உயிர் தழுவும் விழியே – 24 (1)

உயிர் – 24

          செல்வியும், சந்தானலட்சுமியும் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்ப துளசி வந்து சேர்ந்தான்.

“இதேம் நீயி வீட்டுக்கு வார லச்சணமாக்கும்?…” என செல்வி அவனை தாழ்வாரத்திலேயே பிடித்துக்கொண்டு அதட்ட,

“எப்ப வந்தக்கா?…” என்றான் அவளின் அதட்டலை கண்டுகொள்ளாமல்.

“அப்பதயே வந்துட்டோம். இப்பத்தேன் பொறப்படுதோம்…” சந்தானலட்சுமி சொல்ல,

“செரி கெளம்புக…” என்று உள்ளே சென்றான்.

இன்னும் செல்விக்கு தெரிந்திருக்கவில்லை துளசிக்கு விஷயம் தெரியுமென்று. வீரபாண்டி சொல்லவில்லை எதையும்.

“எத்தே நடங்க, வாரேம்…” என்று அவரை முன்னால் அனுப்பியவள்,

“இங்கன வாலே…” என்று தனியே தள்ளி அழைத்து வந்தாள் தம்பியை.

“ஒ மொவத்துல அருளே இல்லயே துளசி. என்னாலே?…” என்றாள் கவலையாக.

“ஒன்னுமில்லத்தா…” அவன் மறுக்க,

“யோகுவ வேணா கொண்டாந்து உட சொல்லவாலே?…” என்றதும் வெகுண்டுவிட்டான்.

ஒருவேளை அதற்கு தான் அப்படி இருக்கிறானோ என்று நினைத்து செல்வி கேட்கவும் கொதித்துவிட்டான்.

“போதும்த்தா, அவ அங்கனவே இருக்கட்டும். ஒனக்கு சங்கட்டமா இருந்தா சொல்லு. வேற எடத்த பாத்து தங்க வெக்கிதேம்…” என்றதும் பட்டென்று கன்னத்தில் போட்டுவிட்டாள் தம்பியை.

மிதமான அறை தான் என்பதால் ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் நிற்க செல்விக்கு தாளவில்லை.

“என்னாலே என்னதேம் சங்கதி? என்னத்தையாச்சும் சொல்லேம்…”

“அவள கெட்டி வெச்சதுதேம் சங்கதி. போதுமாட்டிருக்கா? என்ன செய்யுததா இருக்க?…” என்றதும் அதிர்ந்து போய் பார்த்தாள்.

“இப்பத்தேன் ஒருத்தன் நிம்மதியா சிரிச்ச மொவமா இருக்கியான். இப்ப நீயாலே? ஒ மொறையோ?…” செல்வி கண்ணை கசக்க,

“எக்கா, இந்தா வெசனப்படாத. ஒண்ணுமில்ல. செத்த நா போவட்டுமின்னு இருக்கேம். அங்க அவ எதாச்சு கரச்ச குடுக்குதாளா சொல்லு? எட்டி ஒற்றே மிதி….”

“யேலே எம்புட்டுக்கு துள்ளிக்கிட்டு நிக்கித? அவ என்னத்த பண்ணிப்பிட்டா? அதுவுங்காட்டி இப்ப வாயு, வவுறுமா நிக்கித புள்ள…”

“அந்த ஒன்னுதேம் அவள உசுரோட வெச்சிருக்கு…” என்றதும் திக்கென்றானது செல்விக்கு.

எதையோ ஏடாகூடமாக செய்து வைத்திருக்கிறாள் யோகு என்று புரிந்துகொண்ட செல்விக்கு என்னவென்று தெரிந்தால் தானே தம்பியை சமாதானம் செய்ய முடியும்?

“துளசி…”

“விடும்த்தா, எந்தலையெழுத்து. நீயி பாத்து போ. இல்லாங்காட்டி கூட வரவாத்தா?…”

“இந்தாடா, எனக்கு நீயி காவலாக்கும். போவியா? போய் உண்கு…” என்று சொல்லி செல்வி கிளம்பிவிட்டாள்.

அவள் செல்வதை பார்த்திருந்துவிட்டு துளசி உள்ளே வர மயில் குடுகுடுவென்று ஓடுவது தெரிந்தது.

‘இந்தம்மை ஒட்டு கேட்டுருக்கு. ச்சை’ என்று எரிச்சலுடன் தான் உள்ளே நுழைந்தான்.

விழி அங்கே கூத்தபிரான் அறையில் பேசிக்கொண்டிருக்க துளசி எட்டி பார்த்ததும் வெளியே வந்துவிட்டாள்.

“இருத்தா கைய கால கழுவியாறேன்…” என்று அவன் உள்ளே சென்றுவிட அவனுக்கு உணவை எடுத்து வைத்தாள் விழி.

மயில் பார்த்துக்கொண்டு தான் தூரத்தில் கீழே அமர்ந்திருந்தார். துளசி அழைக்காமலே, கேட்காமலே அவள் அவன் வந்ததை பார்த்ததும் உள்ளே வர இதை எதையும் யோகு செய்ததே இல்லை.

துளசிக்கு தான் இருந்தவரை யோகு வந்த பின்னும் அவனை கவனிக்கும் பொறுப்பு மயிலுடையதாகவே தான் இருந்தது.  

அவனுக்கே செய்ததில்லை எனும் பொழுது மற்றவர்களுக்கு எங்கே யோகு செய்ய?

குழந்தையில் இருந்து அப்படியே அங்கே வளர்ந்திருக்க அது மயிலுக்கு பெரிதாய் தெரியவில்லை.

அன்றெல்லாம் அது அதிகார தோரணை, ஆளும் வர்க்கம் என்று பெருமிதப்பட்டு இருந்தார்.

விழி திருமணம் முடித்து வந்து அவள் செய்ய அவளுக்கு இதை விட வேறென்ன வேலை, இதை செய்யவே அவள் குடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தரம் என்பதை தரமில்லாமல் நிர்ணயித்திருந்தார்.

ஆனால் சமீபமாய் தான் செய்த சரியானவை எல்லாம் தவறாகவும், முன்பு தவறாகவும் இருந்ததெல்லாம் இப்போது சரியாகவும் தோன்றியது.

அவரின் பார்வையை உணர்ந்தாலும் விழி கண்டுகொள்ளவில்லை. அந்த திமிர் தான் மயிலுக்கு ஒவ்வவில்லை.

‘யே யேங்கிட்ட பேசினா முத்து உதுந்துருமாக்கும் மவாராணிக்கு’ என்று சமீபமாய் நினைக்காத நேரமில்லை.

யாரிடமும் பேசாமல் வேலையாட்களிடம் இறங்கி போக முடியாமல் ஏதோ ஒரு வட்டத்திற்குள் சிறைப்பட்டதை போலானது மயில் நாட்கள்.

துளசி வந்துவிடவும் அவனுக்கு உணவை எடுத்து வைத்தவள் பேச்சுக்கொடுத்துக்கொண்டே பரிமாற அவனுமே தன்மையுடன் பேசினான்.

வழக்கம் போல சாப்பிட்டு முடித்ததும் தந்தையுடன் உறங்க செல்ல விழி மருந்தெல்லாம் குடுத்தாகிற்று என்ற விவரத்தை சொல்லிவிட்டு மாடிக்கு சென்றாள்.

வீடே வெறித்து போனது அந்த இரவில். மயில் எழுந்து தனக்கு தண்ணீரை எடுத்துக்கொண்டு தளர்ந்த நடையுடன் தானிருக்கும் அறைக்குள் நுழைந்தார்.

இப்போதெல்லாம் உறக்கம் என்பது வெகுவாய் குறைந்திருந்தது. மனதின் கலக்கமும், குழப்பமும் அவரை எந்த நேரமும் நிம்மதியின்றியே வைத்திருந்தது.

கணவரின் ஒதுக்கம், இப்போது யோகுவை மகன் வெறுப்பதும், அதனை செல்வியிடம் பேசியதையும் கேட்டவருக்கு என்ன செய்தோம் இருவரும் என்று யோசித்தார்.

ஒவ்வொன்றாய் யோசிக்க யோசிக்க இப்போதைக்கு எதுவுமே செய்யவில்லையே என்றுதான் தோன்றியது.

யோகு பேசியதற்கென்றால் அன்றையில் இருந்தே அல்லவா துளசி பேசாமல் இருந்திருக்க வேண்டும்.

அப்படி இல்லையே என்று மனது முரண்டிக்கொண்டே இருந்தது. அதில் குழம்பிக்கொண்டிருந்தவர் மனநிலையும் பின்னடைவு ஏற்பட ஆரம்பித்தது.

வெகுநேரம் யோசித்தும் எதுவும் புலப்படாமல் எழுந்து அமர்ந்தவர் சுத்தமாய் உறங்கவில்லை.

தங்கள் அறைக்கு நுழைந்த விழி கதவை தாழிட்டுவிட்டு வந்து கையில் இருந்த தண்ணீர் சொம்பை ஓரத்தில் இருந்த மேஜையில் வைத்தாள்.

கட்டிலின் ஓரத்தில் பூமிநாதன் ஒரு கையால் கண்களை மூடி படுத்திருக்க விளக்குகளை அணைத்துவிட்டு அவனருகே வந்து மறுபுறம் சுவற்றை ஒட்டி படுத்துக்கொண்டாள்.

இருவரிடமுமே ஒரு தயக்கம் யார் முதலில் நெருங்குவது என்று. என்ன தான் கீழே பேசி விளையாடினாலும் அறைக்குள் வந்ததும் மனநிலையே மாறிவிட்டது.

ஏதோ ஒரு இறுக்கம் சூழ விழி பூமியை எழுப்பவும் இல்லை. பூமிநாதன் அவளை திரும்பி பார்க்கவும் இல்லை.

விழிக்கோ இத்தனை நாள் அவனை எப்படி கவனிக்காமல் விட்டோம் என்னும் ஆதங்கம் மீண்டும் மேலேற அவன் புறம் திரும்பிய நேரம் பூமியுமே தன்னைப்போல அவள் பக்கம் பார்த்து நொடியில் அணைத்துக்கொண்டான்.

“மாமா…” அவனணைப்பில் கண் மூடியிருந்தவள் அழைக்க,

“ம்ம்ம்….”

“என்னன்னுய்யா கம்மின்னிருக்க? ஒன்னிய ரோசிக்கவே இல்லய்யா நானு…”

“அதுக்கென்ன?…”

“தப்புத்தான?…”

“ப்ச், என்னத்துக்கு இது? ஒறங்குத்தா…”

“யோவ் சொக்கா…”

“என்னடி…”

“நெசமாவே ஒனக்கு தோணலையாய்யா?…”

இரவின் இருளில் அவளின் முகவடிவை நிமிர்த்தியவன் மென்மையாய் நெற்றியில் இதழ் பதித்தான்.

“என்னத்த தோண சொல்லுத? அவென் சொன்னியான்னும் நீயும் என்னத்துக்கு இத்த நெனைக்கித? ஒன்ன தெரிஞ்சிக்க விழி. ஆருக்காவவும் இதெல்லாம்  தோணப்பிடாதுத்தா…”

“எனக்காங்காண்டி தோணுச்சின்னா?…” இப்போது விழி தெளிந்துவிட்டாள்.

“அப்ப பாத்துக்கிடுவோம்…”

“இப்ப தோணுதுய்யா சொக்கா…” என்று அவளின் அணைப்பை இறுக்கினாள் விழி.

“என்னடி பண்ணுத? ஒறங்கு…”

“வரல்லயே? என்னத்த பண்ண?…”

“அப்ப முழிச்சே கெட. நா ஒறங்குதேம்…” என்று அவன் திரும்பி முதுகு காட்டி படுக்க இன்னும் அவனில் ஒண்டினாள்.

எழுந்தமர்ந்துவிட்டான் அவன். இத்தனைநாள் அவளை நெருங்காமல் தன் உணர்வுகளை அடக்கி வைத்திருக்க இன்று விழியே நெருங்க மனதின் அலை ஆர்ப்பரித்தது.

“யேம்டி இம்சைய கூட்டுதவ…” என்று கேட்டுவிட்டான் தனது கிறக்கத்தை குரலில் ஊற்றி.

“ஒ அம்மை தான சொல்லுச்சு ஒன்னிய…”

“யாத்தே, ஒன்னிய வெச்சிக்கிட்டு அதுவும் ரோசன இல்லாம பேசி நாந்தேம் அவியுதேம்…” என்றவனை வேகமாய் விழி இழுக்க அவள் மேலேயே விழுந்தான்.

“எம்புட்டு மொரட்டுத்தனம்டி, முன்னாங்காட்டி எல்லா தொட்டதுக்கெல்லாம், தொடுததுக்கெல்லாம் துளும்புவ. ஒன்னொன்னுத்துக்கும் அலும்ப கூட்டுவ. இம்பிட்டுக்கு  ஒத்துவரமாட்டியே?…” என்றவன் அவளின் செய்கைகளை தனதாக்கிக்கொண்டான் சடுதியில்.

error: Content is protected !!