குளிர் பௌர்ணமி தூறலில் – 1 (1)

பௌர்ணமி – 1

          ‘ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார் பட்டி வரவேண்டும்’ என்று அந்த பாடல் திடீரென ஒலிக்க சத்தம் காதை பிளந்தது.

வீட்டினுள் தேடு தேடு என்று இருவரும் தேடிக்கொண்டிருக்க ஒருவர் கூறுவது இன்னொருவருக்கு கேட்கவில்லை.

“இவனுங்க வேற இம்சைங்க…” என்று தலையில் அடித்துக்கொண்டு என்னவென்று வெளியில் சென்று பார்க்கையில் எதிரிருக்கும் வீட்டின் முன் ரேடியோக்குழாய் கட்டியிருந்தது.

முதல்நாள் கூட இதனை கவனிக்கவில்லையே என பார்த்தபடி மீண்டும் உள்ளே வந்தான் மாதவ்.

“எதிர்வீட்டுல நாளைக்கு கல்யாணம் தம்பி. அதான் இப்பவே கட்டிட்டாங்க…” என வீட்டில் உதவிக்கு இருக்கும் பெண்மணி கூற,

“ஹ்ம்ம் நானுமே கவனிக்கலைக்கா. அதுக்குன்னு இத்தனை காலையிலையேவா?…” என்றவன்,

“ஓகே நாங்களும் கிளம்பறோம். டைமாச்சு…” என்று வேகமாய் தங்கையை அழைக்க சென்றான்.

“ஏய் பேய்க்குட்டி,…” என அவள் தலையில் நங்கென்று குட்டியவன்,

“கிடைச்சதா?…” என்று கேட்க,

“ஹ்ம்ம் எடுத்துட்டேன்…” என அந்த ஐநூறு ரூபாய் தாள்களை காண்பித்து முகம்கொள்ளா புன்னகையுடன் கூறியவள் சட்டென முகம் மாறி,

“சனியனே. என்னை பேய்க்குட்டின்னு சொல்லாதன்னு எத்தனைதடவை சொல்லிருக்கேன்…” என்று அண்ணன் என்றும் பாராமல் மொத்தினாள் அவள்.

“அடி தான் விழும் நம்ம ரெண்டுபேருக்கும். அம்மாவுக்கு தெரிஞ்சா தொலைஞ்சோம். இப்ப இந்த சண்டை அவசியமா? கிளம்பி வா பிசாசே…” என அப்போதும் தங்கைக்கு பிடிக்காததை அவன் கூற,

“உன்கூட வரவே மாட்டேன். போடா…” என முறுக்கிக்கொண்டாள்.

“பாப்பா போன்…” என்று உதவிப்பெண் வந்து இருவரின் சண்டையையும் நிறுத்தி போனை நீட்ட,

“யாரு?…” என கேட்டுக்கொண்டே வாங்கினாள் அவள். நிலவர்ணித்தா.

“ஐயா தான்…” என்று சொல்லிவிட்டு அந்த அறையின் கதவை சாற்றிவிட்டு செல்லவும் தான் கொஞ்சம் கேட்கவே செய்தது.

“டாடி…” என்று எடுப்பிலேயே அவள் சந்தோஷமாய் கூச்சலிட,

“என்னடா பன்றீங்க? ஸ்கூலுக்கு புறப்பட்டாச்சா?…” என குபேரன் பேச,

“ஓஹ் எஸ். அண்ணா தான் இன்னும் கிளம்பாம இருக்கான்…” என அவனை மாட்டிவிட,

“அவனா, அதெல்லாம் புறப்பட்டுடுவான். சரி பார்த்து போய்ட்டு வாங்க…” என்று கூறியவர்,

“டாடி கண்டிப்பா நைட் வந்திருவேன். சரியா?…” என்று மகளிடம் கூற,

“வந்துடனும். நாங்க நிறைய ப்ளான்ஸ் வச்சிருக்கோம்…” என்ற மகளின் பேச்சில் சிரித்தவர்,

“அதெல்லாம் வந்திடுவேன் குட்டிம்மா…” என்றதும் மாதவ்விடம் கைப்பேசியை கொடுத்தவள் தங்கள் இருவரின் புத்தகப்பையையும் எடுத்துக்கொண்டு சேகரித்த பணத்தையும் பத்திரமாய் பேக்கினுள் வைத்தபடி வெளியேறினாள்.

செல்லும்பொழுதே ‘சீக்கிரம் பேசிவிட்டு வா’ என்னும் குறிப்பினை தந்துவிட்டு வெளியேறினாள்.

“என்ன மாதவ், ரெடியாகிட்டீங்களா?…” என மகனிடம் கேட்க,

“எஸ் டாட். இன்னைக்கு சாட்டர்டே ரெண்டுபேருக்குமே ஹாஃப் டே தான். வந்திருவோம்…” என்றும் அவரிடம் மகன் கூற,

“ஓகே, அம்மாக்கிட்ட பேசிட்டேன். அவங்க பங்க்ஷன் முடிஞ்சதும் வந்திருவாங்க. லேசா தூறல் இருக்கு போல? பேசாம ஆட்டோ வர சொல்லி போங்களேன்….”  என மகனிடம் கூறவும்,

“இல்ல டாட். பக்கம் தானே. அவ்வளோ பெருசா இல்லை. சாப்பிட்டு கிளம்பும்போது அதிகமா பெய்ஞ்சதுன்னா ஆட்டோ எடுத்துக்கறோம். இல்லைன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை. நிலாவை ஸ்கூல்ல விட்டுட்டு நான் காலேஜ் போயிருவேன்,..” என்று சொல்ல,

“ஓகே பார்த்துக்கோ. டாடி நைட் வந்திருவேன்….” என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார் குபேரன்.

குபேரன் கிரிமினல் லாயர். நீதிமன்றத்தில் அரசுதரப்பு வழக்கறிஞராக பணிபுரிபவர்.    

அவர் மனைவி சுகமதி குடும்பத்தலைவி. இருபிள்ளைகள். மாதவகிருஷ்ணன். நிலவர்ணித்தா.

மகன் கல்லூரி முதலாம் ஆண்டிலும், மகள் பதினோறாம் வகுப்பிலுமிருந்தனர்.

அவரிடம் பேசிமுடித்து வெளியே வர நிலா உண்ணவே துவங்கியிருந்தாள்.

இதில் உதவிக்கு இருக்கும் பெண்ணிடம் கத்தி கத்தி பேச தொண்டையே வலிக்கும் போலானது அவளுக்கு.

“டேய் பேய்க்குட்டி ஒழுங்கா சாப்பிடு. அதுக்கப்பறம் பேசு. அதுதான் சரியா கேட்கலைல. அப்பறம் என்ன?…” என அவளின் காதருகில் வந்து அவன் இரைய,

“ஏன்டா இப்படி பன்ற?…” என்று அவனிடம் முறைத்தவள் காதை குடைந்துகொண்டாள்.

“அம்மா வந்தா லேட்டா போனீங்களான்னு கேட்டு திட்டுவாங்க. இப்பவே டைமாகிடுச்சு…” என்றதும் தலையசைத்து வேகமாய் உண்டவள்,

“அம்மா வரவும் சொல்லிடுங்க கமலாம்மா…” என்றுவிட்டு தனது பேக்கை மட்டும் எடுத்துக்கொண்டு செல்ல மாதவின் முகத்தில் புன்னகை.

தானும் எழுந்துகொண்டவன் தனது பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டான்.

“செடிகளுக்கு தண்ணி எதுவும் பாய்ச்ச வேண்டாம் கமலாம்மா. மழை பெருசாகும் போலருக்கு. நைட் வேற விழுந்துட்டே இருந்துச்சே. நீங்க எல்லாத்தையும் பெருக்கி மட்டும் விடுங்க. மகிழம்பூ மரம் சுத்தி நிறைய விழுந்துகிடந்தது…” என அவரிடம் சொல்லியவன்,

“உங்களுக்கு மட்டும் சமைச்சுக்கோங்க. நானும் நிலாவும் வெளில சாப்பிட்டு வருவோம். சரியா? நான் கிளம்பறேன்….” என்றுவிட்டு வெளியே வர தயாராய் நின்ற நிலா ரெயின்கோட்டை அணிந்திருந்தாள்.

“அத்தனையா அடிச்சு ஊத்துது பேய்க்குட்டி? அம்புட்டுக்கு உஷாரு…” என தங்கையை வம்பிழுத்துக்கொண்டே சென்றவன் அவளின் பள்ளியின் முன் ஸ்கூட்டியை நிறுத்த,

“அண்ணா மறந்துடாத. டைம்க்கு வந்துடு. அப்ப தான் நாம கரெக்ட்டா போய்ட்டு எடுத்துட்டு வர முடியும். அதுவும் அம்மா அஞ்சு மணிக்கெல்லாம் வந்தாலும் வந்திருவேன்னு சொல்லிருக்காங்க…” என்று அறிவுறுத்தினாள்.

“அதெல்லாம் வந்திருவேன். நீ உள்ள போ…” என்று அவளை அனுப்பிவைத்துவிட்டு தன் கல்லூரி நோக்கி சென்றான் மாதவ்.

பள்ளிக்குள் நுழைந்ததுமே நிலவர்ணித்தாவின் முகம் தோழிகளை தேடி செல்ல, அதன்பின் நேரம் சென்றதே தெரியவில்லை.

மதியம் பள்ளி முடிந்து கிளம்புகையில் மழை பெய்யும் அறிகுறியே இல்லை.

சரியாக பள்ளியின் வாசலுக்கு வர, பத்துநிமிடம் கழித்து தான் வந்து சேர்ந்தான் மாதவ்.

“நினைச்சேன். என்னை வெய்ட் பண்ண வச்சிட்ட இல்ல? உனக்கிருக்குடா ஒருநாள்…” என்று சொல்ல,

“உனக்கு வண்டி ஓட்ட தரலாம்ன்னு நினைச்சா திட்டவா செய்யிற…” என்று அவனும் முறுக்கிக்கொள்ள சட்டென மலர்ந்துவிட்டது நிலாவின் முகம்.

“டேய் அண்ணா நிஜமாவா சொல்ற?…” என அவனின் கையை பிடித்துக்கொள்ள,

“அதான் கோவப்படறியே…” என்றான் இன்னும் மிதப்புடன்.

“சரி அப்பறமா திட்டிக்கறேன். இப்போ வண்டியை தா…” என்று கேட்க,

“இங்க வேண்டாம். கடைக்கிட்ட போய் தர்றேன்…” என்றவன் சொல்லியதை போலவே ஜவுளிக்கடைக்கு செல்லும் இருவீதிக்கு முன்பே வண்டியை தங்கையிடம் தந்துவிட்டான்.

error: Content is protected !!