“தம்பி மீதி…” என சில்லறையை எடுக்க,
“ஏம்ய்யா நாளப்பின்ன வந்தா கழிச்சிக்கறேன், வையும் உள்ளார…” என சொல்லிவிட்டு பைக்கில் ஏறி அமர,
“அந்த காசுக்கு எனக்கொரு டீயை போடு பெருசு, மருமவேன் காசுல குடிக்கிததே தனி சொவம்…” என்று அதுவரை அவனிடம் பேசிக்கொண்டிருந்தவர் மீசையை முறுக்க ,
“பொறவென்ன…” என்று சொல்லி கிளம்பிவிட்டான் பூமிநாதன்.
அவனுக்கு தெரியும் தான் அவ்விடத்தை விட்டு கிளம்பியதும் பேச்சு தங்களை குறித்தாக தான் இருக்கும் என்று.
அப்படித்தான் நடக்கவும் செய்தது. பூமிநாதன் தலை மறைந்ததும் அங்கே அமர்ந்திருந்த ஆண்கள் அவனையும், அவன் வாழ்க்கையையும் பற்றித்தான் பேசிக்கொண்டார்கள்.
“நல்ல பய, ஆனா பாவத்த வாழ வேண்டிய நேரத்துல தனியா இருக்கனுமின்னு விதிய பாத்தியா?…” என அவன் மாமா என அழைத்தவர் சொல்ல,
“வேண்டி வேண்டி அந்த பொண்ண கட்டிக்கிட்டு போயி அந்த மயிலு ஆடுத ஆட்டம்? ஆனா நம்ம சிட்டுப்புள்ளையும் இம்பிட்டுக்கு எதுத்து நிக்கலைன்னா அம்மில வச்சி அரச்சுத்தேன் போடுவா அந்த ராங்கி…”
“நம்ம பூமி அம்புட்டுக்கா விடுவியான்? அதெல்லாம் ஆவாது. ஆனா ரோசக்கார புள்ளைய ரெண்டும். நல்லா இருக்கனும்…”
“இருக்காம? எம்புட்டுநாளிக்கு இவ ஆட்டம்ங்கேன்?…” என்று பேசி பேசி தங்களின் ஆற்றாமையை தீர்த்துக்கொண்டார்கள்.
பூமிநாதனுக்கும் அதே எண்ணம் தான். செல்வியை தன் அண்ணன் மகனுக்கு கட்டி கொடுத்தவர் துளசிக்கு அதே அண்ணன் மகளை கட்டி வைத்து அழைத்து வந்திருந்தார்.
யோகலட்சுமி அப்படியே அத்தையை கொண்டு தான் குணத்தில், இயல்பில் எல்லாமே.
பிடிக்கவில்லை என்றால் எத்தனை தூரத்துக்கும் பேசிவிடும் ஆட்கள் இருவரும். அதனாலேயே இருவருக்கும் ஒத்துபோகவும் செய்ய ஒளிமயிலின் அடுத்த மருமகளையும் அவரே தான் தேர்வு செய்தார்.
அப்போதெல்லாம் தாயின் குணம் எப்பேர்ப்பட்டது என்று துளியும் அறிந்திருக்கவில்லை.
அத்தனை வாய்த்துடுக்கு, கோவத்தில் மதிக்காத வார்த்தைகள், படபட பேச்சு என்று நினைத்திருக்க அவரின் இன்னொரு முகத்தினை சித்திரைவிழியின் வரவின் பின்னர் தான் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக உணர துவங்கியது.
அதை எதையும் நினைக்க பிடிக்காதவனாக வண்டியை தனது அலுவலகத்தில் கொண்டுவிட்டான்.
குமரேசன் வாசலில் போனில் பேசிக்கொண்டு இருக்க பூமிநாதனை கண்டதும் உடனே அணைத்துவிட்டு எழுந்து நின்றான்.
“எண்ணே?…”
“என்ன?…” என்று அவனை முறைத்துவிட்டு உள்ளே செல்ல அவனின் பின்னோடே தானும் சென்றான்.
“அம்மா வீடு வரைக்கி வர சொன்னாவுக. சுளுவா போயிட்டு வரட்டா?…” என கையை பிசைந்துகொண்டு அவன் கேட்க,
“யே ஒனக்கு இங்கின சோலிக்கழுத ஒன்னுமில்லியோ? போவே போயி வாசல ஒக்காரு…” என்று சொல்ல அவன் அப்படியே நின்றான்.
சட்டை பையில் இருந்து போனை மேஜை மீது மடார் என்னும் சத்தத்துடன் வைத்தவன் அவனை முறைத்து பார்த்துக்கொண்டே,
“என்ன?…” என்றான் மீண்டும்.
“இல்லண்ணே…”
“போங்கறேன்ல…” என அதட்டவும் வெளியே வந்துவிட்டான் குமரேசன்.
அவன் சென்றதும் நெற்றிப்பொட்டை அழுத்தி பிடித்துக்கொண்டவனுக்கு மீண்டும் பசித்தது.
செல்வியிடம் சொன்னால் அடுத்த பத்துநிமிடத்தில் உணவுடன் வந்து நின்றுவிடுவாள் தான். ஆனால் எத்தனை தான் அவளையும் வருத்துவது என்று பேசவில்லை.
அப்படி தான் சொன்னால் இன்றிரவு நிச்சயம் ஒரு பெரிய சண்டை இருக்கும். ஏற்கனவே யோகுவிற்கும், செல்விக்கும் ஆவதில்லை என்பது அவனறிந்தது தான்.
அதனுடன் இப்படி வேலை செய்யுமிடத்தில் உணவை கொண்டுவந்து ஊர் பார்த்து அதயும் பேசி. அவனுக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே ஆயிரம் பேச்சுக்கள்.
வீட்டின் நிலைமையையும், தன் வாழ்க்கையையும் எண்ணி பார்த்தவன் ஒரு பெருமூச்சுடன் திரும்பி பார்த்தான்.
அங்கே ஓரத்தில் இருந்த மண்பானையில் தண்ணீரை எடுத்து குடித்தவன் மீண்டும் வந்து அமர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
வெளியே வந்த குமரேசனுக்கோ மீண்டும் போன் வந்துவிட பயத்துடன் தான் எடுத்தான். இல்லை என்றால் அத்தனை திட்டு விழுமே?
“என்னாலே கெளம்பிட்டியா? எங்கின வார?….” அவன் வந்துகொண்டிருப்பதாக எண்ணி மயில் அதட்டலாக கேட்டார்.
“இல்லங்கம்மா, அண்ணே வசுருச்சு. வாசக்கிட்ட போயி ஒக்காருன்னுடுச்சு…”
“யே நா சொன்னா வரமாட்டியோ? அவென் ஒக்காருன்னா ஒம்ம கால நவத்தமாட்டியோ?…” என்றார் அதிகாரமாக.
“இல்லங்கம்மா…”
“நாசமத்து போனவனே பொங்க காசு, தீவாளி காசுன்னு வீட்டுப்பக்கம் வந்துறாத. மூஞ்சில வென்னிய ஊத்துதேன்…” என்று எரிந்துவிழுந்த மயிலு போனை வைத்துவிட்டார்.
குமரேசன் முகமே வாடிவிட்டது. வறுமையின் கீழ் இருப்பவன். இப்படி பண்டிகை நேரங்களில் அவர்களை போலுள்ளவர்கள் தரும் பணமானது தன் குடும்பத்தின் கஷ்டத்தை தீர்க்க உதவும் என்று இருப்பவன்.
சோகமாய் அவன் அமர்ந்திருக்க பூமிநாதன் அழைத்துவிட்டான் உள்ளே. எழுந்து சென்றதும் பையில் இருந்து பணத்தை எடுத்து நீட்டியவன்,
“நாலு மலவாழப்பழம் வாங்கியாலே…” என சொல்ல குமரேசனுக்கு வருத்தமாக இருந்தது.
மயில் போன் செய்த பொழுதே பூமிநாதனுக்கு உணவை அனுப்புவதாகவும், வந்து வாங்கி செல்லும்படி தான் அழைத்திருந்தார்.
வரும்பொழுதே அவனின் முகமும் சரியில்லாதிருக்க வீட்டில் சண்டை போல என நினைத்து தான் உணவை வாங்க செல்ல கேட்டு நின்றது.
இப்போது அவன் பசியில் பழம் வாங்கி வர சொல்லவும் மனதே ஆறவில்லை அவனுக்கு. காசை கையில் வாங்கியவன்,
“யண்ணே, உண்கலையோ?…” என கேட்டான்.
“பசிக்கலடா. அதேன் பட்டினியா இருக்க வேணாமின்னு பழத்த மட்டும் வாங்கியார சொல்லுதேம். போ…”
“நா வேணா வீட்டுக்கு போயி…” என்றதும் பூமிநாதன் முறைக்க,
“செரிண்ணே…” என்று திரும்ப,
“இந்தா நில்லு…” என்று அவனை நிறுத்தியவன்,
“என்னலே கண்ணு கலங்கி கெடக்கு?…” என்றதும் தனது சட்டையை தூக்கி முகத்தை துடைத்துக்கொண்டான் குமரேசன்.
“வெயிலுக்கு வேர்த்து வடியுதுன்னே. அம்புட்டு வேக்காடு…” என்றான் அவன்.
வெளியே சுற்றிலும் மரங்கள் இருக்க அதிலும் மழை நேரம் வேறு. சிலுசிலுவென அடித்த காற்றில் இவனுக்கு வேர்க்கிறதாமாம்?
“அம்மை வசுச்சோ?…” என்றான் மென்மையாக.
குமரேசன் தலையை தாழ்த்திக்கொண்டான். மயிலின் வசவுகள் அவனுக்கு புதிதில்லை தான்.
ஆனால் காசுக்கு வாசலில் வந்து நின்றால் வெந்நீரை ஊற்றுவேன் என்றதில் உள்ளுக்குள் காந்திக்கொண்டே தான் இருந்தது.
“இந்தா வாய தொரலே? வாப்பெட்டிய சாத்திட்டியோ?…”
“இல்லம்ண்ணே…” குரல் கம்மிவிட்டது பூமிநாதன் கேட்டதும்.
“நாசமத்து போனவனே, வீட்டுப்பக்கம் வராத, மூஞ்சில வென்னிய ஊத்துவேமின்னு வசுருச்சு…”
“ஒன்னிய வாழ்த்திருக்குடே. கவனிக்கலியா நீயி?…” என்றான் அவன் பேசியதில் இருந்த வார்த்தையை கண்டு.