உயிர் தழுவும் விழியே – 9 (2)

பூமிநாதனை உள்ளே உறங்க சொல்லுமாறு அழுத்தியும் சொல்லமுடியவில்லை, தானும் எதுவும் செய்ய முடியவில்லை. அதனைகொண்டே அசையாது படுத்திருந்தார் சிந்தா.

சித்திரைவிழி தலையணை, போர்வை, பாய் என்று அனைத்தையும் எடுத்து வர அவளுடன் வாங்க கையை நீட்டினான் பூமி.

அதனை கண்டுகொள்ளாமல் தாண்டி சென்று தானே அவனுக்கு ஒன்றுபோல விரித்துவிட்டாள்.

“இந்தாரும்…” என்று நீட்ட அவளின் கையில் அவனின் உடைகள்.

“போயி உடுப்ப மாத்திட்டு வந்து ஒறங்கத்தான…” என்றவளை சிறு புன்சிரிப்புடன் பார்த்தவன்,

“கொண்டா, கூதக்காத்தா இருக்கேன்னு நெனச்சேன்…” என்று உடையை வாங்கிக்கொண்டு நிற்க,

“தெக்கித ரூமுல மாத்தும்…” என்று காண்பித்தாள். 

ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்றவன் லுங்கியையும் பனியனையும் போட்டுவிட்டு சட்டையை தோளில் வெறுமனே போட்டு வந்துவிட்டான்.

“சட்டெக்கி என்ன நோவா? அதையும் போடுமய்யா…” என்றாள் வேகமாய்.

“வேக்காடா இருக்குடி. ஒறங்கையில என்னிக்கி சட்ட போட்டேன் நானு? நீயே சொல்லு?…” என்று வம்பிழுக்க அவனை முறைப்புடன் பார்த்தாள்.

“செரி, நீ போயி படு. நாளைக்கி பாத்துகிடுவோம்…” என்று அவன் சொல்லவும் தலையசைத்து சென்றவள் சற்றுநேரம் கழித்து தான் அவனுக்கு குடிக்க எதுவுமே குடுக்காதது நினைவுக்கு வந்தது.

சிந்தா இப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க மழையும் அத்தனை சுலபமாக விட்டபாடில்லை.

எழுந்து சென்று தண்ணீரை கொண்டு வந்தவள் அவனின் தலைமாட்டில் வைத்துவிட்டு பார்க்க அவனோ சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தான் உறங்காமல்.

“என்ன ஒறங்கலையோ?…” அவனிடம் கேட்க,

“இங்கிட்டு வா. ஒக்காறேன்…” என்றான்.

முகத்தில் யோசனை படர்ந்திருந்தது அவனின் குரலிலேயே தெரிந்தது. இருட்டுக்கு பழக்கப்பட்டிருந்தது அவனின் முகம்.

“என்னவோ ரோசனையா?…”

“ம்ம்ம்ம்ம்..” என்றவன்,

“அடிக்கித மழக்கி பந்தலெல்லா பிச்சிக்கிட்டு போயிருக்குமின்னு தோணுதுத்தா. நாளைக்கி புதுசுதேன் வேயனும்ங்காட்டி தெரியிது…” என அவன் சொல்லவும் ஆமோதிப்பதை போல விழியும் தலையசைத்தாள்.

“அத்தே ஒறங்கியாச்சா?…”

“ஆமா…” என்றவள் வேறெதுவும் பேசவில்லை.

இருவரிடமும் கனத்த மௌனம். பல மாதங்கள் கழித்து ஓர் இரவு, இருவரும் அண்மையில்.

பேச, பகிர என ஏக்கங்களும், வலிகளும், குமுறல்களும் பலதும் இருந்தும் இருவரிடத்திலும் மௌனமே சஞ்சரித்துக்கொண்டிருந்தது.

“சடெயங்கிட்ட காசு இருக்குமான்னு சந்தேங்கதேன் விழி…” என்றான் அவனாகவே.

அவளுமே அனுமானித்தது தானே? பணத்தை வாங்கிக்கொண்டு ஓடியவனிடம் எப்படி இருப்பு இருக்கும்? இது அவள் எதிர்பார்த்தது தான்.

“இருந்தாமட்டுக்கு யே அய்யன் வந்துருவாரா என்ன? போமய்யா…” என்றாள் சலிப்புடன்.

அது பணம் கிடைக்காத சலிப்பில்லை. உயிரே போயிற்று. இதில் பணம் மட்டும் எப்படி கிடைத்து என்ன? என்ற சலிப்பு.

“அவேன என்னத்தா செய்ய?…”

“என்னிய கேட்டா?…” என்றவள் ஒன்றும் சொல்லவில்லை.

அவளின் கோபமும், ஆதங்கமும் அந்த குரலில் அடக்கப்பட்டிருந்தது. அதற்குமேல் பேசினால் இன்னுமே கோபப்பட்டு பேசுவாள் என்று மௌனமாகி போனான்.

“ஆமா இந்த ராத்தங்கலு ஒம்ம அம்மைக்கு தெரியுமா?…” என்றாள் இருந்த இறுக்கத்தை மறந்து இலகுவான குரலில்.

“தெரிஞ்சாங்காட்டி இந்நேரத்துக்கு இங்கல வந்து ஒன்னிய பாத்து ஒரு மயிலாட்டத்த ஆடிருக்கும். போன போடட்டா? சொல்லுய்யா?…” என்றாள் நக்கலாக.  

“இப்ப என்னத்துக்குங்கேன்? கம்மின்னு எந்திச்சி போடி…” என்றான் கடுப்பாக.

“எம்போனு வேணா. ஒம்போன கொண்டா. அதுல பேசுதேன்…” என்று அவனை சீண்டினாள் இன்னும்.

இருட்டு தான் என்றாலும் மின்னல் கீற்றின் வெளிச்சத்திலும், இடியின் மினுமினுப்பிலும் கண்ணுக்கெதிரே மனைவியின் வதனம் வரிவடிவமே ஓவியமென இருக்க தள்ளி நின்று  பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு ஏக கடுப்பு.

இதில் தாயை சொல்லி வேறு வெறுப்பேற்றும் அவளை என்ன செய்தால் தகும் என்பதை போல முறைத்தான்.

“எந்திச்சு போடி…” மீண்டும் சொல்ல,

“என்னன்னாலும் மாமியா மனசு தாங்காதுல. நானே போன போட்டு தாக்கல் சொல்லட்டா?…” என்றாள் இன்னும் வம்பாக.

“இன்னிக்கு ஏங்கிட்ட செமத்தியா வாங்குவடி. போங்கேன்ல…”

“இது யே வீடு. என்னிய இங்கன இருந்து வெரட்ட ஒன்னால ஆவாது…” என்று மிதப்பாய் சொல்ல,

“ஓ வீடு எதுடி? என்னிய ஏத்தி விடாத. அங்க ஒன்ன ஆரும் போவ சொல்லல. நீயாத்தான வந்த இங்க?…” என்றான்.

“ஒ அம்மை செஞ்சதுக்கு இந்தமட்டும் கம்மின்னு வந்தேன்னு வச்சிக்க. இல்லாங்காட்டி…” என விழி பல்லை கடிக்க,

“அது என்னிக்குத்தேன் எதுவும் செய்யாம இருந்திச்சு? நீயானா என்னிய பாக்க வேணா?…”

“அப்ப அது செஞ்சது ஒன்னுமில்லங்குத மாரில இருக்கு ஒம்பேச்சு?…”

இருவரின் பேச்சும் திசை மாறியது. அவனிடம் பேசுவதற்கென அந்த இரவு அமைந்துவிட்டதோ?

“ஏன்டி வம்பாடு பண்ணுத? அம்மை பத்தி ஒனக்கு தெரியாதா? இன்னிக்கி நேத்தா அது பேசுது?…”

“அப்ப என்ன பண்ணாலும் நா ஏறி மிதின்னு மண்ணாட்டம் கெடக்கனுமோ?…” என்றாள் சூடாக.

“ஒங்கிட்ட சொன்னேன்ல. நா வார வரைக்கி செத்த இருன்னு. கொஞ்சந்தேன் பொறுத்து…”

“என்னத்த பொறுக்கவா? ஏம்ய்யா? ஒங்கம்மா பசியறிஞ்சு சோறு போட நா பொறுக்க தேவையில்ல. அதுக்கு புழுக்க வேல பாக்க நா பொறுக்க தேவையில்ல. அது நீட்டி நிமிக்குததுக்கு ஒடனேங்காட்டி போயி நிக்க நா பொறுக்க தேவையில்ல….”

“ஆனா சடவுல மட்டு எஞ்சத்தம் கேக்கனுமின்னா நா இந்த ராசா வார வரைக்கி பொறுக்கனுமோ?…” விழியின் கேள்விகளில் அவன் தான் விழிபிதுங்கி பார்த்தான்.

இந்த பேச்சை ஆரம்பித்தால் எங்கே சென்று நிற்கும் என்று அவன் அறிந்தது தான். இருந்தும் பேசிவிட அவளுக்கு பதில் சொல்ல தன்னால் முடியுமா?   

“அததுக்கு நேரத்துக்கு நடக்கறது செரின்னா நா ரோசப்படற நேரத்துக்குங்காட்டி மாத்தரோ ஒவ்வரவ பாத்து நா காத்துக்கிட்டு இருக்கனுங்கியே? ஒம்மனசு வேவல?…” என்றாள் அத்தனை ஆத்திரத்துடன்.

“இருடி, நா என்ன சொல்லுதேன்னு மொத…”

“ஒ மொதல கொண்டு முடுக்குல வெய்யும். நல்லா வருது வாயில. இந்த காது குளுந்து போவ தான ஒங்கம்மா இய்யத்த காச்சி ஊத்துச்சு. செவிடா நானு?…”

“விழி…”

“இங்காருய்யா ஒ இஷ்டத்துக்கு நா பேச முடியாதுங்கறேன். அது வாய் கிழிய பேசும். நா இந்தான்னு காத நீட்டிட்டு குன்னி போயி நிக்கனுமோ? என்ன அவசிங்கறேன்?…”

“என்னிய வெறும்பய மவன்னு ஒங்கம்மா ஏசும், எகத்தாள பேச்சுபேசும். நா மட்டும் நீ வந்து எம்பொண்டாட்டின்னு கொடி புடிக்கித வரைக்கி கல்லா நிக்கனும். இல்ல? யே எனக்கு வாயில்ல?…”

“ஆத்தி. அடங்குடி கொஞ்சமாட்டும்…” என்றான் பூமி.

“என்னத்துங்கேன்?…” என்றவளை அதற்குமேலும் விட்டால் இன்னும் பேசி பேசி ஓயமாட்டாள், அத்துடன் மீண்டுமே அந்த வேதனைக்குள் சென்றுவிடுவாள் என்று நினைத்தவன் அவளை இழுத்து தன் மடியில் கடத்தினான்.

“யோவ் விடுய்யா…”  என்று திமிற,

“காப்பு கெட்டிருக்கேன்டி. ஒன்னுஞ்செய்ய மாட்டே..” என்றவனின் குரலில் மாறுபாட்டில்,

“ம்க்கும், கெட்டிருக்கறது சாமி காப்பு, ஆனா பேச்சுல, பாக்குததுல சரசந்தேன் பொங்குது. ஒன்னியலா ஆரு வெரதம் புடிக்க சொன்னா?…” என்று அவனை இடித்தாள்.

“என்னடி பண்ணட்டும். பொண்டாட்டி நீ? இந்த வார்த்தைய அன்னிக்கி கேட்டிருந்தா காப்பு கெட்டுவேனா?…” என்றவன்,

“விழி கூட வாடி. நரகந்தேன் எனக்கு. அங்க வந்து இரு. அங்கனயே சண்டைய போடு…”

“என்னத்துக்கு நீ என்னிய பொறுக்க சொல்லுவ. முன்னாங்காட்டி கூட என்னவோ. ஆனா…” என்றவள் அடக்கிய வார்த்தைகள் அவளை முழுதாய் புரிந்துகொண்டான்.

காலத்திலும் மாற்றமுடியாத பாவத்தை அல்லாவா செய்துவிட்டார்கள் தன் தாயும், அண்ணியும்.

“இங்காரு விழி, அங்கன வா. இரு. நா சொன்னா என்னியைவும் சேர்த்து நாலு  இடி இடிடி. ஆரு வேணாங்குதா?…” என்றவன்,

“மவனுக்கே இந்த கெதிதேன்னு அம்மை வாய மூடிக்கும். பொறவு எங்க மூத்தவக பேச? ஆனா எதுனாங்காட்டி கூட இருந்து பண்ணுடி…” என்றவனின் குரலில் மனது இளகினாலும் அறிவு மழுங்கவில்லை.

“பாத்தல ஒன்னிய செத்த உள்ள விட்டதுக்கு என்ன வேல பாத்துப்பிட்ட. விடுய்யா…” என்றவளை எழுந்துகொள்ளவிடாமல் அவனின் இடையை இன்னும் இறுக்கமாய் பிடித்து அணைத்துக்கொண்டான்.

“யோவ் ஒங்கூட நானு சண்டைய்யா…” விழியின் குரல் இளகி குழைய ஆரம்பித்தது.

அவன் மீது நெஞ்சம் நிறைய நிறைய ஆசைகள் கொண்டவள் அந்த நெருக்கத்தில் நிலைகுலைய ஆரம்பித்தாள்.

“நீதேன் சண்டக்கோழின்னு தெரியும்டி. ஆனாங்காட்டி எங்கூட ஒனக்கு என்னிக்கும் ஒரசல் இல்ல புள்ள…” அவனின் பேச்சுக்கள் கழுத்து வளைவில் குறுகுறுப்பை மூட்ட சுத்தமாய் அவளின் கட்டுப்பாட்டில் இல்லை விழி.

“இந்த மழ போனவாரங்காட்டி வந்துருக்க கூடாதான்னு இருக்குடி. ஏம்டி இடும்பு பண்ணுத?…” என்றான் இன்னுமே அவளை தனக்குள் புதைத்துக்கொண்டே.

“சொக்கா…” தன்னை மறந்த அவளின் அழைப்பில் உள்ளுக்குள் குளிர்ந்துவிட்டான்.

“சொல்லுடி, இன்னொருவாட்டி சொல்லு விழி…” என்றவனின் அத்துமீறலில் சுதாரித்தவள் படக்கென்று அவனிடமிருந்து தன்னை உருவிக்கொண்டு எழுந்துவிட்டாள்.

“ஒன்னிய…” என்றவளை கோபத்துடன் பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தவன்,

“ஒன்னும் பண்ணலத்தா…” என்றான் குறையாத புன்னகையுடன்.

“பேசாம இங்கினயே மொடக்கும். இல்லாங்கட்டி இழுத்து வெளியில உட்டுருவேன்…” என்று மிரட்டி செல்ல,

“ஏய் நில்லுடி…” என சொல்லவும் இடுப்பில் கை வைத்து முறைக்க,

“கேட்டதுக்கு ஒத்த வார்த்த மனசுக்கு சொவமா சொல்லல…” மீண்டும் ஆரம்பித்த இடத்தில் தான் அவன் நின்றான்.

“நானாத்தேன் வந்தேன் இல்லங்கல. ஆனா ஒவ்வீட்டுக்கு வர மனசு ஒப்பலைய்யா. வெளங்குதா?…” என்றாள் தவிப்புடன்.

அதன்பின் அவனும் பேசவில்லை அவளும் பேசவில்லை. விடியும் வரை இருவரும் அங்கேயே அமர்ந்திருந்தார்கள்.

error: Content is protected !!