குளிர் பௌர்ணமி தூறலில் – 3 (1)

பௌர்ணமி – 3

          அத்யுதாரனிடம் சொல்லியதை போலவே ஒருமணிநேரத்தில் வந்துவிட்டனர் சுகமதியும் கார்த்தியாயினியும்.

அவர் வருகையில் அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள் நிலவர்ணித்தா. மகளை காண அறைக்குள் செல்லும்பொழுதே மாதவ் அவள் மருத்துவமனை சென்றுவந்ததை கூறிவிட்டிருந்தான்.

நிலாவின் கழுத்தில் நெற்றியில் கைவைத்து பார்க்க, காய்ச்சல் கொஞ்சம் குறைந்திருந்தது.

“அப்பாவுக்கு இன்னும் சொல்லலையே?…” என்று மகனிடம் கேட்க,

“நோ ம்மா. சொல்லலை. வந்த பின்னாடி சொல்லிப்போம்ன்னு நான் தான் வேண்டாம்ன்னு சொன்னேன்…” என்றான் மகன்.

“ஹ்ம்ம்…” என்றவர் நிலா எழுந்துகொள்கிறாளா என்று பார்த்தார்.

ம்ஹூம். அப்படி ஒரு உறக்கம். அயர்விலும், காய்ச்சலிலும் மாத்திரையின் வீரியத்திலும் அசையவே இல்லை.

அவர் தொட்டதும் லேசாய் முகம் சுருக்கியவள் தான். அப்படியே மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல ஒரு பெருமூச்சுடன் வெளியே வந்தார் சுகமதி.

“ப்ச், எதுக்கு இவ்வளோ டென்ஷன்? அதான் சரியாகிடுமே…” என உடன் வந்த கார்த்தியாயினி கூற,

“அதுக்குள்ள என்னை ஒருவழி பண்ணிடுவா. அவளையும் காய்ச்சல் ஒருவழி பண்ணிடும். உங்களுக்கு தெரியாதா அண்ணி?…” என கவலையுடன் கூறியவர்,

“புண்ணியத்துக்கு அவ அப்பாட்ட சொல்லாம இருந்தாங்களே ரெண்டுபேரும். தெரிஞ்சா செம்ம திட்டு விழும் எனக்கு. என்னவோ நானே காய்ச்சலை மகளுக்கு ஒட்டிவிட்ட மாதிரி…” என கூற கார்த்தியாயினி முகத்தில் ஆறுதலான புன்னகை.

“நல்லவேளையா அத்யு வந்து கூட்டிட்டு போய்ட்டு வந்தான். இல்லைன்னா இவ வாயே திறக்கமாட்டா. நாமளா தான் கண்டுபிடிச்சு இழுத்துட்டு போகனும்…” என புலம்பியவர்,

“எந்த நேரத்துல பெத்தேனோ, பிறந்ததுல இருந்து லேசான்னா எல்லாரையும் ஒரு ஆட்டு ஆட்டிடறா….” என்றார்.

“சரி விடு. நாளைக்கு சண்டே. லீவ் தானே. நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். மண்டே குறைஞ்சிருந்தா அனுப்பு. இல்லைன்னா லீவ் போடு…” என கார்த்தியாயினி கூற,

“அய்யய்யோ ஸ்கூலுக்கா? முதல்ல முழுசா சரியாகட்டும் மகராசிக்கு. படிப்பை விட எனக்கு அவ முக்கியம். அதெல்லாம் ரெண்டாவது தான்…” என்றதுமே,

“அதுதான் தெரியுமே…” என்று சிரிப்போடு எழுந்தவர்,

“சரி மாதவ், பார்த்துக்கோ. நான் கிளம்பறேன். அத்யு சொன்னதால அப்படியே இங்க வந்துட்டு போகலாமேன்னு வந்துட்டேன்…” என்றார்.

“இருங்க அண்ணி, டின்னர் முடிச்சிட்டு போலாமே…” என சுகமதி கூற,

“அதெல்லாம் வேண்டாம். இந்நேரம் அங்க உங்கம்மா தேட ஆரம்பிச்சிருப்பாங்க…” என்று சொல்லியபடி கிளம்பிவிட்டார்.

ஒரு பெருமூச்சுடன் சுகமதியும் குபேரனுக்கு அழைத்து எங்கே வந்துகொண்டிருக்கிறார் என்று கேட்டுவிட்டு வைத்தார்.

“ம்மா எதுவும் ஹெல்ப்?…” மாதவ் கேட்க,

“அதெல்லாம் வேண்டாம் மாதவ். இந்த லக்கேஜ் எல்லாம் எடுத்து வைக்கிறது தான்…” என்று சொல்லிக்கொண்டே உடைகளை எடுத்து வைத்தவர், அப்போது தான் கவனித்தார்.

திருப்பதி சென்றவர்கள் பிரசாதம் வாங்கி வந்திருக்க அது மொத்தமும் ஒரே பையாக இங்கே வந்து சேர்ந்திருந்தது.

“அடடா, இதை மறந்துட்டாங்களே?…” என யோசனையுடன் கார்த்தியாயினிக்கு அழைத்துவிட்டார்.

“அண்ணி நீங்க இன்னும் வீட்டுக்கு போகலைன்னா அப்படியே ஒரு யுடர்ன் போட்டு இங்க வாங்க. பிரசாதம், லட்டு எல்லாமே ஒரே பேக்ல இருக்கு…” என்றார்.

“அதுக்காக திரும்ப வர்றதா? அதுவும் இந்த மழைல, ட்ராபிக்ல….” என்றதுமே,

“சரி அப்ப மாதவ்கிட்ட குடுத்தனுப்பறேன்…” என மதி கூறியதும்,

“சரியா போச்சு, சும்மா இருக்கமாட்டியா? இப்ப என்ன அவசரம்? நாளைக்கு குடுத்துவிடு. அதுவும் மழை இல்லைன்னா. இல்லைன்னா அந்தபக்கம் அத்யு வரும்போது வாங்கிக்க சொல்றேன்…” என்று கூறியவர்,

“சரி, இங்க வீடே வந்திருச்சு. நீ நிலாவை பாரு. அப்பறம் இன்னொருவிஷயம், அவளை போய் எங்கருந்து காய்ச்சலை இழுத்துட்டு வந்தன்னு கேட்டு திட்டிட்டிருக்க கூடாது…” என்றும் சொல்லிவைத்தார்.

“ஓகே ஓகே…” என மதி புன்னகைக்க,  

“சொல்ல மறந்துட்டேன் பாரு. அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே மதி…” என்றதும்,

“ஹ்ம்ம், தேங்க்ஸ். ஆனா பாருங்க இங்க நான் பிறந்தநாள் கொண்டாடற நிலமையிலையா இருக்கேன்?…” என கூற,

“காய்ச்சல் அவளுக்கு தானே? உனக்கில்லையே….” என்று சொல்லிக்கொண்டே அவரின் வீட்டினுள் நுழைவது சுகமதிக்கு கேட்டது.

“ஓகே அண்ணி, அங்க பாருங்க. நான் நாளைக்கு பேசறேன்…” என்று சொல்ல,

“இரு இரு. அத்தை பேசறாங்க…” என போனை அன்னலட்சுமியிடம் தந்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார் கார்த்தியாயினி.  

“என்ன மதி, பிரயாணம் எல்லாம் சௌகர்யம் தானே?…” என்று கேட்க,

“ஹ்ம்ம், ஓகே ம்மா. நீங்க என்ன பன்றீங்க? சாப்பிட்டாச்சா?…” என கேட்க,

“உன் அப்பா வரவும் தான். வர்ற நேரமாகிடுச்சே…” என்று கூறியவர்,

“நிலாவுக்கு காய்ச்சலாம். இப்ப எப்படி இருக்கா?…” என கேட்க, அதை பற்றி பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார் மதி.

அதற்குள் உடைமாற்றி கார்த்தியாயினியும் வந்துவிட கடையிலிருந்து திருநாவுக்கரசும் வந்துவிட்டார்.

“என்னம்மா, விசேஷம் நல்லபடியா முடிஞ்சதா?…” என மருமகளிடம் கேட்க,

“ஆமா மாமா. அதோட ஸ்வாமி தரிசனமும் நல்லா கிடைச்சது…” என்றவர்,

“பிரசாதம் ஒரே பேக்ல வச்சிருந்ததால அங்க இறக்கி வச்சிட்டேன். நாளைக்கு கொண்டுவர சொல்லிருக்கேன் மதிகிட்ட….” என்றார் மாமனார், மாமியார் இருவரிடமும்.

“அங்க போய்ட்டு தான் வர்றியா?…” என பேசிக்கொண்டே கையை கழுவிவிட்டு வந்தமர்ந்தார் அரசு.

“ஹ்ம்ம் ஆமா மாமா. இங்க என்னை ட்ராப் பண்ணிட்டு அங்க போறதா தான் ப்ளான். ஆனா வர்ற வழில நிலாவுக்கு காய்ச்சல்ன்னு அத்யு போன். அதான் நானும் அப்படியே பார்த்துட்டு வருவோமேன்னு போனேன்…” என்றார்.

“அதுவும் சரிதான்…” என அரசு கூற,

“ஹ்ம்ம், லேசா குளிர்ந்துடக்கூடாது. எங்கருந்து தான் இவளுக்கு காய்ச்சல், சளின்னு புடிக்குமோ. இன்னும் சரியாகற வரை மதியை தலைகீழா நடக்க விட்ருவா…” என்றார் கவலையுடன் அன்னம்.

“ஸ்கூல் லீவ் போட சொன்னியாம்மா நீ?…” என்று அரசு கேட்க,

“ஹ்ம்ம் அத்தனை சீக்கிரம் உங்க மக அனுப்பிருவா பாருங்க. அதெல்லாம் அனுப்ப மாட்டா…” என்று அன்னம் முந்திக்கொண்டு சொல்ல,

“அதானே பார்த்தேன். இதெல்லாம் நீ சொல்லிக்குடுத்த பாடம் தான். முதல்ல என்னதான் மேலுக்கு முடியலைன்னாலும் அதை புள்ளைங்க எதிர்த்து பழகினா தான் உடம்பும் எல்லாத்துக்கும் பழக்கப்படும். பொத்தி பொத்தி வச்சிருந்தா?…” என்றார் அரசு குரலில் கண்டிப்புடன்.

“ம்க்கும். ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்தை பொண்ணு. அவ படிச்சு தான் இங்க வந்து நிறையுதாக்கும்? புள்ளையை தான் முதல்ல பார்க்கனும்…” என அன்னம் நொடித்துக்கொள்ள,

“ம்க்கும். இப்படி பேசி பேசித்தான் பன்னெண்டாவது படிக்க வேண்டிய பிள்ளையை ஒருவருஷம் வீட்டுல வச்சிருந்து மெல்ல ஸ்கூல்ல சேர்ப்போம்ன்னு சொல்லி இப்படி பண்ணி வச்சிருக்க. உன் மக அப்படியே கேட்டுட்டு பன்றா…” என்று அரசும் ஆதங்கத்துடன் கூறினார்.

அன்னலட்சுமி ஒருபங்கு கவலைப்பட்டு பேத்தியை இழுத்து பிடித்தார் என்றார், அதற்கு இருபங்கு சுகமதி பொத்திப்பொத்தி பார்த்துக்கொள்வார்.

‘உலகத்துலையே இவ மட்டும் தான் பிள்ளை வச்சிருக்கிற மாதிரி. அவளை கெடுக்கறதே நீங்க தான் ம்மா.’ என கதிர்வேலன் கூட சொல்லிப்பார்த்துவிட்டார். கேட்டால் தானே.

‘அவ கூட பொறுத்துக்குவா. நீங்க இருக்கீங்களே?’ என கார்த்தியாயினியும் கூட கேலியாய் பேசி பார்த்துவிட்டார்.

இப்போதுவரை அதில் மாற்றமே இல்லை. இப்போதும் அதனைக்கொண்டு முதியவர்கள் இருவரும் மல்லுக்கு நிற்க,

“இப்ப ஏன் ரெண்டுபேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க? சாப்பிட்டு தூங்குங்க…” என்று கார்த்தியாயினி சொல்ல,

“இல்லம்மா வயசு பிள்ளை. இப்படி வெளி உலகம் தெரியாம தான் வளர்ப்பேன்ன்னு சொன்னா? எல்லாமே தெரியனுமே பிள்ளைங்களுக்கு. லேசா தலையை பிடிச்சுட்டு உக்கார்ந்துட்டா கூட லீவ் போட வைக்கிறாளே நம்ம மதி…” அதனை அப்போதும் கூட அரசு கவலையுடன் தான் கூறினார்.

“அதான் எல்லாம் சொல்லித்தர நாம இருக்கோமே? போதாதா? காலம் கிடக்குற கிடையில பிள்ளை நம்ம கண்ணு முன்னாடியே இருக்கட்டும். நான் முன்னவே சொல்லிட்டேன் புள்ளையை விட வேற ஒன்னும் முக்கியமில்லை…” அன்னம் விடாப்பிடியாக கூற,

“மாமா நீங்க ஏன் கவலைப்படறீங்க? நிலா நல்லா சூட்டிகையான பிள்ளை. கற்பூர புத்தி. மார்க்ஸ் ஒன்னும் மோசமில்லை. நல்லா படிக்கிற பொண்ணும் கூட. அதனால கவலைப்பட எதுவுமில்லை. நீங்க சண்டை போட்டுக்காதீங்க…” என சமாதானம் செய்துவைத்தார் கார்த்தியாயினி.

“ம்க்கும், சண்டையாம் சண்டை. என்னத்துக்குத்தான் இந்த மனுஷனுக்கு கோவம் வருதோ? ஒத்த வார்த்தை பேத்தியா எப்படி இருக்கான்னு கேட்டாரா பாரேன்…” என்று என அதற்கும் குறைபட,

“அதெல்லாம் சாதா காய்ச்சல் தான். சரியாகிடும். விசாரிச்சா மட்டும் காய்ச்சல் உடனே ஓடிருமா? வேணா கிழவி நீ போய் பார்த்து வாங்கிக்கவேன்…” என்று வம்பளந்துகொண்டே அவர் உண்டு முடித்து எழுந்து சென்றார்.

error: Content is protected !!