அவருக்கு அனுமானம் கூட இல்லை. சண்டைக்கு தான் தேடி வந்துவிட்டார் என்று உள்ளுக்குள் பயத்துடன் இருந்தாலும் வெளியே சாந்தமாய் தான் இருந்தார்.
“செரி பொறப்புடுதேம்…” என்று வாசலுக்கு திரும்பியவர் சிந்தாவிடம் மன்னிப்பை கேட்க மனது உந்த வார்த்தையாய் அதனை கொண்டு வரமுடியவில்லை.
“பொறவு…” என்று தயங்கி மயில் சிந்தாவுடன் வாசலில் நிற்க போவோர் வருவோர் கவனித்து அதிசயாமாக பார்த்துவிட்டே சென்றார்கள்.
“என்னன்னு சொல்லுங்க மதினி…” என்றவரின் கையை பிடித்துக்கொண்ட மயிலு,
“எத்தையும் மனசில வெக்காம வீட்டுக்கு வாத்தா சிந்தா…” என்றார் யாசகம் போல.
“மதினி…”
“தப்புத்தேம், கூறுகெட்டு போயி வார்த்தைய விட்டுப்பிட்டேம். ஆனா, அதுக்கு…” என்றவரின் கண்ணில் நீர் நிறைந்துவிட்டது.
“செரி செரி. நெசமா வாரேம். இந்த சிட்டுதேம்…” என்றவர்,
“நெசமாங்காட்டி வாரேம் மதினி. எனக்குமே இங்கின ஆரு இருக்காவ?…” என்று சொல்லவும் தான் மயில் இன்னுமே உடைந்து போனார்.
சிந்தாவிடம் சொல்லிக்கொண்டு வீடு வந்து சேர வாசலில் யோகு அமர்ந்திருக்க அவளை முறைத்த மயில்,
“கூத காத்தடிக்கிதுல, சேராம போனா என்னன்னுடி செய்யுவ? கோட்டிக்கழுத. எந்திச்சி உள்ள போடி…” என அதட்டினார்.
“சிட்டுவ பாக்கத்தேம் த்தே…” என்றவள் ஒன்றும் சொல்லாமல் உள்ளே செல்ல,
“கோவிலுக்கு போயிருக்காவலாம். வருவாக…” என்றதும் யோகு தலையசைத்து சென்றுவிட்டாள்.
அவர்கள் வருவதற்குள் மயில் திருஷ்டி கழிக்க தேவையானதை எடுத்து வைத்துவிட்டு காத்திருந்தார்.
வாசலில் சிரிப்பு சத்தம் கேட்டது. உள்ளே படுத்து பேசிக்கொண்டிருந்த கூத்தபிரான்,
“துளசி செல்வி வாரான்னு நெனக்கிதேம்…” என்று கூத்தபிரான் சொல்லவும் துளசி எட்டி பார்க்க செல்வியோடு பூமிநாதன், வீரபாண்டி, விழி அனைவரும் தான் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.
“ஐய்யா அம்புட்டுபேரும்ல வாராக….” என்றான் துளசி.
“நான்தேம் வரப்பிடாதுன்னு சொன்னேமில்ல. இவகள…” என்று பல்லை கடித்துகொண்டு அவர் இறங்க முற்பட துளசி உதவினான்.
இங்கே மயில் வாசலில் வைத்தே அவர்களை நிறுத்திவிட்டு திருஷ்டியை எடுத்துக்கொண்டு விழியை நெருங்க உணர்வின்றி பார்த்தாள் அவரை.
அதுவரை சிரித்த முகமும், பூரிப்புமாய் வந்துகொண்டிருந்தவள் முகம் மயிலை கண்டதும் உணர்ச்சி துடைக்கப்பட்டத்தை மற்றவர்களும் கவனித்தனர்.
மயிலுக்கு புரிந்தாலும் ஏன் எதற்கென்று எதுவும் கேட்காமல் திருஷ்டி எடுத்து முடிக்க பூமி விழியை உள்ளே செல்லுமாறு கண் காட்டினான்.
உள்ளே நுழைந்தவர்களை உறுத்து விழித்தபடி கூத்தபிரான் நிற்க அவரின் கோபத்தை கண்டு விழியும் பூமியும் தயங்க மயில் இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.
“செல்வி, சாமிக்கி பொங்க வச்சி படச்சேன். கும்புட்டுக்க சொல்லுத்தா…” என்று அவர்களை பூஜை அறைக்கு அனுப்பிவிட்டு இங்கே பால் பாயாசத்தை அனைவருக்கும் ஊற்றிக்கொண்டு வந்தார்.
“இப்ப என்னத்துக்கு இங்க வந்தாகலாம்? ஒன்னய வரவேணாமின்னு சொன்னேமில்ல பூமி?…” என்று மகனை கண்டிக்க,
“யே அவென் வீட்டுக்கு அவென் பொஞ்சாதிய கூட்டிட்டு வந்திருக்கியான். இங்க ஒமக்கென்ன எரியுதாம்? ஏம்ய்யா உசுர வாங்குத?…” என்று மயில் கத்த பேசமுடியாதென்பதை போல திரும்பிக்கொண்டார் கூத்தபிரான்.
மயில் பாயாச தம்ளரை முதலில் விழியிடம் நீட்டியவர் மகனையும் மருமகளையும் மாற்றி மாற்றி பார்க்க கூத்தபிரான் ஆவேசத்துடன் அதனை தட்டிவிட்டார்.
என்னெவன்று மற்றவர்கள் கேட்கும் முன்னரே கோபத்திலும் ஆவேசத்திலும் வார்த்தையை விட்டிருந்தார் கூத்தபிரான்.
“யே இந்த புள்ளையவும் கொண்டுபுடலாமின்னு நெனைக்கிதியோ? யே மருமவ நல்லா இருந்தாதேம் ஒங்கண்ணு அவியுதே? இதுலயும் என்னத்தையாச்சு கலந்துருப்ப நீயி…” என்று படபடவென்று பேசிவிட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அதிர்ச்சியில் உறைந்தனர்.
உண்மையை இப்படி அனைவருக்கும் முன் பேசிவிட்டாரே என்று வீரபாண்டியும், தந்தைக்கு விஷயம் தெரியுமா? எப்படி என்று செல்வி, விழி, பூமி மூவரும் நிற்க மயிலின் நிலையோ பரிதாபம்.
“என்னத்த சொல்லுதீய? கொலகாரியா? கொலகாரியா நானு? சொல்லுமய்யா…” என்று கூத்தபிரானின் சட்டையை பிடித்து கேட்டவருக்கு அப்போது தான் முழுவதும் விளங்கியது.
இந்த பிள்ளையும் என்றால்? மயில் நடுநடுங்கி போய் நிற்க யோகுவுக்கும் இது பெரிய அதிர்வு தான்.
என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஆனால் இருவருக்குமே கூத்தபிரான் துளசியின் கோபத்திற்கு காரணம் இதுவென்று விளங்கிவிட்டது.
“நா நா…” என்று ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்த மயில் கடைசியாக வந்து நின்றது பூமியிடம் தான்.
“ஐயா…” என்று அவனின் கையை பிடிக்க,
“ம்மோவ்,…” என்று செல்வி அவரை பிடித்துக்கொண்டாள்.
“என்ன ஆச்சின்னாச்சும் சொல்லுங்கடி. யே நெஞ்சு அடக்கிதே. என்னத்த செய்யிவேன். இந்த பாதகத்தி என்னத்தான் பண்ணேன்னு கூட இந்த கெழடிக்கி அம்புடலடி செலிவி….” என்று மகளை பிடித்துக்கொள்ள செல்வி தான் இதற்கு மேல் மறைக்க முடியாதென்று விவரமாய் சொன்னாள்.
மயிலின் பார்வை விழிக்கு அடுத்ததாக யோகுவிடம் செல்ல, நின்ற இடத்திலேயே மரணித்ததை போல் ஆனது யோகுவிற்கு.
“ஆத்தீ, இந்த பாவத்த எங்கன போயி தொலப்பேம். எவ்வீட்டு வாரிச நானே வேரறுத்திருக்கேனே? ஐயோ…” என்று கதறியவர் அதற்கும் மேல் தாமதியாமல் விழியின் கால்களை பிடிக்க போக அவள் பூமியின் பின்னால் நகர்ந்தாள்.
“எக்கா அம்மைய பிடி…” என்று பூமிநாதன் அதட்ட,
“மன்னிச்சிக்கிடும்ய்யா, என்னய மன்னிச்சிக்கிடும்….” என்று மகனிடமும் கை கூப்ப இருவருக்குமே ஒரு விரக்தியான மனப்பான்மை தான்.
மன்னிப்பு, இது இழந்ததை மீட்டுத்தருமா? அன்றைய தவிப்புகளையும், துடிப்புகளையும் அகற்றிவிடுமா? இருவரிடமும் பேரமைதி தான்.
“சத்தியங்காட்டி எனக்கு தெரியாதுய்யா. யே சாமி, அம்மைய நம்புய்யா. தெரிஞ்சிருந்தா இம்புட்டுக்கு விட்டுருக்கமாட்டேனே இந்த சிறுக்கிமவ…” என தன்னை தான் சொல்லிக்கொண்டாரே தவிர யோகுவை எதுவும் சொல்லவில்லை.
அதுவே யோகுவை இன்னும் குற்றவுணர்ச்சியில் தள்ள துளசியை நிமிர்ந்து பார்த்தாள். அவன் இவள் பக்கம் திரும்பவில்லை.
“அப்பைக்கும் ஒனக்கு மத்ததெல்லா தப்பா இல்ல. புள்ள போனதுதேம் தப்பா தெரியிது. இல்ல?…” கூத்தபிரானை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
“என்னத்துக்கு ஒம்மவேன் மாடில வாசல மாத்தினியான்னு கேட்டியே? போயி பாரு தொலைச்ச புள்ளைய சாமியா கும்பிட்டுக்கிட்டு இருக்காக அங்கன ஒரு மாடத்த அமத்தி…” என்றதும் விக்கித்து போனார் இன்னுமே.
“ஆனா ஒத்த வார்த்த சொல்லிருப்பாவளா? எம்புட்டுக்கு கரிச்சி கொட்டின. நீயி இப்ப என்ன கெதில நிக்கிதவே? அந்த புள்ளையோட கண்ணீரும், ஒம்புள்ளையோட வேதனையுந்தேன் ஒன்னிய இம்புட்டுக்கு கொண்டாந்திருக்கு…”
“அந்த புள்ள இவகளால இப்பிடி ஆச்சேன்னு நெனச்சி ஒன்னும் ரெண்டு சொட்டு கண்ணீரை விடனுமின்னு இல்ல. ஆனா தம்புள்ளைய காப்பாத்த முடியாம போச்சேன்னு அத்த நெனச்சி அழுதா கூட நீயிதேம் காரணமின்னு ஆண்டவனுக்கு தெரியுமில்லத்தா. அப்ப சாமி ஆருக்கு கூலிய குடுப்பாரு?…”
“மன்னிச்சிகிடுங்க மாமா. அன்னிக்கி கிறுக்குப்பிடிச்சி போயி நானுந்தேம் என்னத்தையோ?…” என்று யோகு தானே முன்னால் வந்து மன்னிப்பை கேட்க,
“இந்தா நீயி முன்னாலையே வராத பாத்துக்கிடு. வாயும், வவுறுமா இருக்கன்னுதேம் கம்மின்னு இருக்கேம். இல்லாங்காட்டி..” என்று கூத்தபிரான் யோகுவை அதட்டியத்தில் அழுகையுடன் பின்னால் நகர்ந்துவிட்டாள் அவள்.
அவளிடம் எரிந்து விழுந்தவர் மீண்டும் மயிலை பிடித்துக்கொண்டார் கூத்தபிரான்.
“யேம்டி தெரியாமத்தேம் பண்ணுனேங்கற. ஆனா அந்த சாமிக்கி தெரியுமில்ல. அதேம், அதேம் ஒன்னிய இந்த நெலமையில நிக்க வெச்சிட்டாரு. அழுவே, நல்லா அழுவு. அப்பைக்காச்சும் நீயி செஞ்ச அக்கரமத்தையெல்லா கழுவ முடியுதான்னு பாரும்…”
“ஐயா…” என்று பூமிநாதன் தடுக்க,
“ஒன்னிய யாருலே இங்கின வர சொன்னது?…” என மகனிடம் எகிறினார் அவர்.
“சாமிய பாக்கனுமின்னு விழி சொல்லுச்சு. அதேம் கூட்டியாந்தேம்…” என்றான் அவளின் கையை பற்றியபடி.
“சாமிதாம்ய்யா, அந்த சாமியே வரமாகிட்டு அமஞ்சிருச்சு. நல்லா வேண்டிக்கத்தா சிட்டு. ஒனக்கு ஒரு கொறையும் வராது. அப்பனுக்கு அப்பனா ஒனக்கு காவ சாமியா இந்த கெழவேன் என்னிக்கும் நிப்பேம்த்தா. ஆனா…” என்றவர்,
“இவ கையால சொட்டு தண்ணி தொண்டக்குழில சரிக்காதத்தா. எம்பேச்ச கேளு. நல்லபடியா புள்ள பொறக்குத வரைக்கி ஒ அம்மை வீட்டுல இருப்பா. நாங்க அங்கன வந்து ஒன்னிய பாத்துக்கிடுவோம்…” என்றார் கெஞ்சலுடன் கூத்தபிரான்.
“ஐயா…” என்றாள் விழி கண்ணீருடன்.
“யேம்த்தா கண்ணு கலங்குத? ஒ சாமி இங்கன இருந்தாலு இங்க பாவப்பட்ட செம்மங்களும் இருக்குத்தா. இன்னுங்காட்டி யே ஆவியடங்கலயே. மவராசியா இருப்ப. புள்ளைய பெத்துக்கிட்டு வா. இவகள பாக்காதத்தா. நீயி சிரிச்சா கூட பொறுக்காத செம்மங்க சாமி…”
கூத்தபிரானின் மன்றாடல் அங்கிருந்த அத்தனைபேரின் மனதையுமே உருக்கியது.
அப்போது தான் வீரபாண்டி பேசியதன் அர்த்தமே யோகுவிற்கு முழுதாய் விளங்கியது.
பாவம் பாவம் என்று பாவம் செய்ததாய் சொல்லியது இதை தானா? அதன் விளைவு தான் தன் கையாலேயே தான் பிள்ளைக்கு? யோகுவிற்கு மயக்கமே வந்துவிட,
“யாத்தே, எம்புள்ள…” என வயிற்றை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்தாள் யோகு.
செல்வியும், விழியும் உடனே யோகுவை தாங்கிக்கொள்ள துளசி தண்ணீரை எடுத்துவர ஓடினான்.