குளிர் பௌர்ணமி தூறலில் – 2 (1)

பௌர்ணமி – 2

          கார் கிளம்பியதுமே தன் பின்னால் மாதவ் வருகிறானா என எட்டி எட்டி பார்த்துக்கொண்டே நிலவர்ணித்தா வர,

“மாதவ்வை தேடறியா வர்ணா?…” என்றான் அத்யுதாரன்.

“ஹாங்…” என திரும்பி பார்த்தவள்,

“ஹ்ம்ம்…” என்றாள்.

“ஓஹ்…” என்றவனின் பார்வை மீண்டும் சாலையில் திரும்ப,

“இல்ல அண்ணாவும் ஹாஸ்பிட்டலுக்கு கூட வர்றேன்னு சொன்னான்…” என்றதும் திரும்பி பார்த்து புன்னகைத்துக்கொண்டவன்,

“அப்படியா?…” என்றுவிட்டு திரும்பிக்கொண்டான்.

அவள் கூறுகையில் பின்னால் மாதவ் ஸ்கூட்டியில் அவர்களை பின் தொடர, தன் காரின் வேகத்தை குறைத்து ஓரிடத்தில் நிறுத்தியவன் மாதவ் அருகில் வரும்வரை காத்திருக்க,

“என்னாச்சு மாமா? ஏன் நின்னுட்டீங்க?…” என்றான் அவன்.

மழை விடவில்லை என்றாலும் தூறல் விழுந்து கொண்டுதான் இருந்தது. ரெயின்கோட் அணிந்திருந்தவனை பார்த்த அத்யுதாரன்,

“வர்றதுன்னா அங்கயே சொல்லவேண்டியதுதானே மாதவ்? ஏன் நீயும் நனைஞ்சிட்டு வர்ற?…” என்றதும் மாதவ் பார்வை தங்கையை தொட்டது.

“நீ தான் வர சொன்னியா வர்ணா?…” என்றான் உடனே அவளிடம்.

“இல்ல இல்ல…” உடனடியாக அவள் மறுக்க,

“நான் தான் சொன்னேன். அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. அதான் கூட நானும் வரலாமேன்னு…” என்று சொல்ல,

“சரி ஸ்கூட்டியை இங்கயே பார்க் பண்ணிட்டு கார்ல ஏறு…” என்றுவிட்டான் அத்யுதாரன்.

மாதவ்விற்கு திகீர் என்றது. அந்த வண்டியையே எத்தனை போராடி வாங்கியிருந்தான் அவன்.

அதிலும் அத்தனை அறிவுறுத்தலில் பெயரில் தான் குபேரன் வாங்கியே தந்திருந்தார்.

“காலேஜ் போய்ட்டேன். எவ்வளோ ரிஸ்ட்ரிக் பன்றாங்க?…” என சுகமதியிடம் அத்தனை புலம்பல் புலம்பியிருக்க, அத்யுதாரனும், கதிர்வேலனும் தலையிட்டு தான் இதையுமே வாங்கித்தந்தது.

“உனக்கு ஒருவிஷயம் மறுக்கப்படுதுன்னா அதுக்கு காரணம் நீயா மட்டும் தான் இருப்ப மாதவ். அப்படி மறுக்காம இருக்கிறது மாதிரி நடந்துக்கோ…” என்று சொல்லி தான் அதையுமே அவனுக்கு தர வைத்திருந்தான்.

வேறு வழியில்லை என்று இதுவும் கிடைக்காது போனால்? அதனால் மௌனமாய் வாங்கிக்கொண்டவன் இப்போதுவரை அதனை காப்பாற்றிக்கொள்ள பார்க்க, இந்த ஒருவிஷயமே அதற்கும் பங்கமாகிவிடுமோ என்று தோன்றியது.

“என்ன மாதவ்?…” என்றவனை பார்த்தவன்,

“இல்ல நிலா…” என பார்த்தான்.

“வண்டியை நிப்பாட்டிட்டு வா. எவ்வளோ நேரம் மழையில நனைஞ்சிட்டு இருப்ப? அப்பறம் உனக்கும் காய்ச்சல் வரும்….” என்று சொல்ல,

“இல்ல மாமா, நான் வீட்டுக்கு போறேன். நீங்க ஹாஸ்பிட்டல் போய்ட்டு வாங்க…” என்றவனை பார்த்து முறைத்த நிலா,

“வாடா…” என்றாள் சத்தமின்றி இதழசைத்து.

சட்டென அத்யுதாரன் திரும்பவும் முகம் பேயறைந்ததை போலானது அவளுக்கு.

“நான் கூப்பிட்டேன். அவன் வரலை….” என்று அவளிடம் சொல்லிவிட்டு,

“நேரா வீட்டுக்கு தான் போகனும். நான் வருவேன்…” என அவனை அனுப்பிவிட்டு காரை கிளப்பினான்.

“அவன் இருந்தா எனக்கு சப்போர்ட்டா இருக்கும், தெரியுமா?…” நிலா ஆதங்கத்துடன் கூற,

“ஏன் நான் இல்லையா என்ன?…” என்றதும் கூட நிலாவிடம் அமைதி தான்.

“அவன் வந்தா மட்டும் உனக்கு போடற இன்ஜெக்ஷன அவன் வாங்கிப்பானா?…” என்றவனின் கேள்வியில் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டாள்.

“சின்னப்பிள்ளையா நீ? கூட ஒருத்தர் துணைக்கு இருக்க?…” என்றும் பேச,

“எனக்கு பயமெல்லாம் இல்லை. அது சும்மா அவன் இருக்கட்டுமே. உங்களுக்கு ஏன் சிரமம்ன்னு தான்…” என்றாள் வேகமாய்.

“இவ்வளோ வாயிருக்கே. இதெல்லாம் தெரியுது. அப்பறம் ஏன் மழையில ஸ்கூட்டி ஓட்டிட்டு வந்த? அதுவும் லைசென்ஸ் இல்லாம…” என்று பேச,

“லைசென்ஸ் தானே? எனக்கு அடுத்தமாசம் பதினெட்டு வயசாகிடும். முதல் வேலையா லைசென்ஸ் எடுக்கறேன். காய்ச்சல், இது அதுவா வந்துடுச்சு…” என மூக்கை உறிந்துகொண்டே பேச மௌனமாய் புன்னகைத்தவன்,

“ஹ்ம்ம், ரொம்ப பெரிய வயசு தான் இந்த பதினெட்டு. ஆனா அதுவும் பெரிய வயசு இல்லை…” என்று சொல்ல,

“அப்போ உங்க வயசு வந்துட்டா பெரிய வயசு. எல்லாம் கரெக்ட்ன்னு ஒத்துக்குவீங்களா?…” என கூற, நிலாவை திரும்பி பார்த்தவன் முகத்திலிருந்த பாவனை என்னவென்று அவளுக்கு புரியவில்லை.

கோபமாகிவிட்டானோ என்று தான் மீண்டும் உள்ளுக்குள் பயம் பொங்கியது.

“இல்ல என்ன பேசினாலும் ஸ்கூலிங், உனக்கு ஒன்னும் தெரியாது. சின்னப்பிள்ளைன்னு சொல்றீங்க. அதான்…” என தணிந்து கூற,

“ஹ்ம்ம், இப்பவும் நீ ஸ்கூல் பொண்ணு தானே. சின்னப்பிள்ளை தான். ஒன்னும் தெரியாது தான்…” என்றவனின் கடைசி வார்த்தைகள் என்னவோ இன்னும் உள்ளடங்கி இருந்தது.

“ஆனா நானும் கரெக்ட்டா யோசிப்பேன் சிலது…” என தன்னை குறைவாய் எண்ணவேண்டாம் என்பதை போல் அவள் கூற,

“பார்ரா…” என சிரித்துக்கொண்டவன் முகத்தில் சந்தோஷம்.

“ஹ்ம்ம், கரெக்ட்டான நேரம் கரெக்ட்டா யோசி. அது போதும். அதுக்கும் நேரம் வரும்…” என்றவன் மனதோரம் பெரிதாய் பெருமூச்சு எழும்பி அடங்கியது.

அவனின் அத்தை மகள் அவள். திருநாவுக்கரசு என்னும் ஆலமரத்தின் விழுதுகள் இவர்கள்.

திருநாவுக்கரசு, அன்னலட்சுமி இருவரின் பிள்ளைகளாக கதிர்வேலன், சுகமதி, இருவரும்.

ஒரே ஊர் தான். ஆனாலும் சற்று தூரத்தில் தான் குடும்பங்களாய் வசித்து வருகின்றனர்.

கதிர்வேலன் கார்த்தியாயினி இருவரின் பிள்ளைகள் அத்யுதாரன், கார்த்திக். இளையவன் மேற்படிப்பிற்கென ஹைதராபாத்தில் இருந்தான்.

வளரும்வரை இருந்த அன்பு உரிமையுடன் சமீபகாலமாக, ஏன் சில மாதங்களாக ஒரு பிடித்தமாய் உருவெடுத்திருந்தது அத்யுதாரனுக்குள்.

வீட்டின் பெரியவர்களின் ரகசியமான ஆசை அரசல்புரசலாக கேட்டதைக்கொண்டுஅவன் மனதில் உரிமை கலந்த விருப்பமாய் உருவெடுத்திருந்தது.

அதனை வெளிக்காட்டிக்கொள்ள தான் அத்தனை தயக்கம். தன்னை வெளிப்படுத்தவும் அப்போதைக்கு அவன் விரும்பவில்லை. படிக்கும் பெண். மனதினை அலைபாயவிடாது கட்டிவைத்தான்.

முதலில் படிப்பு முடியவேண்டும். அதன்பின் பார்க்கலாம் என்று முடிவில் இருந்தவன் தான்.

இதோ இப்போது இரட்டை ஜடையில் சிறுபிள்ளையாய் அவனிடம் வார்த்தையாடிக்கொண்டு வருபவளின் மீதான அன்பில் உருகிக்கொண்டிருக்க இந்த சிலநிமிட மௌனத்தில் தன் தலையை பிடித்தாள் நிலவர்ணித்தா.

“என்னாச்சு வர்ணா?…” என்றான் அத்யுதாரன்.

“ஒருமாதிரி…” என்று சொல்லிக்கொண்டே இருந்தவள் முகம் கண்டு காரை ஓரமாய் மீண்டும் நிறுத்தினான்.

“வாமிட் வருதுன்னா சொல்லமாட்டியா?…” என குடையுடன் இறங்கியவன் அவள் பக்கத்து கார் கதவை திறந்து வைக்க கீழே இறங்கவிருந்தாள் நிலா.

error: Content is protected !!