“ஆமாத்தா, இப்ப வந்த டிசைனா?…” என அதனை ஆசையுடன் தடவி பார்க்க,
“ஓ நாத்தனார் சீலதேன். முந்தாநாத்துதேன் கொண்டாந்து குடுத்துட்டு போனா…” என்று சொல்லவும் கடுகடுவென்று முகத்தை வைத்தபடி கையை இழுத்துக்கொண்டார் பூமாரி.
“என்ன இப்பத்தேன் நல்லாருக்குன்ன?…”
“ம்க்கும்…” என்று முகத்தை தோளில் இடித்துக்கொண்டவர்,
“அத்த விடுத்தா? அப்பறம் நேத்து டவுனுக்கு போய்ட்டு வந்தியாக்கும்?…”
“ஆமா…”
“அன்னிக்கு ஒரு உள்பாவாட சொன்னேனில்ல. பாத்தா எடுத்துட்டு வான்னு. பாத்தியா?…”
“ஏம்த்தா என்னிய பாத்தா ஒமக்கு என்னன்னு வருது?…”
“ஏம்புள்ள?…”
“ஒனக்கு எடுத்துட்டு வரத்தேன் டவுனுக்கு போறேனாக்கும்? நானே ஆவி பறக்க அள்ளிட்டு வந்திருக்கேன். இதுல ஒனக்கு நா சொமக்கேன்? யே இந்தாருக்கற டவுனுக்கு நீ போனா என்ன?…” என வெடுக்கென்று சொல்லிவிட்டாள்.
“இப்ப என்னத்தா கேட்டுட்டேன்?…”
“ஒனக்கு வேணுனுமின்னா நீதேன் போவனும். நா என்ன நீ வெச்ச ஆளா?…” என்றவள்,
“இந்த ஒறவு எல்லா மிசினோட போவனும். அம்புட்டுத்தேன். வெளங்குச்சா?…” என்றவளிடம் எப்படி கேட்பது என நின்றார் பூமாரி.
“இன்னும் என்ன?…” என்றாள்.
“செரித்தா பொரியாத…” என்றவர்,
“ஆமா நேத்து ரவைக்கு பிரெசிடென்டு வந்தாரு போல? அதுவும் மழ கொட்ட கொட்ட நனஞ்சு…” என நக்கலாக கேட்டே விட தைப்பதை நிறுத்திவிட்டு அவரை ஏறிட்டாள் சித்திரைவிழி.
“தெரிஞ்சு என்னா பண்ண போற? நனஞ்சவருக்கு வந்து தொடைக்கத்தான?…”
“நா என்னத்த பண்ண போறேன்? ஒன்னிய கூப்புட வந்ததா பேசிக்கிட்டாக. வந்தவரு வெளிச்சமே வந்துட்டு போறதுக்கென்ன? அவவ நாக்குமேல பல்ல போட்டு நாராசமா பேசுதாளுக. இருட்டோட வந்து கரண்டு வரவும் கெளம்பி போனாராமே?…” என்றார் விடாமல் அவளிடம்.
“ஒனக்கு விடிஞ்சதும் காதுல வாங்கலன்னா சோறு எறங்காதுன்னு கெளம்பி வந்துட்ட…”
“இப்ப என்ன கேட்டுப்போட்டேன்னு?…”
“அவ அவளுக்கு அவ வீட்டு குப்பைய கூட்டி அள்ளவே நேரமில்லியாம்? அடுத்தவளுக்கு மொறவாச பண்ண கொதிச்சிட்டு நிக்கிதாளுங்க…”
“இப்ப என்னத்த கேட்டேமின்னு நீ பேசுத?…”
“என்னிய பேசுனா பேசத்தேன் செய்யிவேன். எம்புருசேன் தானே வந்தாரு? இதுல ஒங்களுக்கெல்லாம் எனத்துக்கு இம்புட்டு வவுறு அவியுது?…”
“இல்லாத்தா நா பேசல. பேசிக்கிட்டாளுக. அத்த சொல்ல வந்தேன்…”
“எங்காதுல விடியுமின்ன போட்டாத்தேன் ஒனக்கு விடியுமாக்கும்? எம்புருசேன் எந்நேரம் வரட்டும், போவட்டும். எங்கூட்டு பஞ்சாயத்துக்கு எப்படா வந்து பாய போட்டு ஒக்காருவோமின்னு திரியிறாளுக. மென்னிய முறிச்சிபுடுவேன் சொல்லிக்க…”
“ஏத்தா சிட்டு…”
“இந்தா இப்ப நீயி கெளம்புதியா இல்லியா? மொத நீ வச்சிருக்கற பாக்கிய ரூவாய குடு. அப்பறம் துணி தெக்கதத பாப்போம்…” என சொல்லவும் வந்த வேலை முடிந்தது என்பதை போல அவர் கிளம்பிவிட்டார்.
“வந்துட்டாளுக வக்கப்படப்புக்கு வரிச்சி கம்போட தீய வெக்க…” என முணுமுணுப்புடன் வேகமாய் தைக்க ஆரம்பித்தாள்.
தனது கோபத்தை எல்லாம் தனது வேலையில் காண்பித்துக்கொண்டிருந்தாள் அவள்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு கதவோரம் சிந்தா அமர்ந்திருக்க வெளி வாசலில் வந்து நின்றவர்களை கண்டதும் எழுந்து நின்றுவிட்டார்.
“சிட்டு…” என மகளை அழைக்க,
“என்னம்மா? நீயும் கேட்டுட்டு தான நின்ன? எப்ப பாத்தாலும் அழுதுக்கிட்டு. போய் சோறை வைய்யி. வாரேன்…” என நிமிராமல் அவள் சொல்ல,
“ஏட்டி அங்க பாரு…” சொல்லவும் திரும்பி பார்த்தவள் வாயை மூடிக்கொண்டாள்.
“சிட்டு…” என்று வந்தாள் செல்வி. அவளுடன் அவளின் மாமியார் சந்தானலட்சுமி.
“வாங்க வாங்க…” என அவர்கள் இருவரையும் சிந்தா முகமலர்ச்சியுடன் வரவேற்றார்.
“உட்காருங்க…” என்று வீட்டினுள் இருந்த ஸ்டூலை கொண்டு வந்து விழியின் முன்னால் போட,
“குடுங்கத்தே…” என வாங்கி தானும் அமர்ந்து தனது அத்தையையும் அமர வைத்துக்கொண்டாள் செல்வி.
“எப்படிம்மா இருக்க?…” சந்தானலட்சுமி விழியிடம் கேட்க,
“ஹ்ம்ம், நல்லாத்தேன் இருக்கேன்…” என்றவள் ஏற்கனவே தயாராக எடுத்து வைத்திருந்த அவர்களின் துணிகளை எடுத்து தந்தாள்.
“தச்சிட்டியா?…” என வாங்கிக்கொண்ட செல்வி,
“வேற உடுப்பு தெக்க குடுக்கத்தேன் வந்தோம்…” என்றவள்,
“என்னத்தே வாயில கொழக்கட்டைய உண்கினதாட்டம் இருக்கீக? சொல்லுங்க…” என சொல்லவும் விழி செல்வியை முறைப்புடன் பார்த்தாள்.
“ஆமாமா…” என சந்தானலட்சுமி எதையோ மறந்தவராக செல்வியிடம் என்ன சொல்ல என்பதாக கண்ணை காட்ட விழியின் முன்பு சொல்லி கொடுக்கவா முடியும்?
“எத்தே, ஒங்க சட்ட கை பக்கம் லூசா இருக்குன்னு சொன்னீக தான? அத்த சொல்லுங்க…” என செல்வி சொல்லவும் சிந்தாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“இருங்க காப்பி கொண்டாறேன்…” என அவர் உள்ளே நுழைய போக,
“எத்தே காப்பி வேணா. நாக்கு வெறுக்குன்னு இருக்கு. கடுங்காப்பியா போடுங்க…” என சொல்லி அனுப்ப சிந்தாவை பார்த்த விழி ஒரு பெருமூச்சுடன்,
“சட்டைய கொண்டாத்திருக்கீகளா?…” என்றாள்.
“இதோ எடுத்துட்டு தான வருவோம்? மறப்போமா?…” என செல்வி எடுத்து நீட்ட வாங்கியவள் இருவரையும் இன்னும் முறைத்தாள்.
“ஏம்த்தே கைய்யத்தான பிரிச்சு விட்டீக?…”
“ஞாவவமில்லத்தா…”
“ம்க்கும், வார வழில அம்புட்டு வீட்டுக்கும் பாடு பேசிட்டு வந்தா என்னத்த ஞாவவம் இருக்கும்? அவ முறைக்கிறா?…” என செல்வி விழித்தாள்.
“உங்க கையி என்ன இடுப்பு பக்கமா இருக்குது?…” என நக்கலாக விழி.
“என்னத்த த்தா சொல்ல. அம்புட்டும் மறதி. கைய நா பிரிக்கேன்னதுக்கு கேட்டுச்சா? வயசாகுதுல. ஒரு பேச்சுக்கும் ஆவறதில்ல…” என்று செல்வி விழியிடம் சொல்லிவிட்டு தன் மாமியாரிடம்,
“எத்தே சும்மாச்சுக்கும்…” என்று நாக்கை நீட்டி தோளை குலுக்கி சிரித்து வைக்க பார்த்தும் பார்க்காமல் பார்த்த விழிக்குமே புன்னகை தான்.
“அம்புட்டு சேட்டையும் இதுக்கிட்ட இருந்துதேன் அந்த மனுஷனுக்கு. அமர்க்களத்த பாரு…” என சத்தமில்லாமல் சொல்லிக்கொண்டவள் விழி,
“இங்கன வந்து நில்லுங்க…” என்று அளவெடுக்க நின்றாள் சித்திரைவிழி.
“இந்தா வாரேன்…” என சந்தானலட்சுமியும் எழுந்து சென்று நிற்க,
“கைய தூக்குங்க. அதுக்கும் ஒங்க மருமவ சொல்லனுமோ?…” என அதட்டல் போல சொல்லவும் படக்கென்று தூக்கிவிட்டு செல்வியை திரும்பி பாவமாய் பார்த்தார்.
“நேரா நில்லுங்க…” என அளவெடுத்தவள்,
“உங்க அளவுக்குத்தான தச்சிருக்கே? அப்பறம் என்னத்துக்கு பிரிச்சீக?…”
“ஆஹ்…” என பதில் சொல்லும் முன்னர்,
“அதத்தான நா கேட்டேன். மறந்து பிரிச்சுட்டாக…” செல்வி உடனே சொல்ல மீண்டும் அவளை முறைத்தாள் விழி.
“இருந்து வாங்கிட்டு போறீகளா?…” என்று மிஷினில் அமர்ந்துகொண்டே கேட்க செல்வியை பார்த்துவிட்டு,
“ஆமா, ஆமா…” என அதற்கும் தலையாட்டினார் சந்தானலட்சுமி.
அதற்குள் சிந்தாவும் கடுங்காப்பியுடன் வந்துவிட எடுத்துக்கொண்டவர்கள் அவரிடம் கதை பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“தம்பி என்னிக்கு வாரான் த்தே?…”
“இந்த வார கடசி லீவுன்னு சொன்னியான். வரட்டும்…”
“சரித்தான், வாரவன் பொங்கல் வரைக்கி இருப்பானா?…”
“அது தெரியலத்தா…”
“செரி அவென் வந்தா கூட நாலு நா லீவா போட சொல்லுவோம். அம்பிட்டுத்தேன?…” செல்வி சொல்ல விழி சட்டை துணியை பிடித்து அடித்துவிட்டாள்.
“இந்தாங்க…” என நீட்டி,
“ஓயாம பிரிச்சடிக்காதீங்க. துணி கிழிஞ்சா ஒன்னத்துக்கும் ஒதவாம போயிரும்…” என சொல்லிவிட்டு அவர்களை கடந்து வீட்டிற்குள் சென்றுவிட்டாள் சித்திரைவிழி.
சிந்தாவின் முகமே மாறிவிட்டது. இப்படி பெண் இருக்கிறாளே என கவலையுடன் பார்த்தார்.
“எத்தே என்னத்துக்கு சொணங்குதீக?…”
“ராவெல்லாம் ஒறக்கமே இல்லாத்தா. என்னத்த சொல்ல? நேத்து மருமவேன் வந்து சொன்ன சேதியில யே ஈர கொலயே ஆடிருச்சு. அப்பனையும் தொலச்சிட்டு, இப்ப அத்த வச்சு வாழ்க்கயயும் தொலச்சிட்டு ஒத்தையா நின்னுருவாளோன்னு உசுரு தவிக்குது…”
“சிந்தா அதெல்லாம் ஒன்னும் ஆவாதுத்தா. நாங்கலாம் விட்டுடுவோமா?…” என்ற சந்தானலட்சுமி,
“நேத்திக்கே செல்வி போயி அங்க சாமியாடிருச்சு. எல்லா யோகு செய்யிற கோட்டித்தனம். அவ கொட்டத்த அடக்கினா மதினி கம்மின்னு கெடப்பாக…”
“எம்மவ ஆருக்கு என்ன பாவத்த செஞ்சா?…” என இன்னுமே புலம்பியவரிடம் பேசி பேசி சமாதானம் செய்து செல்வி கிளம்ப போக,
“ம்மோவ் அந்த தச்ச சீல, ரவிக்கைய கொண்டு போவ சொல்லு. இல்ல அதுக்கொருக்கா வந்து நிப்பாக…” என உள்ளிருந்தே சித்திரைவிழி சொல்ல செல்விக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“இதுலெல்லாம் ஒம்மவ வெவரம்த்தோய். இந்த ரோசன கழுதைக்கி ஒன்னும் சளைச்சவ இல்ல…” என செல்வி கிண்டலுடன் சொல்ல,
“மவராசி நீ இருக்கற எடமே சாமிக்கு மிச்சம்த்தா…” என அவளின் கன்னத்தை நெட்டி முறித்து கொஞ்சியவர்,
“நல்லாருப்ப. போய் வாத்தா…” என அனுப்பிவைத்தார் சிந்தா.
சந்தானலட்சுமியும், செல்வியும் பேசிக்கொண்டே கீழே இறங்கி செல்ல வழியில் வண்டியில் வந்துகொண்டிருந்த பூமிநாதனை எதிர்கொண்டார்கள்.
“ஆத்தே இவேன் இங்கிட்டு இந்நேரம் என்னத்துக்கு?…” என்று சந்தானலட்சுமி சொல்ல,
“நம்ம என்னத்துக்கு இங்கிட்டு ஒலாத்துனோமோ அதுக்குத்தேன். கண்டுக்கதீங்க…” என செல்வி கை பிடித்து கூட்டி சென்றாள் மாமியாரை.