குளிர் பௌர்ணமி தூறலில் – 2 (2)

“ப்ச், சீட்ல உட்கார். இப்படி திரும்பிக்கோ. கீழ இறங்காத…” என்று அத்தனை கண்டிப்பு.

அமர்ந்தவாக்கில் மதியம் உண்டது, காபி என மொத்தமும் வெளியே வர, அவளின் தலையை பிடித்துக்கொண்டு ஆதரவாக நின்றான்.

நிலாவிற்கு கண்ணீர் வந்துவிட்டது. தொண்டையெல்லாம் அத்தனை வலி.

தலையை உலுக்கிக்கொண்டவள் இரு கை கொண்டு நெற்றியை பிடித்துக்கொள்ள,

“சரியாகிடும். இரு…” என்று வாட்டர் பாட்டிலை தந்து அவளுக்கு உதவினான்.

“ஸாரி மாமா…” என்று பாவம் போல் சொல்ல, மெலிதாய் புன்னகைத்தவன், முகம் அலம்பும்படி தலையசைத்தான்.

“இப்போ ஓகே தானே? போலாமா?…” என்று நிலாவிடம் கேட்டு அவள் சரி என்றதும் வேகமாய் வந்துவிட்டான் மருத்துவமனைக்கு.

எப்போதும் அவர்கள் தங்களுக்கு பார்க்கும் குடும்ப மருத்துவர் தான். அதனால் அத்யுதாரன், நிலவர்ணித்தா இருவரையும் நன்றாகவே தெரிந்திருந்தது.

“என்ன நிலா? அம்மா இல்லாம அத்யுவோட வந்திருக்க?…” என்று அவளை கண்டதும் மருத்துவர் கேட்டதுடன்,

“வாப்பா அத்யு…” என்றார் அப்பெண்மணி.

“நீ உட்கார்…” என்று அவளை அமர சொல்லிவிட்டு தானும் அவரின் எதிர் இருக்கையில் அமர்ந்தவன்,

“அவளுக்கு பீவரா இருக்கு ஆன்ட்டி. வரும்போது வேற சாப்பிட்டது எல்லாம் வாமிட் பண்ணிட்டா…” என முதலில் எதை சொல்லவேண்டும் என்று கூறிவிட்டு அவர் நிலாவை பரிசோதிக்க துவங்கவும் தான் அடுத்து பேசினான்.

“அம்மாவும் அத்தையும் திருப்பதில ஒரு பங்க்ஷன்னு போயிட்டு ரிட்டர்ன் வந்துட்டிருக்காங்க. வீட்டுக்கு வர ஈவ்னிங் ஆகிடும்…” என்று அவர் கேட்டதற்கும் கூறினான்.

“ஓஹ், ஓகே ஓகே….” என்ற மருத்துவர்,

“வைரல் பீவர் தான். ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்…” என்று அவனிடம் தெரிவித்துவிட்டு நிலாவை பார்த்தார்.

“என்னவாம் இவ்வளோ சைலன்ட்?…” என்று கேலியாய் கேட்க, அத்யுதாரனுக்குமே புன்னகை தான்.

“டயர்ட். தொண்டை எல்லாம் வலிக்குது…” என்று அவள் மெலிதாய் கூற,

“அதெல்லாம் சரியாகிடும். திரும்பி உட்கார்…” என்றுவிட்டு நர்ஸை வரவழைத்து ஊசியை எடுத்து வர சொல்ல,

“டெம்பரேச்சர் என்ன?…” என்றான் அத்யுதாரன்.

“ஹண்ட்ரட் தான் அத்யு. இது சீசன் தானே? அதான் எல்லா பக்கமும் காய்ச்சல்…” என்று பேசிக்கொண்டே நிலாவுக்கு ஊசியை போட பல்லை கடித்துக்கொண்டு மறுபக்கம் திரும்பியவள் ஊசி போட்டு முடித்ததும் தோள்பட்டையை தேய்த்துக்கொண்டாள்.

“மறக்காம டேப்லெட் போட்டுடு. உங்கம்மா புலம்பிட்டே இருப்பா, அசால்ட்டா சிரப் குடிக்கிறா. இந்த மாத்திரைன்னா போட வைக்கிறதுக்குள்ள எவ்வளோ பாடுன்னு. போட்டுடுவியா?…” என கேலியாய் கேட்க, நிலாவிற்கு ஐயோ என்றிருந்தது.

இதை இவனை வைத்துக்கொண்டா சொல்லவேண்டும் என்று ஓரவிழியால் அத்யுதாரனை பார்த்துக்கொண்டே ஊசி போட்ட இடத்தினை தடவிக்கொடுக்க, அவனின் புருவத்தில் சுளிப்பு.

“ஓகே அத்யு, நைட் பீவர் இருக்கும். ஒன் நாட் டூ க்ராஸ் பன்றதுன்னா இன்னொரு டேப்லட் எடுக்க சொல்லு. இல்லையா உடனே இங்க வர சொல்லு…” என்று பேசிக்கொண்டிருக்க தலையசைத்தவன் மீண்டும் நிலாவின் இடது கையை பார்த்தான்.

அவனின் பார்வையை அவள் கவனிக்கவில்லை. மருத்துவரிடம் சொல்லி விடைபெற்று வெளியே வர,

“இங்கயே வெய்ட் பண்ணு. டேப்லெட் வாங்கிட்டு வர்றேன்…” என்று கூறிவிட்டு அவன் செல்ல, நிலாவினால் அமர முடியவில்லை.

இன்னும் உடல் கதகதவென்று வெம்மை பரவ துவங்க, வீட்டிற்கு சென்று படுத்தால் போதும் என்றிருந்தது.

முயன்று தன்னை திடமாய் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். இல்லை என்றாள் அங்கேயே அட்மிட் செய்துவிடுவான் அவன் என்று தெரியுமே.

“போலாமா?…” என்று அவன் அழைத்ததும் முகம் நிமிர்த்தியவளின் பார்வையில்,

“என்னாச்சு? ரொம்ப முடியலையா வர்ணா?…” என்று கேட்க,

“அதெல்லாம் இல்லை மாமா. போவோம்…” என பலம் திரட்டி எழுந்துகொண்டாள்.

மழையும் காற்றும் என அந்த குளிர் வேறு உடலை வாட்டியது. கிடுகிடுவென்று நடுக்கம் வேறு.

காரில் அவள் அமர்ந்ததுமே அவளை பார்த்தவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

“ஷிவராகுதா? என்னன்னு சொல்லு வர்ணா?…” என்றான் இப்போதும் அதட்டலாய்.

“ஹ்ம்ம் ஆமா மாமா. லேசா தான். சீக்கிரம் வீட்டுக்கு போவோமே…” என்று கெஞ்சலாய் கேட்க, அந்தநிமிடம் காரில் கூட எதுவுமில்லை அவளுக்கு போர்த்தும்படி.

“இதோ…” என்றவன் காரை கிளப்பி வார்ம் மோடில் வைத்தவன் வீடு வந்து சேர கால்மணிநேரமாகி இருந்தது.     

கார் சத்தம் கேட்கவுமே மாதவ், கமலா இருவரும் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டனர்.

கதவை திறந்துகொண்டு வந்தவளை மாதவ் பிடித்துக்கொள்ள, கமலாவும் தாங்கிக்கொண்டார்.

“என்னாச்சு பாப்பா? காலையில நல்லா தான இருந்த?…” என கமலா கேட்க,

“முதல்ல அவளை படுக்க வைப்போம் கமலாம்மா. டயர்டா இருக்கா…” என்றான் மாதவ்.

காரை நிறுத்திவிட்டு மாத்திரை மருந்துகளுடன் உள்ளே வந்த அத்யுதாரன் இதனை கேட்டு,

“அவளை முதல்ல சோபால உட்கார வை மாதவ்…” என்று கூறிவிட்டு,

“நீங்க குடிக்க கொஞ்சம் வெந்நீரும், கையோட கஞ்சியும் எடுத்துட்டு வாங்க…” என்றான் அவரிடம்.

“அச்சோ வேண்டாம். எனக்கு தூங்கனும். நான் படுக்கறேனே.. கஞ்சி போடற வரையாச்சும்…” என கெஞ்சலுடன் நிலா கூற,

“நீங்க ஹாஸ்பிட்டல்லருந்து கிளம்பும்போதே தம்பி போட சொல்லி நான் போட்டு வச்சிட்டேன் பாப்பா….” என்று சொல்லியவர் வேகமாய் உள்ளே சென்றார்.

மாத்திரையை டீப்பாயின் மீது வைத்த அத்யுதாரன் மாதவ்வின் எதிரில் அமர்ந்தான்.

கமலாவும் அதற்குள் கஞ்சி, துவையல், வெந்நீர் சகிதம் கொண்டுவந்துவிட அதனை பார்க்கும்பொழுதே மீண்டும் வயிற்றை பிரட்டியது நிலாவிற்கு.

முடித்ததும் மாத்திரை போட வைத்துவிட்டு தான் அவன் நகரக்கூடும் என்றும் புரிய மனதிற்குள் தலைப்பாடு அடித்துக்கொண்டாள்.

“வேடிக்கை பார்க்கவா கொண்டுவந்திருக்காங்க?…” என்று அத்யுவின் குரல் கேட்டதுமே சிணுக்கத்துடன் எடுத்து உண்ண ஆரம்பித்தாள் அவள்.

கமலாவும் அங்கேயே நின்று பார்த்திருக்க அதற்குள் தன் தாய்க்கு அழைத்து எங்கு வந்துகொண்டிருக்கிறார்கள் என்று கேட்டான்.

இன்னும் ஒருமணிநேரத்தில் வந்துவிடக்கூடும் என தகவல் தெரிந்தது. சுகமதியிடமும் பேசி விவரத்தை கூற அவர் மகளிடம் பேசினார்.   

“லேசா தான் மம்மி…” என்று கூற மறுபுறம் கேட்ட பேச்சுக்களில் எரிச்சல் மண்டியது.

‘எல்லாம் இவங்களால தான். இல்லைன்னா அங்க இன்னைக்கு போயிருப்பேனா?’ என தன்னை குறித்தே கடுப்பு.

error: Content is protected !!