“நீயும் சாப்பிடு. எங்களையே வாய் பார்த்துட்டு இருந்தா உனக்கு நிறைஞ்சிருமா? உட்கார்…” என்று மருமகளிடம் சொல்லியவர்,
“அப்பவே உன் மாமனார்க்கிட்ட சொன்னேன். வாங்க ஒரு எட்டு போய் பார்த்துட்டு வருவோம்ன்னு. வயசான காலத்துல இருக்கற இருப்புக்கு எங்கிட்டாச்சும் கால் வச்சு நீ கிடையில கிடந்துறாதன்னு எகத்தாளம் பேசிட்டு போறருன்னா? கொழுப்பெடுத்த மனுஷன்…” என்று கணவரை குறை பேசிக்கொண்டே மருமகளுடன் இணைந்து உண்டார்.
“அதுதான் எப்படியும் நாளைக்கு மதியை பார்க்க போவீங்க இல்ல?…” என கூறவும்,
“ஆமா ஆமா…” என்ற அன்னம்,
“அட பாரேன். மறந்துட்டேன். கதிர் போன் பண்ண சொன்னான். மதிக்கு புடவை எடுத்துட்டு வரனும்ன்னு…” என்று தன் கைபேசியை தேடிக்கொண்டு அவர் எழுந்து செல்ல, கார்த்தியாயினி சிரிப்போடு மற்றதெல்லாம் எடுத்து வைத்துவிட்டு வந்தமர்ந்தார்.
அதற்குள் அன்னலட்சுமி மகனிடம் பேசி முடித்திருக்க, முகமெல்லாம் சந்தோஷம்.
“புதுசா புடவைங்க வந்திருக்காம். நம்ம அத்யுவே எடுத்து வச்சிட்டானாம். வரும்போது கொண்டுவர்றேன்னு சொல்லிருக்கான்…” என்றவர்,
“ஆமா இன்னைக்கு என்ன இன்னும் சின்னவன் போன் பண்ணலை?…” என்றார் மருமகளிடம்.
“நான் வரும்போது பண்ணுனேன் த்தை. இன்னைக்கு கார்த்திக் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து படம் பார்க்க போயிருக்காங்க. அதனால நாளைக்கு கூப்பிடறேன்ன்னு மெசேஜ் அனுப்பிருக்கான்…” என்றார்.
“ஹ்ம்ம், அவன் என்னவோ அத்யுகிட்ட இங்க எல்லாம் கடையை பார்த்துட்டு இருக்க முடியாது. அங்கயே படிச்சு முடிச்சு வேலை பார்க்க போறேன்னு சொன்னானாம்…” என்று சொல்ல கார்த்தியாயினி முகத்திலும் கவலை ரேகைகள்.
“என்ன அமைதியா இருக்க?…” என அன்னம் கேட்க,
“அதொண்ணுமில்லை த்தை. இதுவிஷயமா அத்யுட்ட கேட்டேன். படிப்பு முடியட்டும். அவனை கட்டாயப்படுத்தாதீங்கன்னு சொல்லிட்டான். எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியலை…” என்றார் அவர்.
“சரி விடு. கொஞ்சநாள் ஊர் சுத்திட்டு இங்க தான வந்தாகனும். வரட்டும். அப்ப இருக்கு. சரியான ஆப்படாத அகப்பை. மூத்தவனை விட மூணுவயசு தானே இளையவன். கொஞ்சமாச்சும் அந்த அறிவு, வயசுக்கேத்த பொறுப்புன்னு ஏதாவது இருக்கா?…” என்று கூறி,
“சரி விடு. ஆமா பெரியவனுக்கு புது ட்ரெஸ் எடுத்துட்டியா? ஊருக்கு போய்ட்டு வரும்போது எடுக்கனும்ன்னு சொன்னியே…” என்று கேட்க,
“அதெல்லாம் எடுத்தாச்சு த்தை. பேக்ல இருக்கு. அத்யு வரவும் குடுக்கனும்…” என்றார்.
“ஹ்ம்ம் வரட்டும். வரட்டும்….” என்றவர் மறுநாள் அவனின் பிறந்தநாளுக்கு என்ன செய்வதென்று ஆலோசித்துக்கொண்டிருந்தனர்.
நேரம் கடக்க கதிர்வேலனும், அத்யுதாரனும் வீடு நுழைகையில் பலத்த காற்றும், இடியும், மின்னலுமாய் இருந்தது.
“எப்பா என்னா காத்து?…” என அன்னம் வாயில் கைவைத்து பார்த்து சொல்ல,
“ம்மா இந்தாங்க, மதிக்கு புடவை…” என்ற கதிர்வேல்,
“உங்க பேத்தி இன்னைக்கு செஞ்சதை கேட்டீங்களா?…” என்று நிலவர்ணித்தா வந்ததையும் நடந்ததையும் கூற,
“அட…” என்ற அன்னம் பேரனை பார்த்தார்.
“அவன் சொல்லலை. ஞானம் தான் கொஞ்சம் முன்னாடி பேச்சுவாக்குல இதை சொன்னான்…” என கூறிவிட்டு மகனை பார்க்க,
“ம்மா தோசை…” என்று வந்தமர்ந்தான் அத்யுதாரன்.
அங்கே தாயும் மகனும் பேசட்டும் என தன் மகனை நோக்கி வந்துவிட்டவர்,
“இரு வார்த்து கொண்டுவர்றேன்…” என்று உள்ளே சென்றார்.
“அப்பா…” என அவரையும் உண்ண அழைக்க,
“இல்ல அத்யு. எனக்கு பசியில்லை. பால் மட்டும் போதும். நீ சாப்பிடு…” என்றதும் தலையசைத்தவன் எழுந்துகொண்டான்.
நேராக அடுக்களைக்கு செல்ல அங்கே அப்போது தான் தோசையை வார்க்க மாவை எடுத்து தனியாய் கரைத்த கார்த்தியாயினி மகனை கண்டதும் புன்னகையுடன்,
“என்ன இங்க வந்துட்ட அத்யு?…” என்றார்.
“அப்பாவுக்கு பால் மட்டும் போதுமாம். அதான்…” என்று சமையல் மேடையில் சாய்ந்து நின்றுகொண்டான்.
“ஹ்ம்ம், சரி…” என்றவர் பசேலென்றிருந்த கறிவேப்பிலை தேர்ந்தெடுத்து எடுத்து அதனை அலசிவிட்டு சின்ன சின்னதாய் நறுக்கி மாவுடன் சேர்த்துக்கொண்டார்.
மகனுக்கு அப்படி உண்பது தானே இன்னும் பிடித்தம் என்று செய்தவர் பஞ்சு போல் தோசையை ஊற்ற நெய் மணத்தது.
தோசையை ஊற்றிக்கொண்டே மகனிடம் தான் சென்றுவந்ததை பற்றி பேசியவர்,
“நம்ம நிலா அவ அம்மாவுக்கு சேலை எடுத்து தர்ற அளவுக்கு பெரியமனுஷி ஆகிட்டாளா?…” என்று கேட்க, முகமெல்லாம் ஒளிர்ந்தது அத்யுதாரனுக்கு.
“ஹ்ம்ம், அதுல மட்டுமில்லை, தான் சேர்த்த பணத்துல தான் வாங்குவேன்னு சொல்லி ஞானம் அண்ணனோட மல்லுக்கு நிக்கிறா…” என பேசிக்கொண்டே தோசையை விண்டு விழுங்கினான்.
ஒவ்வொன்றையும் மகனிடம் கேட்டு கேட்டு தான் வார்த்தைகளை பெற்றுக்கொண்டிருந்தார்.
அவனாக நிச்சயம் வாய் திறந்து சொல்லிவிடமாட்டானே. இப்போதும் அப்படியே கேட்க பதில் கூறுகையிலுமே எண்ணி எண்ணி பேசினான்.
“உனக்கொரு விஷயம் தெரியுமா அத்யு? கார்த்திக் எதுவும் சொன்னானா?…” என கேட்க,
“ம்ஹூம், என்னம்மா?…” என்றவனிடம்,
“ட்வெல்த் முடிச்சதும் அங்க ஹைதராபாத் தான் போய் படிப்பேன்னு கார்த்திக் கிட்ட சீரியஸா சொல்லியிருக்கா. அதை அன்னைக்கு பார்த்துக்கலாம்ன்னு அவனும் பேசியிருக்கான்…” என கூறவும்,
“ஓஹ்…” என்றான் அத்யுதாரன்.
அதற்குமேல் அவனிடம் அதற்கான பிரதிபலிப்பு என்பது எதுவுமே இல்லை.
ஏன் முகத்தில் கூட அதில் சின்ன ஆச்சர்யபாவம் தான் இருந்ததே தவிர்த்து அதிர்வோ, யோசனையோ என எதுவுமில்லை.
“ஒண்ணுமே சொல்லலையே. உனக்கு எதுவுமே இல்லையா அத்யு?…” என பொறுக்கமாட்டாமல் கார்த்தியாயினி கேட்க,
“இதுல நான் சொல்ல என்னம்மா இருக்கு? அது அவளோட விருப்பம். அங்க படிக்கனும்ன்னு. ஏன் நம்ம கார்த்திக் படிக்கலையா? இது ஒரு விஷயமா?…” என்று பேச,
“என்ன?…” என திகைத்தார் கார்த்தியாயினி.
“இதுல ஷாக்காக என்ன இருக்கு? வர்ணாவோட விருப்பம் அதுன்னா படிக்கட்டுமே. எல்லாருக்குமே தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும் ம்மா…” என்றான் மென்புன்னகையுடன்.
“அப்போ அவ என்ன ஆசைப்பட்டாலும் உனக்கு ஓகேவா அத்யு?…” என்று கேட்க, அவரை ஆழ்ந்து பார்த்தவன் முகத்தில் குறையாத புன்னகை வீற்றிருந்தது.
“இதை எப்படி நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு தெரியலை. மாற்றம் தான் என்னைக்கும் மாறாதது. ஆனா மனுஷங்களுக்குள்ள வர்ற மாற்றம் எல்லாம் நம்மோட கணிப்பிற்கு அப்பாற்பட்டது…” என்றவன்,
“நடக்கிறது தான் நடக்கும். அப்படி நடக்கும்போது அதை ஏத்துக்கக்கூடிய பக்குவமும், மனோபலமும் நம்மக்கிட்ட இருந்தாலே போதும்…” என்று சொல்லிவிட்டு தலையசைத்து வெளியே வந்தான்.
“மார்னிங் பார்க்கறேன் ப்பா…” என்று கதிரிடம் கூறி அன்னத்திடம் தலையசைத்துவிட்டு சென்றுவிட்டான்.
தன் அறைக்குள் வந்தவனுக்குள் மெலிதான சஞ்சலம். அத்தனை தைரியமாய் தாயிடம் பேசிவிட்டான் தான்.
ஆனாலும் இப்போது முணுக்கென்று சிறிது வலியினை அவன் உணராமல் இல்லை.
அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த அவர்களின் குடும்ப புகைப்படத்தினை பார்த்தான்.
சிறுபிள்ளையில் நிலவர்ணித்தாவின் கையை பற்றியபடி அனைவரோடும் அவனுமிருக்கும் புகைப்படம்.
அதன்முன் வந்து கைகட்டி நின்றவனின் பார்வை அதில் அழுத்தமாய் பதிந்திருந்தது.
சிலநொடிகள் அதில் லயித்திருந்தவன் வெளியில் கேட்ட இடிச்சத்தத்தில் உணர்வு வரப்பெற்று தன் கைப்பேசியை எடுத்து மாதவ்வின் எண்ணிற்கு அழைத்தான்.
“மாதவ்…” என்றதுமே,
“நான் தான் மாமா. சொல்லுங்க…” என்றது நிலாவின் குரல் மெலிதாய்.
“வர்ணா, இப்ப எப்படி இருக்க?…” என்று கேட்டதுமே,
“மம்மி வந்துட்டாங்க. திரும்ப எழுந்து கொஞ்சம் சாப்பிட்டேன். மாத்திரை போட்டுட்டேன். நிஜம்மா, அண்ணா வீடியோ கூட எடுத்து வச்சிருக்கான். இப்போ தான் தூங்கலாமேன்னு அம்மா போக சொன்னாங்க. ஆனா நான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், வெரிகுட்…” என்றான் மெச்சுதலாய்.
அவனிடம் பாராட்டுப்பத்திரம் வாங்கிவிட அதற்கே குளிர்ந்துபோனாள் நிலவர்ணித்தா.
“ஆமா, தூங்க சொல்லியும் ஏன் வெய்ட் பன்ற?…” என அத்யுதாரன் கேட்க,
“அச்சோ மாமா, சர்ப்ரைஸ். சொன்னேனே…” என்று அவள் கிசுகிசுப்பாய் ரகசியமாய் அவனிடம் பேச, அக்குரலில் குப்பென்று பாய்ந்த உணர்வில் அவன் தான் தடுமாறிப்போனான்.
“அதான் முழிச்சிருக்கோம். டாடி இப்ப தான் வந்தாங்க. அம்மாவோட பேசிட்டிருக்காங்க…” என்று சொல்ல, கண்ணை மூடியபடி அதனை உள்வாங்கிக்கொண்டு நின்றிருந்தவனுக்குள் குளிர்மழை அடித்து பொழிந்தது.
“மாமா, வச்சிடட்டுமா?…” என்றவள்,
“வேணும்னா அண்ணாவை பேச சொல்லவா? நிஜமாவே டக்குன்னு டேப்லெட் எல்லாம் போட்டேன்…” என்றும் கேட்க,
“வர்ணாவை நம்பறேன். குட்நைட்…” என்றான்.
“திரும்பவும் ஹேப்பி பர்த்டே மாமா…” என்றவளுக்கு நன்றி சொல்லிவிட்டு மேலும் தொடராமல் அவனே வைத்துவிட்டான்.
நிச்சயம் அன்றைக்கு அத்யுதாரனுக்கு உறக்கமிழந்த இரவாகத்தான் சென்றது.
தன் பன்னிரெண்டாம் வகுப்பின் தேர்ச்சி முடிவில் கார்த்தியாயினி சொல்லியதை போலவே நிலவர்ணித்தா தன் படிப்பு விஷயத்தில் உறுதியாய் இருந்தாள்.
நிலாவின் முடிவில் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொன்றாய் எதிர்ப்பு தெரிவிக்க, அவள் உதவியென நாடி வந்து நின்றது அத்யுதாரனிடம் தான்.
தொலைதூர நிலவாய் காற்றோடு கடப்பவளை கைகட்டி வேடிக்கை பார்த்தான் அத்யுதாரன்.