உயிர் – 6
விழி கிளம்பியதும் முழு கவனமும் அங்கிருந்த கூட்டத்தில் தான் திரும்பியது பூமிநாதனுக்கு.
“என்னவே என்னத்துக்கு கோட்டித்தனம் பண்ணுத?…” என்றான் தன்னிரு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு ரேஷன்கடை ஊழியரை பார்த்தபடி.
“அண்ணாச்சி…” என்று ஆரம்பித்தவனை பேச விடாமல் ஊர்மக்கள் ஆளுக்கொரு புகாராக சொல்ல,
“இல்லண்ணே, ஒடம்பு நோவா இருக்கேன்னுதேன் செத்த குறுக்கால சாய்க்க…” என்று அவன் மீண்டும் தான் கிளம்பியதற்கு நியாயம் சேர்த்தான்.
“என்னலே நோவு ஒனக்கு? வேல பாக்க நோவுதோ? இதென்ன ஒ பாட்டம் போட்ட கடையோ? என்ன நெனப்புலே?…” என்று பல்லை கடித்துக்கொண்டு பூமிநாதன் கேட்க,
“யேம்ண்ணே முடியாங்காட்டித்தேன். நாளிக்கே வந்து அரிசி போடுதேம்ன்கேன். ஒருபயலும் கேக்கமாட்டியானுங்க…”
“நீ வெச்ச சட்டமாலே? அவிங்களுக்கு வேலைக்குத்தேன் நீ. ஒ சொவத்துக்கு ஆட்டி வெப்பியோ? நெனச்ச நேரம் போவனும்னா அப்பம் எதுக்குலே இங்கின வேலைக்கி சேந்த?…” என்றான்.
“எண்ணே நா போடமாட்டேன்னா சொன்னே? நாளிக்கின்னுதேன்….”
“இதென்ன ஒ அப்பேன் வீட்டு அரிசியாலே? நெனச்ச நேரத்துக்கு போட? நேரம் என்னலே? அதுக்கானங்காட்டி வீடு போவ அவசரமோ? யே வேல வேணாமின்னு போயேன்….” என கோபத்துடன் கேட்ட பூமிநாதன்,
“தொறவா எங்கலே?…” என்றான் அவனிடத்தில்.
“யண்ணே?…”
“லே தொறவா எங்கம்ங்கேன்ல?…”
“இந்தாருக்கு…” என்று என அவன் கடுப்புடன் காட்ட,
“என்ன மொகரையில என்னிய கோமிக்கதாட்டம் அம்புடுது?…”
“இல்லண்ணே…”
“ஒ இடும்பெல்லா வேறெங்கினையும் காட்டு. பொறவு கோமிக்க நீ வேலையில இருக்கமாட்ட, பாத்துகிடு. போ போயி சாரத்த ஏத்தி கட்டி கொண்டிய தொற…” என்றவனின் பேச்சை மீற முடியவில்லை அவனால்.
கடுப்புடன் மீண்டும் கதவை திறந்தவன் தன்னிடத்திற்கு சென்றான். அவனுக்கு பின்னால் இன்றிருந்த இரு பணியாளர்களும் சேர்ந்து உள்ளே சென்றார்கள்.
அங்கே நின்று சிறிதுநேரம் அரிசி போடப்படுவதை பார்த்திருந்துவிட்டு அனைவரையும் எச்சரித்த பின்னரே அங்கிருந்து கிளம்பினான் பூமிநாதன்.
அவன் செல்லும் வரை மட்டுமல்ல அதற்கு பின்னும் எதையும் மக்களிடம் பேச முடியவில்லை அந்த வேலையில் இருந்தவனால்.
ஏற்கனவே அவன் மீது ஏகப்பட்ட புகார்கள். நினைத்த நேரம் கடையை திறக்கவும், தனக்கு தோன்றியவற்றை கொடுக்கவும் என்று ஆட்டம் காட்டிக்கொண்டிருக்க இன்றோ அத்தனைக்கும் முற்றுப்புள்ளி.
பூமிநாதன் மேல் கோபம் கிளர்ந்தெழுந்தது. ஆனால் காட்ட முடியாதே? வேலைக்கு வேலையும் போய்விடும். ஊருக்குள் தேவையில்லாத பிரச்சனையும் ஆகிவிடும்.
ஊரின் பெரிய குடும்பம். ஆனால் அவனை யாராலும் ஒருவார்த்தை பேசிவிடமுடியவில்லை.
மனைவி வாழமாட்டேன் என விட்டு சென்றதை சொல்லி குத்திக்காட்டவும் முடியவில்லை. அப்படி இருந்தது அவன் மீதான மரியாதை அங்கே.
முணுமுணுப்புடன் வேலைகள் நடந்துகொண்டிருக்க பூமிநாதன் சற்று தள்ளி வந்து நின்று டீ கடையில் டீயை வாங்கி குடித்துக்கொண்டு நின்றான்.
“என்ன மருமவனே இந்த வளவு பக்கம் செலாத்தலு?…” என்று அவனின் உறவுமுறை ஒருவர் வந்து நின்றார்.
“எல்லாஞ்சோலிதேன் மாமோய்…” என்றான் அவரிடத்தில் சிரித்த முகமாக.
சூடாக டீ குடித்ததில் பசி மட்டுப்பட்டிருக்க அவன் முகம் இலகுவாக இருந்தது இப்போது.
“நமக்கு என்னிக்கித்தேன் சோலி இல்லாமருந்துருக்கு? நா கூட எம்மவள பாக்கத்தேன் இங்கிட்டு ஒலாத்தலோன்னு நெனச்சுப்புட்டேனேப்பா?…” என்றார் கிண்டலாக.
“அப்பிடியும் வச்சுக்கம்ய்யா. ஆரு வேணாங்கறா?…” இன்னுமே அவன் முகத்தில் அட்டகாசமான புன்னகை.
அதை கண்டவரும் சரி, கடையில் இருந்தவர்களும் சரி வாஞ்சையுடன் பார்த்தார்கள் அவனை.
எவ்விடத்திலும் சித்திரைவிழியை அவன் விட்டுக்கொடுத்ததில்லை. அவர்கள் வீட்டு விவகாரம் ஊரறிந்தது தான்.
ஆனாலும் யாரும் எதுவும் பேசத்தான் முடியவில்லை. பூமிநாதன், சித்திரைவிழிக்காக மயிலிடம் பேச சென்றவர்களும் மூக்குடைந்து திரும்பும்படி ஆகிற்று.
அத்தனை அவமானத்திற்கு பிறகும் இருவரும் எப்படியோ போகட்டும் என்று நினைத்துவிட முடியவில்லை.
ராசப்பன் இறப்பின் பின்னர் மொத்தமாக சித்திரைவிழி தன் வீடே கதி என்று வந்துவிட பூமிநாதனும் மனைவிக்காக பொறுமையுடன் காத்திருப்பதும் அனைவரும் அறிந்ததே.
அவளிடமும் பேச முடியவில்லை. ஒரு கஷ்டம் என்று வந்த நேரம் மொத்த ஊருமல்லவா ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது. அதில் இன்னுமே வருத்தம்.
பூமிநாதனுக்குமே வருத்தம் தான். தானில்லாத நேரம் அவளுக்கு துணையாகவேணும் யாரும் நின்றிருக்க கூடாதா என்று. ஆனாலும் அவன் காட்டிக்கொள்ளவில்லை.
தன் வீட்டினரே அவளை அறையில் அடைத்து வைத்து கதறவிட்டு துடிக்க வைத்திருக்க ஊரை சொல்லி என்ன புண்ணியம் என்று விட்டுவிட்டான்.
ஆனால் எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை யாரிடத்திலும். எப்போதும் போலவே அவன் பழக்கவழக்கங்கள் இருந்தது.
“என்ன மாமோய், பேச்சையே காணோம்? வார்த்த அம்புடலையோ?…” என்றான் கேலியுடன்.
“அட ஏம்ப்பா?…” என்று சமாளிப்பாக சிரித்தவர்,
“ரேசன்கடையில இருந்து சிட்டு போறத பாத்தேன். இங்கிட்டு நீயும் வளவுல நிக்கிதியா அதேன்…”
“எம்பொண்டாட்டி அரிசி வாங்கிட்டாளான்னு பாக்கத்தேன் இங்கிட்டு ஒலாத்தலு…” என்றான் இன்னும்.
“செரித்தேன், ஒம்ம கேக்க ஆவுமா?…” என்றவர் பின் கனிவுடன்,
“யேம்ய்யா கொடைக்கி வாராவளா?…” என்றார் லேசாய் குரலை தழைத்துக்கொண்டு.
“அத்த அன்னிக்கி பாப்பம்…”
“என்னத்த பாக்க? நேத்து காட்டுல கூட ஒம்ம அய்யன் சொன்னாரு வரி குடுக்கல. அத்த கேக்க போன ஆளுகட்ட எகிறிடுச்சின்னு…” என்று சொல்லவும் பூமிநாதன் புன்னகையுடன் பார்த்தான்.
“நாந்தேன் வாங்கி தாரேன்னு சொல்ல ஐயா ஆள அனுப்பி போட்டாரு. அதேன் அவ எகிறிருக்கா…” அது ஒரு விஷயமே இல்லை என்பதை போல அவன் பேசியவிதம் எல்லோர் முகத்திலும் ஒரு சிரிப்பினை உண்டாக்கியது.
“என்னிக்கி நீ மவள எறக்கி பேசிருக்க? மருமவேன் வவுசு தெரிஞ்சுதேன் வாப்பெட்டிய சாத்திட்டு போனேன். எனக்கும்ந்தேன் எவ்வாய் நிக்கிதா பாரேன்…” என தன்னை தானே சொல்லிக்கொண்டவர்,
“சேரி சேரி இந்த கொட கழிஞ்சாவது வீட்டுக்கு கூட்டி போவ பாரும்…”
“இல்லாங்காட்டி அங்கன நம்ம பெட்டிய போட வேண்டிதேன்…” சளைக்காமல் பேசினான்.
“நீ செஞ்சாலும் செய்வலே. சொல்லிட்டு போவத்தான?…” என்று அவர் சொல்ல அனைவரும் சத்தமாக சிரித்துவிட,
“யோவ் மாமோய் சொல்லாம என்னத்த? ஊருக்கே கறி கஞ்சி ஆக்கிடமாட்டோமா என்ன? ஆட்டுக்கு நீதேன் பொறுப்பு…”
“சொல்லமட்டுந்தேன். மாமன் வேலைய மட்டும் பாருடே அன்னிக்கு. அம்புட்டும் செய்யத்தேன்ய்யா தவிச்சு கெடக்கேன்…” என்றார் முழுமனதாக.
“செரித்தேன், வாட்டமா நோட்ட எண்ணி வெய்யும்…” என்று சிரித்தவன் சட்டை பையில் இருந்து காசை எடுத்து டீக்கு நீட்ட கடைக்காரர் வாங்கிக்கொண்டார்.
வேண்டாம் என்றால் அது கூட பூமிநாதனை சங்கடப்படுத்தும் என்று வாங்கிக்கொண்டார்.