குளிர் பௌர்ணமி தூறலில் – 1 (3)

“இல்ல, நான்…” என்றவள் விழிக்க,

“புடவை எடுத்துட்டு பணம் வேற தந்தீங்களாம்? அவ்வளோ பெரிய மனுஷி ஆகிட்டியோ?…” என்றும் அதட்ட அதில் நிலாவும் கொஞ்சம் சுதாரித்து,

“நாளைக்கு அம்மாவுக்கு பர்த்டே. அதான் சேரி எடுக்க வந்தோம்…” என்று கூறவும் தலையசைத்தவன்,

“வேற கடைக்கு போவேன்னு சொன்னியாம்?…” என்றான் மீண்டுமாய் அத்யுதாரன்.

சட்டென நிலா முகத்தில் ஒரு முறைப்பு ஞானத்தை பார்த்ததுமே வந்து சேர,

“கேள்வி நான் கேட்டேன்…” இப்போதும் அத்யுதாரனின் குரலில் கண்டிப்பு.   

“பேசி தொலைடா சனியனே…” என தன் அண்ணனை பார்த்தவள்,

“ம்க்கும்…” என்ற அத்யுதாரனின் செருமலில் மீண்டும் ஒப்பிக்க துவங்கினாள்.

“அது அம்மாவுக்கு நானும் அண்ணாவும் சேவ் பண்ணி வச்சு அந்த காசுல வாங்கி தரனும்ன்னு ஆசை. காசு வாங்கலைன்னா இது தாத்தாவோ, மாமாவோ எடுத்து தந்தது மாதிரியாகிடும். இப்பவே எப்படியும் புடவை அம்மாவுக்கு வந்திரும். ஆனா நாங்க தரனும்ன்னு தான்…” என்று கடகடவென்று ஒப்பித்தாள்.

“அதுக்கு வேற கடை பார்த்து போவேன்னு சொல்றதா?…” அத்யுதாரன் மீண்டும் கேட்க,

“ஸாரி…” என பணிந்துவிட்டது அவள் குரல்.

சிலநொடிகள் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தவன் இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகை.

“பணம் வாங்கிக்கோங்க ஞானம் அண்ணே…” என்றான் அவன் ஞானத்திடம்.

“தம்பி பெரியய்யாவுக்கு தெரிஞ்சா?….” அவர் தயங்க,

“தாத்தாக்கிட்ட நான் சொல்லிக்கறேன்…” என்றவன்,

“ரெண்டுபேரும் ரூம்க்கு வாங்க…” என்று அழைத்து சென்றான்.

“இல்ல வீட்டுக்கு போகனும். லேட்டாகிடுச்சு…” என நிலா கூறிவிட்டு மாதவ்வின் கையை கிள்ளி வைத்தாள் ‘சொல்லித்தொலை’ என்பதை போல.

“ஓஹோ…” என்றவன், தன் கைப்பேசியை எடுத்தான்.  

“ம்மா எங்க இருக்கீங்க?…” என கேட்க நிலாவுக்கு பதறி வந்தது.

எதுவும் சொல்லிவிடுவானோ என்று வேகமாய் தலையசைத்துக்கொண்டு வேண்டாம் வேண்டம் என்று கையை காண்பித்து அவனிடம் நாட்டியமாட அவளை பார்வையால் அடக்கியவன்,

“ஓ, சரி. பார்த்து வாங்க. ஹ்ம்ம், இங்கையுமே நல்ல மழை தான். நேத்து பங்க்ஷன் நல்லபடியா முடிஞ்சதா?…” என்று கேட்டு பேசி முடித்துவிட்டு கைப்பேசியை பேண்ட் பாக்கெட்டினுள் போட்டுக்கொண்டவன்,

“வர லேட்டாகும். லேட் அப்படின்னா ஈவ்னிங் ஆகிடும். இப்போ உள்ள வாங்க ரெண்டுபேரும்…” என்று சொல்லிவிட்டு ஞானத்திடம் இருவருக்கும் உணவினை அனுப்பும்படி கூறிவிட்டு வந்தான்.

அறைக்குள் நுழைந்ததுமே அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் சென்று அமர்ந்துகொண்டாள் நிலவர்ணித்தா.

மாதவ் வாயே திறக்கவில்லை. இந்தநேரம் அத்யுதாரன் மதிய உணவிற்கு வீட்டிற்கு கிளம்பியிருப்பானே என்று தான் நிலாவிடம் வண்டியை கொடுத்து ஓட்டச்சொல்லியது.

பார்த்திருப்பானோ என்று பதற்றம் வேறு. அவர்கள் குடும்பத்தில் அத்யுதாரன் மீதான அந்த மரியாதையும் பயமும் ஏகத்திற்கும் அனைவரிடத்திலும் இருந்தது.

இப்போதும் அதனை எண்ணியே வாய் திறவாமலிருக்க, அத்யுதாரன் ஏசியின் குளிரை குறைத்து வைத்தான்.

“என்ன மாதவ், சைலன்ட்டாவே இருக்க?…” என கேட்க,

“இல்லையே. நான் ஓகே தான் மாமா…” என்றவன் நிலாவை திரும்பி பார்த்தான்.

“அப்பறம் ஏன் அவக்கிட்ட ஸ்கூட்டியை ட்ரைவ் பண்ண விட்ட?…” என்றதும் தூக்கிவாரிப்போட்டது.

“மாட்னடா அண்ணா. முடிஞ்ச போ…” என நிலாவுமே பீதியானாள்.

“இல்ல இங்க பக்கத்து ஸ்ட்ரீட்லருந்து தான் மாமா…” என அவனுமே சரண்டராகிவிட அரைமணிநேரமாகிவிட்டது அவன் மீள்வதற்கு.

அத்தனை அறிவுரை. அவ்வளவு கண்டிப்பு. அத்யுதாரன் முகத்தில் ரௌத்திரமில்லை. ஆனால் கண்களில் தொனித்திருந்தது.

“ஸாரி மாமா…” என மாதவ் ஒப்புக்கொடுக்க,

“நீ ரொம்ப ஸ்பீட் அப்படின்றதால தான் உனக்கு ஸ்கூட்டி வாங்கி தந்திருக்காங்க அதுகூட காலேஜ் போறியேன்னு நான் சொல்லி தான். அதுவும் வேண்டாம்ன்னு தோணுதோ?…” என்றவன்,

“அவளுக்கு எப்போ சொல்லித்தரனுமோ அப்போ பழகட்டும். அப்படியே இருந்தாலும் இப்போ ரோட்ல நீ ஸ்கூட்டி தந்தது அபென்ஸ். புரியுதா?…” என்று கூற,

“இல்லை மாமா. இனிமே தரமாட்டேன்…” என்று உடனடியாக கூற, நிலாவுக்கு பொடுபொடுவென்று வந்தது.

“என்ன வர்ணா? உனக்கு தனியா சொல்லனுமா?…” என அத்யுதாரன் கேட்க,

“அச்சோ அதெல்லாம் இல்லை. இதுவே பளிச்சின்னு புரிஞ்சு போச்சு…” என்று சொல்லியவளுக்கு கோபமும், அழுகையும் சரிவிகிதமாய் தோன்ற கூடவே உடலில் சூடும் கூடியது.

சாப்பாடு வரவும் இருவருமே அரைகுறையாய் தான் உண்டனர். முதலில் கிளம்பினால் போதும் என்று தோன்றிவிட்டது.

“ஓகே, நாங்க கிளம்பறோம் மாமா. ரெயின் கோட் இருக்கு. போய்ப்போம்…” என்று மாதவ் கூற நிலா எழுந்தேவிட்டாள்.

“நீ போய்டுவ. ஆனா வர்ணா?…” என கேட்ட அத்யுதாரன்,

“பீவர் எப்போதிருந்து?…” என்றான் அவளிடம்.

“பீவரா?…” என மாதவ்வுமே தங்கையை பார்க்க, அவளின் முகமும் நுனிமூக்கும் இன்னுமே சிவந்து போயிருக்க கண்ணில் ஒருவித களைப்பும், சிவப்பும் ஏறியிருந்தது.

“வரும்போது நல்லா தான் இருந்தா…” என்ற மாதவ்,

“வீட்டுக்கு போவோம். அம்மா வரவும் ஹாஸ்பிட்டல் போவோம்…” என்று அழைக்க,

“வேண்டாம். நீ வீட்டுக்கு போ. மழை பரவாயில்லை. பார்த்து போகனும்…” என்றான்.

“அப்போ நிலா…” என்றதும் நிலாவும் புரியாமல் பார்க்க,

“நான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் பார்த்துட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்…” என்றவன் தன் கார் சாவியை எடுத்துக்கொண்டான்.

“பார்க்கிங்ல இருக்கேன். வா…” என்று தலையசைத்துவிட்டு முன்னே செல்ல,

“போச்சு. இதெல்லாம் எனக்கு தேவையா?…” என தலையில் கை வைத்தாள் நிலவர்ணித்தா.

“பேசாம போய்டு. இல்லைன்னா அம்மாட்ட சொன்னாலும் சொல்லிடுவாங்க…” என்று மாதவ் அவளை அனுப்ப,

“நீ கூட வாயேன்டா. எல்லாம் உன்னால…” என்றாள் அவள்.

“ம்ஹூம். உன்னோட நான் வந்தா திரும்ப மாமா இந்த ஸ்கூட்டியை எடுக்கவிடமாட்டாங்க. நீ போ. வேணா ஒன்னு பன்றேன். எப்படியும் வழக்கமா நாம போற ஹாஸ்பிட்டலுக்கு தான் போவாங்க. அங்க வர்றேன். நீ போ…” என்று சொல்லி அனுப்பியவன் தானும் உடன் பார்க்கிங் வரை வந்தான்.

“வண்டி இங்க நிக்கட்டும் மாதவ், நீயும் வா…” அத்யுதாரன் அவனையும் அழைக்க,

“ஐயோ இருக்கட்டும் மாமா. நீங்க போய்ட்டு வாங்க…” என்றவன் தன் இருசக்கர வாகனத்தை நோக்கி சென்றுவிட நிலா காரில் அமர்ந்தாள்.

“எப்போருந்து காய்ச்சல்?…” மீண்டும் அதையே அவன் கேட்க,

“மார்னிங் லேசாய் தலைவலி மட்டும் தான் இருந்துச்சு. கொஞ்சம் டயர்ட். அவ்வளோ தான்…” என்று சொல்ல,

“இதோட மழையில இங்க வரை வந்திருக்க?…” என அத்யுதாரன் அதட்ட, நிலவர்ணித்தா கப்சிப்.

மௌனமாய் காரை இயக்கியவன் மனதெங்கும் சில்லெனும் தூறல் பொழிய நிலவின் வெளிச்சம் அவன் விழிகளில் நிறைந்தது.

error: Content is protected !!