“யண்ணே?…”
“நாசமத்து போனவேன்னா எந்த சாபமும், பீடையும் இல்லாதவேன்னு சேதி. இன்னிக்கி வசத்தேன் அத்த சொல்லுதாக. நெசத்துக்கு அது ஒரு வாழ்த்துலே. என்னிய கூட அம்மை இப்பிடி வசதில்ல…” என்ற பூமிநாதன்,
“செரி, விடு. நா பாத்துக்கிடுதேன். அதுக்கு எம்மேல கோவம். அதேன் ஒன்னிய பிடிச்சு எகிறிருச்சு…” என்று தாயையும் விட்டுவிடாமல் பேசியவன்,
“மூஞ்சியை ஒழுங்கா வையி மொத. பாக்கத்தேன் ஆவல…” என்றான் சிரிப்புடன்.
“செரிண்ணே…” அதற்கும் அவன் சரி என்று சொல்ல,
“போயி பழத்த வாங்கியா. ஒனக்கும் எதாச்சும் வாங்கிக்க…” என்று சொல்லவும் தலையசைத்துவிட்டு வெளியே சென்றான்.
கடைக்கு சென்றவன் வாழை பழமும், சூடாக போட்டுக்கொண்டிருந்த உளுந்துவடைகள் ஐந்து என்று வாங்கிக்கொண்டு தனக்கும் இரண்டு வடைகளை தனியே கட்டியவன் பூமிநாதனிடம் வந்தான்.
“ஒன்னிய பழத்த மட்டுந்தேன வாங்க சொன்னேன்?…” என முறைக்க,
“உண்குண்ணே…” என்று சொல்லி மேஜையில் வைத்தவன்,
“டீக்கு சொல்லிட்டேன். அவனே கொண்டு வருவியான்….”
“ஹ்ம்ம், சொல்லாததயெல்லா செய்யி…” என்று சொல்லி ஒரு வடையை எடுத்து கடித்தான்.
வாழை இலையில் மடித்திருந்த வடைக்கு ஓடும் தண்ணீராய் தேங்காய் சட்னியும், கார சட்னியும் என்று பசிக்கு அமிர்தமாக இருந்தது.
“பொங்கலுக்கு உடுப்பு எடுத்தியா நீ?…” என ஞாபகம் வந்தவனாக கேட்டான்.
தாய் எதை குறித்து அவனிடம் இப்படி பேசியிருப்பார் என்று புரிந்துபோக கரிசனமாக அவனை பார்த்தான் பூமிநாதன்.
“இல்லிங்கண்ணே, பொங்கலுக்கு மொதநாத்துதேன் சம்பளம். அன்னிக்கித்தேன் திருநெல்வேலி டவுனுக்கு போவனும்…” என்று சொல்ல,
“ஆக்கங்கெட்ட கூவடா நீயி, காசில்லன்னா வாய தொறக்க மாட்டியோ? மூணு புள்ளயல வச்சிக்கிட்டு சம்பளத்த வாங்கிட்டு அன்னிக்கே என்னென்னுலே துணி எடுப்ப?…” என்று கோபப்பட்டான்.
எப்போதும் முதலிலேயே பூமிநாதன் குடுத்துவிடுவான். வழி வழியாய் அவர்கள் குடும்பத்தின் வழக்கமும் கூட.
கோவிலை நிர்வாகம் செய்யும் உரிமை பெற்றவர்கள். அவர்களுக்கென்ற சில கட்டுக்கள். அதில் இதுவும் ஒன்று.
அன்றைக்கான உணவுகள் கூட பெரிதாய் தான் இருக்கும். மூன்று வேளையும் வீட்டில் சமைக்கப்படும்.
காட்டில், தோப்பில் வேலை செய்பவர்களுக்கான பண்டிகை பணம் அவர்களது பொறுப்பு.
இன்றுவரை அதனை கூத்தபிரானும், அவர்களின் பிள்ளைகளும் வேலை செய்பவர்களுக்காக தாங்கள் செய்யும் மரியாதை என்று செய்துவர மயிலுக்கோ இல்லாமல் அவர்கள் தங்களிடம் கையேந்துவதாக நினைப்பு.
அதனால் அதில் எப்போதும் கவனமாக இருப்பவன் இன்றும் அதை போலவே குமரேசனிடம் கேட்க பூமிநாதன் நினைத்ததை போல தான் அவனும் பேசினான்.
“மொத நாளிக்கே போயி டவுனுல உடுப்பு எடுத்தார. அம்புட்டுத்தேன்….” என சொல்லி கையை கழுவிக்கொண்டு பணத்தை அவனிடம் தர,
“யண்ணே மொத உண்கிட்டு…”
“பிடிலே. இல்ல செவுலு பிய்ய போவுது பாரு. சவுட்டு வெலைக்கி எடுக்காம நல்லா பாத்து வாங்கு புள்ளைகளுக்கு…” என்று அதட்டவும் அதன் அக்கறையில் குமரேசனும் மறுக்காமல் பணத்தை வாங்கிக்கொண்டான்.
“போயி வடைய உண்கு. வயறு நெம்பவும் ஒறங்கினன்னு தெரிஞ்சாங்காட்டி ஒ தாவாங்கட்ட பேந்துரும். போ…” என்று சொல்லவும் அகத்தின் புன்னகை முகத்திலும் தெரிய நிம்மதியாக வெளியே வந்தான் குமரேசன்.
வீட்டில் ஏற்கனவே பிள்ளைகளும், மனைவியும் நச்சரித்துக்கொண்டு தான் இருந்தார்கள் எப்போது உடை எடுக்க செல்லலாம் என்று.
யாரிடமாவது கைமாத்தாக வாங்கலாம் என்று தான் அவனும் நினைத்துக்கொண்டு இருந்தான். இப்போது நிம்மதியாக இருந்தது.
மறுநாளே சென்று உடையும் எடுத்து வந்துவிடவேண்டும் என முடிவெடுத்துக்கொண்டவன் மனைவிக்கு அழைத்து விஷயத்தை சொல்லியும் விட்டான்.
அன்றிலிருந்து மூன்றாம்நாள் கோவிலில் கொடியேற்றம். பொங்கலுக்காக கொடியேற்ற காலையில் இருந்தே அங்கே தான் இருந்தார்கள் பூமிநாதன் குடும்பத்தினர்.
கொடியேற்றப்பட்டு விரதம் இருப்பவர்களுக்கு காப்பும் கட்டப்பட கூத்தபிரான், துளசி, செல்வி மூவரும் பூமிநாதனுக்காகவும், அவன் வாழ்க்கை சீராக வேண்டுமென்றும் விரதமிருப்பதாக காப்பு கட்டிக்கொண்டனர்.
பூமிநாதனோ செல்விக்கு உடல்நிலை சரியாகி விரைவில் சரியாகி அவள் தாயாக வேண்டும் என்று விரதம் இருக்க காப்பு கட்டிக்கொண்டான்.
அன்றிலிருந்து அந்த ஊரை சேர்ந்த யாரும் இரவானால் வெளியூரில் தாங்காமல் ஊர் திரும்பிவிடவேண்டும் என்று கட்டுப்பாடு போடப்பட்டது.
கோவிலில் பூஜை முடிந்தது. பொங்கல் படையல் போடப்பட்டிருக்க ஒரு கூடையில் சர்க்கரை பொங்கலையும் வாழைப்பழம், தேங்காய், பிரசாதம் மற்றும் சாமிக்கு சாற்றப்பட்டிருந்த பூ, மாலை எல்லாம் எடுத்துக்கொண்டு செல்வி பூமிநாதனை பார்க்க,
“வா…” என்று அங்கிருந்து நகர்ந்தான்.
“எங்க எங்க போதீக ரெண்டுபேரும்?…” என்று வந்து நின்றார் மயிலு.
“ம்மோவ், நவுரு. கோவில்ல வச்சு கனைக்காம…” என்றான் பூமிநாதன் பல்லை கடித்துக்கொண்டு.
“யே தெரிஞ்சு என்ன பண்ண போறியாம்த்தே?…” என்று மயிலின் முன்னால் மீசையை முறுக்கிக்கொண்டு வந்து நின்றான் செல்வியின் கணவன் வீரபாண்டி.
அவனை பார்த்ததும் யோகு அதற்கும் தனக்கும் சமபந்தமில்லை என்பதை போல பின்னால் சென்று நின்றுகொண்டாள். அண்ணன் என்றால் அத்தனை அச்சம்.
தாய் தந்தைக்கு பயப்படாதவள் அண்ணனனுக்கு நடுங்கத்தான் செய்வாள். தப்பென்றால் கொஞ்சமும் யோசியாது இப்போதும் கை நீட்டிவிடுபவன்.
அதனால் தான் தன் வீட்டில் அவளின் எந்த ஆட்டமும் செல்லுபடியாகவில்லை. செல்வியிடமும் அடக்கி வாசிப்பதன் காரணமும் அதுவே.
யோகலட்சுமி வீரபாண்டியின் பெற்றோர் சந்தானலட்சுமி, காளிங்கராயன். காளிங்கராயன் வாய் பேசாத மனிதர்.
அவருக்கு ஏற்றார் போல சந்தானலட்சுமியும் அமைதியாக இருந்துவிட இருவருக்குமாக சேர்த்து பேசவே வீரபாண்டியும், யோகலட்சுமியும்.
என்ன ஒன்று குணத்தில் அண்ணனுக்கும் தங்கைக்கும் சுத்தமாக ஒத்துபோகாது. வளரும் பொழுதே வெஞ்சினத்துடன் வளர்ந்திருந்தாள் யோகலட்சுமி.
இப்போதும் அவள் சொல்லி தான் மயிலு செல்வி கிளம்புவதை கவனித்தது. அதற்கே குறுக்கே வந்து தடுக்க அவருக்கே வீரபாண்டி முட்டுக்கட்டையாக வந்து நின்றான்.
என்னதான் அண்ணன் மகன் என்றாலும் ஒருகட்டத்திற்கு மேல் மயிலின் வார்த்தைகள் அவனிடத்தில் எடுபடவில்லை. எதிர்த்து நின்றுவிடுவான் அவன்.
“இல்ல வீரா…”
“இந்த கதையெல்லா ஒக்காந்து பேச பொறவு வீட்டுக்கு வாரேன். இப்ப போயி கொண்டு வந்த சாமான பொட்டிய கட்டும்ங்க…” என்றான் அதட்டலாக.
யோகுவோடு மயிலு நகர்ந்துவிட வீரபாண்டி மனைவிக்கும், மச்சானுக்கும் கிளம்பும்படி கண்ணை காட்டவும்,
“இன்னுமென்ன அங்கின வாய பாத்துக்கிட்டு நிக்கித? வாக்கா…” என்று செல்வியை கை பிடித்து அழைத்துகொண்டு சென்றான் பூமிநாதன்.