“இன்னுமா எடுக்கியான்? என்ன புள்ளையோ? என்னிக்குமில்லாம இன்னிக்கி அக்காவும், அம்மாளும் கூப்புடுதாகளேன்னு அரக்கபரக்க எடுத்து என்னன்னு கேக்கவேணா?…”
சிந்தா புலம்ப ஆரம்பித்துவிட்டார் இரண்டாம் அழைப்பும் எடுக்கவில்லை என்றதும்.
“ம்மோவ் கம்மின்னு இரேன்…” என அதட்டிவிட்டு நேரத்தை பார்த்தாள்.
“இந்நேரம் பஸுல காலேசுக்கு போயிட்டிருப்பியான். அவனே போடட்டும்…” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு தண்ணீரை எடுத்துக்கொண்டு துணியை தைக்க சென்று அமர்ந்துகொண்டாள்.
பேசாமல் இருந்திருந்தாலாவது சிந்தா எதையும் நினைக்காது இருந்திருப்பார். இப்போதோ போனையே எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தார்.
“இன்னும் போடலத்தா?…”
“சத்தத்த கண்டும் கம்மியா வச்சிருக்கியா? கேக்காதமாரியே இருக்கே?…”
“இந்த போனுல என்னமோ சவுண்டு வருதே?…”
“கிணுங்குன்னு கேக்குது. மெசெசு போட்டானோ என்னமோ? பாரேன்…”
“அவென் கூப்புடக்கண்டும் டவரு இல்லியோ? இந்த எடுபட்டபய மழ வேற நேத்திக்கின்னு அடிச்சு தள்ளிருச்சே?…”
“ஏத்தா போனு வரலன்னா அமத்தி எடுப்பியே. அத்த பண்ணி பாரேன்…”
“எங்க இதுல எத்தன கோடு தெரியுது?…”
“இங்க பாரு, கோடு ரெண்டுதேன் காமிக்குது. அதேன் வரல. நா வாசலுல இருந்து வருதான்னு பாக்குதேன். சவுன்ட கூட்டு…”
இப்படி அடுத்த அரைமணிநேரத்தில் மகனிடமிருந்து போன் வரவில்லை என்று விழியை ஒருபாடு படுத்திவிட்டார் சிந்தா.
பதில் சொல்லாமல் வெறும் பார்வையிலேயே விழி சமாளித்துக்கொண்டு இருக்க அதை எங்கே கவனித்தார் சிந்தா.
பார்வை மொத்தமும் அந்த போனிலேயே தான் இருந்தது. அதுவும் தன்னுடைய பட்டன் வைத்த போனையும் எடுத்துக்கொண்டு வைத்து திண்ணையில் அமர்ந்துவிட்டார்.
“என்னத்தா சிந்தா? சோலி இல்லியாக்கும்? திண்ணையில போனும் கையுமா ஒக்காந்துட்ட?…” என தெருவில் போகும் ஒருத்தி கேக்க,
“ஆமா வடிவு, மவேன் பொங்கலுக்கு வாரியான். அதேன் போனுக்காவ ஒக்காந்துட்டேன். கெரகம்பிடிச்ச மழைக்கி இந்த டவருமில்ல கெடச்சு தொலையமாட்டிக்கி?…” என்று போனை பார்த்துக்கொண்டே பேச,
“பேசாம ஒம்மருமவன்ட்ட சொல்லி டவர ஓ வீட்டு வாசலுல நட்டு வெக்க சொல்லு. அப்பத்தேன் மொத்தமா கெடைக்கும்…” என கிண்டலாய் பேசிவிட அதுவரை கீழே அமர்ந்து புதிய நூல்கண்டுகள் அடங்கிய பெட்டியை தேடிக்கொண்டிருந்தவள் எழுந்து நின்றுவிட்டாள்.
“போயிருத்தா போயிரு…” என சிந்தா மகளுக்கு தெரியாமல் வடிவுக்கு கையை காட்ட விழி எழுந்த விதத்தில் பக்கென்றானது வடிவுக்கு.
“ஆத்தி இங்கினதே இருக்காளா?…” என்று அதிர்ந்தபடி வடிவு தலையை குனிந்துகொண்டு கடந்து செல்ல முயன்றார்.
“இந்தா செத்த நில்லுங்க…” என்று விழி சுற்றிக்கொண்டு திண்ணைக்கு வர,
“என்னத்தா சிட்டு, இங்கின தல தடுப்படலையேன்னு இன்னைக்கும் டவுனுக்கு போயிட்டன்னுல நெனச்சேன்…” என்று பேச்சை மாற்றினார்.
“யே நா டவுனுக்கு போனப்பறம் டவரு கம்பிய வீட்டுக்கு கொண்டாந்து நட்டு வெக்கறதுக்கா? அதுதேன் ஆத்தமாட்டாம டவருமில்லன்னு பேசுதுன்னா ஒம்பேச்சு எங்க போவுது? எம்புருசன இழுக்கலன்னா சோறு தண்ணி எறங்காதோ?…” என ஒரு பிடி பிடிக்க,
“யாத்தே, நீ இருப்பன்னு தெரிஞ்சா பேசிருக்கமாட்டேன் தாயி. வாரேன்…” என்று வடிவு ஓடி விட வேகமாய் தாயை திரும்பி முறைத்தாள்.
அதற்குள் சிந்தாவும் போனில் கவிழ்ந்து ஒரு காலை மடக்கி குனிந்து முகத்தை மறைத்தபடி அமர்ந்துகொள்ள தலையில் அடித்துக்கொண்டு தைக்க சென்றாள்.
இருக்கும் துணிகளை தைத்து முடித்தாலன்றி பொங்கலுக்கு வரும் உடுப்புகளை தைக்க முடியும்.
இப்போதே தெரிந்துவிட்டது இரவு நேர உறக்கமும் இனி குறைவு என்று. பொங்கல் முடியும் வரை வேலைகள் வலுவாகவே இருக்கும்.
முடிந்தளவு வேலைகளை வாங்கிக்கொள்ள வேண்டும். அதே நேரம் சரியாக தைத்தும் கொடுக்கவேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டாள்.
அன்றைக்கு தைத்து முடிக்க வேண்டிய துணிகளை எடுத்து வகை பிரித்தாள். எத்தனை ரவிக்கைகள், எத்தனை சுடிதார்கள் என்று பிரித்து எடுத்து வைக்க பயந்தது போல அதிகமில்லை.
இரு நாட்களில் தைத்து முடித்துவிடலாம் என நிம்மதியானது. கணக்கு நோட்டை எடுத்தவள் வர வேண்டிய நிலுவை தொகையை எடுத்து பார்த்தாள்.
ஓரளவு தொகை வரவில் இருக்க சொற்பமே வெளியில் இருந்து வரவேண்டியது இருந்தது.
ஒரு பெருமூச்சுடன் அதனை பார்த்தவள் அடுத்த பக்கத்தில் கோடு போட்டு புதிதாய் வர போகும் உடைகளின் வரவுகளை எழுத பிரித்து வைத்துக்கொண்டாள்.
உடைகளை வைக்க அங்கிருந்த அடுக்குகளையும் தயாராக வைத்தவள் வாங்கி வைத்திருந்த காக்கி கவர் தாள்களையும் எடுத்து வைத்துவிட்டாள்.
அதன்பின்னர் தான் நிம்மதியானது. இனி வரக்கூடியதை வாங்கி குளறுபடியின்றி அடுக்கி வைத்துவிட்டால் தைக்கும் பொழுது தேடும் வேலை மிச்சம்.
ஒருசிலர் கடைசி நேரத்தில் வந்து நெருக்கடி கொடுக்கவும் செய்வார்கள். எப்படியாவது தைத்து கொடு என்று. அதற்குமாக தயாராகி கொண்டாள்.
“இந்தா இருக்கா, அக்காதேன் கூப்புட்டா. பேசு பேசு…” என்றபடி சிந்தா பரபரப்பாக வந்துவிட்டார்.
“தம்பிதேன், கூப்புடு…” என்று முகமெல்லாம் சிரிப்புடன் அவர் போனை நீட்டவும் வாங்கிக்கொண்டாள்.
“எக்கா?…” என்ற தம்பியின் அழைப்பில்,
“வேந்தா எப்பிடிடா இருக்க?…”
“நா சவுரியம்தேன், நீ எப்பிடி இருக்க? போனு போட்டப்ப பஸுல இருந்தேன். கேக்கலத்தா. அதேன் எறங்கவும் போட்டேன்….” என்று விசாரிப்புகள் முடிந்தது.
“லீவுக்கு சொல்லனும்னு இருந்தியே, ரெண்டுநா தள்ளி வா. அத்த சொல்லத்தேன் இப்பைக்கே போன போட்டேன்…”
“ஆமாக்கா, பசங்க சொன்னானுவ. நானே இன்னிக்கு சாயங்காலம் ஒனக்கு போட்டுருப்பேன்…” என்றான் தனக்கும் தெரியும் என்று.
“செரி என்னிக்கு வார அப்ப?…”
“ஒரேதா பொங்கலுக்கே வரட்டா? நீ என்ன சொல்லுத?…” என்றான் ஆசையுடன்.
“ஓ சவுரியம்தேன். எனக்கென்ன தெரியும் அங்கன ஓ சோலி, படிப்பு என்னண்டு?…” என்றாள்.
“இந்தா இப்படி பேசாதன்னுதேன் எத்தனவாட்டி ஒனக்கு சொல்ல? நானா இத்தன தொலவுல வந்து படிக்கேன்னேன்?…” என்று வேந்தன் திட்ட அமைதியானாள் விழி.
“என்னவோ விடு. செரி, என்னிக்கு வாரான்னு வாரமின்ன போன போடு…” என்று பேசிவிட்டு போனை தாயிடம் கொடுத்தாள்.
“என்னய்யா, காலையில என்ன உண்கின?…” என்று கேட்டபடியே அப்படியே நழுவ பின்பக்கமாய் சென்றார்.
“வெக்கவாம்மா?…” என பேசி முடித்து மகன் சொல்லவும்,
“இருலே…” என்றவர் பின் மெதுவாய்,
“ஆமா, மாமா போன் போட்டாகளா?…” என்றார் குரலை தழைத்துக்கொண்டு.
“ஆமா அவக சொல்லித்தேன் பொங்கலு வருதுன்னு வெவரம் தெரியும்…”
“ஹ்ம்ம், சரி…” என்றவர் முதல் நாள் இங்கு நடந்ததையும், அன்று காலை செல்வி வந்து சென்றதையும் மகள் வருகிறாளா இல்லையா என பார்த்துக்கொண்டே சொல்லி முடித்தார்.
“ம்மோவ், அவகளாம் ஒரு ஆளா மதிச்சிக்கிட்டு. அதேன் மாமா வந்தாருல?…”
“என்னத்த வந்து? இவ அதக்கு மேல இல்ல சிலுத்துக்கிட்டு நிக்கிதா?…”
“போவ போவ ஆறிடும்த்தா…” என மகன் ஆறுதல் சொல்ல,
“என்னத்த ஆற? நேத்து யே நெஞ்சு கூடே ஆடிருச்சு. இவ நிமிந்திக்கிட்டு அதுக்கு மேல நிக்கிதா…”
“அதேன் மாமா வந்தாருல. விடேன். போட்டு நொச்சி பண்ணாதத்தா. பொங்கலுக்கு வாரேன்ல. பாத்துகிடுவோம்…”
“செரித்தேன், நீ மொத வா…”