உயிர் தழுவும் விழியே – 4 (1)

உயிர் – 4

            செல்வியும், சந்தானலட்சுமியும் எதிரே வரவும் வண்டியின் வேகத்தை குறைத்தவன் அவர்களருகே நிறுத்தினான்.

“இந்த மழையில என்னத்துக்கு அத்தைய கூட்டிட்டு இங்கிட்டு ஒலாத்துற நீ?…” என கேட்க பூமிநாதன் கேட்க,

“அதெப்பிடித்தா நீ சொல்லுத மாரியே கேக்குதான்?…” என மருமகளிடம் முணுமுணுத்தார் லட்சுமி.

“எல்லா ஒத்த வயித்துல பொறந்தவகதேன்னுதேன். என்னைய பாத்துத்தான வளந்தான். அதேன்…” என பதில் கூறினாள் செல்வி.

“ம்க்கும்…” என்று பூமிநாதன் லேசாய் தொண்டையை செரும,

“பாத்துகிடுத்தே, என்னவோ நாம வந்தா ஒடம்பு நோவாவுறதாட்டம் பேசிப்போட்டு இப்ப இவன் செருமுதத?…” செல்வி தம்பியை கண்டு நக்கலாக சொல்லவும்,

“இந்த மழையில என்னத்துக்குத்தா இங்கிட்டுன்னு கேட்டதுக்காத்தா? என்னவோ பண்ணு. போ…” என்று வண்டியை எடுக்க போனான் பூமிநாதன்.

“யேலே நில்லு, கேட்டுட்டு நீயாட்டி போற?…” என்று முன்னால் கையை காண்பித்து செல்வி நிறுத்த,

“இந்தா, ரோட்டுல வச்சிட்டு என்ன யேலேன்னுட்டு? ஒ வாய கிழிக்க போறேன் பாரு…” லட்சுமி அதட்டினார் மருமகளை.

“ம்க்கும், இப்பத்தேன் இந்த கோவமெல்லாம் வரும். ஒம்மவ யோகு வந்தா மட்டும் கூடையில குனிஞ்ச கோழியாட்டம் ஒளியறது…” என அதற்கும் கிண்டல் பேசினாள் செல்வி.

“இதுக்குத்தேன் நிப்பாட்டினியா?…” என பூமிநாதன் முறைக்க அதற்குள் தெருவில் போவோர் வருவோர் எல்லாம் பார்த்து பேச ஆரம்பித்தனர்.

“ஒன்னியால பாரு…” என தனது வண்டியை உதைத்து கிளப்பியவன்,

“வீட்டுக்கு போயி பாடு பேசு. ஒன்னிய இங்கிட்டு பாத்ததும் பேசாம போயிருக்கனும். ஏதோ ரோசனையில வண்டிய நிப்பாட்டிட்டேன்…” என்று சொல்ல,

“அட இருங்கறேன்…” என்ற செல்வி,

“நீ என்ன இங்கிட்டு?…” என்றாள்.

“ஐயா அவுக போன வீட்டுல மறதியா வச்சுட்டு காட்டுப்பக்கம் கெளம்பிட்டாரு…” என்றதும் அவனின் பேச்சில் செல்வி சிரிக்க,

“அவேன மலயேத்தாம ஓயமாட்ட. பேசிட்டு வா, நா மெல்லமா போறேன். இல்லன்னா என்னையவும் எகிறுவியான்…” என லட்சுமி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

“என்ன பார்வை? போத்தா அத்தையே போயிருச்சு…” என்றான் இன்னும் தன்னை பார்த்து நின்ற செல்வியை.

“காலாங்காத்தால என்னைய மட்டும் கேள்வி கேட்ட, செரி பதில சொல்லுவோம்ன்னு பாத்தா சிலுப்பிக்கற?…” என்ற செல்வி,

“துணி தெக்க குடுத்தத வாங்கிட்டு போவலாமின்னு வந்தேன்…” என்றாள்.

பூமிநாதன் முகம் லேசாய் மென்மை பூசி இதழோரம் புன்னகை உதிப்பதை போலொரு தோற்றம் கண நேரத்தில் தோன்றி மறந்தது.

“தச்சிட்டாளா?…” என்றான் வண்டியை முறுக்கியபடி.

“அதெல்லாம் தெக்காமலா? வாங்கிட்டு வந்திட்டேன்…”

“ஊர் பொங்கலுக்கா க்கா?…”

“இல்ல இது சும்மா குடுத்தேன். பொங்கலுக்கு நாளைக்கி போயி குடுக்கனும்…”

“யே அத்தயும் இப்ப போறப்ப கொண்டு போனா சொமக்கமாட்டேங்குதா அவ வீடு?…” என்றான் கிண்டலாக.

“இன்னிக்கே போய்ட்டா நாளைக்கி போவ சாக்கு வேணா?…” என்றதும் பூமிநாதனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“செரி செரி அவ காதுல விழ சொல்லிறாத. சாமியாடிருவா…”  

“அத்தெல்லா நா பாத்துகிடுதேன். மொத இந்த வருச பொங்கலுக்கு அவ வரி கட்டல. நீ என்னன்னு போயி கேளு…”

“ஐயா சொன்னாக. சோலிய பாத்துக்கிட்டு பொறவு போவனும்…”

“செரி, நா பொறப்படுதேன்…” என்று நகர போன செல்வி,

“யேலே நில்லு…” என மீண்டும் நிறுத்தி,

“அம்மை என்ன செய்யுது?…” என்றாள் நமுட்டு சிரிப்புடன்.

“எங்க இன்னிக்கும் நீ சோறாக்கி கொண்டாந்துருவியோன்னு விடிஞ்சும் விடியாம அடுப்ப மூட்டிருச்சு. காப்பி குடிக்கித நேரத்துல சாப்பாட்ட வச்சுட்டு ஒரே வம்பாடு…”

“அதேன் ஐயா கெளம்பிட்டாகளாக்கும்?…” என்று சிரித்துக்கொண்டே கேட்டு தம்பியிடம் விடைபெற்று சென்றுவிட்டாள் செல்வி.

அதன்பின் வண்டியை எடுத்தவன் எப்பவும் போல சித்திரைவிழியின் வீட்டை கடந்து செல்லும் பொழுது திரும்பவில்லை.

தான் பார்க்கிறேன் என தெரிந்தால் நிச்சயம் அவள் அடுத்து தன்னை பார்க்க கூட மாட்டாள் என இவன் பார்க்காததை போல கடந்துவிடுவான்.

இன்றும் அப்படியே கடந்து செல்ல அப்போதுதான் வீட்டினுள் இருந்து வெளியே வந்தவள் அவன் செல்வதை கவனித்தாள்.

“ஏருக்கு பூட்டுன மாடாட்டம் நேரா வெடுக்குன்னு போறதா பாரு…” என கடுப்புடன் மொழிந்து வீட்டினுள் வந்தாள் அவள்.

“என்ன துணி தெக்காம வந்திட்ட?…” சிந்தா அவளை பார்த்து கேட்கவும்,

“சும்மாத்தேன்…” என வந்தவள் ஓரமாய் அமர்ந்துகொண்டாள்.

எதையும் யோசிக்கவில்லை. இப்போது வரை அடுத்து என்ன என்னும் யோசனைகள் இல்லவே இல்லை.

இனி இருக்குமா என்றும் தெரியவில்லை. யோசித்ததெல்லாம் ஒரே ஒருமுறை மட்டுமே.

அந்த யோசனை தான் இவ்வளவு தூரம் அவளை கொண்டு வந்து நிறுத்தியது. ஒரு நொடி விழிகள் கலங்கினாலும் முயன்று மனதை சமன் செய்தாள்.

இப்போது செல்வி வந்ததும் கூட ‘உன்னை நாங்கள் ஒருபோதும் விட்டுவிடவில்லை. விடவும் போவதில்லை.’ என்பதை உணர்த்தவே என்று தெரிந்திருந்தது.

ஒருசில நிகழ்வுகள் அப்படியே மாறிவிடுமா என்ன? ஆறாத ரணங்கள் அல்லவா அந்த நினைவுகள். அதன் பாதிப்பு தன் குடும்பத்தின் ஆணிவேரையே சாய்த்துவிடதே.

இழந்தவை இழந்தவை தான். மீண்டு வருவதற்கு அது உடமையோ, உறவுகளோ அல்ல. விலை மதிக்கமுடியாத உயிர். போனது போனது தான்.

மகளின் முகபாவனைகளை அவதானித்தபடி இருந்த சிந்தாவிற்கு என்னவோ போல் இருந்தது.

“என்னத்தா?…” என்று அவளருகே வந்து குத்துகாலிட்டு அமர்ந்தவர் கேட்க,

“ஒன்னிமில்லம்மோவ்…” என்றவள் உடனே சுதாரித்து,

“செரி போன கொண்டா, தம்பிக்கு போடுவோம்…” என்றாள்.  

“இப்ப என்னத்துக்கு?…”

“அட கொண்டான்னா கொண்டாங்குதேன்ல?…” என்றவள் பின் தானே எழுந்து சென்று எடுத்து வந்தாள்.

“என்னத்த பேச போற? அவென் படிக்க கெளம்பிட்டு இருப்பான்டி…” என்று சிந்தா தடுக்க முனைய,

“ப்ச், லீவுக்கு சொல்லிட்டானா என்னன்னு தெரியனுமில்ல? ஏம்த்தா நீ வேற?…” என சலித்தாள்.

“பொங்கலுக்கு வர சொல்லுதியோ?…” என தாயின் முகம் மலர்ந்துவிட்டது.

“ம்ம், அவென் பாட்டுக்கு கொடியேத்தத்தன்னிக்கு வந்திட்டா அப்பறம் கொடியிறக்குத வரைக்கி எங்கயும் போவ முடியாதுல. ரா தங்கலு வீட்டுலதேன். அதேன் இப்பைக்கே சொல்லிட்டா பாத்து வருவியான்…” என்று அவனின் எண்ணிற்கு முயன்றாள்.

“எடுத்தியானா?…” மகன் எடுப்பதற்குள் இங்கே சிந்தாவிற்கு ஆவி பறந்தது.

பார்த்த சித்திரைவிழிக்கும் புன்னகையே. என்னதான் பெண்ணை பெற்றிருந்தாலும் ஆண் குழந்தை என வரும்பொழுது இந்த தாய்மார்களின் கவனிப்பும், கரிசனமும் வேறாகி போகிறது என பலமுறை உணர்ந்ததை போல அன்றும் உணர்ந்தாள்.

எங்கே தான் அதை பேசினால் இரு நாட்களுக்கு ‘உன்னை தான் கவனிப்பேன்’ என்னும் விதமாய் தன் பின்னாடியே சுற்றி கழுத்தை நெறிக்குமளவிற்கு பாசத்தை பொழிந்துவிடுவார் என பயந்தே அவள் காட்டிக்கொள்ளவ்ல்லை.

error: Content is protected !!