உயிர் – 3
இரவு பெய்த மழை இன்னும் நின்றபாடில்லை. சாரலாக நனைத்தவண்ணம் அன்றாட வேலைகளை சற்றே மந்தப்படுத்தி இருந்தது.
மழையின் குளிர்ச்சிக்கு ஊரே குளிர்ந்துகிடந்தது. வழக்கமான நேரத்தில் கண்விழித்த சித்திரைவிழி எழுந்து சென்று முகத்தை கழுவ, வாளியில் இருந்த தண்ணீர் சில்லிட்டிருந்தது.
உடலை அந்த குளிர் துளைக்க தண்ணீரை அள்ளி முகத்தில் அடித்துக்கொண்டவள் தோளில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டாள்.
நிச்சயம் இன்று பால் வரவும் தாமதாமாகும் என்பதால் கடுங்காப்பி போட்டு குடித்து குளிரை குறைத்துக்கொண்டவள் வெந்நீரையும் அடுப்பில் ஏற்றி இருந்தாள்.
முதல்நாள் வேறு எந்த துணியையும் தைக்கவில்லை. தையல் மிஷினில் அமரவும் இல்லை. இன்று அப்படி இருக்க முடியாதே?
காபியை குடித்து முடித்த நேரம் வெந்நீரும் காய்ந்திருக்க அந்த சூடு போதும் என பானையை தூக்கிக்கொண்டு சென்று ஊற்றிவிட்டு குளிக்க சென்றாள்.
எப்போதும் வேலையில் அமரும் முன்பே குளித்துமுடித்து தான் அமருவது. முன்பு எப்படியோ? இப்போது தங்களுக்கு சோறு போடும் தெய்வம்.
புடவையை மாற்றிவிட்டு சாமியை கும்பிட்டு வந்தவள் முன்னடியில் இருக்கும் தையல் அறையில் சென்று அமர்ந்தாள்.
அவ்விடம் வெளியே போவோர் வருவோரையும் பார்க்கும் படி இருந்தது. யாரேனும் நுழைந்தாலும் பெரிய கம்பி போட்ட ஜன்னலின் வழியே கண்டுகொள்வாள்.
இன்றும் முன் வாசல் விளக்கையும் போட்டுவிட்டு அறையை பெருக்கி சுத்தம் செய்து மிஷினை துடைத்து முடித்தாள்.
அங்கேயும் இருந்த சாமியை கும்பிட்டுவிட்டு மிஷினில் அமர்ந்தவள் தைக்க கொடுத்திருந்த சட்டை துணிகளை எல்லாம் தரம் பிரித்து எடுத்து வைத்தாள்.
தைத்து முடித்து ஓவர்லாக், பட்டன், கொக்கி எல்லாம் போடப்பட்டு முழுதாய் முடிந்திருந்ததை அதனதன் அளவு சட்டைகளுடன் எடுத்து வைத்தாள்.
புடவைகளுக்கு கீழே லேஸ் பட்டி வைத்து தரப்பட்டிருந்த ஐந்து புடவைகளையும் அதற்கேற்ப அதிலிருந்தே தைத்திருந்த ரவிக்கை துணிகளையும் அதனுள் வைத்து எடுத்து வைத்தவள் இரு புடவைகளை எடுக்கும் பொழுதே மனது தவித்தது.
அதனை எடுத்து லேசாய் வருடிவிட்டவளுக்கு ஒருங்கே கோபமும் வந்துவிட ஒரு ஆதங்கத்துடன் அதை எடுத்து வைத்தாள்.
“ஏம்த்தா இன்னும் செத்த நேரம் படுக்கத்தான? பாரு இன்னும் மழ ஓயல…” சிந்தா எழுந்து வந்து மகளிடம் கேட்க,
“அதான் விடிஞ்சிருச்சுல. போ போயி கடுங்காப்பி போட்டிருக்கு. கூட இம்பிட்டு சக்கர கலக்காம சூடா குடி. ஒம்ம ரவுசு தெரிஞ்சுதேன் நானே கலந்து வச்சிட்டேன்…”
“ஹ்ம்ம், செரி…” என உள்ளே சென்றுவிட வாசலில் மணியடிக்கும் சத்தம் கேட்க,
“ம்மோவ், அந்த பால் போனிய கொண்டா…” என்று சத்தம் கூட்டினாள் சித்திரைவிழி.
“எடுத்து வெக்கலியாக்கும்?…” என கேட்டுக்கொண்டே போனியை தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்.
மோட்டார் சைக்கிளில் காதருகே குடையை மாட்டியபடி இருந்தார் பால் ஊற்றுபவர்.
“மழையே, நேரமாவும்ன்னு நெனச்சேன்…” என பாலை வாங்க,
“நமக்கு என்னிக்கு மழை தண்ணி எல்லாம் நேரத்த கடத்திருக்கு? நித்தைக்கும் ஒரே பொழப்பு தான…” என்றவர்,
“ஆமா நேத்து மருமவேன் வந்தாரு போல?…” என மெல்லிய குரலில் அவர் கிசுகிசுப்பாய் கேட்டுவிட,
“யாத்தே, அவ காதுல விழுந்துச்சு…” என சொல்லி சிந்தா உள்ளே வந்துவிட்டார்.
எதார்த்தமாக இல்லாமல் மகள் ஏதேனும் கேட்பாளோ என பதறி உள்ளே செல்ல அதிலேயே சித்திரைவிழி கண்டுகொண்டாள்.
ஆனாலும் எதையும் கேட்டுவிடாமல் பல்லை கடித்தபடி மிஷினில் நூலை மாட்ட ஆரம்பித்தாள்.
நிச்சயம் ஊர் முழுவது விஷயம் தெரிந்திருக்கும். அதை கேட்பதற்கென்றே சிலர் வரவும் செய்வார்கள் என தெரியும்.
கோபத்துடன் அந்த அறையில் வேலை செய்ய முடியாது என்பதால் எழுந்து வெளியே வந்துவிட சிந்தா நுரை பொங்கும் காபியுடன் வந்தார்.
“இந்தா இத்த ரெண்டுமடக்கு குடிச்சிட்டு வேலையை பாரு…” என சொல்லி மீண்டும் உள்ளே ஓடிவிட்டார்.
வாங்கிக்கொண்டு வெளி திண்ணையில் வந்து காலை மடக்கி அமர்ந்துகொண்டவள் வேடிக்கை பார்த்தபடி காபியை குடித்தாள்.
அந்த நேரம் குடையை பிடித்துக்கொண்டு கூத்தபிரான் அவள் வீட்டை கடக்க ஒரு நொடியேனும் இருவரும் பார்த்துக்கொள்ள அவரின் முகத்தில் வேதனையின் சுவடுகள்.
எதையும் உள்வாங்கினாள் இல்லை. கடனே என அவர் செல்வதையும் பார்த்திருந்துவிட்டு எழுந்து உள்ளே வந்துவிட்டாள்.
“குடிச்சிட்டியா?…” என கேட்டுக்கொண்டே அடுப்பில் ஒருபக்கம் இருந்த வெங்காயம் தக்காளியை கிளறிவிட்டவர்,
“ஒலையை வச்சுட்டேன். இத சும்மா தண்ணி கொழம்பு மாரி வச்சு, கீர கடசல வெச்சி தாளிப்பு போடறேன்…”
“கீர வாங்கலையேம்மா…”
“பின்னாடி இருக்குல செடில நாலு கொப்பு மணத்தக்காளி பறிச்சுட்டேன். அத்த கடசல் போடறேன்…”
“ஒன்னிய ஆரு மழையோட அத்த பறிக்க சொன்னா?…” என சித்திரைவிழி கத்தவும் கம்மென்று வாயை மூடிக்கொண்டார்.
அவர் பேசமாட்டார் அடுத்து பேசினால் ஏதேனும் திட்டுவாள் என வாயை திறக்கமாட்டார் என்பதுணர்ந்து கோபத்தை அடக்கினாள்.
வெளியே எட்டி பார்க்க மழை நன்றாகவே வெறித்து வானம் பளீர் என்று இருந்தது.
“நல்லா விடிஞ்சிருச்சு. மழையும் விட்டுடுச்சு. செரி, போய் தைக்கறேன்…” என்றவள்,
“ஆமா கூழு எங்க? அத்த விட்டுட்டு சோறு வச்சுட்ட?…” என்றாள் இடுப்பில் கை வைத்து முறைத்து.
“இந்த மழைக்கி இந்நேரம் கூழ கரைச்சா சளி புடிக்கத்தான? விசேச நா வருது. நீபாட்டுக்கு இழுத்து கிடத்திறாத…” என சொல்லவும் தான் இன்னும் பத்துநாட்களில் ஊர் பொங்கல் என்பதே ஞாபகம் வந்தது.
மூன்று நாட்களில் கொடி ஏறும் வைபவம். அன்றிலிருந்து ஊரே திருவிழா கோலம் பூண்டுவிடும். நெஞ்சை அடைத்தது விழிக்கு. தன்னை சுதாரித்துக்கொண்டவள்,
“ம்மோவ் ஒன்னோட ரவிக்கை ஒண்ணு எடுத்து வச்சிருந்தியே? எங்க?…” என்றாள். சிந்தா பேசாமல் இருக்கவும்,
“தைக்கனும்னு சொல்லிட்டிருந்தியே அன்னைக்கு. நானும் கூறுகெட்டவ, சுத்தத்துக்கு மறந்தே போவேனா? இப்ப குடு…” என்றவள்,
“பொங்க வேல வந்துருச்சுன்னா நம்ம சோலி ஆவாதே?…” என்றாள்.
“இப்ப என்னத்துக்கு?அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…” மறுத்தார் சிந்தா.
“புதுசு கட்டுத நெலமையிலையா நாம இருக்கோம்…” என சொல்லும் பொழுதே கண்ணீர் ததும்பிவிட்டது சிந்தாவிற்கு.
“ம்மோவ், பொங்கலுக்கு கேக்கலம்மோவ், சும்மாவே தச்சிக்கலாம். நாளைக்கி, நாளான்னிக்கு கூட உடுத்திக்க…”
“ஒன்னும் வேணா? வேணாம்டி. ஏம்டி சாவடிக்கிற?…” என்றார் அவர் மெல்லிய விசும்பலுடன் தாளமாட்டாமல்.
மகள் அசையாமல் பார்த்துக்கொண்டு நிற்க அவராகவே தெளிந்தவராக புடவை தலைப்பில் முகத்தை துடைத்துவிட்டு,
“நா இருக்கற நெலமைக்கி புதுசு ஒன்னுதேன் கொறச்சலு…” என சொல்லிவிட்டு உலைக்கு களைந்து வைத்திருந்த அரிசியை கொதிக்கும் நீரில் போட்டுக்கொண்டு இருந்தார்.
சித்திரைவிழியும் தாயிடம் அடுத்து ஒன்றும் பேசாமல் முன்னறைக்கு வந்து அமர்ந்துகொண்டாள்.
போன வருடத்தில் ஊர் பொங்கலில் எத்தனை ஆராவாரம்? எவ்வளவு ஆர்ப்பாட்டம்? சந்தோஷம்? எல்லாம் எல்லாம் கனவாகி போனதே.
வாழ்க்கையே பொய்யாகிவிட்ட போது இதை நினைத்து என்ன செய்ய? தன்னை தேற்றிக்கொண்டு தைக்கவேண்டிய துணிகளை எடுத்து வைத்தாள்.
“என்ன சிட்டு, தெய்க்க ஒக்காந்தாச்சு போல?…” என இரண்டு வீடு தள்ளியிருக்கும் பூமாரி வந்து நின்றார்.
முதல் ஆளாக அவர் வந்ததும் நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையசைத்த சித்திரைவிழி,
“என்ன காத்தாலையே இங்கிட்டு காத்தடிக்குது?…” என்றாள்.
“வேறென்னத்துக்கு துணி தெக்கத்தேன். பொறவு ஒவ்வீட்டுல வட்டி சோறு திங்கவா வந்தெம்?…”
“வட்டி சோறு இங்கயே திண்ணா ஒம்ம வீட்டு அடுப்பாங்கரைய ஆரு பாக்கறதாம்?…”
“ம்க்கும், பாத்துட்டாலும்?…”
“நீ இங்கயும் அங்கயுமா ஒலாத்துனா பாக்காமத்தேன் கெடக்கும். அத்த விடு. இப்ப என்ன சோலி?…”
“அதேன் சொன்னேம்ல. தெக்க…”
“துணி ஒன்னையும் கொண்டாரல?…” என்றாள் காலால் மிஷினை மிதிக்க ஆரம்பித்தபடி.
“இன்னிக்குத்தேன் டவுனுக்கு போறேன். மகளுக்கு, மருமவனுக்கு எல்லாருக்கும் எடுத்துட்டு வாரேன். நல்ல நா பொழுதுக்குள்ள தெச்சி குடுத்துருத்தா…”
“எனக்கு ரவிக்க, சுடிதாருதேன் தெக்க வரும். தெரியும்ல…”
“தெரியும்த்தா. மருமவேன் துணிய வேற எடத்துல குடுத்துக்கறேன்…” என்றவர் இன்னும் அங்கேயே நிற்க,
“என்ன நா போயி எடுத்தாறவா? இங்கயே நின்னா என்னத்த நா பொழுதுக்கு மின்ன கொண்டாட போற?…” என்றாள் சித்திரைவிழி.
“வெரட்டுததுலையே நில்லு….” என்றவர்,
“இதாரு சீல? துணி நல்லாருக்கே…” என பக்கத்தில் துணி வெட்டுவதற்கிருந்த மேஜை மீது புது புடவை ஒன்றிருந்தது.
அதனை எடுத்து பார்த்தபடி அவர் கேட்க நிமிர்ந்து பார்த்தவள் தலையசைப்புடன்,
“நல்லாருக்குல சீல?…” என்றாள் விழி.