உயிர் – 7
வண்டியில் செல்லும்பொழுது செல்வி பூமிநாதனிடம் பேசிக்கொண்டே தான் வந்துகொண்டிருந்தாள்.
“இன்னிக்கு மாமன் இல்லங்காட்டி அம்மை பேச்சு கூடிருக்கும்…” செல்வி சொல்ல,
“தொணதொணக்காம வாத்தா. எப்ப பாரு சலம்பிக்கிட்டு…” என அதட்டினான்.
“ம்க்கும், அங்கன கம்மின்னு இருந்துட்டு என்னிய சொல்லுதியோ?…”
“இப்ப சண்டை போட்டு என்னத்துக்காவ போவுது? மொத இந்த புள்ளைய வீட்டுக்கு கூட்டிப்போவத்தேன் யே ரோசன எல்லா…”
“இங்கனவே ஒரு வீட்ட புடிச்சு தனியா போன்னா நீஅடங்கமாட்டாம திரியற. அவ அதுக்கு மேல…”
“ஏம்க்கா ஒனக்கு தெரியாதாக்கும்? போவறதுன்னா என்னிக்கோ போயிருக்கத்தேன். ஆனா அவ அங்கனதேன் இருக்கனும். இவக வச்ச சட்டமாங்கறேன்? இவளுக்கு வாயில்ல. எங்கிட்ட மட்டும் கிழியுது…” என்று சொல்ல வாசல் வந்துவிட்டது.
எப்போதும் துணி தைக்குமிடத்தில் அமர்ந்திருக்கும் விழியையும் காணவில்லை, வாசலில் சத்தம் கேட்டால் உடனே எட்டி பார்க்கும் சிந்தாவையும் காணவில்லை.
“எங்க ரெண்டுபேத்தையும் எதுக்கால ஆப்படலை?…” என சொல்லிக்கொண்டே செல்வி உள்ளே செல்ல,
“பொறவாசல்ல இருப்பாகளோ என்னவோத்தா. நீயி பாரு. நா கெளம்புதேன்…” என்று பூமி கிளம்ப நினைக்க,
“யேலே நில்லுவே. கெடந்து குதிக்கிதியான்…” என்று அவனையும் பிடித்து நிறுத்த அதற்குள் பின்னால் சத்தம் கேட்டு இருவருமே அங்கே சென்றார்கள்.
“மொல்ல மொல்லடி…” என்று கத்திக்கொண்டு இருந்தார் சிந்தா.
சித்திரைவிழி துணியை சுருட்டி வாயில் இருந்து காற்றை ஊதி ஊதி அவரின் கண்களுக்கு ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
சிந்தா ஒற்றை காலை லேசாய் தூக்கிக்கொண்டு மகளையும் பிடித்தபடி குளித்த ஈரத்தலையுடன் நின்றிருந்தார்.
“யாத்தே என்ன பண்ணுதீக தாயும் மவளும்?…” என்ற செல்வியின் குரலில் இருவரும் திரும்பி பார்த்தனர்.
செல்வியையும், பூமிநாதனையும் பார்த்ததும் சிந்தா தன் தலைமுடியை அள்ளி கொண்டையாக முடிந்தவர்,
“வாங்கய்யா, வாத்தா செல்வி…” என்று அவசரமாக வரவேற்றார்.
“இங்க என்ன கச்சேரியாட்டம்ல இருக்கு?…” என்று இருவரையும் பார்த்து சிரித்த செல்வி,
“பாருடே, கொடியேத்தத்தன்னிக்கு இருந்து ராவுல இருந்துதேன் ஊருல கச்சேரின்னா இங்க கோழி கூவவும் ஆரம்பிக்கிதத?…” என்றாள்.
“அட நீ யேம்த்தா? தலகாய இங்கிட்டு வெளில வாரப்ப அடுப்பு பக்கத்துல தீயிடுக்கில கால வச்சிப்பிட்டேன். கவனக்கோளாறுதேன். அதுல கால எம்பினதுல கைய ஒதறி கையில இருந்த சிணுக்குவாலி கண்ண குத்திபோடுச்சு…”
“ம்க்கும், தேடி வந்து குத்துதாக்கும்? ம்மோவ், போறியா…” என்றாள் விழி.
“ஆத்தே நிக்கவச்சுல பேசிக்கிட்டே கெடக்கேன். வந்து ஒக்காருங்க…” என்று சிந்தா செல்வியின் கையை பிடிக்க,
“எத்தே நீ மொத உள்ள வா…” என்று அவருடன் உள்ளே நகர்ந்தாள் செல்வி.
பின்கட்டில் இருந்த வாசலின் மேல் படியில் நின்றபடி சித்திரைவிழியை பூமிநாதன் பார்வையிட அவனை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த அடுப்பையும், கனலையும் சுத்தம் செய்தாள்.
எப்போதும் பின்வாசலில் தான் அண்டாவில் வெந்நீர் வைப்பது. அதே போல அன்றும் வெந்நீர் வைத்து இறக்கிவிட்டு தணலுக்கு வெறும் அடுப்பாக விட்டுவிடாமல் இன்னும் தண்ணீரை ஊற்றி வைத்திருந்தார் சிந்தா.
தீயை தள்ளிவிட வைத்திருக்கும் இடுக்கியை அப்படியே போட்டுவிட்டு துணிகளை உலர்த்திவிட்டு திரும்ப கவனக்குறைவாக அதிலேயே மிதித்துவிட்டார்.
இப்படி அன்றையநாள் ஆரம்பமே சரியில்லாததை போல இருந்தது தான் விழிக்கு.
அவ்விடத்தை கூட்டி முடித்து எல்லாவறையும் ஒழுங்குபடுத்திவிட்டு படியில் ஏறும் வரை அவன் நகரவில்லை.
வீட்டிற்குள் நுழைந்தவர்களும் ஒதுங்கி சென்று அமர்ந்துகொண்டார்கள் தங்கள் பார்வையில் அவர்கள் பட்டுவிடாமல்.
சித்திரைவிழி அவனை தாண்டி சென்ற நிமிடம் அவளின் கையை பிடித்து நிறுத்தினான்.
“எங்கடி போற? ஒருமனுசென் தேடி வந்தா எகத்தாளம் காட்டுவியோ?…”
“அதே தெரியுதில? பொறவு என்னம்ய்யா? போ…” என கையை உதற அவனின் பிடி இன்னும் இறுகியது.
இன்னொரு கையோ அவளின் தலையை வருடியது. அடர்ந்த கூந்தலை நீரில் அலசியிருக்க பாதி காற்றில் மிதக்க கூந்தலின் முடிவின் கீழ் நுனிகொண்டையிட்டு நின்றவளை அள்ளிக்கொள்ளவேண்டும் போல வேகம் பிறந்தது.
“இந்தா தொடுத வேல வச்சுக்கிட்டீரு, படில உருட்டிவிட்டுப்போடுவேன் சொல்லிக்கிறேன்…” என்றாள் மறைத்து அவனின் கையை எடுத்துவிட்டு.
“ஏம்த்தா குளிச்ச தலையில தடவுனா கெறங்குவ. இன்னிக்கு…”
“இன்னிக்கு என்னவே இன்னிக்குத்தேன்? போம்…” என்று பல்லை கடித்துக்கொண்டு அவள் கத்த அதை கண்டுகொள்ளாதவனாக,
“எங்கூட வாயேன்டி, இன்னும் எம்புட்டு நாளைக்குத்தேன் நா ஒன்னிய சுத்தி சுத்தி வர? மண்ட கிறுக்காவுது…” என்றான் தன் தலையை ஒரு கையால் தாங்கி பிடித்து.
அவனின் பார்வையும், சொற்களும் அவளை கூறுபோட்டது. அசையாமல் அவனை பார்த்த விழிகளின் நரம்புகள் செவ்வரியோட எச்சிலை விழுங்கி தன்னை நிதானப்படுத்தியவள்,
“கைய விடும். உண்கிட்டு தெக்கனும்…” என்றாள்.
அவளின் முகமே சோர்ந்திருக்க அதில் பசி உணர்வு அப்பட்டமாய் தெரிந்தது பூமிநாதனுக்கு.
“ஒன்னிய ஆரு வேணாங்கிதா? பொங்க கொண்டாந்திருக்கேன். அத்த மொத உண்கு…” என சொல்ல,
“போயா…” என்று அவனை தாண்டிக்கொண்டு அவள் அடுக்களைக்குள் நுழைந்தாள்.
“சிட்டு, கொழம்ப தூக்கி பிரிமனையில வெய்யி. சோறு இன்னுங்கா வடியட்டும்…” என்று சிந்தா முன்னால் இருந்த வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு சத்தம் போட,
“யே புள்ள இங்க வா…” என்றாள் செல்வியும்.
“இந்தா ஒங்கக்காவ கூட்டு கெளம்பு மொத. என்னத்துக்கு காலேல வந்து இம்புட்டு வம்பாடு?…” என்றாள் கோபம் சுமந்த சிணுங்கலுடன்.
இவன் அவளின் பின்னோடே சென்று நிற்க தள்ளியும் செல்லாமல் மீண்டும் மீண்டும் தன்னை தொடருபவனை தள்ளி வைக்கவும் முடியாமல் முறைத்தாள்.
“என்னடி?…” என்றான் இருவிரல் கொண்டு மீசையை நீவியபடி.
“நவுந்து நில்லுய்யா…” என்று சொல்லி சூடான குழம்பு சட்டியை துணியை பிடித்தாள்.
“யே இப்ப நா நிக்கிததுக்கு என்னடி கொறவாகி போச்சு?…”
“யேத்தம்தே, சட்டிய ஒ தலையோட கவுக்க போறே பாரு…”
“செய்யேன்டி…” அதற்கும் சிரிப்பு தான்.
பூமிநாதனின் நெற்றியில் பூசியிருக்கும் சந்தன கீற்றும், குங்குமமும், கலைந்திருந்த விபூதி தலைமுடியிலும் விரவி இருக்க சித்திரைவிழி பாராமல் பார்த்து உள்ளுக்குள் உருகிக்கொண்டு தான் இருந்தாள்.
‘இந்த மனுசென் இந்நேரம்தேன் என்னிய பாரு. யே அழக பாருன்னு வந்து நிக்கனுமோ?’ என கோபம் பொங்கியது.
“நல்லாத்தேன் பாரேம்டி. ஆரு கேப்பா ஒன்னிய?…”
“இந்த வேக்கியானம்லா எங்கிட்ட வேணா. போயிரும்…” என்றாள் தன்னை உரசிக்கொண்டு இருப்பவனிடம்.
“நா என்னத்துக்கு ஒன்னிய பாத்து வேக்கியானம் பண்ண போறே?…” என்றவனின் அந்த ‘பார்த்து’வில் இருந்த அழுத்தத்தில் சுத்தமாய் பொறுமை இழந்தாள்.
“வாய மூடும். இங்கனவே ஒரசுத. வெளியில ஒங்கக்கா இருக்குது. நெனப்புல இருக்கட்டும்…”