குளிர் பௌர்ணமி தூறலில் – 1 (2)

ஒருவழியாக அந்த பட்டு மாளிகைக்கு வந்து சேர மழையும் பிடித்துக்கொண்டது.

“போச்சு நனைஞ்சிட்டோம்…” என்று சொல்லிக்கொண்டே நுழைய,

“அடடே நிலாவும், மாதவுமா? வாங்க வாங்க….” என்று வரவேற்றார் செக்யூரிட்டி.

“ஹாய் அங்கிள்…” என்று அவரை நலம் விசாரித்துவிட்டு உள்ளே வந்துவிட,

“என்னடா நிலா? இந்தநேரம் அதுவும் ஸ்கூல் யூனிபார்ம்லையே…” என ஆச்சர்யத்துடன் கேட்டார் மாளிகையின் சூப்பர்வைசர் திருஞானம்.

“அட அங்கிள் இது உங்களுக்கு லன்ச் டைமாச்சே?…” என்றவள்,

“அம்மாவுக்கு நாளைக்கு பர்த்டே. அதான் நானும் அண்ணாவும் சேர்ந்து சேரி எடுத்துட்டு போகலாமேன்னு வந்தோம்…” என்றவள் சுற்றிலும் பார்த்தாள்.

எப்போதும் போல் கடையில் கணிசமான கூட்டம் இருக்கத்தான் செய்தது.

பாரம்பரியம் பட்டு மாளிகை என்றால் அத்தனை பிரசித்தி. தரமும், புதுமையுமாக இப்போதும் அவர்களின் கடையினை நோக்கி மக்களை இழுத்துக்கொண்டிருந்தனர்.

அந்த கடை மட்டுமல்லாது அதனை நடத்துபவர்களும் அந்த ஊரிலேயே மிகப்பெரிய குடும்பம். செல்வாக்கும் கூட.

இப்போதும் ஐப்பசி மாதம் அடைமழையின் வேகத்திலும் இதோ மக்கள் வந்து குவிய பரபரப்புடன் இருந்தது அந்த கடை.

“மாதவ் காணுமே? சேர்ந்து வந்தேன்னு சொன்ன?…” ஞானம் கேட்க,

“பார்க்கிங்ல ஸ்கூட்டியை விட போயிருக்கான். இப்ப வந்திருவான்…” என்றவள்,

“லேட்டஸ்ட் டிஸைன்ஸ் என்ன வந்திருக்கு அங்கிள்?…” என விசாரித்தாலும் விழிகள் கடையினை அளவிட்டு இறுதியாய் அந்த நீண்ட வராண்டாவின் ஒருபகுதியில் இருக்கும் தனிப்பட்ட அறையில் பதிந்து விலகியது.

“நிலா…” என ஞானம் அழைக்க,

“ஹாங் அங்கிள்…” என்று கேட்கையிலே மாதவ் வந்துவிட்டான்.

அவனிடமும் அவர் விசாரித்துவிட்டு என்னென்ன புடவைகள் எங்கே என்று சொல்ல,

“தாத்தா இல்லையா அங்கிள்?…” என்றான் மாதவ்.

“அரசு ஸாரும், கதிரவன் ஸாரும் இப்ப தான் கிளம்பினாங்க. சின்ன தம்பி உள்ள தான் இருக்காங்க. கூப்பிடவா?…” என்று கேட்க,

“போச்சு, மாமாவா?…” என தலையில் கைவைத்தான் மாதவ்.

“அட என்ன தம்பி, உங்க மாமா தான? என்ன பயம்?…” என்று அவர் சிரித்துக்கொண்டே கேட்க,

“அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல புடவையை பார்க்கனும். நாங்க போய் எடுத்துட்டு கிளம்பறோம் அங்கிள்…” என்றவள் மாதவ்வை இழுத்துக்கொண்டு சென்றாள்.

“இரு நிலா, வந்துட்டோம். மாமாவை பார்க்க வேண்டாமா?…” என கேட்க,

“அதெல்லாம் அப்பறம் பார்த்துப்போம். இப்ப நம்ம பட்ஜெட்க்கு புடவை எடுக்கனும். வா…” என அழைத்து செல்ல மேல்மாடியில் இருந்தனர் இருவருமே.

“பட்ஜெட் ஐயாயிரம்…” என்று புடவை எடுத்துப்போடுபவரிடம் அவள் கூற,

“நிலா தாத்தாவுக்கு தெரிஞ்சா?…” என்றார் அந்த பெண்மணி.

“ப்ச், ஆன்ட்டி. அதெல்லாம் எதுவும் சொல்லமாட்டாங்க. எடுத்து போடுங்க. நீங்க ஒன்னும் சொல்லக்கூடாது…” என்று சொல்லியவள் தன் அண்ணனுடன் சேர்ந்து புடவைகளை பார்த்து ஒருவழியாய் ஒன்றினை தேர்வு செய்தாள்.

“ஹ்ம்ம், இந்த ஐயாயிரத்தை சேர்க்கறதுக்குள்ள ஹப்பா…” என்று தலையை உலுக்கியவள்,

“வா ண்ணா முதல்ல பில் போட்டுட்டு கிளம்புவோம்…” என்றாள் சோர்வுடன்.

“புடவை எடுத்ததுக்கே டயர்டாகிட்டியா? சரித்தான்…” என்று கேலியுடன் மாதவ் கூற, நிலாவிற்கு தலை விண்ணென்று வலித்தது.

ஏற்கனவே காலையில் இருந்தே ஒருவித சோர்வு தட்டத்தான் செய்தது. இப்போது திடீரென்று இன்னுமே அவளுக்கு என்னவோ செய்ய வீட்டிற்கு சென்று உறங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று தோன்றியது.

இருவருமாக பில்லிங் கவுண்டருக்கு வந்து நிற்க அந்த புடவை பார்சல் செய்யப்பட்டு நிலாவிடம் தரப்பட வாங்கிக்கொண்டவள் பணத்தை நீட்ட,

“என்ன நிலா பாப்பா? புதுசா பணமெல்லாம்?…” என்று சிரித்தார் திருஞானம்.

“அங்கிள் இது நாங்க எங்க சேவிங்ஸ்லருந்து அம்மாவுக்கு வாங்கி தர்றது. நோ சொல்லாதீங்க. வாங்குங்க. இல்லைன்னா வேற எதாச்சும் கடையில போய் எடுத்துப்பேன்…” என்றாள் அவரிடம் அதட்டல் போல.

“அட…” என்றவர்,

“சரி இப்படி வந்து உட்காருங்க. வந்து எதுவுமே குடிக்கலை. இப்ப மழையில வண்டில போகமுடியாது….” என்று இருவரையும் அமர வைக்க,

“எனக்கு காபி…” என்றாள் நிலாவும்.

“லன்ச் டைம்ல என்ன காபி?…” என மாதவ் அதட்ட,

“ண்ணா ப்ளீஸ்…” என்றவளின் முகம் பார்த்து,

“என்னவோ போ…” என்றான்.

தனக்கு ஒரு பழச்சாறு சொல்லிவிட்டு நிலாவின் அருகில் அமர்ந்தவன் வெளியே மழையை வேடிக்கை பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க, அவர்கள் கவனம் பெறாமல் மெதுவாய் பக்கவாட்டிலிருந்த கதவினை தட்டிவிட்டு அந்த அறைக்குள் நுழைந்தார் ஞானம்.

அங்கே முதலாளி இருக்கையில் அமர்ந்திருந்தவன் பார்வை எதிரிலிருந்த கணினியில் பதிந்திருந்தது.

அத்தனை ஆழமாய், ரசனையாய் விரிந்திருக்க சுழல்நாற்காலியில் இருந்தவன் முகத்தினுள் சின்னதாய் ஒரு குறுகுறுப்பும்.

“தம்பி…” என்று அவர் அழைக்கவும் நிமிர்ந்தவன்,

“வாங்க ண்ணே….” என்றான்.

“நிலாவும், மாதவ்வும் வந்திருக்காங்க…” என்று கூற,

“ஹ்ம்ம், பார்த்தேன்…” என்றவன் பார்வை கணினியை காண்பித்து அவரிடம் திரும்ப,

“மதியம்மாவுக்கு புடவை எடுத்திருக்காங்க. பணம் தருவேன்னுட்டு சொல்றாங்க…” என்று கூறவும் சின்னதாய் புன்னகை அவன் முகத்தில்.

“வேண்டாம்ன்னு சொன்னீங்களா?…” என கேட்க,

“சொன்னேனுங்க. ஆனா எங்க? வாங்கித்தான் ஆகனும்ன்னு நிலா அதட்டுது…” என்றதும் மீசைக்கடியில் அமர்த்தலான புன்னகை.

“சரி, நீங்க போங்க. வர்றேன்…” என்று அவரை அனுப்பிவிட்டு தானும் இருக்கையை விட்டு எழுந்துகொண்டான்.

முதுநிலை கல்லூரிப்படிப்பினை முடித்துவிட்டு கடந்த ஒருவருடமாக தங்களின் இந்த கடையினை தன் பொறுப்பில் அவன் தான் கவனித்து வருகிறான்.

அறையை விட்டு வெளியேற கதவை திறந்தவன் பார்வை நொடிப்பொழுதில் கண்ணாடியில் தன்னை கவனித்துக்கொண்டு திரும்பியது.

முகம் எப்போதும் போலிருக்க கண்கள் அத்தனை ஆவலுடன் வெளியில் இருந்தவளை காண தவித்து தாவியது.

“நிலா…” என்ற ஞானத்தின் குரலில் சுவாதீனமாய் திரும்பி பார்த்தவள் பார்வையில் அவனும் சேர்ந்து விழுந்தான்.

“அத்யு மாமா…” என தன்னைப்போல் நிலவர்ணித்தா எழுந்து நின்றுவிட, ஒற்றை தலையசைத்து தான் தான் என்பதை உணர்த்தினான் அவன், அத்யுதாரன்.     

“இங்க என்ன பன்றீங்க ரெண்டுபேரும்?…” என கேட்டவன்,

“அதுவும் நீ ஸ்கூல் யூனிபார்ம் கூட மாத்தாம?…” என கேட்டவனின் ஒற்றை கை அங்கிருந்த மேடையில் பதிந்து அதில் அவனுமே சாய்ந்து நின்றான்.

“நீ சொல்லு…” என நிலா மாதவ்வை இடிக்க,

“நீ சொல்லு. நான் மாட்டேன்…” என்றான் மாதவ் நிலாவிடம்.

“ஹோய் என்ன?…” என்றான் இருவரிடத்திலும் அதட்டலுடன்.

error: Content is protected !!