“ஒரசாம ஒன்னியமாரி வேடிக்கையா பாக்கனுங்கற? அடி போடி…” என்றான் இன்னும் நன்றாக அவளை இடித்தபடி உல்லாச குரலில்.
அடங்கவே மாட்டேன் என்பதை போல அவனின் அருகாமையும், பார்வையும் அவளை ஒரு வேலை செய்யவிடவில்லை.
“யே அவுக இருக்காகன்னுதேன் என்னிய வெரட்டுதியோ?…” என்று வேறு கேட்டுவைக்க,
“இந்தா சுத்தத்துக்கு கிறுக்காக்கிபோடுவேன். பொறவு எங்கிட்ட கோமிச்சி புண்ணியமில்ல…” என்று இடுப்பில் கை வைத்து முறைத்து நின்றாள்.
“எனக்கும் மூச்சு வாங்குதுடி…” என்று அவள் தன் பக்கமாய் திரும்பி நிற்கவும் இன்னுமே வாகாய் போனது அவனுக்கு.
உணர்வுகளை உருவி எடுக்கும் அவனின் பார்வைகள் வகைதொகையின்றி அவளின் கோவத்தினை சொச்சமின்றி உள்வாங்கியது.
“ஏம்ய்யா உசுர புடுங்குத…” அலுப்பாய் கேட்டுவிட,
“யே எனக்கும் அத்த மட்டுந்தேன் நீ பண்ணுத. நா மல்லுக்கா நின்னேன்?…” என அவன் திருப்பி கேட்டதும் திரும்பி நின்றுவிட்டாள்.
“கொழம்பு கொதிக்குதுடி. எறக்கு…” என்றவன் அவளின் கை படித்து அவளோடு சேர்ந்து குழம்பு சட்டியை இறக்கி வைத்தான்.
இருவருக்குமே அந்த நிமிடம் தாண்டியும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனதில்லை.
அதிலும் இத்தனை மாதத்திற்கு பிறகு அன்று தான் அணைவாய் அவன் அணைப்பில் அவள் இணங்கி நின்றிருந்தாள் சிலநொடிகள்.
“விழி காப்பு கெட்டிட்டேன்டி…” காதோரம் மெல்ல பூமிநாதன் குரல் எழுப்ப,
“நீ மொத இங்கின இருந்து நவுந்து போயா. வாரேன்…” என்றாள் மூடிய கண்களுடன்.
“இங்காரு வந்து பாக்க போறதில்லடி. பொறவு என்னத்துக்கு? வா சேந்தே போவோம்…”
“போயாங்கறேன்…” என்று அவன் பக்கமாக திருப்பி விலகி நிற்க கனிவாய் பார்த்தான்.
“காப்பு கட்டிருக்கேன்டி. இல்லாங்காட்டி…”
“புத்தூரு கட்டு போட்டுருப்ப. அதுதேன் நடந்திருக்கும். நெனப்ப பாரு…” என்றாள் அவன் பேசியதில் கடுப்புடன்.
முகத்தில் கள்ளச்சிரிப்பு பொங்க இன்னுமே அவளை சீண்டும் எண்ணம் தான் பூமிநாதனுக்கு. ஆனால் நேரம் தான் இல்லை.
“டவுனுக்கு போவனும்டி. சோலி கெடக்கு. வாத்தா…” என சொல்லவும் அவனுக்கு முன்னால் விறுவிறுவென்று நடந்து சென்றாள்.
“இந்தா எங்க போற?…” என்று செல்வி கையை பிடித்து விட,
“ப்ச், யே மதினி விடுத்தா. துணி தெக்கனும்…” என்றாள்.
“நா வேணா ஒங்கூட இருந்து ஒத்தாச பண்ணுதேன். போதுமா? ஒக்காரு சிலுப்பாம…” என அமர்த்திக்கொண்டாள்.
“தலைக்கி தண்ணிய ஊத்துன கழுதக்கி அத்த ஒனத்த ஆவுதா? ஒன்னிய எல்லா வசக்கனும்டி…” என்று சொல்லிக்கொண்டே விழியின் தலையை நன்றாக பிரித்துவிட்டு சிக்கெடுத்து பின்னலிட்டவள் கோவிலில் இருந்து கொண்டுவந்த பூவை அவளின் தலையில் வைத்துவிட்டாள்.
“இப்ப என்னத்துக்கு இம்பிட்டு? விடுங்கேன்ல…” என்று விழி சத்தம் போட,
“எப்பாப்பாரு விடு விடுன்னுட்டு. இத்த தவுர வேற ஒன்னித்தையும் பேசிடாத….” என்றான் பூமிநாதன் முறைப்புடன்.
அவனை திரும்பி முறைத்துவிட்டு வெடுக்கென தலை திருப்பிக்கொண்டவளிடம் பொங்கலை நீட்ட வாங்கவே இல்லை விழி.
“ஏம்த்தா நா வெச்ச பொங்கல கூடவாத்தா உண்க மாட்ட? வெசங்கிசம் போட்டுட்டேனொன்னு நெனக்கிதியோ?…” என்று செல்வி சாதாரணமாக சொல்லவும் சித்திரைவிழிக்கு அழுகை பொங்கியது.
அதற்கு மேலும் தாங்கமாட்டாதவளாக இறுக்கத்தை பிடித்துவைக்க முடியாமல் செல்வியின் தோளிலேயே சாய்ந்துவிட்டாள் அவள்.
பூமிநாதனுக்கு மனது கனத்துவிட்டது கோவில் பிரசாதத்தை கூட மனைவி மறுத்த விதத்தில்.
அமைதியாக நின்றிருந்தவன் பார்வை மொத்தமும் அவள் கண்ணீர் விடுவதை மட்டுமே கண்டுகொண்டு இருந்தது வலி மிகுந்த மனதால்.
“இந்தா என்ன சொல்லிட்டேன்னு எரையித? கண்ண தொட. கண்ண தொட…” என்று அவளின் முகம் நிமிர்த்தி தன் புடவை தலைப்பால் துடைத்துவிட்டாள்.
“செரி போதும்த்தா. இந்தா கோவில்ல சாமிக்கி சாத்துன மால. ரெண்டு கொண்டாந்தேன். ஒன்னு சாமிக்கி போடு. இன்னொன்னு மாமா படத்துக்கு…” என்றதும் சித்திரைவிழி எழுந்துகொண்டாள்.
“யேம்லே நெலப்படிக்கி அணைகட்டி நிக்கிதியோ? போயி பொண்டாட்டியோட சாமிய கும்பிடுலே…”என்று மீண்டும் அதட்ட அதில் சற்றே தெளிந்தவன் தானும் அவளருகே சென்று நின்றான்.
இருவரும் இறைவனையும், சித்திரைவிழியின் அப்பாவையும் வணங்கிவிட்டு வந்தனர்.
“இப்ப பொங்கல உண்குதியா?…” என்று தூக்குவாளியை எடுத்து வெளியே வைத்தாள்.
அதற்கு மேலும் மறுக்கமுடியாமல் செல்வி கையில் தர தர வாங்கிக்கொண்டாள் சித்திரைவிழி.
இதே போல பூமிநாதன் வீட்டில் வைத்தும் பலமுறை செல்வி சாப்பாட்டை இப்படி உருட்டி தந்திருக்கிறாள் தான். நினைக்கும் பொழுதே மனது கலங்கியது.
“யேம்த்தா செல்வி, சூடா சோறாக்கிட்டேன். இம்புட்டு வட்டில்ல போட்டு கொண்டாறட்டா?…”
“இல்லத்தே, இன்னில இருந்தே வெரதம். எல்லா இந்த இடும்புபுடிச்ச கழுதகளுக்குத்தேன். பொங்க முடியட்டும். ஆட்டுக்கறி ஆக்கி வெய்யி. வாரேன்…” என்று சிரித்தாள் செல்வி.
பூமிநாதனின் பார்வை சித்திரைவிழியை துளைக்க ஒன்றும் பேசாமல் பொங்கலை சாப்பிட்டுவிட்டு தைக்கும் இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.
அவளின் பின்னே வந்தவன் அவளிடம் ஒரு பையை நீட்ட என்னவென்று நிமிர்ந்து பார்த்தாள். அது புது உடைகள் அடங்கிய பை.
“இதெதுக்கு?…” என்று கேட்டவளின் கால்கள் மெஷினின் வேகத்திற்கு ஆட கைகள் துணியை பிடித்துக்கொண்டு இருந்தது.
தன்னை பார்க்காமல் அவள் பேச, தையல் சக்கரத்தை தன் காலால் பிடித்து நிறுத்தியவன் முறைத்தான் அவளை.
“நிமிருடி. என்னிய பாரு…” என்றதும் விழி நிமிர,
“உடுப்பு ஒனக்குத்தேன்….”
“எனக்கு வேணா…”
“ஒனக்குத்தேன் எடுத்தாந்தேன். பொங்கலுக்கு கெட்டுத. நா பாப்பேன். அம்புட்டுத்தேன்….”
“முடியாதுங்கேன்ல….” என்று அந்த பையை அவன் பக்கம் நகர்த்தினாள்.
“நீ கெட்டுத. அன்னிக்கி இந்த சீலைய கெட்டாம மட்டுங்கா இருந்தேன்னு பாரு. தெரியும் சேதி…” என்றவனை மிதப்பாய் பார்த்தாள் என்ன செய்துவிடுவாய் என்பதை போல.
“அன்னிக்கி இத்த மட்டுந்தேன் நீ கெட்டன்னும். கெட்டுவ. இல்ல. வெரதமின்னு எல்லா பாத்துக்கிட்டு இருக்கமாட்டேன்…” என்றவனின் பார்வையும், அதற்கடுத்த அவனின் வாயசைப்பும் அவன் செய்ய போவதை அவளுக்கு உணர்த்த திகைத்து பார்த்தாள்.
“என்னடி பார்வை? செரி, எனக்கு பொங்க உடுப்பு எங்கடி?…” என்றான் மீண்டும் கோபத்தை விடுத்து சீண்டலாக.
“என்னிய பாத்தா என்னன்னு தெரியுது? ஒமக்கு நா உடுப்பு எடுத்து குடுத்து மாளுமா? ராசாங்கத்தாளு…” வேண்டுமென்றே அவனை உசுப்பேற்றினாள் அந்த வார்த்தையை சொல்லி.
“ஹ்ம்ம், என்னத்த ராசாங்கத்தாளு? பொண்டாட்டி சம்பாதனையில ஒத்த வேட்டி சட்டைக்கி வக்கத்து நிக்கிதேன். என்னத்துக்கும் ஒரு குடுப்பின வேணும்டி…” என்று கண் சிமிட்டி சிரித்துவிட்டு,
“பொறவு மறந்துங்கூட நா வாரவரைக்கி இந்த சீலைய கெட்டாதடி…” என்று நமுட்டு சிரிப்புடன் சொல்லிவிட்டு அவன் செல்ல அவனை திட்டிய வார்த்தைகள் எல்லாம் காற்றில் தான் கலந்தது.
சற்றுமுன் சேலையை கொண்டு அவன் ரகசியமாய் கூறிய வார்த்தைகள் எல்லாம் இப்போது அவளின் கவனத்தை சிதற செய்ய சிலநொடிகள் எதையும் செய்யாமல் அப்படியே ஜன்னலில் தலை சாய்த்து அமர்ந்துவிட்டாள்.