உயிர் தழுவும் விழியே – 9 (1)

உயிர் – 9

          விழி பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுதே மாடியில் இன்னுமே சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது.

“யாத்தே சிட்டு…” என்று மகளிடம் வந்துவிட்டார் சிந்தா.

“ம்மோவ்…” என்று அவள் பேசும்முன் அந்த கம்பி கேட்டின் அருகே வந்து நின்ற உருவத்தில் சட்டென கத்த போன சிந்தாவின் வாயை பொத்தியவள் சற்றே நிம்மதியானாள்.

“தொறவா எங்கடி? மொத கொண்டிய தொற…”  என்று நின்ற பூமிநாதனிடம் பேச வாயை திறக்கும் முன் இன்னும் நான்கைந்து பேர் வந்துவிட்டார்கள்.

விழி உடனே உள்ளே சென்று சாவியை எடுத்துக்கொண்டு வந்து கதவை திறக்க பூமியின் பின்னால் ஊர்க்கார ஆண்கள் ஐந்துபேர் நின்றார்கள்.

வந்தவர்கள் அனைவருமே மழையில் நனைந்திருந்தார்கள் தெப்பமாய். பூமியும் நனைந்தே வந்திருக்க,

“என்ன?…” என்று விழி கேட்டாள். கேட்டை மெல்ல நகர்த்தி திறந்து உள்ளே வந்தவன்,

“மூச்சுக்காட்டாம செத்த இங்கனவே நில்லுங்க ரெண்டுபேரும்…” என்று எச்சரித்துவிட்டு பூமிநாதன் முன்னே செல்ல அவனுடன் மற்றவர்களும் செல்ல வெளியே வாசலுக்கு தள்ளி யாரோ நிற்பது தெரிந்தது.

இருட்டில் இருவரும் என்னவோ என்று பதறிக்கொண்டு நின்றிருக்க சிறிதுநேரத்தில் யாரோ அலறும் சத்தமும் மேலே பொருட்கள் உருளும் சத்தமும் கேட்க,

“ஆத்தே…” என்று பார்க்க போன மகளை இழுத்து பிடித்தார் சிந்தா.

“நில்லு புள்ள, எவன்னு தெரியங்காட்டி நீ என்னத்துக்கு போவ? நில்லுத்தா…” என்று பயத்துடன் மகளை பிடித்துக்கொள்ள மாடியில் இருந்து அத்தனைபேரும் தடத்தடவென்று இறங்கிவரும் சத்தம் கேட்டது.

அதற்குள் வாசலில் இன்னும் ஒருசிலர் கூடி நின்றுகொள்ள அவர்கள் பேச்சு சிந்தாவை கலவரபடுத்தியது.

“ஆம்பள இல்லாத வீடுன்னா எவென் வேணாலும் நொழையுதியான் பாரேன்?…” என ஒருவன் சொல்ல,

“நாம கவனிக்க போயி. இல்லாங்கட்டி கண்ணுல மண்ணல்ல வீசியிருப்பியான்?…” என்று அவர்களுக்குள் சொல்ல பேசிய பொருள் வேறாக இருக்க கேட்ட சிந்தாவிற்கோ தாங்கள் இருக்கும் நிலையை நினைத்தவருக்கு வயிறு பற்றி எரிந்தது.

தெளிவாக தன் காதில் விழுந்தாலும் இதை கவனிக்கும் நிலையில் சித்திரைவிழியுமே இல்லை.

யாராக இருக்கும் என்று பார்த்துக்கொண்டு அவள் இருக்க மௌனமாக கண்ணீர் வடித்தபடி இருந்தார் சிந்தா.

“எம்புட்டு தெகிரியம்டே ஒமக்கு? இன்னிக்கு சல்லி சல்லியா வேய்ஞ்சிபுடறோம் வாலே…” என்று அவனை அடித்து துவைத்து தரதரவென இழுத்து வந்தனர்.

வாசலில் இதற்கென்று காத்திருந்தவர்களிடம் அந்த ஆள் ஒப்படைக்கப்பட அவர்கள் பிடித்துக்கொண்டார்கள்.

“கோவில்ல கட்டி வெய்யிங்க. காவலுக்கு நாலாளு நிக்கனும் சொல்லிப்பிட்டேன்….” என்றான் பூமிநாதன்.

“காலையில பாத்துக்கிடுவோம் தம்பி. போயி ஒறங்கி வாரும். அதேன் சிக்கிட்டியான்ல. என்னன்னு தப்பிக்கிதியான்னு பாத்துப்புடுவம்…” என சொல்லி அவர்களும் கிளம்பவும் தான் பூமிநாதன் அந்த வீட்டு பெண்களை கவனித்தான்.

“அவென்…” என்று பூமிநாதன் பேசும் முன்பே,

“தம்பி அவென் எவன்னே தெரியாதுய்யா. என்னத்தையாச்சும் கேட்டு போடாதீரும். அந்த நிமிசாங்காட்டி யே ஆவியே முடிஞ்சிரும் சாமி…” என்று சிந்தா கண்ணீருடன் உடல் நடுங்க கையெடுத்து கும்பிட்டுவிட திகைத்து போனான் பூமிநாதன்.

“அத்தே…”  என்று அவன் பேசும்முன் விழிக்கு புரிந்துபோனது.

“இத்த நெனக்க என்ன இருக்கு? ஏம்த்தே?…” என்றவன் விழியும் அப்படி தான் நினைத்து நிற்கிறாளோ என்று,

“யே நா ஒன்னும் நெனக்கலடி. நீ சொல்லு இவகட்ட. என்னிய பேச விட சொல்லுங்கேன்ல. பாக்குத…” என்றான் ஆயாசமாய்.

யாரை எதற்கு பிடித்திருக்கிறோம் என்று தெரியாமலே இப்படி தவறாக நினைத்து வருந்துகிறார்களே என்று மனது கலங்கியது அவனுக்கு.

இப்படி ஒரு நிலையில் வேறு என்ன யோசிப்பார்களாம் என்றும் அவர்களுக்கு சார்பாகத்தான் நினைக்க தோன்றியது.

மனைவியின் பேச்சை எதிர்பார்த்து நிற்க அவளோ ‘நீ சொல்லித்தான் பாரேன். நினைத்துதான் பாரேன்’ என்னும் வித சவாலான பார்வை அவளிடத்தில்.

“ம்மோவ், ஆரும் எண்ணமும் நெனச்சா ஒனக்கென்ன? எவென் வந்தான்னு தெரியட்டும். மென்னிய திருகறேன்….” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.

பூமிநாதனுக்கு அத்தனை ஆற்றாமை பொங்கியது. தான் நினைப்பதும், நினைக்காததும் இவளுக்கு எதுவுமே இல்லையோ? என்று தான் தோன்றியது.

“மொத ரெண்டுபேரும் கம்மின்னு இருக்கீகளா?…” என்று அவன் பல்லை கடித்துக்கொண்டு பேசும்பொழுதே சிந்தாவிற்கு படபடப்பு அதிகமாகி லேசாய் தலை சுழல அப்படியே தாங்கி பிடித்தனர் இருவரும்.

“ம்மோவ்…” என்று அவரின் தலையை பிடித்துக்கொண்டு ஆட்ட,

“விழி, இவகள நவுத்துடி. உள்ள படுக்க வெக்க…” என்றான்.

இருவருமாக அவரை விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் படுக்க வைத்து உடனே அவள் தண்ணீரை தெளித்தாள்.

லேசாய் மயக்கம் தெளிந்தவரையே கடுமையாக பார்த்துக்கொண்டு தள்ளி நின்றான் பூமிநாதன்.

முகத்தை துடைத்துவிட்டு அவருக்கு நீரை புகட்டியவள் கைகள் நடுங்கிக்கொண்டு இருந்தது.

ஏற்கனவே தந்தையை இழந்திருந்தவள். இப்போது தாயிற்கும் இப்படி ஆகிவிட அத்தனை தைரியமும் வடிந்து ஓய்ந்த நிலை தான் சித்திரைவிழிக்கு.

பேசவும் தோன்றாமல் லேசாய் விசும்பலை அடக்கிக்கொண்டு அழவும் முடியாது தாயையே வெறித்துக்கொண்டு இருந்தாள்.

“இப்ப ரெண்டுபேத்துக்கும் ஒன்னு சொல்லவா? கேக்குதா நெலக்கி மனச கொண்டாந்து நிப்பாட்டியாச்சா?…” என்றான் அதே கடுமையும் முறைப்புமாக.

இருவரிடமும் பேச்சில்லை. சிந்தாவிற்கு மருமகனின் முகமே வேறு எதையோ சொல்லவிருப்பதாய் காட்டியது.

விழிக்கு எதையும் சிந்திக்கும் நிலையில் இல்லை. அவள் மனதோ தாயை சுற்றியும், தாயும் இல்ல என்றால் தங்கள் என்று இப்படித்தான் வந்தது.

“விழி என்னிய பாருடி…” என்று அதட்டினான்.

இன்னமும் மின்சாரம் வந்திருக்கவில்லை. அந்த விளக்கு வெளிச்சத்தில் அவள் திரும்பி பார்க்க கண்கள் கசிந்திருந்தது அவனுக்கு அப்பட்டமாக தெரிந்தது.

தன் மாமனாரின் இறப்பில் கதறி அழுது பார்த்தவன், அதன்பின் ஒருநாளில் கண்ணீரையோ, இப்படி ஒரு பயத்தையோ கண்டதில்லை.

மனதே ஆறவில்லை பூமிக்கு. தானிருந்தும் அவளை தாங்கமுடியாத தன்னிலையை அறவே வெறுத்தான் அந்தநொடி.

“இப்ப ஆர புடிச்சுட்டு போனாகன்னு வெளங்குச்சா?…” என்று கேட்க இருவருக்கும் தெரியவில்லை.

அவனை அடித்து பிடித்ததில் சட்டை கிழிந்து தொங்க தலை நிமிரவே முடியாமல் தளர்ந்திருந்தவனை இருட்டில் முகம் கூட பார்க்க முடியவில்லையே.

“சடையப்பன்…” என்றதும் இருவருக்குமே சுரணை வந்ததை போல திடுக்கிட்டு பூமியை பார்த்தார்கள்.

“யாத்தே, அந்த எடுவட்டப்பயலா?…” என சிந்தா இன்னுமே தெளிந்து கேட்டார்.

“ஆமாத்தே, அவென் மச்சினே வீட்டுக்கு வந்திருக்கியான். நம்மாளு ஒருத்தேன் கண்ணுல சிக்கிட்டியான். அதேன் அவன வளச்சு பிடிக்க பாத்தா தப்பிக்க மாடிக்கி மாடி தாவ ஆரம்பிச்சிட்டியான். அவென் கெரகம் எங்க சிக்கனுமோ அங்கினவே சிக்கிட்டியான்…” என்றவன்,

“நா சொல்ல வாரதுக்குள்ள நீங்களாட்டம் என்னன்னொன்னு நெனச்சு? என்னத்துக்கு இதெல்லா?…” என்று வருத்தம் மேலிட கேட்க சிந்தாவிற்கும் கண்ணீர் தான்.

“செரி ஒறங்குங்க. நா…” என்று அவன் முடிக்கும்முன்,

“கெளம்பும்…” என்று சொல்லிய விழி,

“எம்மோவ், படு. நா கொண்டிய பூட்டிட்டு வாரேன்…” என்று பூமிநாதனை கிளம்புமாறு எதிர்கொண்டாள்.

அவளை முறைத்துக்கொண்டு பார்த்தவன் வெளியேயும் திரும்பி பார்க்க இப்போது மழை இன்னுமே வலுத்து பெய்தது.

சிந்தா பாவமாய் மகளையும் மருமகனையும் மாறி மாறி பார்த்தார். அவன் கிளம்புவதை போல தெரியாததால்,

“என்ன? கெளம்புங்கன்றேம்ல? பொறவு ஒங்கம்மை இங்கின வந்து கரச்சல கூட்டும். எவ்வாய் நிக்காது, அம்புட்டுத்தேன்…” என விழி அதட்டலாக சொல்ல சட்டென சிந்தா,

“சிட்டு…” என்று தாயை பிடித்துக்கொண்டு மீண்டும் படுக்கையில் சாய பதறி போனாள் விழி.

“எம்மோவ், என்னத்தா செய்யுது? சொல்லேன்…” என்று பதட்டமாய் கேட்க,

“தல கிறுகிறுங்குதுடி சிட்டு….”

“ஆசுப்பத்திரிக்கி போவத்தான? வாத்தா…”

“அதெல்லா ஒன்னு வேணாமித்தா. ஒன்னிய தனியா விட்டுருவேனோன்னு நெஞ்சக்கரிக்கிதுத்தா?…” என்று ஏற்கனவே மகளின் மனதில் சுழன்றுகொண்டிருந்த புயலை அறியாமல் தானும் மேலும் பேசினார்.

“ம்மோவ்…” என்ற போதே குரல் இன்னும் உள்ளடங்கி அழுகை பொங்கிவிட்டதை பிரதிபலித்தது.

“எத்தே, செத்த கண்ண மூடி ஒறங்கும். நா இங்கினதேன் இருக்கேன்…” என்று பூமிநாதனும் சொல்ல அவனை மறுக்கும் நிலையில் விழியுமே இல்லை.

மனதெல்லாம் தாயிடம் தான். அவரையே பார்த்துக்கொண்டு அவரருகே அமர்ந்திருந்தாள்.

“மொத அவர உள்ளார படுக்க சொல்லுத்தா. எம்புட்டு நேரந்தேன் நிப்பாரு?…” என்றார் சிந்தா மகளிடம் மெல்லிய குரலில்.

விழிக்கு தான் அவஸ்தையாக போனது. அவனை இருக்கவும் சொல்லமுடியாமல் அனுப்பவும் பயந்துகொண்டு இருவேறு மனநிலையில் திண்டாடி போனாள்.

அவளின் முகத்தையும் பாவனைகளையும் கவனித்துக்கொண்டிருந்தவனுக்கு மனைவியின் மனது புரிந்தது.

“விழி…” என்ற அழைப்பில் அவள் திரும்பி அவனை பார்க்க,

“ஒரு பாயும், தலக்கி தலைகாணியும் தா த்தா. போதுமாட்டிருக்கு…” என சொல்லி வரவேற்பறையில் இருந்து வெளியேறி தையல் அறைக்கு எதிரே இருந்த முன்னறையில் சென்று நின்றுகொண்டான்.

சிந்தா மகள் என்ன செய்கிறாள் என்று படுத்தபடி கவனித்துக்கொண்டு இருந்தார்.

error: Content is protected !!