உயிர் தழுவும் விழியே – 5 (1)

உயிர் – 5

          ஆளுக்கு முதலாக தன்னை உள்ளே விடமுடியாது என்பதை போல விழி வந்து நின்ற வேகத்தில் பூமிநாதனின் புருவங்கள் உயர்ந்து இதழ்கள் சிரித்துவிடுமோ என்னும் விதமாய் மாற அதனை மீசைக்கடியில் அடக்கினான்.

“என்ன என்ன?…” என வேஷ்டி முனையை இடதுகையால் தூக்கி பிடித்தபடி அவன் முறைப்புடன் நிற்க,

“இங்க என்ன சோலிங்கறேன்?…” என்றாள் இறுக்கமாய்.

“சோலி இருக்கத்தேன். இல்லங்காட்டி எனக்கென்ன இங்கன சோலிங்கறேன்?…” வேண்டுமென்றே அவளை போல சீண்ட இன்னும் முறைப்புடன் நின்றாள்.

“அதத்தேன் சொல்லுதது? வாயில என்ன கொழக்கட்டையா?…” என்றவளையும், அவள் வாசல் மறித்து நின்ற விதத்தையும் பார்வையால் சுட்டி காண்பித்தவன்,

“இந்த ஊரு பிரெசிட்டேன்டு நானு, ஒரு மரியாதங்கறதே இல்ல? இப்பிடித்தேன் வாசல்ல அணக்கட்டுவியோ?…” என்றதும் அவனை ஒருநொடி யோசனையுடன் பார்த்தாள்.

“ஊரு காரியமா வந்திருக்கேன். உள்ள போம்மா…” என்று வேறு பூமிநாதன் அவளை அதட்ட,

“என்னவேணா இங்கினியே சொல்லிட்டு பொறப்படும். ஒம்மையெல்லா ஆளில்லாத ஊட்டுக்குள்ள விடமுடியாது…” சித்திரைவிழி சொல்லவும் பூமிநாதன் வெளியே சுற்றிலும் பார்த்தான்.

அதிலேயே கலவரமானது விழிக்கு. எதற்கு இப்படி பார்க்கிறானோ என யோசனையுடன் ஏதோ ஞாபகத்தில் தானும் அவனை போல வெளியே எட்டி பார்த்தாள்.

பூமிநாதன் அவள் பக்கம் திரும்பி சற்றும் சுதாரிக்கும் முன் அவள் மேல் அப்பிக்கொண்டு இரு கையால் இடையை பற்றி அவளையும் தூக்கிக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்துவிட்டான்.

“யோவ் விடுய்யா. விடுங்கறேன்ல. கோட்டியாம்லே ஒமக்கு?…” என்று அவனின் இந்த செயலில் திடுக்கிட்டு அவனின் கையை பிடித்து கோபத்துடன் தள்ள,

“சொல்லிட்டே கெடக்கேன். ஒனக்கு என்னைய பாத்தா ஏப்ப சாப்பையா ஆப்படுதோ?…” என்று முகத்தை நெருக்கமாய் வைத்துக்கொண்டு மிரட்ட,

“தள்ளுங்கேன்ல. ஒம்ம புத்தி தெரிஞ்சிதேன் உள்ளார நொழைய விடல…” என்று அவனை பிடித்து ஒரே தள்ளாக தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தினாள்.

நொடியில் நடந்துவிட்ட நெருக்கமும், தீண்டலும் அவளை மூச்சுவாங்க செய்ய மனைவியின் மீது ஏகபோக உரிமை கொண்டவனோ கொஞ்சமும் லஜ்ஜையின்றி அவளை, அவளின் இந்த தவிப்பை கண்ணாற கண்ணுற்றவனின் பார்வையில் கள்ளூறியது.

“சொல்ல வந்தத சொல்லிட்டு பொறப்படும். கொள்ள சோலி கெடக்குது…” என்றாள் தன் தையல் அறையை காண்பித்து.

“நமக்கு சோலி என்னைக்கித்தேன் இல்ல….” என்று கையை தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறித்தபடி அவளை பார்த்தவன் மேல் பொங்கிக்கொண்டு வந்தது ஆற்றாமை.

இப்படி தன்னை வேண்டுமென்றே தனிமையில் வைத்து உசுப்பேற்றி படுத்துகிறானே என்று. அதேநேரம் சிந்தாவின் மேல் கோபமும் கனன்றது.

போனை எடுத்து தாய்க்கு அழைக்க போனவள் கையில் இருந்ததை பறித்துக்கொண்டு அங்கிருந்த சேரில் அமர்ந்துகொண்டான்.

“தண்ணி கொண்டாடி. தாகமா இருக்கு…” என்றவன் குரல் கனிந்திருக்க,

“கடனாளி வீட்டுல கை நகைக்க எல்லாம் ராசாங்கத்தாளுக்கு ஆவுமா என்ன? தண்ணிமியுமில்ல வென்னியுமில்ல…”  என்றாள் பட்டென்று.

“பொண்டாட்டி வீடு என்னிக்கி கடனாளி வீடாச்சு? அதுவும் சங்கிலிய கூட திருப்பி தந்துட்ட தான?…” என்றவன் தன் கழுத்தில் கிடந்ததை எடுத்து காண்பிக்க வாயில் கை வைத்துவிட்டாள்.

அவள் மீட்டு திருப்பி தந்திருந்த அந்த தங்க சங்கிலியை தனது கழுத்தில் அணிந்திருந்தான் பூமிநாதன். அதனை எடுத்து வேறு காண்பித்து பேச,

“அட கூறுகெட்ட மனுசா?…” விழிக்கு அவனின் அழிச்சாட்டியத்தில் சிரிப்பு முட்டியது.

“என்னிக்கு ஒங்கிட்ட நா வெக்கப்படிருக்கேன்? இல்ல நீதேன் என்னிக்கு என்கிட்ட வெக்கப்பட்டிருக்க?…” என்று சட்டை காலரை தூக்கிவிட்டு அமர்ந்து பேச விழிக்கு தான் ஆயாசமாக இருந்தது.

உண்மை தானே அவன் சொல்லியதும். இப்போதும் அதே அவன் தான். அவனிடத்தில் என்றும் இந்த மாற்றம் இல்லையே?

இவன் தன்னை விடமாட்டான் என்பது எத்தனை திண்ணமோ அத்தனை கஷ்டம் இப்போதைக்கு தன்னாலும் அவன் வீட்டிற்கு செல்ல முடியாதென்பது.

தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் அவனின் பார்வையிலிருந்து தப்புவதற்கென்றே தண்ணீரை கொண்டு வந்து அவள் தர அவளின் கை தொட்டு வாங்கி பருகியவன்,

“சருவத்துல தண்ணி அடியாகிருச்சோ? உருட்டிக்கிட்டு கெடந்த?…” என நொட்டை பேச,

“ரொம்ப அவசியந்தேன்? கெளம்பும்…” என்றாள் பிடிவாதமாக. அதை கண்டுகொள்ளாதவன்,

“இதே எல்லாத்தலையும் இருந்தா நல்லாருக்கும். நீதேன் திமிறிட்டு நிக்கிதியே?…” என்றான் தன் தொடையில் தட்டியபடி.

“இந்த சவடாலு பேச்செல்லா வேற எங்கனயாச்சும் வெக்கத்தான? என்ன காரியமா வந்தீரு?…” என்றாள் நேரடியாக விஷயத்திற்கு வந்தவளாக.  

“இந்த வருச பொங்கலுக்கு வரி கேக்கத்தேன். எனெக்கென்ன ஒன்னிய பாக்க ஆசயாக்கும்?…” என்றதும் அவனை அவள் சந்தேகமாக பார்க்க,

“ஐயாதேன் வந்துருக்கனும். நாந்தேன் என்னத்துக்கு அலச்சலுன்னு பொறப்பட்டு வந்தேன்…” என்றதும்,

“இந்த தெருவுல எத்தன வீட்டு கதவ தட்டுனீராம் வரி வாங்க?…” என அவள் கேட்டதும் முறைத்து பார்த்தான் பூமிநாதன்.

“இல்ல ஒத்த வீட்டு அலைச்சலுக்காவ வரமாட்டீயலே? அதேன்…” சித்திரைவிழி கிண்டலாக சொல்லவும் எழுந்துகொண்டவன்,

“ஏத்தம்டி ஒனக்கு…” என்றான் அவளருகில் வந்து நின்று.

“இம்புட்டுக்கும் இல்லன்னா ஏறி மிதிச்சிடமாட்டீக?…” என்றவள்,

“கொஞ்சமாட்டுக்கும் கூறு இருந்தா வந்திருப்பீகளா? எம்மய்யா நெனப்பு அம்புட்டுக்குத்தேன் ஒங்களுக்கெல்லாம். இல்ல?…” லேசாய் கலங்கிய கண்களை சட்டென சுட்டிவிட்டு கோபத்துடன்,

“அந்த மனுசென் செத்து வருசம் திரும்பல, அதுக்குள்ள நா கோவிலுக்கு ஜிங்கு ஜிங்குன்னு வந்து நிக்கனுமோ?…” என்றாள் ஆவேசமாய்.

“ஏய் விழி, என்னடி?…” என கை நீட்டியவனின் கையை தட்டிவிட்டவள்,

“அதான நீயளும், ஒம்ம வீட்டாளுவளும் நெனக்கனும்னு என்ன விதியா? இல்லியே? போயிரும்…” என்றாள் வாசலை காண்பித்து.

“நா சொல்லுதத காதுல வாங்கிட்டு பேசுடி…” என்றவன் அவளின் முகத்தை ஒற்றை கையால் பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.

“ஒரு வருசம் கோவிலுக்கு வரலன்னா மூணு வருசம் வரமாட்டாம ஆகிடுமின்னு ஐயா சொன்னாக. அக்காவும் அதேத்தேன் சொல்லுச்சு…”

“அதுக்கு?…”

“என்ன அதுக்கு? நானே வரியா கெட்டிப்போடுவேன்? ஆனா அதுக்கும் நீ சிலுப்பிக்கிட்டு வந்து பஞ்சாயத்துபோர்டுல சண்டைய போட்டேன்னா?…”

“அம்புட்டு பயந்தவகதேன் நீரு…” என்று உதட்டை சுழித்தாள்.

அந்த சுழியில் சிக்கிகொண்டவன் போல அவளின் இதழ் நோக்கி லேசாய் தலையை சாய்க்க அவனின் எண்ணம் புரிந்தவள் சட்டென வாயை கை வைத்து மூடிக்கொண்டு பார்வையால் பூமிநாதனை எரித்தாள்.

“சொக்கா சொல்லுடி. கேட்கனும்ங்காட்டி இருக்கே….” உள்ளார்ந்த ஏக்கத்துடன் அவன் கேட்கவும் விழியின் விழிகள் விரிந்துகொண்டது.

“பேசாம ஒங்கூட இங்க வந்திருக்கேமின்னா அதுக்கும் ஆடுத.  என்னைய ஏன்டி பாக்கவே மாட்டுற?…”

இன்னும் அதே குழைந்த குரலில் அவன் கிசுகிசுக்க கண்ணை மூடி திறந்தவள் அவன் நெகிழ்ந்த நேரம் பார்த்து அவன் கைகளில் இருந்து தன்னை பிரித்துக்கொண்டு வாசலில் சென்று நின்றுகொண்டாள்.

படபடப்பு கொஞ்சமும் குறையாததை அவள் முகமும், உடல்மொழியும் காண்பித்துக்கொடுக்க பூமிநாதனும் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அவளருகே வந்தான்.

“சொன்னேனே கேட்டேகளா?…” முறைப்புடன் அவள் கேட்க,

“இப்ப என்ன ஆகிபோச்சு?…” என்றான் இலகுவாக.

“இதுக்குத்தேன் உள்ள விடமாட்டேன்னேன். வாசவரைக்கும் ஒரு பேச்சு. உள்ள ஒரு பேச்சு…”

“வெளில பிரெசிட்டன்டுடி, அப்பிடித்தேன் பேசனும். உள்ள…”  

“யோவ் போயா…” என படக்கென்று சொல்லிவிட்டு தையல் அறைக்கு வந்துவிட்டாள்.

அவளை பார்த்துக்கொண்டு அரைநொடி நின்றவன் தனது கையில் இருந்த அவளின் போனை அவளிடம் வந்து நீட்டினான்.

“புடி, கெளம்புதேன்…” என்று சொல்ல போனை பிடுங்கி கொண்டவள் பதிலின்றி நின்றாள்.

“கொடியேத்தத்தன்னிக்கு கோவிலுக்கு வந்து சேரு. வரிய நா கட்டுதேன்…”  என்று சொல்லி திண்ணைப்படியில் சென்று நிற்க,

“இந்தா நில்லும்…” என்றவள் உடனே தனது பணத்தில் இருந்து ரூபாய் நோட்டை உருவிக்கொண்டு வந்தவள்,

“ஒம்மோட ரோதனையா ஆவுது. அடுத்து இந்தமட்டும் வந்தீரு, சாமியாடிருவேன். போம்…” என்று எச்சரித்தே அனுப்ப பூமிநாதன் முகத்தில் அப்பட்டமான புன்னகை.

ஒன்றும் சொல்லாமல் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு சிரிப்புடனே அங்கிருந்து கிளம்பினான்.

அவன் வண்டியை கிளப்பிக்கொண்டு செல்லும்வரை மீண்டும் உள்ளே வந்துவிடுவான் என பார்த்துக்கொண்டே தான் வாசலில் நின்றாள் சித்திரைவிழி.

அவன் செல்லவும் தான் வீட்டிற்குள் வந்தாள். வந்தவள் சாப்பிடவும் மறந்தவளாக தைக்க அமர்ந்துவிட பூமிநாதன் வீடு சென்று சேரும் முன் அவன் மனைவியின் வீடு சென்று வந்த செய்தி மயிலின் காதிற்கு வந்து சேர்ந்துவிட்டது.  

வாசலில் மகனின் வண்டி சத்தம் கேட்டதும் கொண்டையை அவிழ்த்து மீண்டும் ஒருமுறை ஏற்றி கட்டிக்கொண்டு அவனின் வரவிற்கு காத்திருந்தார்.

“யாத்தே, ஒம்மவன் மொவத்துல எம்புட்டு வெளிச்சம் பாருத்தே?…” என யோகு ஏற்றிவிட,

“எல்லா அவ போட்ட சொக்குப்பொடிதேன். வரட்டும் அலம்பிப்புடுதேன்…” என்று சூளுரைக்க,

“ம்க்கும், அப்பிடியே ஒம்ம அலம்பல ஒம்ம சின்னமவேன் கீளுன்னு கேட்டாப்பிலதேன்?…” என இன்னும் எண்ணெய் ஊற்றி எரியவிட்டாள்.

error: Content is protected !!