உயிர் தழுவும் விழியே – 5 (2)

அவள் சொல்வதில் இருந்த உண்மை மயிலுக்கு நடு மண்டையில் நச்சென்று விழுந்தது.

“இந்தாடி கம்மின்னு இரேன்…” இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை கமுக்கமாக சென்றுகொண்டிருக்க உள்ளே நுழைந்தவன் நேராக மாடிக்கு தான் செல்லவிழைந்தான்.

“யய்யா பூமி…” தாயின் குரலில் சட்டென ஒரு இறுக்கம்.

ஆனாலும் என்னவென்று கேட்காமல் இருக்க முடியாதே? அந்த மரத்தட்டில் நான்கு படிகள் ஏறியவன் அங்கிருந்தே திரும்பி என்னவென்று பார்த்தான்.

அந்த பார்வை எதையோ உணர்த்துவதை போல இருக்க மயிலுக்கு சட்டென நேரடியாக கேட்க முடியவில்லை.

“எங்க போவுற? மொத உண்க வாம்லே. பொறவால போயி படுப்பியாம்…” என்றார் மகன் ஓய்வுக்கு செல்வதை போல தான் நினைப்பதாக.

“பசிக்கல்லம்மோவ்…” என்று மட்டும் கூறினான் பூமி.

உண்மையில் பசி என்னும் உணர்வே இல்லாமல் ஒருவித மோனநிலையில் இருந்தது அவன் மனது.

உள்ளுக்குள் இனிமை உணர்வு தலைவிரித்தாட அதிலிருந்து கலைய விரும்பாதவனாக அப்படியே தான் சென்றுவிட நினைத்தான்.

இப்போதும் அகம் மொத்தமும் புன்னகையில் பூரித்திருந்தது சித்திரைவிழியின் பாவனைகள் எல்லாம்.

அவள் முறைத்து நின்றதாகட்டும், தன்னை பேசியதாகட்டும், வீட்டிற்குள் விடவே மாட்டேன் என்பதை போல மறித்ததாகட்டும், அத்தனைக்கும் மேல் தன் கழுத்தில் கிடந்த சங்கிலியில் அவள் வாய்பிளந்து நின்றது.

எல்லாம் எல்லாமே அவனின் மனதிற்குள் ஆலாபனை செய்துகொண்டிருந்தது. இந்த உணர்வும் கூட அத்தனை பிடித்தம்.

அவளுக்கான தவிப்பும், ஏக்கமும் என அவன் இந்த ஏழு மாதமாய் மெல்ல நெருங்குவதும், பல நேரம் தூர நிற்பதும் என இந்த நுட்பங்கள் அவனை ஆட்டுவித்துக்கொண்டுதான் இருந்தது சுக இம்சையாய்.

அதிலும் எங்கே வீட்டிற்குள் தான் வந்துவிட்டால் என்று பயந்து அவள் பார்த்தது எல்லாம் நினைக்கையில் மழை தூவியது மனதில்.

‘வாயாடி என்னைய தெரிஞ்சி வச்சிக்கிட்டே ஆட்டம் காட்டுதா’ என சொல்லிக்கொண்டான் தனக்குள்.

இப்படி நினைவுகளை இன்னுமே நிதானமாய் அசைபோட விரும்பி தனிமையை நாடி அறைக்கு செல்ல இருந்தவனை இழுத்து பிடித்து நிறுத்தி கேள்வி கேட்டவர் மீது சலிப்பு உண்டானது பூமிநாதனுக்கு.

அவனுக்கு நிச்சயம் தெரியும் தான் விழியின் வீட்டிற்கு சென்ற பொழுதே விஷயம் தாயிடம் வந்து சேர்ந்திருக்கும் என்று.

அதற்கான சண்டைக்கு அச்சாரமாய் தான் அவர் இப்போது காத்திருப்பது என்பதையும் கவனித்துக்கொண்டுதான் மேலே ஏறினான்.

“ஒன்னியத்தாம்லே, யே பசிக்கல? அந்த கெரகம் புடிச்சவ வீட்டுல உண்கிட்டியோ?…” என்று கேட்டவரின் குரலில் ஏகத்திற்கும் காழ்ப்புணர்ச்சியே.

ஆத்திரத்துடன் விழிகள் சிவக்க மகனின் முன் வந்து நின்று கேட்கவும் படியில் இருந்து நிதானமாக கீழே இறங்கி வந்தான்.  

“ஆமான்னா என்னவா? ஆஹ்…” என கேட்க மயிலுக்கு ஒருநொடி வார்த்தைகள்  பிடிபடவில்லை.

“சொல்லத்தான? என்னங்கறேன்ல ம்மோவ்? அதுக்குத்தான இம்பிட்டு நேரம் நிப்பாட்டினீக?…”  என்றான் மீண்டுமாக.

“நீ என்னத்துக்கு அங்க போனியாம்?…” என மயிலு சுதாரித்து கேட்க,

“ஒன்னோன்னுத்துக்கும் ஒம்மட்ட நா, நச்சத்திரம் பாக்கனுமோ? என்னால ஆவாது. போவத்தேன் செய்யுவேன். என்னங்கற?…” என்றான் கொஞ்சமும் தயங்காது.

“அப்ப அங்கினதேன் உண்கிருக்க?…” மயிலுவால் மகனின் எதிர்பேச்சை என்றும் போல இன்றும் ஜீரணிக்கமுடியவில்லை.

“அதேன் சொல்லிட்டீயள? பொறவு என்ன? எம்பொஞ்சாதி வீடு. அங்க உண்காம வரனுமின்னு என்னவா?…”  

முதல்நாள் அவர் செய்துவைத்த காரியத்தின் கோபத்தினை இப்போது காண்பித்துக்கொண்டிருந்தான்.

நிச்சயம் சித்திரைவிழியை அத்தனை பேசியே தான் கையெழுத்தை வாங்கியிருப்பார் தன் தாய்.

அத்தனை சுலபத்தில் போடுகிறவளா அவள் என்று தோன்றிக்கொண்டே தான் இருந்தது பூமிநாதனுக்கு.

இனியும் அமைதியாக ஏதும் பேசாது கடந்துவிட்டால் வேலைக்கே ஆகாது என்று நினைத்தவன்,

“என்ன அம்புட்டுத்தான?…” என்றான் யோகு, மயில் இருவரையும் பார்த்து.

“பெத்த வவுறு எரியுதுலே. இம்புட்டுக்கு ஒன்னிய மாத்திப்போட்டாளே?…” என்று உடனே அழுகையை கைய்யிலெடுக்க அலுப்பாய் பார்த்தான் தாயை.

“நீ மட்டும்தேன் என்னிய பெத்தியோ? மத்தவகலாம் மரத்துலையா புள்ளைய பறிச்சிட்டு வந்தாக?…” என்றுவேறு கேட்க திகைத்து போனார்.

“எம்பொண்டாட்டிய பாக்க நா போவத்தேன் செய்யுவேன். உண்கத்தேன் செய்யுவேன். ரா தங்கலு கூட இருக்கத்தேன்…” என வேட்டு மேல் வேட்டு வைத்துக்கொண்டு இருந்தான்.

“ஐயோ ஐயோ ஐயோ, இந்த கருமாயத்த எங்க போயி சொல்லுவேன்…” என்று கீழே அமர்ந்து உச்ச குரலில் அழ ஆரம்பிக்க உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தவன் எரிச்சலான ஒரு தலையசைப்புடன் மீண்டும் வாசல் பக்கம் திரும்பிவிட்டான்.

தன்னையும், தன் கண்ணீரையும் கண்ட பின்னும் மகன் கொஞ்சமும் இரங்காமல் செல்வதை பார்த்துவிட்டு உடனே எழுந்து அவன் அருகே ஓட்டமும், நடையுமாக வந்தார்

“நில்லு பூமி, எங்கிட்டு கெளம்பிட்ட?…” என்று பதறி ஓடி வர,

“யே சொல்லியாவனுமா?…”

“அப்ப பெத்தவ என்ன கெதிக்கி போனாலும் ஒண்ணுமில்ல? எடுத்தெறிஞ்சி பேசுதியே? எங்கண்ணீருக்கு மருவாதி இம்பிட்டுக்குத்தான?…” என மூக்கை உறிஞ்சினார்.

மயில் பேசும் போது அங்கேயே நின்று கை கட்டி வேடிக்கை பார்ப்பதை போல அவன் நின்ற தோரணை இன்னுமே அவரை உசுப்பேற்றியது.

“ஒன்னிய பெத்த மனசு குளுந்துபோச்சுலே. இதுக்குத்தான நா ஒன்னிய பெத்து வளத்து ஆளாக்கி, அப்ப அம்மைன்னு நான் என்னத்துக்குலே. இம்பிட்டு தூரத்துக்கு வெறுப்ப மண்டுதியே. என்னிய கலங்கவிட்டு போவ என்னன்னுலே முடியுது?…” என்றார் மகனை எப்படியும் தன் வார்த்தைகளால் உருக வைத்துவிடும் வேகத்தில்.

“என்னம்மை செய்ய நானு? ஒ வவுத்துல பெறந்து ஒன்னியமாரியே எரக்கமில்லா சென்மமா தான போனேன்?…”

“என்னாலே, என்ன பேசுத?…”

“ரோசன பண்ணி பாருத்தா. யே நீ எரக்கத்தோடதேன் எம்பொஞ்சாதிய ரூம்க்குள்ள வச்சி பூட்டினியோ? அன்னிக்கு ஒன்னோட எரக்கமெல்லா எங்கம்மோவ் போவுச்சு?…” என்றதும் திடுக்கிட்டு பின்வாங்கினார் மயில்.

“பேசும்மோவ், இப்ப பேசத்தான?…” என்றான் அதட்டலாக.

அதிலும் முன் தாழ்வாரத்தில் வைத்து அவன் பேச சுற்றிலும் வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் வேறு இருக்க மயிலுக்கு தலையிறக்கமாக போனது.

“மெல்ல பேசுலே…” என்றார் பல்லை கடித்துக்கொண்டு மகனை துளி அழுகை இன்றி.

அவரின் சாகசத்தை வெறுப்புடன் பார்த்தவன் அவரை தாண்டிக்கொண்டு செல்ல முயல,

“யே நில்லுலே, இப்ப எங்க கெளம்பிட்ட? ஒறங்கத்தான? கம்மின்னு உள்ளார போ…” என்றார்.

“என்னம்மோவ், என்னிய ஆட்டி வெக்கிததா நெனப்பா? ஒம்ம நெனப்புக்கு நா ஆப்படுவேனா?….” என்று முறைத்து நின்றான்.

“பொறவு எங்க போவ?…”

“யே எம்பொண்டாட்டி வீடு இல்ல? அங்கத்தேன்…” என்று சொல்லிவிட்டு அவன் வாசலில் இறங்கி வண்டியை கிளப்பிக்கொண்டு செல்ல ஆணியடித்ததை போல நின்றுவிட்டார்.

“என்னத்தே ஒம்மவேன் அவக பாட்டுக்கு கெளம்பிட்டாக. தேமேன்னு இப்பிடி ஒன்னுத்துக்காவாம கம்மின்னு வேடிக்க பாக்கதீக?…” என யோகு வந்து பேச இருந்த எரிச்சலில்,

“போடி அங்கிட்டு சோலிக்கழுதய பாத்துக்கிட்டு. என்ன ஆவுது, ஆவலன்னு பாக்குதேன்…” என்று முந்தானையை உதறி முடிந்துகொண்டு உள்ளே சென்றார்.

ஆனாலும் மனது ஆறவே இல்லை. இப்படி மகன் பேசியதை ஏற்கமுடியாமல் கோபத்துடனே தான் இருந்தார்.

இப்படியே போனால் நிச்சயம் சித்திரைவிழி வீட்டிற்கு வந்துவிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என தெரிந்துவிட்டது.

இல்லை என்றாலும் தன் மகனே அங்கு சென்று தங்கிவிடாலும் ஆச்சர்யமில்லை என்பதும் தெரிந்துபோனது.

இந்த இடைவெளி கூட சித்திரைவிழியின் ரோஷத்தில் எழுந்திருக்கும் திரைத்தானே தவிர்த்து நிச்சயம் சுவராய் மகன் எண்ணமாட்டான்.

வீட்டிலிருந்து கிளம்பிய பூமிநாதனுக்கு மனதே இல்லை வீட்டில் இருக்க. அப்படியே விட்டிருந்தால் கூட பரவாயில்லை.

இப்போது எரிச்சலில் பசிக்கவும் செய்ய வீட்டில் சாப்பிடவும் விருப்பமின்றி, அக்காவின் வீட்டிற்கும் செல்ல தோன்றாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க,

“தம்பி தம்பி…” என்று அவனை வழிமறித்து ஒருவர் ஓடி வந்து நின்றார்.

“என்னங்கண்ணாச்சி? மெல்ல மெல்ல…” என அவரை நிதானப்படுத்த,

“ரேசன்கடையில வாத்தகராறு தம்பி. அம்புட்டு பயலுவலும் கடைய சாத்தவுடாம மல்லுக்கு நிக்கிதானுக…”

“யேம்ண்ணாச்சி?…”

“அரிசி பாதிபேத்துக்குத்தேன் அளந்தியான். இப்ப தீந்துபோச்சுன்னு கைய விரிக்கிதியான். கடைய சாத்தனும், அரிசி நாளைக்கின்னு மாத்தி மாத்தி பேசுதியான். அங்கின பூரா கூச்சலா கெடக்கு…” என்றதும் வண்டியை ரேஷன்கடை பக்கம் திருப்பினான்.

பூமிநாதன் செல்ல அங்கே சித்திரைவிழி வண்டியின் அருகே சிந்தா கன்னத்தில் கை வைத்தபடி வேடிக்கை பார்க்க, அவளும் அருகில் தான். கூட்டத்தில் அடிதடியாகும் போல இருந்தது.

பூமிநாதனின் வருகையில் அத்தனைபேரும் கலைந்து ஒதுங்கி நிற்க கடையாள் எச்சிலை விழுங்கியபடி பார்த்தான் அவனை.

“என்ன இங்க சண்ட?…” என்று அவன் வந்து நின்றதும்,

“அண்ணாச்சி இவேன் நித்தைக்கும் கரச்சல கூட்டுதியான். என்ன கோட்டிக்கார பயலுவளா நாங்க?…” என அங்கிருந்த ஆண்கள் எல்லாம் கொந்தளித்து பேச,

“யே இந்தா, என்னத்துக்கி இம்புட்டு சலம்பலு? செத்த பொறுத்து பேசுவே…” என்றான் அனைவரையும் அடக்கியபடி.

“ம்மோவ், வா போவலாம்…” என அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற சித்திரைவிழி தாயை அழைக்க,

“நீ போவியாம். நா வடிவோட வாரேன்…” என்றதும் மகள் ஒரு முறைப்பு முறைக்க அமைதியாக வண்டியில் ஏறி அமர்ந்துவிட்டார்.

நடக்கும் கலவரத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவள் சென்ற விதத்தையும் ஒரு பார்வையில் உள்வாங்கியபடி அங்கே பிரச்சனையை கேட்டான்.

error: Content is protected !!