உயிர் – 25
மாலை வரை விழியை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு வரவே இல்லை.
மயலின் கால்கள் தான் தேய்ந்துபோனது வாசலுக்கும் உள்ளுக்கும் நடந்து நடந்தே.
இதில் துளசிக்கு அழைக்க அவன் காட்டிற்கு சென்றுவிட்டேன் என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.
கூத்தபிரானுக்கு அழைக்க முடியவில்லை. அழைத்தாலும் பிரயோஜனம் இல்லை.
அதைவிட அழைக்கவே பயமாக இருந்தது. எங்கே தான் அழைத்து கோவித்துக்கொண்டு அங்கேயே இருந்துவிட்டால் என்னும் நினைப்பே அழைக்க சம்மதிக்கவில்லை.
சரி வருவதற்குள் ஏதேனும் செய்வோம் என்று நினைத்தவர் உடனே செல்விக்கு அழைத்தவர்,
“யேம்டி இன்னும்ங்காட்டி என்ன அங்கன ஒனக்கு சீராடலு?…”
“எம்மோவ்?…”
“அவள கூட்டிட்டு வீட்டுக்கு வார சோலிய பாரு. தெச்ச வரைக்கி போதுமாட்டிருக்கு. துணிய அம்புட்டையும் தூக்கி குடுக்க சொல்லு. இனிமேங்காட்டி அந்த மிசினுல அவ கால வெக்க கூடாது ஆமா…”
இங்கே மகளிடம் அவர் சொல்லிக்கொண்டிருக்க செல்விக்கு வேதனை தான் பொங்கியது தனது தாயின் இந்த பேச்சில்.
“ஒமக்கு புத்தி அம்புட்டுகிடுச்சு போல?…” என்றாள் நக்கலாக.
“யே எம்புத்திக்கி என்னடி? வெரசா வா. நா சாமிக்கி படைக்கிதேம்…” என்று சொல்லிவிட்டு போனை வைக்க செல்வியின் முகத்தில் தெரிந்த கவலையில் பூமிநாதன் என்னவென்று கேட்டான்.
கூத்தபிரான் ஏற்கனவே விழி இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லியிருக்க எப்படி அவரையும் வைத்துக்கொண்டு பேசுவதென்று தலையசைத்தாள்.
“ஆருக்கா, சொல்லேம்…”
“அம்மைதாம் பூமி…”
“அதுக்கேம் முழிக்கித?…” என்று கேட்டதும் சிரித்து சமாளித்தவள் வீரபாண்டியை தனியே அழைத்து விவரத்தை சொல்ல,
“செரி இப்பத்திக்கு ஒன்னையும் சொல்லாத. பாத்துக்கிடுவோம்…” என்று அவன் சொல்லவும் சரி என்றுவிட்டாள்.
இங்கே மயில் பரபரவென்று வேலையை பார்த்தார். சர்க்கரை பொங்கலை வைத்து வீட்டில் இருக்கும் தெய்வங்களுக்கு படைத்து அங்கே யோகுவிற்கு எடுத்து வந்து தர அமைதியாக வாங்கிக்கொண்டாள்.
“ஒன்னையு சீரட்டத்தேன் நெனக்கிது எம்மனசு. ஆனா நீயி பாத்த வேலைக்கி. இரு, வவுத்து புள்ள வெளிய வரட்டும். பொறவு பேசிக்கிருதேம் ஒன்னிய…” என்று நெற்றியில் விபூதியை பூசிவிட்டு மிரட்டிவிட்டே செல்ல யோகுவின் பயம் கூடியது.
தன்னை குறித்தே வெட்கிப்போய் தான் அமர்ந்திருந்தாள். அதிலும் துளசி தலையில் அடித்துக்கொண்டு அழுத காட்சி இன்றும் அவளை வதைத்துக்கொண்டு இருக்கிறதே.
மயில் பால்பாயாசத்தையும் சேர்த்தே செய்து வைத்துவிட்டு தாழ்வாரத்திலேயே இருந்தவர் அவ்வபோது யோகுவை சென்று பார்த்துவிட்டும் வந்தார்.
அவள் வருந்துவது தெரியத்தான் செய்தது. ஆனாலும் மன்னிக்கத்தான் மனதில்லை யாருக்கும். மயில் உட்பட.
எத்தனை அருமைபெருமையாய் வளர்த்தோம், தன் பிள்ளைகளுக்கு மேல் செல்லம் கொடுத்து வளர்த்திருக்க இப்போது தங்கள் கண்ணையே அது குத்த பேரன் பேத்தி எடுக்கும் ஆசையில் இருக்க மண்ணள்ளி போட்டதை போலானது.
மீண்டும் யோகுவை பார்க்க உள்ளே வர பாயாசத்தை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்ததும் கோபம் ஏறியது.
“இன்னு என்னத்துக்குடி உசிர எடுக்கன்னு ஒக்காந்திருக்க? குடுக்கறத ஒழுங்கா முழுங்கு. புள்ள நல்லா பொறக்கனுமின்னு நா வேண்டாத சாமியில்ல. வேண்டுனா மாத்திரம் போதுமாத்தா? ஒழுங்கா முழுங்குடி…” என்று அதட்ட கடகடவென்று குடிக்க புரையேறியது.
கண்ணீர் வந்துவிட்டது யோகுவிற்கு. வேகமாய் மயில் அவளின் நெஞ்சை தடவி தலையை தட்ட வெகுநாட்களுக்கு பின்னான அவரின் அண்மையிலும், அன்பிலும் உடைந்து போய் கதறி அழுதாள் யோகு.
“மன்னிச்சிக்கிடுத்தே. ஆக்கங்கெட்டு போயி கோட்டித்தனமா மாத்தரைய தின்னுப்பிட்டேன். இப்பவரைக்கு எனக்கு நிம்மதிங்கறது இல்லத்த. மன்னிச்சிக்கிடு…” என்று அழ ஆரம்பிக்க மயிலுக்கு தாளவே முடியவில்லை.
“என்னத்தடி செய்ய சொல்லுத? ஒன்னிய மன்னிக்க மனசு ஆவலடி. என்னியால நீயி செஞ்சாத மறக்க முடியல…” என்று அவரும் யோகு அமைதியாகும் வரை இருந்துவிட்டு நகர்ந்துவிட்டார்.
யோகுவின் இப்போதையே வேண்டல் தனது பிள்ளைக்கு நீண்ட ஆயுசையும், ஆரோக்கியத்தையும் மட்டும் தந்தால் போதும் என்பது தான்.
நல்லபடியாக பிள்ளையை பெற்று துளசியின் கையில் தந்துவிட்டால் தான் நிம்மதி என்று பிள்ளைக்காகவே மாற ஆரம்பித்தாள்.
ஏற்கனவே வீரபாண்டி பேசியிருந்தான் யோகுவை. அடுத்தவர்கள் நன்றாக இருக்க கூடாது என நினைக்க ஆரம்பித்தால் விளைவு இதுதான் என்று.
இப்போது விழியும் உண்டாகி இருக்க கேட்டவளுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியும் கூட.
பாதிக்கப்பட்டவளின் மனம் குளிர்ந்தால் அதுவே தன் பாவத்தின் நிழலை குறைத்து குழந்தையை காப்பாற்றும் என்று நினைத்தாள்.
எத்தனை கண்ணீர்? எத்தனை வேதனை? விழி தன்னை நினைத்து அழவில்லை என்றாலும் அவளின் அழுகைக்கு தானும் காரணமாகிற்றே.
அதுவே தன்னை சுட்டு பொசுக்கும் என்பதை தன் அண்ணனின் பேச்சின் மூலம் உணர்ந்துகொண்டாள்.
இப்போது விழி வர அவளுமே காத்திருக்க இரவு கவிழ்ந்தது. அவளும், மயிலும் வெளியே தாழ்வாரத்தில் வந்து அமர்ந்திருக்க துளசி கூத்தபிரானுடன் வந்துவிட்டான்.
ஆனால் பூமியும், விழியும் வரவில்லை. அவர்களுக்கு பின்னால் வருகின்றனரா என்று தேடியவர் பத்துநிமிடத்திற்கு மேல் ஆகியும் வாசலிலேயே எதிர்பார்ப்புடன் இருந்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் வர கூத்தபிரானுக்கு படுக்க ஏதுவாய் செய்துகொண்டிருந்தான் துளசி.
“ஏம்ய்யா துளசி, அவக ரெண்டுபேத்தையும் காணும்?…” மயில் கேட்க யோகுவும் வந்து நின்றாள்.
“எவகள கேக்குதிய?…” துளசி நிமிரவே இல்லை.
கூத்தபிரானுக்கு தேவையான மருந்தை எல்லாம் எடுத்து கொடுத்துக்கொண்டிருக்க அதை கண்டவர்,
“இன்னு உண்கவே இல்ல. மருந்த ஊத்துத?…”
“நாங்க அத்தே வீட்டுலையே உன்கிட்டோம்…” கேட்டதற்கு மட்டுமே பதில் பேசினான்.
“இங்கன நா வகையா ஆக்கி வெச்சி வருவீகன்னு ஒக்காந்துருந்தா ரொம்ப எலசா சொல்லுத?…”
“இப்ப என்ன? அதேம் அங்கனவே உண்கிட்டோமின்னு சொல்லுதேமில்ல?…” என்றான் சற்றே அரட்டல் தொனியில்.
“ஏலே துளசி…” மயிலுக்கு கண்ணீர் இறங்கிவிட்டது.
இப்போதெல்லாம் அவரின் கண்ணீருக்கு அங்கே மதிப்பில்லையே? ஆனாலும் அழுகை பொங்கியது.
“யத்தே அழாதீய…” என்று யோகு சொல்லவும் அவளின் குரலில் இறுகினான் துளசி.
“ஏம்லே என்னிய இம்புட்டுக்கு சவட்டுதீய. இம்பிட்டு வெசத்த வெச்சி யே சோலிய முடிச்சிப்பிடு…” என்று கதறலாய் அவர் சொல்ல அவன் பதில் பேசவில்லை.
“இப்ப என்ன? அவ இங்கின வரமாட்டா. அம்புட்டுதான. நா போவறேம். யே எனக்கென்ன பாதையா தெரியாம கெடக்கு?…” என்றவர் முந்தானையை கொண்டு முகத்தை துடைத்தவர் இழுத்து சொருகி கொண்டு வாசலுக்கு இறங்கிவிட்டார்.
அலட்சியமாக அவரை பார்த்துவிட்டு கூத்தபிரான் படுத்துவிட்டார். யோகு என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே நிற்க துளசி கண்டுகொள்ளவில்லை.
அவளாகவே பின் தாழ்வாரத்திற்கு சென்று அமர்ந்துகொண்டாள் மயில் வரவும் கேட்பதற்காக.
வேகமாய் குறுக்கே வேறு சந்துகளுக்குள் நுழைந்து சிந்தாவின் வீட்டை அடைந்தவர் வாசலிலேயே நின்றுவிட்டார் ஒரு தயக்கத்தில்.
நின்றது ஒரு நொடிதான். அதன்பின்னர் யோசிக்காமல் வீட்டு படியேறிவிட அப்போது தான் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ எடுத்து போட்டுக்கொண்டிருக்க வாசலில் மயிலின் சத்தம் கேட்டு வந்து நின்றார்.
மயிலை பார்த்ததும் முதலில் அதிர்ச்சியானவருக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
“வாங்க, வாங்க மதினி…” என்று வேகமாய் அவரை நெருங்க எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் தன்மையாய் வந்து வரவேற்றவரை பார்க்க மயிலுக்கு நெஞ்சில் கூராய் ஏதோ பாய்ந்தது.
முன்பென்றால் கூட நிச்சயமாய் அலட்சியமாக கடந்திருப்பார். அதையும் குறையாய் சொல்லி இளக்காரமாய் பார்த்திருந்திருப்பார்.
இப்போதோ தவறை உணர ஆரம்பித்திருப்பவராகிற்றே. அதிகமாய் குறுகுறுத்தது மனது.
வீட்டில் யாருமில்லாததை கண்டு எங்கே என்று பார்வையால் தேட சிந்தாவிற்கு யாரை தேடுகிறார் என்று ஒருநொடி புரியவில்லை.
அவர் வந்ததும் என்னவோ, புதிதாய் எதுவும் பிரச்சனையோ என்றுதான் பயந்துபோய் பார்த்தார் மயிலை.
“பூமிய, அவள எங்க?…” என்று சிந்தா பேசும் முன்னர் மயிலே கேட்டுவிட்டார்.
“இப்பத்தேம் கெளம்புதாக. கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வரனுமின்னு சிட்டு சொன்னா…”
“நெசமாவா…”
“நெசமாத்தேம். யே மதினி?…”
சிந்தாவிற்கு மயிலின் உணர்வுகளும் புரிவில்லை, பார்வையும், பேச்சும் கூட புரியவில்லை.
ராசப்பனின் ஒருவருட திதி கொடுக்க கூட வராத மயில் இப்போது மகளை தேடி அவளை காண வந்திருக்கிறார் என்றால் நம்ப கூடியதா?