“என்ன செய்ய? எம்புருசென் ஆக்கங்கெட்ட…” என்றதோடு அவளின் வார்த்தைகள் பூமியின் தொண்டைக்குள் மிடறாய் இறங்கிவிட்டன.
“சொக்கா…” என்றவளின் அழைப்பில் தெளிந்தவன்,
“நெசங்கா செரிங்குதியா விழி…” அவளின் சம்மதத்திற்கென.
“இன்னிக்கு ஒ அம்மை பேச்ச நா சத்தியங்காட்டி நெசமாக்கல என்னிய பொறவு என்னன்னு கேளும்ய்யா சொக்கா…” என்றவளின் சூளுரைப்பில் வாய்விட்டு சிரித்தவனின் புன்னகையை அதன்பின் என்றும் வாடாமல் பார்த்துக்கொண்டாள் சித்திரைவிழி.
அதன் பின்னான பேச்சுக்கள் எல்லாம் இருவரின் ரகசியங்களென புது வடிவமெடுக்க ஆரம்பித்தது.
அத்தனை மாத பிரிவிற்கு பிறகான தேடலில் சிறிதும் வன்மையை உணரவில்லை விழி.
அவளின் மணிவயிற்றில் ஆரம்பித்த முத்த தேடல் விழியின் விழியில் தான் மையங்கொண்டது பூமியின் இதழ்கள்.
தன்னை பூமியாக்கி அவனை தாங்க ஆரம்பித்தவளை தடுமாறாமல் கொண்டாடினான் பூமிநாதன்.
அதன்பின்னான அவர்களின் நாட்கள் எல்லாம் எண்ணங்களின் வண்ணங்கள் தான்.
மயில் இப்போதெல்லாம் சுத்தமாய் விழியை பேசுவதையே நிறுத்தியிருந்தார். தான் பேசுவதையும் நிறுத்தி இருந்தார்.
யாரிடம் பேச? கோபமோ, ஆத்திரமோ, ஆதங்கமோ யாராவது தன்னை கண்டால் மட்டும் தானே பேச முடியும்?
பேச்சே மறந்துவிடுமோ என்னுமளவிற்கு தான் இருந்தது மயிலின் அப்போதைய நிலைமை.
நான்கு மாதங்கள் கடந்திருந்தது. விழியும் பூமியின் அத்தனை அன்னியோன்னியமாக வாழ, கூத்தபிரான் அந்த சந்தோஷத்திலேயே விரைவில் மனமகிழ்ந்து தானே தேறிக்கொண்டார்.
நல்ல எண்ணங்கள் எப்போதுமே நன்மையே பயக்கும் என்பதற்கு அவர்களின் மகிழ்ச்சியான முகமே மனதின் நிம்மதிக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.
அவர்களை போல இலகுவாய், இயல்பாய் இருக்க முடியாததே மயில் மற்றும் யோகுவிற்கு தண்டனையாக அமைந்தது.
நன்குமாதங்கள் கழித்து யோகு இப்போது புகுந்த வீட்டிற்கு அழைத்துவரப்பட்டிருக்க, இருக்கிறாள் ஆனால் இல்லை என்னும் விதமாக தான் அவளின் சூழ்நிலை.
எத்தனை அகங்காரம் எடுத்து அவள் ஆடினாளோ அத்தனைக்கும் முடிவு கட்டுவதை போல நிகழ்ந்துவிட்ட ஒன்றால் அவள் அடங்கி ஒடுங்கி தான் போனாள்.
அவள் சற்றே ஒதுங்கி தனித்து இருக்கட்டும் என்று முடிவெடுத்திருந்த ஒன்றே அவளின் இந்த நிலைக்கு காரணமாகியது.
நினைத்த நேரத்திற்கு மாத்திரை போடுவது. எதை எப்போது எடுப்பது என்று எல்லாம் கொஞ்சமும் யோசிக்கவில்லை.
கடைசியில் துளசியை அழைத்து செல்ல சொல்லி மிரட்ட அதற்கு அவன் காது கொடுக்கவில்லை என்றதும் தன் தகப்பனுக்கும் சேர்த்து இருந்த மொத்த மாத்திரையையும் ஒரே நேரத்தில் போட்டுவிட்டு அத்தனைபேரையும் ஆட்டம் காட்டினாள்.
துளசியிடம் பேசியதை கேட்டு பதறிக்கொண்டு வந்த செல்வியையும் அவள் மதிக்கவில்லை.
பிள்ளைக்கு எதுவாவது ஆகிவிடும் என்றாவது என்னை அழைத்து செல்லட்டும் என்று எந்த நேரத்தில் சொன்னாளோ அதுதான் நடந்தது.
உடலில் சர்க்கரையின் அளவு ஏற்கனவே அதிகமாகி இருக்க, போட்ட மாத்திரைகளின் வீரியம் தாளாமல் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி இருந்தது.
எந்த உறுதியும் சொல்ல முடியாதென்று மருத்துவர்கள் சொல்லிவிட குடும்பமே நிலைகுலைந்து போனது.
ஏற்கனவே பரிசோதனையின் போது சர்க்கரை அளவு அதிகமென சொல்லியே அனுப்பியிருக்க கொஞ்சமும் காதில் வாங்கவில்லை யோகு.
வீண் பிடிவாதமும், வறட்டு திமிரும் யோகுவை தன்னை, தன் வயிற்றில் உள்ள குழந்தையை கொஞ்சமும் யோசிக்கவிடாது செய்ய கடைசியில் அனுபவித்ததென்னவோ துளசி தான்.
“இவ அம்புட்டுப்பேத்தையும் கொன்னிறக்காம விடமாட்டா…” என்று மருத்துவமனையிலேயே தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
“எம்புட்டுக்க சொன்னேம்பிள்ள, அடங்குனியா நீயி? இப்ப பாரு எங்க கொண்டு வந்து நிப்பாட்டியிருக்குன்னு…” என்று செல்வி அழுது தீர்த்துவிட்டாள்.
எதற்கும் யோகுவிடம் பதிலில்லை. தான் நினைத்திருந்தால் தன்னையும் தன் பிள்ளையையும் கவனித்திருந்திருக்கலாமே என்ற எண்ணமே அவளை அறுத்துக்கொண்டு இருந்தது.
அந்த நேர ஆத்திரம் கண்ணை மறைக்க தன் வயிற்றில் இருந்த சிசுவை பற்றிய அக்கறையும் இல்லை.
இப்போது துளசியின் வேண்டுதல் எல்லாம் பிள்ளை நல்லபடியாக ஆரோக்கியமுடன் பிறக்க வேண்டும் என்பதே.
முன்பாவது ஏதோ அவள் பேசிய நேரம் தானும் பதிலுக்கு பேசினான். இப்போது அதையும் சுத்தமாக நிறுத்தியிருந்தான்.
இதை கண்ட மயிலுக்கு மனது ரணமாய் எரிந்தது. மகனின் இந்த நிலையை மயிலால் ஏற்கவே முடியவில்லை.
வேண்டி வேண்டி கிடைத்த வரம், இப்படி அகம்பாவத்திற்கு பலியாவதை அவரால் பொறுக்கமுடியவில்லை.
“ஒன்னிய கெட்டி வெச்சு எங்குடிய நானே கெடுத்துக்கிட்டேனே? எம்புள்ள மொவமே செத்துருச்சுடி. நீயி நல்லா இருப்பியா? என்ன மனிசி? சொமக்கற பிள்ளைய காவு குடுக்க பாத்தியே?…” என்று அரற்றி தீர்த்துவிட்டார் யோகுவை.
“அம்புட்டுக்கு என்னடி ஒனக்கு அகங்காரேம்? யே ஒன்னிய ஒ அம்மை வீட்டுலதென விட்டிருந்தியான்? இல்ல தெருவுல வேவாரிக்கா விட்டியான்? அங்கன இருந்தா ஒ கோரு எறங்கிருமோ? பாதகத்தி நல்லாருப்பியா?…”
“இருந்திருந்து இந்த வம்சத்துக்கு மொத வாரிசு உண்டாகிருச்சு, அந்த சாமி கண்ணா தொறந்தாருன்னு நானே நித்தமும் சாமிய வேண்டுதேம். நீயி அத்த மொத்தமா குழில எறக்க பாக்குதியே? வெளங்குவியா?…”
மயிலில் பேச்சை அனைவரும் தடுக்காமல் வெறுமையுடன் தான் பார்த்திருந்திருந்தார்கள்.
விஷயம் தெரிந்ததில் இருந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்தார் மயில்.
யோகுவை அத்தனை பேச்சு பேசினார். கேட்ட யோகுவின் பெற்றவர்களுக்கும் கூட வருத்தமே இல்லை. பேசட்டும் என்பதை போல தான் நின்றிருந்தார்கள்.
“என்ன பாவத்த பண்ணுனேனோ? ஒன்னிய இந்த வீட்டுக்கு கொண்டாந்து அனுபவிச்சதுதேம் மிச்சம்டி…” என்று வாய் ஓயவில்லை.
யோகு இறுகி போனாள். தானே தன் குழந்தைக்கு எமனாகி போவோம் என்று அவள் நினைக்கவில்லை.
செய்யும் பொழுது தோன்றாத ஒன்று இப்போது அதன் பலனில் அடங்கி போனாள்.
பத்துநாட்கள் ஆகிவிட்டது யோகு வீட்டிற்கு வந்து. விழி தனது வேலைகளை செய்துகொண்டிருந்தாலும் பெரிதாய் இவர்களிடம் பேச்சை வைத்துக்கொள்ள மாட்டாள்.
எப்போதாவது மயில் ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் வரும் விழியிடம். அதுவும் அவர் கேட்பதை பொருத்து தான்.
கூத்தபிரான் உடல்நிலை தேறி அவரே இப்போது நடை தாங்கி மூலம் தானே எழுந்து நடக்க என இருக்க இப்போது ஒரு மாதமாக விழி தனது தையல் வேலைகளை ஆரம்பித்துவிட்டாள்.
வழக்கம் போல தாயின் வீட்டில் வைத்து தான் தைத்து தருவது என்று தன் அடையாளத்தை அவள் ஸ்திரமாக்கிக்கொண்டாள்.
காலையே வேலைகளை முடித்துக்கொண்டு பூமியுடன் கிளம்பிவிடுபவள் மதியம் அவனே வந்து அழைத்துக்கொள்வான்.
இரவும் தைத்து முடித்து வைத்துவிட்டு மீண்டும் பூமி வந்து கூட்டிக்கொள்வான். அவளின் இந்த விருப்பத்திற்கு அவன் தடை சொல்லவே இல்லை.
உடலை வருத்தாத அளவிற்கு அவள் சுயமாய் நின்றுகொள்ளட்டும் என்றுவிட்டான்.
இப்போது செல்விக்கும் தைத்து தரும் பயிற்சியை பயில்விக்கிறாள் விழி. அதில் செல்விக்கு இன்னுமே மன அமைதி.
அன்றும் மதிய உணவிற்கு அழைக்க வந்தவன் முன்பக்கம் யாருமில்லாமல் இருக்க செல்வியிடம் பேசிக்கொண்டிருந்த விழியின் சத்தத்தில் தேடி பின்னே சென்றான்.
சிந்தாவும் செல்வியும் மாறி மாறி விழியின் முகத்தை வழித்து திருஷ்டி கழிக்க மேலே வாசல் நிலையில் நின்றவனின் மனதிற்குள் ஏதோ பரவசம் மனைவியின் முகத்தின் மகிழ்ச்சியை பார்த்ததும்.
“விழி…” என்றவனின் அழைப்பில் அவனை நிமிர்ந்து பார்க்க கீழே இறங்கி வந்தவனை நோக்கி வேகமாய் சென்றாள் அவனின் விழி.
“யேலே பூமி, எனக்கு இப்பத்தேன் நிம்மதியா இருக்குடா. அந்த சாமி நம்மள கை விடலய்யா…” என்று தம்பியிடம் பூரிப்புடன் சொல்லியவள்,
“பேசுங்க, நா போயி அய்யனுக்கு தாக்கல் சொல்லுதேம்…” என்று செல்வி சிந்தாவுடன் வீட்டினுள் சென்றுவிடவும் அவர்கள் சென்றுவிட்டதை உறுதிபடுத்த திரும்பியவன் விழியை அணைக்கும் முன்னால் அவள் பிடிக்குள் தன்னை கொடுத்திருந்தான் பூமிநாதன்.
“சாமிதாம்ய்யா…” நெகிழ்ச்சியுடன் குரல் தழுதழுக்க அவன் நெஞ்சில் சாய்ந்து அவள் சொல்ல,
“சாமிதாம்டி…” அவனும் குழைந்து போனான்.
அவர்களின் உணர்வுகளின் பரிபாஷையில் அங்கே உள்ளத்தின் ஓங்கார ஓசைகள் தங்களின் இணையோடு ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்க விழியின் உச்சந்தலையில் பூமியின் கண்ணீர் துளி மகுடமாய் மின்னி மிளிர்ந்தது.
அங்கே பூமியின் வீட்டில் துளசி உடனே கூத்தபிரானை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விழியின் வீடு வந்து சேர்ந்தான்.
காளிங்கராயனும், சந்தானலட்சுமியும், வீரபாண்டியுடன் வந்துவிட குடும்பம் ஒன்றானது புதுவரவின் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள.
மயிலும், யோகுவும் மட்டும் வீட்டில் இருக்க செல்வி மயிலுக்கும் சொல்லியிருக்க அவருக்கு நிலைகொள்ளவில்லை வீட்டில்.
ராசப்பன் இறந்த வீட்டில் அங்கே சென்றது. அதன்பின்னர் இதுவரை செல்லவில்லை.
ஏதோ தயக்கத்தில் இருந்தவருக்கு எப்போதடா இளைய மருமகளை பார்ப்போம் என்றிருந்தது.
அவள் மேல் எத்தனை கோபமிருந்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் தனது வீட்டின் வாரிசாகிற்றே.
வாசலுக்கும் வீட்டிற்குள்ளுமாக தான் நடந்துகொண்டே இருந்தார். யோகு இதை எல்லாம் பார்த்தாலும் தனது வயிற்றை தடவியபடி வெறுமையாய் அமர்ந்திருந்தாள்.
முன்பிருந்த காழ்ப்புணர்ச்சிக்கோ, வன்மைத்திற்கோ அவளுக்கு இப்போது நேரமில்லை.
தன் நிலையே பரிதாபமாகி இருக்க இதில் மயிலின் மகிழ்ந்த முகம் இன்னுமே வலியோடு உள்ளத்தை சுருட்டியது.
பூமிநாதன் விழியை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று சொல்ல கூத்தபிரான் முடியவே முடியாதென்று மறுத்துவிட்டார்.
மயில் தனது வீட்டின் வாரிசை சுமப்பவளின் வரவிற்கு காத்திருந்தார். மகனின் மலர்ந்த முகத்தையும், தகப்பனாக போகும் அந்த உணர்வையும் கண்ணால் கண்டுவிட வேண்டும் என்று அத்தனை ஆவலுடன் நின்றிருந்தார்.
ஆனால் கூத்தபிரான் மயிலின் நிழல் கூட படக்கூடாது என்று மனதிற்குள் உருபோட்டுக்கொண்டு இருந்தார்.
“அந்த புள்ள மாசமாருக்கேன்னு சொல்லியும் இவக கதவ தொறக்கல மாமா. அம்புட்டு கெஞ்சிருக்கு, புள்ளைய காப்பாத்தனு, புள்ளையோட என்னிய விடுங்கன்னு. எரக்கம் காட்டாத செம்மம்மா இருந்திருக்காக…” என்று அன்று வீரபாண்டி சொல்லியது இன்றளவும் மறக்கமுடியாதே கூத்தபிரானால்.
அவர் வேண்டாம் என்று மறுக்க காரணம் அறிந்த துளசியும் வீரபாண்டியும் மௌனமாக நின்றார்கள்.