குளிர் பௌர்ணமி தூறலில் – 2 (3)

“ஹ்ம்ம்…” என்று மட்டும் தாயின் பேச்சுக்களுக்கு அவள் தலையசைக்க அத்யுதாரன் அவள் பேசுவதை தான் பார்த்தபடி இருந்தான்.

இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனின் கை தாடையில் பதிந்திருக்க, கரத்தின் சுண்டுவிரல் அவனின் மீசையில் அசைந்தாடிக்கொண்டிருந்தது.

“பேசிட்டேன்…” என்று கைபேசியை மாதவ்விடம் நீட்ட,

“மொபைல் என்னோடது…” என அவளிடம் தானே கேட்டு வாங்கிக்கொண்டான்.

“போதும் மாமா, இதுக்கு மேல குடிக்க முடியலை…” என்றாள் பாவம் போல்.

“சரி கொஞ்சம் நேரம் கழிச்சு குடிக்கனும்…” என்று போனால் போகட்டும் என்பதை போல் விட்டவன்,

“மாதவ்….” என்றதுமே,

“நான் அப்டேட் பன்றேன் மாமா…” என்று அலர்ட் மோடில் அவன் பதிலளித்தான்.

“சனியனே, நீயெல்லாம் எனக்கு அண்ணனாடா…” என மெலிதாய் அவள் முணுமுணுக்க, அத்யுதாரன் அதிலிருந்த மாத்திரைகளை பிரித்துக்கொண்டிருந்தான்.

“ஷ்ஷ் பேய்க்குட்டி, கம்மின்னு இரு. இல்லைன்னா இதுக்கும் கிடைக்கும்…” என்றவன் மாமனை பார்க்க,

“இந்த டேப்லெட் எல்லாம் எப்போ குடுக்கனும்ன்னு ஞாபகம் வச்சுக்கோ…” என அவனுக்கு அறிவுறுத்தியவன்,

“கரெக்ட்டா நீ எடுத்துக்கனும். அது புரியுதா?…” என்றான் நிலவர்ணித்தாவிடம்.

“ப்ராமிஸ். கண்டிப்பா போட்டுடுவேன்…” என்று தன் உச்சந்தலையில் கை வைத்து சத்தியம் என்பதை போல் காண்பிக்க, அத்யுவின் முகம் முறைப்பிற்கு சென்றதும் கையை எடுத்தாள்.

“இந்த பழக்கத்தை நீ விடவே மாட்டியா? சொன்ன பேச்சே கேட்கிறதில்லை. என்ன பன்றது உங்களை?…” என்றதுமே,

“உரிச்சிருவேன் ராஸ்கல். அதானே…” என்று மாதவ், நிலா இருவரும் ஒன்றுபோல் கூற, அத்யுதாரன் இதழோரத்தில் குறுஞ்சிரிப்பு.

“விவரம் தான்…” என்று மெச்சுதலுடன் பார்த்தவன்,

“சரி இப்ப ஒரு செட் போடு…” என அப்போது போடவேண்டியதை எடுத்து நீட்ட,

“மாமா…” என்று திருதிருத்தாள்.

அவன் பேசவெல்லாம் இல்லை. போட்டாகவேண்டும் என்பதை போல் பார்த்திருக்க முகத்தை சுளித்துக்கொண்டேனும் அதனை கடகடவென்று எடுத்து விழுங்க, சட்டென கொஞ்சம் சர்க்கரையை எடுத்து அவளின் உள்ளங்கைக்குள் வைத்தான் அத்யுதாரன்.

“போட்டுக்கோ…” என்று சன்னமான புன்னகையுடன் கூற, நிலாவிற்கு அத்தனை நிம்மதி.

கசப்பு சென்று இனிப்பின் சுவை கண்டதும் தான் அவளின் முகம் இயல்பானது.

“இப்போ ஓகே தானே? நான் போகட்டுமா?…” என கேட்க,

“வெய்ட்…” என்றவன்,

“கைல எப்படி காயம்?…” என அடுத்த விசாரணைக்கு செல்ல,

“காயமா?…” என மாதவ் பார்க்க, கமலாவுக்கு உதறல் எடுத்தது இப்போது.

“இதுவா, மார்னிங் ட்ரெஸ் அயர்ன் பண்ணும்போது சுட்டுடுச்சு மாமா. பெருசா வலிக்கலை…” என்று சொல்லவும் அத்யு கமலாவை பார்க்க,

“இல்ல தம்பி. நான்…” என்று அவர் பதற, நிலாவிற்கு என்ன பேசுவானோ என்றிருந்தது.

“நானா தான் பண்ணேன். எப்பவும் முதல்நாளே கமலாம்மா பண்ணிடுவாங்க. இந்த மழை யூனிபார்ம் எல்லாம் கொஞ்சம் ஈரமா இருந்துச்சுன்னு காயவிட்டு மார்னிங் நான் தான்…” என்று சொல்ல சொல்ல அத்யுதாரனின் முகத்தில் அழுத்தம்.

“உன்னை பண்ணவேண்டாம்ன்னு நான் சொல்லலையே. ஏன் உனக்கு இந்த ஒரு செட் தான் இருக்கா?…” என்றவன்,

“செய்யிற வேலையில கவனம் வேண்டாமா? இப்படி சுட்டுக்கற அளவுக்கா இருப்ப?…” என்று பேச நிலாவுக்கு எப்போதடா இவன் கிளம்புவான் என்றே தோன்றிவிட்டது.

விட்டால் மயங்கிவிழுந்துவிடுவாள் என்பதை போலிருக்க ஒரு பெருமூச்சுடன் எழுந்துகொண்டவன்,

“அம்மா வரவும் கால் பண்ணு வர்ணா…” என கூறிவிட்டு,

“பார்த்துக்கோ மாதவ். நான் கிளம்பறேன்…” என்றான்.

சொல்லிவிட்டு எழுந்துகொண்டவன் கமலாவிடமும் பேசிவிட்டு புறப்பட,

“மாமா, ஒருநிமிஷம்…” என்று வந்தாள் நிலவர்ணித்தா.

“என்ன வர்ணா?…” என தலையை மட்டும் திருப்பி பார்த்தவன் கைகள் பேண்ட் பாக்கெட்டினுள் நுழைந்துகொண்டது.

“இல்ல மம்மிக்கு ட்ரெஸ் எடுத்ததை இப்போ எதுவும் சொல்லிடாதீங்க. அப்பறம் சர்ப்ரைஸ் போயிடும்…” என்று கூற,

“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவன் திரும்ப,

“அப்பறம் மாமா….” என மீண்டும் அவனை நிறுத்தினாள்.

“சொல்லு…” என அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்தான்.

“நைட் சர்ப்ரைஸ் கேக் கேட்டிங் இருக்கு மாமா. முடிஞ்சா வர்றீங்களா?…” என கேட்கவும் தலையசைத்து மறுத்தான்.

“ம்ஹூம்…” என்றவன்,

“டேக் ரெஸ்ட்…” என்றுவிட்டு செல்ல திரும்பி மீண்டும் அவள் முகம் பார்த்தவன்,

“வேற எதுவும் சொல்லனுமா?…” என கேட்டவன் கண்கள் ஒருவித எதிர்பார்ப்பினை காண்பிக்க, அது அவளின் கவனம் பெறவே இல்லை.

“ம்ஹூம். இல்லையே…” என்று சொல்லிவிட்டு பார்க்க,

“ஓகே டேக் கேர்…” என கூறவும் தான் பொறிதட்டியது நிலாவுக்கு.

“அச்சோ மாமா, ஹேப்பி பர்த்டே…” என்று கூறி,

“ம்ஹூம், அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே…” என்றாள் முகம் மலர.

“ஹ்ம்ம்…” என ஒற்றை தலையசைப்பில் அதனை ஏற்றுக்கொண்டவன் தலையசைத்து விடைபெற பார்க்க, மாதவ் வந்துவிட்டான்.

“நானும் சொல்லனும். அட்வான்ஸ் விஷஸ் மாமா…” என்று கை நீட்ட அவனின் கையை பிடித்து குலுக்கவும் நிலவர்ணித்தாவும் தன் கரத்தினை நீட்டினாள்.

அவள் முகம் பார்த்து பின் அவள் கரம் கோர்த்தவன் உணர்ந்தது இன்னும் கூடியிருக்கும் காய்ச்சலின் வீரியத்தினை தான்.

“போய் ரெஸ்ட் எடு. டிவி பார்க்க கூடாது. மொபைல் பார்க்க கூடாது. புரிஞ்சதா?…” என அறிவுறுத்திவிட்டு அதற்குமேல் நில்லாது புறப்பட்டுவிட்டான் அத்யுதாரன்.

அவனின் வாகனம் அவர்களின் வீட்டினை தாண்டியதும் தான் அண்ணன், தங்கை இருவருக்குமே நிம்மதி.

“ஹப்பா ஸ்ட்ரிக்ட் ஆபீசர். இவ்வளவு நேரம் நம்ம வீடே மில்டரி கேம்ப் மாதிரி எனக்கு பீலாகிடுச்சே…” என நிலா கூறிக்கொண்டே சோபாவில் படுத்தவள் டிவியை போட,

“பாப்பா நீ தூங்கினதும் தம்பி சொல்ல சொன்னாங்க…” என்று வந்தார் கமலா.

“நான் இங்கயே தூங்கறேனே கமலாம்மா. என்னோட பில்லோ பெட்ஷீட் கொண்டுவர்றேன்…” என அவள் சொல்ல,

“இல்லப்பா. தம்பி கேட்கும்…” என்றதும்,

“ஹப்பா அங்க இருந்துட்டு இங்க ரூல்ஸ்…” என தலையை பிடித்துக்கொண்டு தன் அறைக்கு உறங்க சென்றாள் நிலா.

“மாமா இல்லைன்னா இவ கண்ட்ரோல்ல இருப்பாளா?…” என்று அந்த டிவி ரிமோட்டை தான் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

இருவருமே அத்யுதாரனின் நினைவில் ஒவ்வொருவிதமாய் இருக்க, சம்பந்தப்பட்டவனின் முகத்தில் அத்தனை புன்னகை.

‘இன்னும் எத்தனை வருடங்கள்?’ என தன் காத்திருப்பின் காலத்தினை கணிப்பிற்குள் கொண்டுவந்தவன் மனதினுள் வரையறைக்குட்பட்ட நேசம் ஒளிந்துகொண்டிருந்தது.

error: Content is protected !!