“யாத்தே…” சிந்தா நெஞ்சில் கை வைக்க,
“ஏம்த்தா தெகெச்சி பாக்குதா? இன்னிக்கி ராத்தூக்கம் போச்சு எம்மாமியாளுக்கு? அந்தாள போட்டு ஆட்ட போவுது. இருக்குற கடுப்புல ஒம்மருமவேன் வச்சு வாங்க போறியான்…” என்று சிரித்துவிட்டாள்.
“ஒனக்கு ஏத்தம்டி, பேச்சுல மருவாதியே இல்ல…”
“அதெல்லாம் உள்ளுக்க இருந்தா போதுமாட்டுருக்கு. நெத்தில எழுதி ஒட்டனுங்குதோ?…” என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்துவிட்டாள்.
அன்றைய பொழுதே அத்தனை வேகத்தில் சென்றது. இரவு மழை வேறு பிடித்துக்கொள்ள கோவிலில் முதல்நாள் கச்சேரி.
முதலில் பட்டிமன்றத்தில் ஆரம்பித்து அடுத்து பாடல் கச்சேரி நடந்துகொண்டிருந்தது.
ஒவ்வொரு தெருவிற்கும் ரேடியோ குழாய் கட்டப்பட்டிருக்க காது வலித்தது சத்தத்தில்.
பன்னிரெண்டுமணி வரைக்கு சித்திரைவிழி தைத்துக்கொண்டு இருந்தாள். மழை நேரம்.
எப்போது வேண்டுமானாலும் மின்சாரம் துண்டித்துபோகும் அபாயம் இருப்பதால் முடிந்தளவு நேரத்தில் தைத்துவிடுவது என்று வேலை செய்துகொண்டு இருந்தாள்.
மின்சாரம் போனால் கூட அதில் என்ன வேலை செய்ய முடியுமோ அதற்கு முன்பானவற்றை செய்து முடிக்க திட்டமிட்டிருந்தாள்.
அன்றைய மழையோ பெரிதாய் இன்றி தூறல்களாய் சிதறிக்கொண்டு இருக்க நிம்மதியாக வேலை செய்ய முடிந்தது.
சரியாய் அவள் தையல் வேலைகளை முடித்து அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு அறையை பூட்டும் நேரம் பூமிநாதன் வண்டியில் கடந்து சென்றான்.
கோவிலில் கச்சேரி நிறைவு பெற்றிருக்க முடித்துக்கொண்டு கிளம்பியிருக்கிறான் என்று தெரிந்தது விழிக்கு.
மறுநாள் வழக்கம் போல வேலைகள். காலையே சமையலை முடித்துக்கொண்டு சிந்தாவினால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை அவரிடம் தந்துவிட்டு தைக்க அமர்ந்தாள்.
அன்றும் துணி வரத்து சற்று கூடுதலே. உண்மையில் திணறலாக தான் இருந்தது. ஆனாலும் எதையும் மறுக்க மனதில்லை.
உடலை வருத்தியேனும் செய்துவிடுவது என்று முடிவிற்கு வந்தாள். இந்த வாய்ப்பை விட்டால் அடுத்து எப்போது வேண்டுமானாலும் வருமானம் குறையலாம்.
அதனால் எதையும் அவள் மறுக்கவில்லை. ஒவ்வொருவரிடமும் வாங்கும் பொழுது அட்டவணையில் அவள் உறங்கும் நேரம் குறைய ஆரம்பித்தது.
இதை பார்த்தால் பிழைக்க முடியாதே? யாரிடமும் சென்று நிற்கும் நிலை வரவே கூடாது.
தைக்க துணிகள் கிடைக்காத நேரத்தில் அந்த ஓய்வை எடுத்துகொள்ள வேண்டியது தான் என்று வாங்கிக்கொண்டாள்.
தன்னால் முடியும் என்ற நம்பிக்கையும் கூட. தெரிந்த முடிந்த ஒன்றை ஏன் தள்ளி போட வேண்டும்? அதுவே பெரும் பலத்தை தந்தது.
மறுநாள் காலை வழக்கமான நேரத்திற்கு இரண்டுமணிநேரம் முன்பாகவே எழுந்துவிட்டாள்.
மற்ற வேலைகளில் எப்போதும் தாய்க்கு உதவுபவள் இப்போது தையலே கதி என்று இருந்துகொள்ள மகளுக்கு முடிந்தளவிற்கு தோள் கொடுத்தார் சிந்தா.
மகனிடம் பேசும்பொழுது எப்படியாவது ஒரு நல்ல வேலையில் அமர்ந்துவிடும்படி இங்கே விழியை பற்றியும் சொல்ல வேந்தனுக்கு வேதனையாக இருந்தது.
மதிய உணவு கூட அவசர அவசரமாக அவள் சாப்பிட்டு வந்து தைக்க அமர்ந்துவிட மாலை சிறிதுநேரம் வந்து செல்வி பார்த்திருந்துவிட்டு சிந்தாவிடம் பேசிவிட்டு கிளம்பினாள்.
அன்றைகென்று மாலையே மழை ஆரம்பித்திருக்க ஆடல்பாடல் நிகழ்ச்சி என்று ஊரே கூடிவிட்டது கோவிலில்.
இருதட்டி பந்தலாக நெருக்கமாக போடப்பட்டிருக்க மழைக்கும் ஒழுகாமல் இருந்தது. பந்தல் கோவிலில் இருந்து இரண்டு தெருக்கள் நீளத்திற்கும் போட்டிருந்தனர்.
வெளியூரில் இருந்து பிரபலமான நடன கலைஞர்கள் குழு அது. ஒவ்வொரு வீட்டில் இருந்து பாய், போர்வை என்று எடுத்துக்கொண்டு அங்கே சென்றுவிட்டார்கள் ஊரில் உள்ளவர்கள்.
பத்துமணிக்கெல்லாம் ஊரே அடங்கி இருக்க மழை வேறு வலுத்து பெய்துகொண்டிருந்தது.
“அம்புட்டு சனமும் ஆட்டம் பாக்க போய்ட்டாக போல? ஊரே கம்மின்னு கெடக்கு…” என்றார் சிந்தா.
“ஆட்டமின்னா இங்க உள்ளவகளுக்கு சொல்லவா வேணும்த்தா? யே ஒனக்கு பாக்கனுமுனா ஒ சோக்காளி கூட போவத்தான?…”
தாயை வம்பு செய்துகொண்டே தைத்து முடித்த துணியை இஸ்திரி போட்டு மடித்து பையில் வைத்துக்கொண்டே பேசினாள்.
“நா என்னிக்கு இந்த ஆட்டத்த பாத்தேன்? எம்மவராசன் கூட கூட போனதில்ல அந்த ஆட்டத்த பாக்க?…” என்று பழம் கதையை பேச ஆரம்பித்துவிட மேலும் ஒன்றரைமணி நேரம் கடந்தது.
“எல்லா வீட்டுக்கு வாராக போல? ஆட்டம் முடிஞ்சிருந்தா இந்நேரம் பாட்ட அமத்திருப்பாகளே?…” என்றவர் மகளிடம்,
“நேரமாச்சுதோ? படுக்கத்தான? ஏம்த்தா?…” என மணியை பார்த்துவிட்டு மகளிடம் சொல்ல,
“இந்த இன்னும் ஒத்த ரவிக்கைய தெச்சிட்டா குறுக்கால சாக்க வேண்டிதேன்…” என்று அடுத்த துணியை எடுக்க தூரத்தில் எங்கேயோ டப்பென்று என்னவோ சத்தம்.
மின்சாரம் போய் வீடே இருள் சூழ்ந்தது. மழைவேறு பெய்ய நிச்சயம் மின்சார கம்பத்தில் என்னவோ விழுந்திருக்கிறது என்று தெரிந்தது.
“யாத்தே, கரண்டுமில்ல போச்சு…” என்றவர் எழுந்து சென்று மண்ணெண்ணெய் விளக்கை எரிய வைத்து எடுத்து வந்தார்.
தங்கள் வீட்டு வாசலை தாண்டி யாரோ செல்வது தெரிய உற்று பார்த்த சிந்தா மகளுக்கு அந்த விளக்கை வைத்துவிட்டு வாசலுக்கு சென்றார்.
“ஆரு…” என்று சத்தமாக கேட்க,
“என்ன சிந்தா? நாந்தேன் வடிவு…”என்று தலைக்கு சேலையை மூடியபடி நின்று பதில் சொன்னார்.
“ஏத்தா, என்னாச்சு? டுப்புன்னு என்னவோ சத்தமா கேட்டு கரண்டு போச்சு…”
“முக்கு தெருவுல போஸ்டுகம்பில மரம் ஒன்னு ஒடிஞ்சி விழுந்துடுச்சுத்தா. அதேன் மொத்த கரண்டையும் அமத்தி வயரு கியரு அந்துகெடக்கான்னு பாத்துக்கிட்டு இருக்காவ…”
“அப்ப நாளைக்கித்தேன் கரண்டா?…”
“அப்படித்தேன் தெரியுது. போறேம்த்தா…” என்று சென்றுவிட்டார்.
“சரித்தேன்…” என்றபடி உள்ளே வர விழி கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள்.
“இன்னும் என்னத்தா? எடுத்து வெய்யி. ஒறங்குவோம்…” என்று சொல்லி வெளியே வீட்டை பூட்ட பூட்டையும் சாவியையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு செல்ல,
“இந்தா நில்லுத்தா. நா பூட்டுதேன். நீ போயி பாய விரி…” என்று பூட்டை வாங்கிக்கொண்டாள்.
தையல் அறையில் இருந்தவற்றை ஒன்றுபோல எடுத்து வைத்துவிட்டு அந்த அறை ஜன்னலையும் சாற்றி வைத்தாள்.
மழை இன்னும் மாற்றி பெய்து காற்றடித்தால் ஜன்னல் வழியாக நிச்சயம் தண்ணீர் தெறிக்கும்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு மிஷினில் மேல் ஒரு துணியையும் போர்த்துவிட்டு பூட்டை எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்றாள்.
வெளிப்பூட்டையும் பூட்டி சரிபார்த்து உள்ளே வந்து கம்பி கேட்டை மட்டும் இழுத்து பூட்டி திரையை இழுத்துவிட்டாள்.
அதற்குள் வரவேற்பறையில் படுக்கை விரித்திருந்தார் சிந்தா. மின்சாரம் இல்லை என்பதால் அறையில் படுக்க முடியாது வெளியே தான் இருவருக்கும் படுக்கையை போட்டிருந்தார்.
சித்திரைவிழி பூட்டை ஓரத்தில் வைத்துவிட்டு தண்ணீரை குடித்துவிட்டு வந்ததும் கால் நீட்டி அலுப்புடன் படுத்ததும் மனதே விண்டுபோனது அவருக்கு.
எத்தனை வலித்திருக்கும் விடாமல் தைப்பது? எவ்வளவு அலுப்பும், களைப்பும் இருந்தால் படுத்ததும் உறங்கியிருப்பாள்?
மின்சாரம் போனது கூட ஒருவகையில் நன்மையே என்று தோன்றியது அவருக்கு.
தானும் படுத்தவர் பலவித யோசனைகளுடனே வெகுநேரம் உறக்கம் பிடிக்காமல் நேரம் செல்ல தானாக கண்ணை மூடிய நேரம் மேலே மாடியில் என்னவோ சத்தம் கேட்டது.
திடுக்கிட்டு அவர் விழித்ததை போல விழியும் பதறி விழித்தாள். அத்தனை சத்தமாக இருக்க பயந்து போயினர் பெண்கள் இருவரும்.
“ஏத்தா என்ன இந்நேரத்துல என்னவோ விழுந்து உருளுது?…”
“எம்மோவ் கதவு ஒடஞ்சி கீழே சாஞ்சிருக்கு போல?…” என்றவள்,
“அம்புட்டுக்கா மழ ஊத்துது?…” என்று எழுந்தவள் விளக்கின் திரியை தூண்டிவிட்டாள்.
அறை முழுவதும் வெளிச்சம் பரவ அதை எடுத்துக்கொண்டு வெளியே திரையை விலக்கி பார்க்க இப்போது தூறலாக பெய்துகொண்டு இருந்தது.
“மழ அம்புட்டுங்காட்டி இல்லம்மோவ்?…” என மெல்லிய குரலில் சொல்லும் பொழுதே யாரோ வீட்டின் சுவற்றில் ஏறி குதிப்பது தெரிந்தது.