குளிர் பௌர்ணமி தூறலில் – 4 (1)

பௌர்ணமி – 4

          சுகமதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நள்ளிரவில் கேக் வெட்டி அமோகமாய் அரங்கேறியது.

“நீயாடா நிலா இதெல்லாம் வாங்கிட்டு வந்த?…” என்று மகளை உச்சி முகர்ந்தார் அவர்.

குபேரன் தன் பிள்ளைகளை அணைத்துக்கொண்டு மனைவிக்கு வாங்கி வந்திருந்த பரிசினை கொடுக்க அழகான கைச்செயின் அது.

“ஹேப்பி பர்த்டே மதி…” என மீண்டும் ஒருமுறை வாழ்த்தினார்.

“தேங்க் யூ சோ மச்…” என்ற சுகமதி, தன் பிள்ளைகளை பார்த்தார்.

“ரெண்டுநாளா அலைஞ்சு திரிஞ்சு வாங்கி இதனால தான் உனக்கு முடியாம போனதா?…” என்று மகளிடம் கேட்க,

“ப்ச், அதெல்லாம் இப்ப பேசனுமா? விடு…” என்று குபேரனும் சமாளித்தார்.

“நல்லா சொன்னீங்க. என்னோட பிறந்தநாள் அப்படின்றதால இன்னைக்கு எதுவும் சொல்லலை நீங்க. இல்லைன்னா என்ன பேசிருப்பீங்கன்னு தெரியாதா?…” என்றதும்,

“அதான் எதுவும் சொல்லலையே. விடு…” என்ற குபேரன்,

“என்னடா இப்போ ஓகே தானே?…” என மகளின் காய்ச்சலை பரிசோதித்தார்.

“தெரியலை டாடி. ஆனா இப்போ இல்லை…” என்ற நிலவர்ணித்தா,

“மம்மீ சேரி புடிச்சிருக்கா?…” என ஆர்வமாய் கேட்க,

“மம்மீ இந்த கலர் நான் தான் சூஸ் பண்ணேன்…” என்றான் மாதவ்.

“டிஸைன் நான் தான் சூஸ் பண்ணேன். இந்த டிஸைன்க்கு எந்த கலரா இருந்தாலும் நல்லா தான் இருக்கும்…” என்றாள் நிலா.

“பேயி…” என்று தங்கையின் தலையில் குட்டியவன்,  

“இவளால மாமாக்கிட்ட நான் பேச்சு வாங்கினேன் மம்மீ…” என்று அவனாக உளற,

“என்ன?…” என்றனர் தாயும், தந்தையும்.

“தவளை தவளை…” என தலையில் தட்டிக்கொண்ட நிலா,

“நான் தூங்க போறேன்….” என்று எழுந்துகொண்டாள்.

“நிலா நில்லு…” என நிறுத்திய குபேரன்,

“என்ன பண்ணினீங்க?…” என்று கேட்க, இருவருமே திருதிருவென்று விழித்தனர்.

“உண்மையை முதல்ல யார் சொல்லப்போறீங்க?…” என்றார் அவர் விசாரணை போல் முறைப்புடன்.

“சொல்லிட்டு தூங்க போங்க…” என மதியும் கூறிவிட மாதவ் வாய் திறக்கும் முன்,

“மழையோட என்னை கூட்டிட்டு போனான்ல. அதான் மாமா செம்ம டோஸ். காலையிலயே அவளுக்கு முடியலைன்னு தெரியாதா, ஏன் இப்படி கூட்டிட்டு வந்தன்னு கேட்டு…” என்று சட்டென்று அவள் கூற, ஆவென்று வாய் பிளந்து பார்த்தான் மாதவ்.

“ஓவர் ரியாக்ட் பண்ணாதடா சனியனே…” என்றவள், தன் அண்ணனை முறைத்தாள்.

குபேரன் இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்தவர் எழுந்து நின்றுகொண்டார்.

“சரி போய் தூங்குங்க. மார்னிங் நானே அத்யுகிட்ட பேசிக்கறேன்…” என்றுவிட்டு மதியிடம் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

“அதான் சொல்லிட்டாங்க இல்ல? அப்பறம் என்ன? போய் தூங்குங்க…” என்ற மதி,

“மாதவ் நாளைக்கு எதிர் வீட்டு கல்யாணத்துக்கு அப்பா வரலை. நீயும் நானும் தான் போய்ட்டு வரனும். ஒரு அரைமணிநேரம் தான். கிப்ட் பண்ணிட்டு வந்திருவோம். சரியா?…” என்று கூற,

“ஹ்ம்ம், ஓகே ம்மா…” என்றான்.

“அப்பறம் என்ன, ஓடுங்க. ஏசி போடக்கூடாது. புரியுதா?…” என்றார்.

“ஓகே மம்மி…” என நல்லபிள்ளையாய் நிலா முந்திக்கொண்டு அறைக்குள் வந்துவிட மாதவ்வும் தலையசைத்துவிட்டு அவளை பின் தொடர்ந்து வந்தான்.

உள்ளே வந்ததுமே நிலாவின் முதுகில் பொளீரென ஒரு அடி வலிக்காது வைத்தவன்,

“பேய்க்குட்டி செத்த நீ. நாளைக்கு டாடிக்கு மட்டும் உண்மை தெரியட்டும். அப்பறம் இருக்கு…” என அவன் முறைக்க,

“உன்னை காப்பாத்தினேன்ல. என்னை அடிப்படா நீ. அதுவும் காய்ச்சலோட அடிக்கிற…” என்றதும்,

“அச்சோ ஸாரிடா பேயி…” என தங்கையை சமாதானம் செய்தான்.

“ஒன்னும் வேணா போ…” என்று முறைத்துக்கொள்ள,

“என்ன வேணா? உண்மையை சொல்லி ஸாரி கேட்டிருந்தாலாவது டாடி போனா போகுதுன்னு வார்னிங் குடுத்து விடுவாங்க. அதுவும் மம்மி பர்த்டே வேற. திட்டும் கம்மியா கிடைச்சிருக்கும். இப்போ பாரு, பொய் சொன்னதுக்கும் சேர்த்து வச்சு வாங்கப்போறோம்…” என்று சொல்ல,

“அதெல்லாம் ஒண்ணுமாகாது…” என்றதும் தலையில் தட்டிக்கொண்டு தன் கட்டிலில் சென்று விழுந்தான் மாதவ்.

“உனக்கு சொன்னா புரியாது. அப்படி மட்டும் டாடி திட்டட்டும். நான் பேசவே மாட்டேன். போ…” என்று சொல்லிவிட்டு போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டான்.

முதலில் பெரிதாய் எல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை நிலா. ஆனால் சற்றுநேரத்தில் உறக்கமும் வராமல் புரண்டபடி இருந்தவள், உடனே கைப்பேசியை எடுத்தாள்.

“ஹாய் மாமா, நான் நிலா. நீங்க தூங்கிருப்பீங்கல. அதான் வாய்ஸ் மெசேஜ்…” என்று கிசுகிசுப்பாய் ரகசியக்குரலில் அவனிடம் நடந்ததை விவரித்தவள்,

“மாமா டாடிட்ட அண்ணாவை காப்பாத்த தான் பொய் சொன்னேன். ஸாரி. நாளைக்கு உங்ககிட்ட டாடி கேட்டா ப்ளீஸ் என்னை காப்பாத்தி விட்டுடுங்க. சரியா? ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்…” என்று அத்தனை முறை ப்ளீஸ் சொல்லி குரல்வழி செய்தியை அனுப்பி வைத்துவிட்டு சற்றுமுன் எடுத்த புகைப்படங்களையும் அதில் பகிர்ந்துகொண்டாள்.

“நீங்க கேக் கட் பண்ண மாட்டீங்களே? அதான் அனுப்பி வச்சேன். ஹேப்பி பர்த்டே மாமா. குட்நைட்…” என மீண்டும் ஒருமுறை வாழ்த்திவிட்டு வைத்துவிட்டாள்.

அவன் எங்கே உறங்கினான்? அடுத்து வரவிருக்கும் பட்டுப்புடவைகளின் புதுவரவுகளை பற்றிய விலைப்பட்டியல் அதன் புகைப்படங்களுடன் வந்திருந்தது.

அதனை சரி பார்த்தபடி விழித்துக்கிடந்தவன் கைப்பேசியில் செய்தி வந்து விழுந்த சப்தம் கேட்டதும் அசட்டையாக அதனை எடுத்தவனின் பார்வை கூர்மை பெற்றது.

“இந்த நேரத்துல என்ன?…” என முணங்கியபடி அவன் அதனை திறந்து பார்த்து கேட்க, மீசைக்கடியிலான புன்னகையில் இதழ்கள் இன்னும் அழகாய் விரிந்தது.

மௌனமாய் தலையசைத்துக்கொண்டவன் மீண்டும் மீண்டும் அந்த குரல்வழி செய்தியை ஒலிக்கவிட்டபடி படுக்கையில் சாய்ந்தவன் மனதில் சொல்லொண்ணா பேருவகை.

அவள் அனுப்பியதற்கு பதில் எதுவும் கூறவில்லை. கைப்பேசியை வைத்துவிட்டு அதற்குமேல் எந்த வேலையும் பார்க்க தோன்றாமல் கண் மூடியபடி உறங்க முயன்றான்.

காலை கண் விழித்து குளித்து வெளியே வருகையிலேயே கார்த்தியாயினி மகனுக்காக காத்திருந்தார்.

சாம்பிராணிப்புகையில் வீடே தெய்வீக கோலம் பூண்டிருக்க, ஒருபக்கம் நெய்யின் மணம் வீட்டை நிறைத்திருந்தது.

“ஹேப்பி பர்த்டே அத்யு…” என்று கார்த்தியாயினி சொல்லவும் அவரின் காலில் விழுந்து வணங்கி எழுந்தான்.

“உனக்கு எடுத்துட்டு வந்த ட்ரெஸ். நைட் நீ ரூம்க்கு போய்ட்டதால டிஸ்டர்ப் பண்ண முடியலை. முதல்ல இதை போய் மாத்திட்டு வா….” என்றார்.

“எங்க ஆச்சியும், தாத்தாவும்?…” என அவர்களை அத்யு தேட,

“கோவிலுக்கு போயிருக்காங்க. வந்திருவாங்க…” என்றவர்,

“ஈவ்னிங் பூஜைக்கு சொல்லிருக்கோம் அத்யு. டைம் மேனேஜ் பண்ணிட்டு அங்க வந்திடு. புரியுதா?…” என்று கூறவும் தலையசைத்தவன் உடை மாற்ற சென்றான்.

உடைமாற்றி வந்ததுமே வரிசையாக வாழ்த்துவதற்கு அழைப்புகள் வந்துகொண்டே இருந்தது.

error: Content is protected !!