உயிர் – 8
ஊரே திருவிழா கோலம் பூண்டிருக்க அன்றிலிருந்தே இரவு கச்சேரிகள் ஆரம்பம் கோவிலில் வைத்து.
தெருவுக்கு தெரு தோரணம் அமைத்து ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் விளக்குகள் கட்டப்பட்டு இருந்தது.
ஊரின் அலங்காரங்கள் அன்றே ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆட்கள் அதிகமிருக்க வேலைகள் அன்று மாலைக்குள் முடிந்துவிட மேடைகள் எல்லாம் கோவிலின் முன் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.
சித்திரைவிழி வீட்டை தவிர அந்த ஊர் மொத்தமும் அப்படி ஒரு கொண்டாட்டத்தில் இருந்தது.
தீபாவளி, தை திருநாளை போல அந்த ஊருக்கென்ற அந்த திருவிழா அவர்களுக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் வந்து வந்து பேசி செல்ல தைப்பதற்கு உடைகள் இன்னும் குவிந்தது.
மதிய உணவை வேகமாய் முடித்துக்கொண்டு வந்த அமர்ந்தாள் விழி. செல்வி பேசிக்கொண்டிருந்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிடவும் தான் அவளால் தைக்கவே வந்து அமர முடிந்தது.
இதோ அடுத்த ரவிக்கைக்கு அளவை பார்த்து வெட்டிக்கொண்டிருக்க இன்னொருவர் வந்துவிட்டார்.
“சிட்டு…” என்ற அழைப்பில் திரும்பி பார்த்தவள்,
“வா பெரியாத்தா….” என உள்ளே அழைத்தவள் அவளருகே வந்திருந்த புது பெண்ணை பார்த்து சிரித்தாள்.
“என்னக்கா நல்லாருக்கியா?…” என்றாள் பெரியாத்தாவின் மகள்.
“இருக்கேம்த்தா…” என்று சொல்லி மிஷினில் அமர்ந்துகொள்ள,
“ரவிக்கைக்கு வெட்டுதியாக்கும்?…” என்ற பெரியாத்தா,
“சரசுக்கு ரவிக்க தெக்கனுமின்னா. அதேன் கூட்டியாந்தேன்…”
“வா பவுனக்கா…” என சிந்தா வந்துவிட்டார் வீட்டினுள் இருந்து.
“இந்தாதேன் இருக்கியா சிந்தா? ஒறங்கலயா?…”
“நா என்னிக்கி இந்நேரத்துல மொடக்குனேன்? புதுசால இருக்கு?…” என்ற சிந்தா,
“சரசு நல்லாருக்கியா? எப்பத்தா வந்த…” என்றார்.
“இன்னிக்கு காலம்பறதேன் வந்தேம் சின்னம்மா. நீ சவுக்கியமா?…” என்ற சரசு,
“அவக ஒரு சோலியா வெளியூரு போறாக. அதேன் என்னிய இங்கின கொண்டாந்து உட்டுட்டு போனாக…”
“சரித்தேன் அடுத்து கொடியிறக்குத வரைக்கி நீ இங்ஙனதேன்…” என்றார் சிந்தா.
இவர்களின் பேச்சில் தலையிடாது அமைதியாக தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள் விழி.
“சிட்டு…” பவுனு கூப்பிடவும்,
“சொல்லு பெரியாத்தா…” என்றாள் நிமிராமல்.
“ஏம்த்தா ஒத்தவார்த்த பேச ஒனக்கு இம்புட்டு ரோசனையா? எம்மவ பொங்கலுக்கு வந்திருக்கா. என்ன ஏதுன்னு கேக்க மனசு வருதா ஒனக்கு?…” என பவுனு இடக்காக பேச,
“என்னத்த கேக்க? அதேன் எங்கம்மாட்ட சொல்லிட்டிருக்கியே? காதுல கேக்காமையா? நா வேற தனியா கேக்கனுமாக்கும்?…” என்று விழி சாதாரணமாக சிரித்தபடி சொல்லவும் பவுனுக்கு சுர்ரென்று ஆனது.
மகளை மருமகன் கொண்டுவந்து விட்டு செல்லவும் அதே சர்வ அலங்காரத்துடன் அழைத்து வந்திருந்தார் பவுனு.
ஊரெல்லாம் மகள் வாழ்வதை பார்த்து மெச்சட்டும் என்பதை போல பெருமிதமாய் வந்தவர் சித்திரை விழி எதையும் கண்டுகொள்ளாமல் இருக்க, ‘பொறாம புடிச்சவ’ என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு,
“அதுவுஞ்செரித்தேன், ஒனக்கும் மனசுக்குள்ள வெசனமா இருக்குமில்ல புள்ள? நாம இப்பிடி பிரேசிட்டேன்டு பொஞ்சாதியா இருந்தும் வாழ போவமாட்டாம இருக்கேயில ஒனக்கு எளயவ தழைய தழைய தாலியோட வந்தா வெருக்குன்னு இருக்குந்தான?…”
“எக்கா?…” என்று சிந்தா அதிர்ந்து போனார்.
“ம்மோவ், கம்மின்னு இருக்கமாட்ட…” என்று அதட்டினாள் சரசு.
“நீ சும்மா இருடி ஒனக்கு ஒன்னும் தெரியாது. டவுனுக்குள்ள இல்லாத தையக்காரனா? இவகிட்டதேன் தெக்கனும்னு நிக்கித…” என்ற பவுனு,
“இந்தா சிட்டு, கூட கூட நூறு ரூவா சேத்து தாரேன். எம்புள்ளைக்கு வெரசா மொதவா தெச்சி தா த்தா…” என்றதும் அவரை முறைப்பாய் பார்த்தாள்.
“அம்புட்டு அவசரமின்னா ஒங்களுக்கு டவுனாளுதேன் செரிப்பட்டு வரும். இங்க என்னத்துக்கு?…” சித்திரைவிழி சொல்லவும் பவுனின் முகம் மாறியது.
“டவுனுக்கு போவமாட்டாமலா? எல்லா ஒனக்கு பொங்கச்செலவுக்கு ஆவுமின்னுதேன் எரக்கப்பட்டு…” இன்னுமே பவுனு மட்டம் தட்டி பேசினார் அவளை.
“இந்தா ஒருக்கா சொன்னா ஒங்கனத்துல ஏறாதோ?…” விழிக்கு இப்போது எரிச்சல் பொங்கியது.
“என்ன, எனக்கு மண்டக்கனமின்னு சொல்லுதியோ?…”
“ஆமாங்கேன், அதத்தேன் சொல்லுதேன். அம்புட்டு சடச்சிக்கிட்டு எங்கிட்ட தெக்கிதது ஒனக்கு ஆவலைன்னா போயிட்டே இருத்தா….” என்று சொல்லிவிட,
“யம்மா, நீ இருவென்…” என்ற சரசு,
“எனக்கு நீயே தெய்யேன்க்கா. எங்கலியாணத்துக்கு நீ தெச்சி தந்தத எம்புருசென் வீட்டாளுக எல்லாம் மெச்சினாவ. நல்லாருக்குன்னு. அதேன் ஒன்கிட்டையே வாரேன். எனக்கும் நீதேன் நல்லா தெப்ப…” என்று அந்த பெண் சொல்ல,
“இந்தாடி கம்மின்னு இரு. அவளே அவிஞ்சி போயி நிக்கிதா நீ மினுக்கலா வந்திருக்கறத பொறுக்கமாட்டாம. புருசென் கூட வாழாம இருக்கறவ..” பவுனுக்கு வாய் நிற்கவில்லை.
“பவுனு, வெளில போ மொத…” என கத்திவிட்டார் சிந்தா.
“ம்மோவ், என்னத்துக்கு எரையித? பேசினா ஒடனே சுடுதோ?…” என்று விழி தாயை அடக்கியவள்,
“சரசு ஒங்கம்மாவ கூட்டிட்டு கெளம்பு…” என்றுவிட்டாள் உடனே.
“எக்கா, அதுக்காவ நா மன்னிப்பு கேட்டுகிடுதேன்…” சரசு வருந்திய முகத்துடன் மன்னிப்பையும் கேட்க,
“இந்தா என்ன புள்ள? இப்ப ஆரு கேட்டா ஒன்கிட்ட மன்னிப்பெல்லாம்? அத்த விடுத்தா. மொத கெளம்பு…” என்று இறுக்கமான முகத்துடன் சொல்ல,
“ம்மோவ், வா. வாய வெச்சிக்கிட்டு இருன்னா கேக்குதியா? நானே தனியா வந்திருப்பேன்…” என்று சரசு புலம்ப,
“கூறுகெட்ட கழுத, அவ வவுறெரிஞ்சு ஒனக்கு தெக்கமாட்டேன்னு சொன்னா நீ யேன்கிட்டே ஏறுத? புருசெங்கூட இல்லாத….”
“இந்தா நிப்பாட்டு. ஒனக்கென்ன? நா யே புருசெங்கூட வாழாம இருக்கது ஒங்கண்ண உறுத்துதோ? ஆரு சொன்னா அந்த மனுசென் கூட நா வாழாமக்கெடக்கேன்னு?…” என்றதும் பவுனு வாயில் கை வைத்து பார்க்க,
“எனக்கு எம்மாமியாளோட கரைச்சலேங்காட்டி எம்புருசென் கூட இல்லைங்கறது மறந்து போச்சோ?…” என்றாள் நக்கலாக.
உண்மை தானே? இன்றளவும் பூமி வந்து செல்வது, செல்வியில் இருந்து அத்தனைபேரும் விழியை தாங்குவது ஊரே அறிந்ததாகிற்றே.
“என்னத்தா பேச்சுமூச்ச காணும்? இரு எம்புருசென வர சொல்லுதேன்…” என போனை எடுத்துவிட பவுனு அப்படியே வாசல்பக்கம் திரும்பிவிட்டார்.
“இந்தா நில்லு, இத்த எடுத்துட்டு போ…” என்றவள்,
“ஒம்மவ கலியாணத்துக்கு அம்புட்டு துணி தெச்சிட்டு நாலு மாசத்துக்கு காசு குடுக்க இந்தா அந்தான்னு இழுத்தடிச்சது மறந்து போச்சோ? ஏத்தா சிட்டு கஷ்டகஞ்சியா கெடக்கு, செத்த நின்னு தரேன்னு கெஞ்சினத இம்பிட்டு நெனச்சு பாரும்…”
சித்திரைவிழி சொல்லவும் அவமானமாக போய்விட்டது பவுனுக்கு. மகள் உனக்கு தேவையா என்பதை போல பார்த்தாள்.
“கை நெம்ப நெம்ப வரவு செலவு பாத்த வீடு இது. கைமாத்துன்னு எம்புட்டு நாளு வந்து நின்னிருப்ப எங்கம்மாட்ட. நூறு ரூவா சேத்து குடுத்தா நா நாக்க தொங்கப்போட்டு தெப்பென்னு நெனச்சியோ? பாத்து பேசு. இல்ல கோண ஊசி வச்சு நாக்க வாயோட இழுத்து தெச்சிப்புடுவேன்…”
“சிட்டு விடுத்தா. என்னத்துக்கு செஞ்சாத சொல்லி காமிச்சிட்டு…” என்று சிந்தா அதட்ட,
“சரசு கெளம்பு மொத இத்த கூட்டிட்டு…” என சொல்லவும் அவள் சித்திரைவிழியின் கையை பிடித்துக்கொண்டாள்.
“எக்கா, கொமிச்சிக்கிட்டியே ஏங்கிட்டையும்?…” என்று கண்கள் கலங்க,
“இந்தா ஒன்னைய எப்ப கொமிச்சென்? ஒங்காத்தா பேசி வாங்கி அமித்திக்கிச்சு. ஒம்மேல வெசனமில்லத்தா. நல்லாருப்ப. கெளம்பு…” என்று சொல்லியும் சரசு அங்கேயே நிற்க,
“இப்ப என்ன துணிய தெக்கனுமா? ஒனக்காவ தெச்சி தாரேன். ஆனா அதுக்கான காச நீதேன் தரன்னும். ஓசில செய்யனும்னு எனக்கு தலையெழுத்து இல்லேல? செஞ்சதுக்கு கைமேல கூலி இந்தா கெடச்சத பாத்தேல?…”
“ஏம்க்கா எனக்கு என்னன்னொன்னு வருது…” சரசுவிற்கு அழுகையே வந்துவிட்டது.
சித்திரைவிழி அழவில்லை. ஆனால் அவளின் நிலையில் இருக்கும்பொழுது மனது எத்தனைபாடுபட்டிருக்கும் என்று சரசுவால் புரிந்துகொள்ள முடிந்தது.
“ஒன்னும் வரலத்தா. தையக்கூலிய எதுக்காவவும் கொறக்க போறதில்ல. இப்ப வெலவாசி ஏறிடுச்சு. அதுக்கேத்தமாரி ஒரு ரவிக்கைக்கி முப்பதுரூவா ஏத்திருக்கேன். சரின்னா வச்சுட்டு கெளம்பு. அளவு ரவிக்கத்துணிய குடுத்துட்டு போ…” என்று சொல்லவும்,
“அவுக போறப்ப குடுத்த காசு இருக்குது. இது எங்காசுதேன்…” என்றவள் அப்போதே எடுத்து கொடுக்க,
“தெச்சதும் வாங்கிக்கத்தானத்தா?…” சித்திரைவிழி மறுக்க,
“செலவாகி போச்சின்னா அம்மாக்கிட்டதேன் நிக்கனும்…” என்று சொல்லவும் பவுனு வெளியே திண்ணை அருகே நின்று மகளை முறைத்துக்கொண்டு நின்றார்.
“வாங்கிக்கத்தா சிட்டு…” சிந்தா சொல்லவும் வாங்கிக்கொண்டாள் அவளும்.
“மூணுநா கழிச்சு வா. தெச்சிருதேன்…” என்று அங்கிருந்த துணிகளை கணக்கெடுத்து தைக்கும் நேரத்தை அளவிட்டு அவள் சொல்லிவிட சரி என்று சரசு கிளம்பிவிட்டாள்.
சிந்தா மகளின் முகத்தையே பார்த்துக்கொண்டு கவலையாக நிற்க சில நிமிடங்கள் பொறுத்தவள்,
“ம்மோவ், என்ன வச்ச கண்ணு வாங்காம பாக்குத?…” என்று தாயை கேட்க,
“பவுனு பேச்ச கேட்டு…”
“யே நிப்பாட்டுத்தா. யே மாமியா எடுபுடி. வேற என்னன்னு பேசும்? பாத்துக்கிட்டு, நேரா போயி அங்கதேன் வத்திவெக்கும்…”