உயிர் தழுவும் விழியே – 4 (3)

“ம்மோவ், அந்த பொம்பளைங்க எதாச்சும் பேசுனாகன்னா வாய மூடிட்டு இருக்காம பதிலுக்கு பேசு…”

“சும்மாவே ஆவாத மாடு. இத்த நா வேற பேசி அம்பலத்தல ஏத்த சொல்லுதியே. ஒங்கக்கா புத்தி ஒனக்கு. பொண்ண கட்டி குடுத்துட்டு சிலும்ப சொல்லுதியா?…” என மகனையும் பேச,

“ம்ஹூம், ஒங்கிட்ட பேசி செவிக்கவா? செரி, நா வெக்கிதேன்…” என்று போனை வைத்துவிட்டான் திருவேந்தன்.

மகனிடம் பேசி முடித்து மீண்டும் மகளிடம் வந்தார். போனை அவள் எப்போதும் வைக்கும் ஸ்டேண்டில் வைத்தவர்,

“இதென்னத்தா தனியா வச்சிருக்க?…” என தைக்க எடுத்து வைத்திருந்த துணியை காண்பிக்க,

“ரெண்டுநாளுல தெக்கிறதுக்கு. பொங்க துணி எல்லா வருமில்ல. அதேன் இதுகள ஒதுக்கிட்டேன்…”  என்றபடி மிஷினை மிதித்துக்கொண்டு இருந்தாள்.

தைத்து பட்டன் போடாதிருக்கும் ரவிக்கைகளை எடுத்த சிந்தா ஊசியும், நூலையும் எடுத்துக்கொண்டு அமர்ந்தார்.

“ம்மோவ் பாத்து. கையை குத்தின அப்பறம் பாத்துகிடு…” என்று முறைப்புடன் எச்சரித்துவிட்டு தைக்க ஆரம்பித்தாள்.

“அத்த நா பாத்துக்கிடுதேன்…” என்று நல்ல வெளிச்சத்தில் சாவகாசமாக கால் நீட்டி சாய்ந்து அமர்ந்தவர்,

“சிட்டு, அம்மா சொல்லுதத கேப்பியாத்தா?…” என்றார்.

“ம்மோவ், சத்தமா சொல்லு. என்னத்த சொல்ல போற?…” மிஷின் சத்தத்தில் அதிகமாகவே கேட்டது அவளின் எதிர் குரல்.

“துணி வருதேன்னு வாங்கி குவிக்காத. போனவாட்டி தீவாளிக்கே வாங்கிட்டு தெணறி போயிட்ட. என்னத்துக்குத்தா?…” என்றார்.

சிலமாதம் முன்பு தீபாவளிக்கு வந்த உடைகளை எல்லாம் இல்லை என மறுக்காமல் வாங்கி ராப்பகலாக விழித்திருந்து தைத்து கொடுத்ததை சொல்லி.

“அப்பிடி தச்சதாலதேன் அந்த சங்கிலிய மீட்ட ஆச்சு. இல்லாங்காட்டி இன்னும் அது பாடம் படிச்சிட்டுதேன் இருக்கும்…”

சித்திரைவிழியின் காட்டமான பேச்சில் மீண்டும் வாயை மூடிக்கொண்டார் சிந்தா.

தன் பெண் வளர்ந்ததென்ன? இப்போது இப்படி எந்த நேரமும் தையல் மிஷினுடன் போராடும் வாழ்க்கை வாழ்வதென்ன? என மனதிற்குள் மருகிக்கொண்டு இருந்தார்.

ஆசைக்கென எப்போதோ கற்றுக்கொண்டது தையல் பழக்கம் தான் இப்போதைக்கு அவர்கள் வாழ்வாதாரமே என்றாகிவிடும் என கனவிலும் நினைத்திருப்பார்களா என்றால் இல்லை.

பழையவற்றை நினைத்துக்கொண்டே தனது வேலையை தொடர்ந்துகொண்டு இருந்தார்.

“சிந்தா ரேசன்ல அரிசி போடுதாகலாம். வாரியா?…” என்று வெளியே நின்று வடிவு விழியை பார்த்துக்கொண்டே சத்தம் கொடுக்க,

“யாத்தே, நல்ல வேல பாத்த. இந்தா வாரேன்…” என்றவர்,

“சிட்டு நா போயி வரிசையில நிக்கிதேன். ரெண்டாளு முன்னாடிக்கி போன போடுதேன் வண்டிய கொண்டாந்துரு…” என்று சொல்லிவிட்டு சேலையை உதறி சரியாய் சுற்றிக்கொண்டவர் ரேஷன் அட்டையையும் ஒரு சாக்கையும் எடுத்துக்கொண்டு சென்றார்.

“அடுத்த வாரந்தாமின்னான். இன்னிக்கே என்னவாம் அவதியா கடைய தொறந்திருக்கியான்?…” என்று வேறு திட்டிக்கொண்டே சென்றார் சிந்தா.

“ம்மோவ், ஒரு பையவும் கொண்டு போ. பருப்பு கிருப்பு போட்டா அத்த எதுல வாங்குவியாம்?…” என்று மகள் சொல்லவும் ஞாபகம் வர,

“சரித்தேன்…” என்று உள்ளே சென்று எடுத்துக்கொண்டு வெளியே வந்தவர்,

“வாரேன். அங்கன போயிட்டு கூப்புடுதேன். நேரமாச்சின்னா உண்கிட்டு வாத்தா…” என்று சொல்லி கையில் குடையையும் சேர்த்தே எடுத்துக்கொண்டு சென்றார்.

இன்னும் அவ்வளவாக வெயிலும் இல்லாதிருக்க மழை மீண்டும் பெய்யும் என்னும் விதமாக இருந்தது.

“கொடியேத்தமே ஆவல. அதுக்குங்காட்டி என்னா மழ?…” என்று வானத்தை பார்த்துவிட்டு மீண்டும் தைக்க ஆரம்பித்தாள்.

அரைமணிநேரம் கழித்து சிந்தாவுக்கு போனை போட்டு விசாரித்தாள். அங்கே வைத்தும்,

“எடுபட்டபய அரிசிய போடுதேம்மின்னு சீமண்ண ஊத்திக்கிட்டிருக்கியான். அது முடியாங்காட்டிதேன் அரிசியாம்…” என போனில் மகளிடம் சீறிக்கொண்டு இருந்தார் சிந்தா.

“அப்ப கெளம்பி வாரியா? பொறவு போவத்தான?…”

“வரிசெயில நிக்கிதேனே? வந்துட்டா அவேனாட்டம் தீந்துருச்சின்னு கடைய மூடிட்டு போயிட்டா?…” என்றவர்,

“நானே கூப்புடுதேன்…” என்று வைத்துவிட்டார்.

அதற்குள் நான்குபேர் வந்து பொங்கலுக்கு துணி தைக்க கொடுத்துவிட்டு சென்றிருந்தார்கள் சித்திரைவிழியிடம்.

மதியமாகிவிட்டது. இன்னும் சிந்தா போன் எதுவும் போடவில்லை என்றதும் விழிக்கு புரிந்துபோனது. தானே மீண்டும் அழைத்தாள்.

“ஏத்தா நாந்தேன் சொன்னேனில? இப்ப அவென் உண்க போயிட்டியான்….”

“ஏம்மா உசுர வாங்குத? அங்க என்ன பாடு பேசுதியோ?…” என்று தாயை கண்டுகொண்டவளாக கேட்க,

“ஆமா, அதுக்கென்னவா? வெருக்கு வெருக்குன்னு நிக்கவா முடியும்? வடிவோட நாலு வார்த்த சும்மா பேசிட்டு இருக்கேன்…”

“இன்னும் நீ உண்கலத்தா?…”

“வாரப்ப கூழ கரச்சி குடிச்சிட்டுதேன் வந்தேன். அது போதுமாட்டிருக்கு. நீ போட்டு உண்கு…” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

பல்லை கடித்தபடி மிஷினிலிருந்து எழுந்தவள் சாப்பிட உள்ளே சென்றவள் தண்ணீரை குடிக்க வாசலில் பூமிநாதனின் புல்லட் சத்தம் கேட்டது.

தன்னை போல் அந்த உணர்வில் திரும்பி பார்த்தாள். எப்போதும் கடந்துவிடும் வண்டி இன்று தான் வீட்டு வாசலில் நின்றுவிட்டது.

அப்படியே சென்றுவிடுபவன் இன்று அதுவும் இந்த நேரத்தில் வர எதற்கோ என்று பார்த்தாள்.

உடனே கடைசி அறையில் நின்றிருந்தவள் அவன் வீட்டினுள் வருவதற்குள் திடுதிடுவென்று ஓடி வந்து வாசலில் நின்றுகொண்டாள்.

எங்கே அவன் உள்ளே வந்துவிட்டால்? அந்த பயம் தான் இந்த ஓட்டம். சிந்தா வேறு வீட்டில் இல்லை.

படியேறி வந்தவனை பார்த்தபடி நின்றாள். உள்ளிருந்து ஓடி வந்தது லேசாய் மூச்சிரைக்க, அவ்வளவு நேரம் தைத்துக்கொண்டு இருந்ததில் வியர்வை வேறு.

கன்னகதுப்புகளில் இருந்து காதோரம் வழிந்திருந்த வியர்வை துளி கழுத்தில் கலந்திருந்தது.

அவளருகே வந்தவனின் பார்வை தாறுமாறாகத்தான் அவள் மீது படர்ந்து விரவியது ஆசை பொங்கும் விழிகளால்.

“என்ன?…” என்றாள் அவன் ஏதும் பேசும் முன் முந்திக்கொண்டு.

வார்த்தைகளில் வித்தகன், அதிலும் தன்னிடம் பேசும் பேச்சுக்களுக்கு எல்லை ஏது அவனிடத்தில்? கொஞ்சமும் கூச்சமில்லாமல் பேசிவிடுவான்.

அவளின் எச்சரிக்க உணர்வே பூமிநாதனின் முகத்தில் குறுஞ்சிரிப்பு மின்ன செய்தது.

சாதாரணமாக பேசிவிடுவோம் என்று வந்தவனுக்கு அவளின் இந்த பதட்டமும் வேகமும் வேறு எண்ணங்களை விதைக்க பார்வைகளும் தடுமாறி, அவளிடம் தடம் மாறியது.

பெயர் தான் பூமிநாதன். ஆனால் அவளிடத்தில் கொஞ்சமும் பொறுமை என்பது இருந்ததில்லை அவனுக்கு.

ஆனால் அவனையே இத்தனை மாதங்கள் அவளுக்காக காக்க வைத்திருந்தாள் சித்திரைவிழி.

பொறுத்தார் பூமி ஆள்வார். ஏற்கனவே அவனை ஆண்டுகொண்டிருப்பவள் மீண்டும் அவனை ஆள, அவனால் ஆள தவமிருந்தான் பூமிநாதன்.

error: Content is protected !!