டுக்கு பேசறான்னு நினைச்சேன். ஆனா ஸ்ட்ராங்கா சொல்றா. நான் படிக்கிற காலேஜ்ல தான் வந்து படிப்பேன் அப்படின்னு…” என்றதும் யோசனையுடன் சுழல் நாற்காலியில் சுழன்றான் அத்யுதாரன்.

அதுவும் நிலவர்ணித்தா எத்தனை உறுதியுடன் அங்கிருப்பதை பற்றி விசாரித்தாள் என்பது வரை எல்லாமே கூறினான்.  

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவன் மனதில் இன்னும் சிந்தனை கூடியது.

“அண்ணா…” என கார்த்திக் அழைக்க,

“ஹ்ம்ம், இருக்கேன்…” என்றான்.

“கண்டிப்பா அத்தையும், ஆச்சியும் ஒத்துக்கவே மாட்டாங்க….” என்று அவன் கூறியதுடன்,

“அதுவும் இன்னும் ஒருவருஷம் ஸ்கூல் இருக்கு. அப்போ அவ என்ன யோசிப்பாளோ?…” என்றான்.

“நீ என்ன நினைக்கிற கார்த்திக்?…” அத்யுதாரன் கேட்க,

“அண்ணா…” என அவன் தயங்க,

“ஹ்ம்ம், சொல்லு…” என்றான்.

“அவ சொல்றது அவளோட ஆசை அப்படின்னாலும் அவ எடுக்கறதா முடிவு? ஆனாலும் எனக்கு ஹேப்பி தான். இங்க வந்தா நான் பார்த்துப்பேன் அவளை…” என்றான் உடனடியாக கார்த்திக்.

“உனக்கும் இன்னும் ஒருவருஷம் தான் காலேஜ் இருக்கு. எப்படி பார்த்துப்ப?…” என அத்யுதாரன் கேட்க,

“ஹ்ம்ம், அதை தான் யோசிக்கிறேன் ண்ணா. ஹையர் ஸ்டடிஸ் பண்ணலாமா, இல்லை ஜாப் போகலாமான்னு ஒரே குழப்பம். மைண்ட் டைலாமோல இருக்கு…” என்று கூற,

“ஓகே பார்த்துக்கலாம்…” என்ற அத்யுதாரன்,

“வர்ணாவுக்கு ஃபீவர்…” என கூற,

“பேசிட்டேன் ண்ணா. எல்லாம் சொன்னா…” என்று சிரித்தவன்,

“நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்படின்றதையும் ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்னா…” என்று கூறி சிரிக்க,

“ஹ்ம்ம், இது வேறையா?…” என்றவனுக்கும் புன்னகை தான்.

“சரி அப்பறம் பேசறேன். நீ உன் வேலையை பாரு கார்த்திக்…” என்று பேசி வைத்துவிட்டான்.

அவன் வைத்த சிறிதுநேரத்திலேயே நிலாவுக்கு அழைத்துவிட்டான் கார்த்திக்.

“என்ன மாமா, சண்டே ஸ்பெஷல் இங்கையா? இப்ப தான் மாமா, பாட்டி, தாத்தா எல்லாம் வந்துட்டு மாமாவும், தாத்தாவும் மட்டும் கிளம்பினாங்க. பாட்டி மட்டும் இருக்காங்க. ஈவ்னிங் போய்க்கலாம்ன்னு…” என்று மாதவ் கூற,

“ஓஹ் பாசமலர்கள் பொழிஞ்சு முடிஞ்சதா?…” என்ற கேலியுடன்,

“எங்க அந்த பேய்க்குட்டி?…” என்றான் கார்த்திக்.

“இங்க தான் இருக்கா…” என அவளிடம் போனை நீட்ட,

“யாருண்ணா?…” என்றாள் போனை கையில் வாங்கியபடி.

“பேய்க்குட்டி…” என்றவனின் சத்தத்தில்,

“கொன்னுடுவேன்…” என்றாள் கடுப்புடன்.

error: Content is protected !!