உயிர் தழுவும் விழியே – 25 (3)

கூத்தபிரான் ஒதுங்கி நின்று தான் பார்த்தார். யோகுவின் அருகில் கூட செல்லவில்லை.

தண்ணீரை தெளித்து மயக்கதை போக்க விழித்துக்கொண்டவள் முதலில் பார்த்தது விழியை தான்.

“மன்னிச்சிக்கிடுத்தா சிட்டு, சிட்டு பாவம் பண்ணிட்டேம்த்தா. நெசமாங்காட்டி அன்னிக்கி அவம்பாவத்துல ஒன்னத்தையும் நம்பாம ஒன்னிய எம்புட்டுக்கு வெசனத்துல தள்ளிப்பிட்டேன். மன்னிச்சிக்கிடுத்தா. ஒங்கண்ணீரும்தேம் என்னிய, எம்புள்ளைய இங்க கொண்டாந்துருச்சு…”

யோகுவின் அழுகை அந்த வீட்டையே புரட்டி போட்டது. அவள் மயங்கியது பரிதவித்து போன துளசிக்கு விழித்ததும் தான் நிம்மதியானது.

இப்போது விழியை கட்டிக்கொண்டு அவள் அழுது தேம்ப வெறுமையாய் பார்த்துக்கொண்டு நின்றான்.

யோகுவின் அழுகை இத்தனை வருடங்களாய் யாரும் பார்த்ததில்லை. எப்போதும் ஒரு திமிருடனே தான் இருப்பாள்.

அப்படியிருக்க இவ்வளவு இறங்கி, அதிலும் தான் பிள்ளையை நினைத்து பயந்து, கதறுவது மனதை பிசைந்தது.

“இந்தா விடும், இம்புட்டு அழுது புள்ளைக்கு மூச்சு முட்ட போவுது. கம்மின்னிரு…” என்று விழி அதட்டவும் தான் சற்றே நிதானத்திற்கே வந்தாள் யோகு.

விழிக்குமே ஆறிவிட்ட புண்ணை கிளறியதை போல வேதனையில் மீண்டும் துடிதுடித்து நிற்க இப்போது கிட்டத்தட்ட அதே நிலையில் யோகுவை பார்த்ததும், தாயாய் யோகுவின் பரிதவிப்பும், மன்றாடலும் அவளை அசைத்தது.

“மதினி இவள கூட்டிட்டு போங்க…” என்று சொல்லியவள் அதற்கு மேல் அங்கே நிற்காமல் மாடிக்கு சென்றுவிட்டாள்.

இன்னும் கீழே இருந்தால் கூட உடைந்துவிடுவோமோ என்னும் பயத்தில் வந்துவிட்டாள். வந்தவள் மாடத்தின் கீழ் காலை மடக்கி அமர்ந்துகொண்டாள்.

இதை எதையும் கவனிக்கும் நிலையில் மயில் இல்லை. பித்து பிடித்ததை போல இருந்தார்.

யோகுவை சாமதானம் செய்ய செல்வி செல்ல வீரபாண்டி துளசி, கூத்தபிரானுடன் உள்ளே சென்றவிட மயில் மட்டும் தனித்திருந்தார்.

“ம்மோவ்…” என்று பூமி அவரின் தோளில் கை வைத்ததும் மகனை கட்டிக்கொண்டு சத்தமில்லாமல் கதறிவிட்டார்.

“விடும்மோவ், போதும்த்தா….” என்று அவரிடம் சொல்ல பேசவே முடியவில்லை மயிலால்.

சிறிதுநேரம் இருந்துவிட்டு பூமி மாடிக்கு வந்துவிட விழி அமர்ந்திருப்பதை பார்த்து பதட்டத்துடன் வேகமாய் அவளிடம் வந்தான்.

“விழி என்னடி?…”  என அவளை நெருங்கி முகம் பார்க்க இயல்பாய் இருந்தது.  

கீழே நடந்த களேபரத்தில் வருத்தத்தில் இருக்கிறாளோ என்று அவன் கேட்க அவனை பார்த்ததுமே பளிச்சென்று புன்னகைத்தாள்.

“யேம்ய்யா பதறுத? அத்த கீழயே விட்டுட்டேம். எம்புள்ள, யே சாமி இருக்கு. என்னத்துக்கு அழுது கரையனுங்கறேம்?…” என்று அவளருகே அவன் வந்தமர்ந்ததும் தோளில் சாய்ந்துகொண்டாள்.

“இங்கன வரவுங்காட்டிதேம் மனசுக்கு நெறவா இருக்குய்யா…” என்றாள்.

அதுவே பூமிநாதனுக்கு பெரும் ஆசுவாசத்தை கொடுத்தது. அவனுமே நிம்மதியாய் சிரிக்க அவனின் கையை எடுத்து வயிற்றில் வைத்தாள்.

“என்ன சொல்லுதாம் யே சாமி?…” என்று புருவம் உயர்த்தி கேட்க,

“சாமி வார வரைக்கி ஒன்னிய செலாத்தலா பாத்துக்கிட சொல்லுதுடி…” என்றபடி வயிற்றை லேசாய் வருட,

“சொக்கா…” என்று இன்னும் அவனை நெருங்கி அமர்ந்தாள்.

அதன் பின்னான பேச்சுக்கள் வயிற்று பிள்ளையுடன் தான். இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

செல்வி அதட்டியே சொல்லியிருந்தாள் மயிலுக்கும், யோகுக்கும். விஷயம் யாருக்கும் தெரியாதென்று.

அதனால் அவர்களையும் அப்படியே விட்டுவிட்டு யாருக்கும் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டு மறுநாள் தான் கிளம்பினாள்.

விஷயம் வீட்டிற்குள்ளேயே அடங்கி போனது. மயில் மற்றவர்கள் ஒதுக்குவதை விட தானே ஒதுங்கி நின்றார்.

மறுநாளே மருத்துவமனைக்கு சென்று விழியை பரிசோதிக்க உடன் யோகுவையுமே அழைத்து சென்றாள் செல்வி.

யோகுவின் குழந்தையின் வளர்ச்சி நம்பிக்கை வைக்கும்படி இருந்தாலும் அவள் மனதளவில் சோர்ந்திருக்க கவனிக்கும்படி சொல்லியிருந்தார்கள்.

என்னதான் பிள்ளை நன்றாக உள்ளது என்று தெரிந்தாலும் இன்னும் அந்த பயம் அகலவில்லை யோகுவை விட்டு.

விழியின் உடல்நிலை ஆரோக்கியத்தில் எந்தவித குறையும் இல்லாததால் பொதுவான அறிவுரைகள் தான் அவர்களுக்கு.

சமீபமாய் சிந்தாவும் மகள் உண்டாகிவிட்டதால் சம்பந்தியின் வீட்டிற்கு வந்து சென்றுகொண்டு இருந்தார்.

ஆனால் மயிலை எந்தவகையிலும் விழியை நெருங்கவிடவில்லை கூத்தபிரான். காவலுக்கு இருப்பதை போல எந்த நேரமும் வீட்டிலேயே தான் சட்டமாய் இருந்தார்.

அவரை மீறி அருகே சென்று பார்க்க கூட முடியவில்லை மயிலுக்கு. மாடியில் கால் வைக்கவே அத்தனை அச்சமாக இருந்தது.

மகன் வீட்டிற்குள் எழுப்பியிருக்கும் அந்த கோவிலை பார்க்க அத்தனை ஆவல் இருந்தபோதும் அதற்கு அனுமதி இல்லையே என்பதே பெருந்தவிப்பாக போனது அந்த முதியவளுக்கு.

துளசியும் சமீபமாய் யோகுவிடம் ஓரிரண்டு வார்த்தைகள் பேச ஆரம்பித்திருந்தான் அவளின் மனகிலேசத்தை போக்கவென்று.

முழுதாய் அவளை மன்னித்துவிடவில்லை. காலபோக்கில் மாற்றங்கள் வரலாம் என்பதை போல இருந்துவிட்டான்.

ஏழாம் மாதம் வளைகாப்பு போடப்பட்டு யோகுவை வீட்டிற்கு அழைத்துக்கொண்டார்கள் வீரபாண்டி குடும்பத்தினர்.

இப்போதெல்லாம் தன்னை போல விழிக்கும் தன் வீட்டினர் செய்வதில் எந்தவித கசப்பும் உருவாவதில்லை யோகுவிற்கு.

தன் குழந்தையை வேண்டும் நேரம் விழிக்குமே நல்லவிதமாய் பிள்ளை பெறவேண்டும் என வேண்டிக்கொள்வாள்.

என்ன ஒன்று அவர்களின் மாற்றங்கள் கூத்தபிரான், துளசியால் தான் அங்கீகரிப்படவில்லை.

அதை இப்போதெல்லாம் நினைப்பதும் இல்லை. யோகு விழியுடன் பேசினாலும் அவளும் பதில் சொல்வாளே தவிர ஒட்டுதல் உண்டா என்றால் நிச்சயம் இல்லை.

கூத்தபிரான் அறியாமல் மயில் தான் இளைய மருமகளிடம் அவ்வபோது சாப்பிட்டாயா, தூங்கினாயா என்பதை எல்லாம் சைகையிலும், ஒளிந்தும் கேட்டுவிடுவார்.

பதில் சொல்லுபவளுக்கு இன்றளவும் மனதில் காயங்கள் கொஞ்சமும் மாறுவதாய் இல்லை.

உண்மையில் அப்போதுதான் இன்னும் அதிகமாகும் அவர்களின் இந்த அக்கறை பேச்சில்.

அது பழையதை எல்லாம நியாபகப்படுத்தும், இவர்கள் முன்பு இப்படியெல்லாம் இருந்தார்கள் தானே என.

மனதளவில் வைத்துக்கொள்பவள் முகத்தில் காட்டாமல் இருக்க பழகிக்கொண்டாள்.

ஆனால் விழியின் முகத்தின் சிறு அசைவையே அவதானித்துவிடுபவன் அவளின் அகத்தையா கண்டுகொள்ளாமல் இருப்பான்?

இருவருக்குமே மற்றவர்களின் உணர்வு புரியத்தான் செய்தது அதை அப்படியே கடந்து விடதான் முயன்றார்கள்.

சரியாய் யோகுவிற்கு பெண்குழந்தை பிறக்க, பிறக்கும் வரை துளசிக்கு உயிர் உடலில் இல்லை எனலாம்.

எப்படி பிறக்கிறதோ எப்படி இருக்கிறதோ என்று பயந்துகொண்டே தான் இருந்தான்.

ஆனால் அனைவரும் பயந்ததை போல குழந்தைக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை. நல்லவிதமாகவே பிறந்திருக்க மயில் பூ மிதிப்பதாக வேண்டிக்கொண்டார்.

விழிக்கு அது ஒன்பதாம் மாதம். இன்னும் யோகு அவள் வீட்டில் இருக்க கீழிருக்கும் அறையை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரும் சொல்லியும் மறுத்துவிட்டாள் விழி.

பூமிநாதன் விழியின் முடிவு தான் என்றுவிட அவனில்லாத நேரங்களில் அவள் மாடி ஏறி இறங்குவது மயிலுக்கு ரத்தகொதிப்பை தான் ஏற்றும்.

பெரிய வயிற்றை வைத்துக்கொண்டு அவள் நடப்பதை எந்த நேரமும் பார்த்துக்கொண்டே இருக்க அதற்கும் கூத்தபிரான் ஆடி தீர்த்தார்.

மயில் விழியை பார்க்க கூடாது என்றும், பார்த்தால் கூட எதுவும் ஆகிவிடும் என்று வார்த்தையால் குத்தி கிழிக்கத்தான் செய்தார்.

அவரின் தேள்கொடுக்காய் மாறிப்போன நாக்கிற்கு பயந்தே இன்னும் ஒடுங்கினார் மயில்.

பிள்ளைகளிடம் மாறுதல் வந்து அவர்கள் பேசினாலும் கூத்தபிரான் எந்த காலத்திலும் மன்னிக்க தயாராக இல்லை.

விழிக்கு இது ஒன்பதாம் மாதம். ஏழாம் மாதமே வளைகாப்பு என சொல்ல பூமிநாதன் ஒன்பதாம் மாதம் என்றுவிட்டான் உறுதியாக.

இதோ மறுநாள் வளைகாப்பு என்றிருக்க அன்று இரவே வலி கண்டுவிட்டது விழிக்கு.

சுகபிரசவத்தில் மணிமணியாய் இரட்டை பிள்ளைகள். வானத்திற்கும் பூமிக்கும் தான் மனதளவில் குதித்தான் பூமிநாதன்.

அதிக சிரமமின்றியே அவள் பெற்றுவிட இரண்டு ஆண் குழந்தைகளை இரு கைகளிலும் தாங்கியபடி விழியை நோக்கியவன் முகத்தில் கண்ணீருடன் கலந்த பெரும்புன்னகை.

குடும்பமே மருத்துவமனையில் குடி வந்துவிட்டதை போல வீரபாண்டி, வீட்டில் அனைவரும் வந்திருக்க, யோகு கூட பிள்ளையுடன் வந்துவிட்டாள்.

சிந்தா, வேந்தன் மற்றும் கூத்தபிரான் குடும்பத்தில், அக்கம்பக்கத்து சொந்தங்கள் என்று அத்தனைபேரின் புடைசூழ பிறந்திருந்தது பூமி, விழியின் இரு சாமிகள்.

அத்தனைபேரும் பிள்ளையை பார்க்க, மயிலை பார்க்கவே கூடாதென்று குறுக்கே அய்யனாராய் மறித்து நின்றார் கூத்தபிரான் மிரட்டும் கண்களுடன்.

error: Content is protected !!